Tuesday, December 29, 2009

சென்னை இசை விழாவில் என் உலா - நான்காவது வாரம்

இந்த வாரம் சில 'இரண்டாவது தடவை' கச்சேரிகள்...

டி.எம்.கிருஷ்ணா கச்சேரியில் பக்கவாத்தியகாரர்கள்  ஐந்தடி தள்ளி உட்காருவது நல்லது. கிருஷ்ணா பாடும்போது இரண்டு கைகளையும் ஆக்ரோஷமாக நீட்டி, அசைத்து, வளைத்து, உட்கார்த்த நிலையிலேயே ஒரு சிறு நடனமே ஆடுகிறார். இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைடியில் கொஞ்சம் தாமதமாக 7.30க்கு கச்சேரியை ஆரம்பித்தவர், இரண்டு மணி நேரத்திலேயே முடித்துவிட்டார்.

சேவாக் செஞ்சுரி அடித்ததுபோல் இருந்தது கச்சேரி. முதல் பாட்டிலேயே (பலுக்குகண்ட)  விஸ்தாரமாக ஆலாபனை, ஸ்வரஸ்தானம் முடித்து, ஒரு அருமையான  தில்லானா பாடி, மூன்றாவது பாட்டிலேயே தனி ஆவர்த்தனத்துக்கு கொடுத்தார் கிருஷ்ணா. பின்னர் விஷ்ணுப்ரியா ராகத்தில் ஒரு ஆலாபனை, ஆபேரியில் ஆனந்தாமான ஒரு துக்கடா, தேஷ் ராகத்தில் ஒரு பெங்காலி பாடல், கடைசியாக ஒரு திருப்பாவை என்று ஜெட் வேகத்தில் பயணித்தது கச்சேரி.  இந்த ஜெட்  பயணத்திற்கு ஈடுகொடுத்தது சுந்தரேஸ்வரனின் வயலின்..  

ரசிகர்களின் நாடித்துடிப்பு அறிந்து, எந்த இடத்திலும்  தொய்வில்லாமல்  கச்சேரிக்கும்  கலையை  அறிந்துவைத்திருப்பதினாலோ  என்னமோ  இன்றைய  தேதியில் கர்நாடக  சங்கீதத்தின் 'டாப் 5' பாடகர்   டி.எம்.கிருஷ்ணா.

அன்று தீபாவளியோ அல்லது வேறு விசேஷமோ இல்லை. அனால் ராஜேஷ் வைத்யா வெடித்தது 10000 வாலா சரவெடி. ஒரு வீணையை வைத்துகொண்டு இதற்க்கு மேல் ஏதாவது செய்யமுடியுமா என்று தெரியவில்லை. அத்தனை வேகம்.. அத்தனை பரபரப்பு.. அவர் வாசித்தது மதுர வீணை என்னும் வீணை வகை... பக்கவாத்தியங்கள் மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கீ போர்டு மற்றும் சிறப்பு சப்தங்கள்.

நாட்டை, வலசி ராகங்களில் கொஞ்சம் ஜனரஞ்சகமாக வேகத் துடிப்புடன் ஆரம்பித்தார். பின்பு வந்த சிந்து பைரவியில் 'வசூல் ராஜா' படத்தில் 'சிணுக்கி சிணுக்கி வந்தா' பாடலில் அவர் வாசித்த வீணை இசை கொஞ்சம் தலை தூக்கியது. பின்பு காபி ராகம் (இது எக்ஸ்ப்பிரசோ காபி என்றார் வைத்யா). எக்ஸ்ப்பிரசோ காபி கொஞ்சம் காரமாக மிகக்குறைந்த அளவே  இருக்கும்.  அதேபோல  வெட்டறுத்தவாறு  இருந்தது வாசிப்பு. பிறகு  பந்துவராளியில் ஒரு  ராகம் தானம் பல்லவி, ராகமாலிகாவில் 'சின்னஞ்சிறு கிளியே'  வாசித்து நிறைவு செய்தார்.

இதுபோன்ற இசை கலவைகளை எந்த வகையில் சேர்ப்பது.. கர்நாடக சங்கீதமா அல்லது ப்யூஷன்  இசையா?  எதுவாயிருந்தாலும் வைத்யாவின் வீணை இசையில் ஒருவித ஈர்ப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

ஒரு மாறுதலுக்காக எதாவது ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு போகலாமே என்று பேப்பரை புரட்டியபோது பளீரென்று கண்ணில் பட்டது கிருஷ்ணகுமாரி  நரேந்திரன் குழுவினரின் 'சிவ ஸ்வரூப தாண்டவ லகரி'  நாட்டிய நாடகம். சிவனின் பல்வேறு தாண்டவங்களின் அழகான தமிழ் வர்ணனையுடன் நிகழ்ச்சி துவங்கியது. சிவனுக்காக ரிஷிகள் தவமிருக்கும் காட்சி திருவிளையாடல் படத்தின் முதல் காட்சியை நினைவூட்டியது. சிவனின் பல்வேறு நிலைகளை, நடனங்களை, அற்புதமாக அபிநயம் பிடித்து நடனமாடினார் நித்யா ஜகந்நாதன். ராவணன் சிவனை எண்ணி வீணைவாசிக்கும் காட்சி ரொம்பவும் அசலாக இருந்தது. (வீணை இசை ராஜேஷ் வைத்யா).

கடைசியில் பதஞ்சலி முனிவருக்காக சிவன் தில்லையில் நடனமாடிய ஆனந்த தாண்டவத்தை ஆனந்தமாக ரசிக்க முடிந்தது. நிகழ்ச்சியின் பலம் முன்னணியில் நடனமாடிய கலைஞர்களும் பின்னணி இசையும்தான்.. நடனத்துக்காக அமைக்கப்பட்ட இசை... இசைகேற்ற நடனம்... ஒன்றோடுஒன்று  பின்னிப் பிணைந்தது.. அரங்க அமைப்புகளில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் நிகழ்ச்சி இன்னும் மெருகேற்றப்படிருக்கும்.

Monday, December 21, 2009

சென்னை இசை விழாவில் என் உலா - மூன்றாவது வாரம்

இந்தமுறை நான்கு நாட்கள் முன்னதாகவே டிக்கெட் வாங்கியதால் நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாடெமியில் அருணா சாய்ராம் கச்சேரி கேட்கமுடிந்தது. அருணாவின் கச்சேரி டுவென்டி டுவென்டி மேட்ச் மாதிரி... முதல் ஓவரிலேயே களைகட்டும். அவரின் புகழ் மிக்க 64 நாயன்மார்களின் பாடல்களில் ஆரம்பித்தது குதூகலம். பிறகு 'சாமஜவரகமணா' பாடி இந்தொளத்தில் கொஞ்சம் தாலாட்டு, கொல்கத்தா காளியின் பள்ளியெழுச்சி பாடலான 'ஜாகோ துளி ஜாகோ' பெங்காலி பாடல், அவரின் விசேஷ உருப்படியான மராத்தி 'அபங்' பாட்டு என்று அடுத்ததடுத்து சிலிர்ப்புகளுக்கு பஞ்சம் இல்லை.

ஏற்கனவே அது ஒரு 'ஹை வோல்டேஜ்' கச்சேரி.. அதோடு தனி ஆவர்த்தனத்தில் கொன்னக்கோல் வேறு.. ஆரவாரத்துக்கு கேட்கவா வேண்டும்..

அருணா கச்சேரிகளில்  அவையினர் விண்ணப்பம் அதிகமாக உள்ளது. அதில 'விஷமக்காரக் கண்ணன்', 'மாடு மேய்க்கும்' பாடல்கள்தான் முக்கியமான நேயர் விருப்பம். இதற்க்கு அருணா 'ஒரே பாடலையே பாடுகிறேன் என்ற குற்றச்சாட்டு வருமே' என்றவர், இந்தமுறை 'விஷமம்', அடுத்தமுறை 'மாடு' என்று சமரசம் செய்தார். என்றாலும் 'விஷமம்' கொஞ்சம் மெல்லிசை ரகம்தான்...!

இனிமையான மென்மையான ஆரவாரமில்லாத கச்சேரி விரும்புகிறவர்கள் 'ரஞ்சினி காயத்ரி' போகலாம். மியூசிக் அகாடெமியில் அன்று கூட்டம் நிரம்பி வழிந்தது. அகாடெமி என்பதாலோ என்னமோ சம்பிரதாயமான வழியிலேயே பயணித்தனர் பாடகர்கள். கொஞ்சம் விறுவிறுப்பு எதிர்பார்பவர்களுக்கு அவ்வளவு பரபரப்பு இருக்காது. ஆனால்  எல்லாவற்றையும்  விட 'துர்க்கா-லக்ஷ்மி-சரஸ்வதி' மேல் ராகம் தானம் பல்லவி பாடியது எல்லாரையும் லயிக்க வைத்தது. துக்கடாவில் 'மானாட மழுவாட' என்ற பாடலை பாடினார் ('மானாட மயிலாட' எல்லாம் அகாடெமியில் பாடலாமா என்று கேட்டவுடன் பக்கத்தில் உட்கார்திருந்த ஒரு பெரியவர் முறைத்தார்). கடைசியில் ஒரு மராத்தி பஜன் பாடி நிறைவு செய்தனர் ரஞ்சினி காயத்ரி சதோதரிகள்.

கொஞ்சம் வித்தியாசமான இசை நிகழ்ச்சிக்கு போகலாமே என்று தேடியபோது கடம் கார்த்திக்கின் 'இதயத்துடிப்பின் சங்கமம்' கண்ணில் பட்டது. பல இசைக்கருவிகளுடன் ஒருங்கிணைந்த, கர்நாடக சங்கீதத்துக்கும் ஃயூஷன் இசைக்கும் இடைப்பட்ட ஒரு இசை நிகழ்ச்சி அது. கடம் மற்றும் கொன்னகொலில் கார்த்திக்.. சைலன்ட்  வயலின்  என்ற இசைக்கருவியில் எம்பார் கண்ணன்... (இது கொஞ்சம் பாதி உடைந்துபோன  வயலின்  மாதிரி இருக்கிறது.. யமஹா கம்பெனியின் தயாரிப்பாம்..வயலின் போல  கணீரென்று  ஓசை  எழுப்பும் இந்த வாத்தியத்துக்கு ஏன் 'சைலென்ட் வயலின்' என்று பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை)... கீ போர்டில் 14 வயது  சிறுவன் சத்யநாராயணன்..  எலெக்ட்ரானிக்ஸ் டிரம்சில்  அருண் குமார் மற்றும் மிருதங்கம், கஞ்சிரா.

ஐம்புலன்களை பற்றிய 'பெண்டா மியூசிக்' என்ற இசைக்கோவை, அமைதியை வலியுறுத்தி அற்புதமான ஒரு இசையமைப்பு, கரகரப்ரியா ராகத்தில் மனதை வருடும் ஒரு ஆலாபனை என்று எல்லாமே வழக்கத்துக்கு மாறுபட்டு இருந்தது. கார்த்திக் வாய்ப்பாட்டு,  கடம், கொன்னக்கோல் என்று சகலமும் செய்கிறார்.. பாட்டை மட்டும் தவிர்ப்பது நல்லது.

அருண்குமார் டிரம்ஸ்சில் அப்படி ஒரு வெறியாட்டம் நடத்தினார்.. அவர் வாத்தியத்தில்  சாதாரண டிரம்ஸ் ஓசை தவிர நம்மூர் தவில், கேரள செண்டமேளம்,  சிந்தூர் ஓசை எல்லாம் இயற்கையாக அசலாக ஒலிக்கிறது.

நிகழ்ச்சியின் சிறப்பம்சம் வகுளாபரணம் என்ற ராகத்தில் அரேபிய சங்கீதத்தை இசைத்ததுதான். இந்த ராகத்துக்கு பெர்ஷியன் சாயல் உண்டாம்.. எம்பார் கண்ணனின் மெய்மறந்து வாசித்த இசை, எல்லோருக்கும் அரேபியா பாலைவனத்தில் கொஞ்சநேரம்  சுற்றித்திரிந்த உணர்வை ஏற்படுத்தியது. கடைசியில் பல பாடல்களின் பல்லவிகளை ராகமாலிகாவாக வாசித்து பரவசப்படுத்தினார் எம்பார் கண்ணன்.

இதுபோல வித்தியாசமான இசை நிகழ்சிகளுக்கு அதிக வரவேற்ப்பு இல்லை. ராணி சீதை மன்றத்தில் அன்று கால்வாசி கூட அரங்கம் நிறையவில்லை. கொஞ்சம் மாறுபட்ட இசை வழங்கினால் இது ஏதோ கர்நாடக சங்கீதத்துக்கு சம்பந்தம் இல்லை  என்ற மனோபவத்தை நீக்கினால்தான், இதுபோல முயற்சிகள் வெற்றிபெறும்.  நம் சங்கீதம் நம் எல்லைகளைத் தாண்டி பயணிக்கும்.

Monday, December 14, 2009

சென்னை இசை விழாவில் என் உலா - இரண்டாவது வாரம்

கர்நாடக சங்கீதத்தின் 'எவர் கிரீன்' பாடகர் ஜேசுதாஸ்தான். பல வருடங்களாக ஒலித்துக்கொண்டிருக்கும் அதே குரல்.. அதே இனிமை.. அதே ரசிகர் கூட்டம்...எழுபது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் இவர் குரல் மட்டும் இன்னும் இருபதுதான். கடந்த பத்தாம் தேதி  நாரதகான சபாவில் ஜேசு கச்சேரி.  (இவர் கச்சேரிக்கு மட்டும்  டிக்கெட் பிரீமியம் விலை).

'என்ன புண்ணியம் செய்தேனோ', 'தெளியலேலு ராமா', 'இமகிரிதனையே'  என்று ஆரம்பித்தவர், 'நடசி நடசி' பாட்டுக்காக கரகரப்ரியாவில் வித்தியாசமாக ஆலாபனை செய்தார். இப்போது நடுநடுவில் பேச்சுக் கச்சேரியும் செய்கிறார். நடுவில் வயலின்காரரை 'நீ என்ன  வாசிக்கற' என்ற கண்டிப்பு வேறு.

துக்கடாவில் முழுவதும் 'ஜேசுதாஸ் பிராண்ட்' பாடல்கள்தான். புதிதாக எதுவும் இல்லை ('என் நெஞ்சில் பள்ளிகொண்டவன்', 'ஜானகி ஜானே, 'மேரோ மேரோமன')... அனால் எவ்வளவு முறை கேட்டாலும் திகட்டாத பாடல்கள். இன்னொரு முறை இந்தவருடமும் ஜேசுதாஸ் கச்சேரி அனுபவம்.

கணேஷ் குமரேஷ் வயலினுக்குள் தேன் நிரப்பிக்கொண்டு வாசிப்பார்களா என்று தெரியவில்லை... அவ்வளவு இனிமை. பாரதிய வித்யா பவனில் இந்த இருவர் சகானா, தேவகாந்தரி, இந்தோளம் போன்ற மென்மையான ராகங்களையே  கையாண்டனர்.  இந்த இருவரோடு மூவராக இணைந்த மிருதங்க  வித்வான்  அவர்களுக்கு  ஈடுகொடுத்து  வாசித்தார். கணேஷ் சிருங்கார ரசமஞ்சரி பாடலை  வாய்விட்டு பாடியது அருமை. .   

சர்வம் பிரம்ம மயம் வாசிப்பு தாலாட்டு பாடுவது போல் இருந்தது. கடைசியாக துக்கடாவில் மேற்கத்திய குறிப்புக்கள், ஹரிவராசனம் முதலியவை இடம் பெற்றிருந்தன.

கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்சில் சுதா ரகுநாதன் கடம் இல்லாமல்  மோர்சிங்கை  வைத்து கச்சேரித்தார் (தமிழ் அகராதியில் புதிதாக சேர்த்துக்கொள்ளலாம்). அவர் மெல்லிய தங்கக்கம்பி குரலோடு மீண்டும் ஒரு 'சுதா ஸ்டாண்டர்ட்' கச்சேரி. கடைசியிலும்  'சுதா பிராண்ட்' பாடல்கள்தான் (தீராத விளையாட்டு பிள்ளை).  'செந்தமிழ் நாடென்னும் போதினிலே'வோடு தில்லானாவும், வந்தேமாதிரத்தில்  மங்களமும் பாடியது கூடுதல் சிறப்பு.

சஞ்சய் சுப்ரமணியத்தை 'ஆலாபனை ஸ்பெஷலிஸ்ட்' என்றே வர்ணிக்கலாம். ஆந்தோளிகா, பைரவி, ரிஷபப்பிரியா (இந்த ராகம் சஞ்சய் சொல்லித்தான் தெரியும்) ராகங்களில் அவர் செய்த ஆலாபனை ஒரு அமைதியான நதியினிலே ஓடத்தில் பயணிப்பது போல இருந்தது. அதேசமயம் திடீர் ஏற்ற இறக்கத்துடன் அளவில்லாத வெள்ளம் வரும்போது ஒரு ரோலர் கோஸ்டர் பயண உணர்வையும் தந்தது.

சஞ்சயின் பலம் அவரது அசாத்திய கூட்டணி. அவர் ஆலாபனைகளுக்கு  ஈடுகொடுக்க நாகை முரளீதரனால்தான் (வயலின்) முடியும். சஞ்சய் தாலாட்டினால் நாகை தென்றலாக வீசுகிறார். அவர் வேகம் கூடினால் இவர் புயலாக மாறுகிறார்.

இவர் கச்சேரியில் துக்கடாக்கள் இல்லை. தனி ஆவர்த்தனம் முடிந்தும், விஸ்தாரமாக தில்லானா பாடினார். பாரதியாரின் 'நின்னையே ரதியென்று ' பாடலை ஆலாபனைகளுடன் பல்வேறு ராகங்களில் அவர் பாடியது எல்லோரையும் கிறங்கடித்தது.

அவர் தந்த பரவசத்துக்கு, கச்சேரி முடிந்ததும் எழுந்த கரகோஷமே சாட்சி.

Monday, December 7, 2009

சென்னை இசை விழாவில் என் உலா - முதல் வாரம்

சென்னையில் குளிரும் இசையும் ஒரே சமயத்தில் துவங்கி விடும். டிசம்பர் முதல் தேதியில் வெளியாகும் சபா விளம்பரங்களிருந்து  இசைவிழா  களைகட்ட  தொடங்கிவிடும். ஒவ்வொரு முறையும் பல கச்சேரிகளை குறித்து வைத்துக்கொண்டு அதில் பாதிதான் நிறைவேற்றுவேன்.  இந்தமுறை நூறு சதவிகிதம்  நிறைவேற்றவேண்டும்  என்று திட்டம்... பார்க்கலாம்..

கடந்த வெள்ளிகிழமை மார்கழி மகாஉற்சவம் சார்பில் டி.எம்.கிருஷ்ணா கச்சேரி.. எல்லா பாடல்களும் இயற்கையை பற்றியது... மழை, மேகம், மயில், காதல் என்று பல பல ரசங்களை சமஸ்க்ரிதம், மலையாளம், வங்காளம் என்று எல்லா மொழிகளையும் பாடி பிரமாதப்படுத்திவிட்டார். அதுவும் வங்காள மொழியில் ரவீந்திரநாத் தாகூரின் மழை பற்றிய பாடல் அற்புதம். 

தில்லி காஜு பர்பி, மலையாள பாயசம், பெங்காலி ரசகுல்லா என்று திகட்ட திகட்ட இனிப்பு கொடுத்தவர் எங்கே தமிழ்நாட்டுக்கு அல்வா கொடுத்துவிடுவரோ என்று பார்த்தால்,  கடைசியில் அல்வாதான் கொடுத்தார் ஆனால் (எஸ்.எம்.கிருஷ்ணா மாதிரி இல்லாமல்) டி.எம்.கிருஷ்ணா கொடுத்தது  ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா.. அதுவும் எட்டயபுரத்து அல்வா..  அவர் பாடியது பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே... அதுவும் வித்தியாசமான ஒரு  ராகமாலிகாவில்  பாடி  எல்லோரையும்  திருப்திப்படுத்தினார்..

கடைசியில் 'வாழிய செந்தமிழ்' பாடி கச்சேரியை நிறைவு செய்தது கூடுதல் சிறப்பு.

அடுத்த நாள் கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சார்பில் உன்னிகிருஷ்ணன் கச்சேரி... ஏனோ அவ்வளவாக சோபிக்கவில்லை.. பாடல்கள் தேர்வும் சுமார்தான்..'சிதம்பரத்துக்கு வாருமையா' பாடல் கொஞ்சம் தேவலாம்.. அவரின் விருப்பப்பாடலாகிய காவடி சிந்துகூட ஏனோ எடுபடவில்லை..தனிஆவர்த்தனம் முடிந்து மூன்றே துக்கடாக்கள் பாடி அவசரவசரமாக இரண்டு மணி நேரத்தில் கச்சேரியை முடித்து விட்டார்...

என்ன ஆச்சு உன்னி?

சென்னையில் கூட்டம் அலைமோதும் இடங்களில் மெரினா பீச், சுற்றுலா பொருட்காட்சி, இவைகளோடு அருணா சாய்ராம் கச்சேரியும் சேர்த்துக்கொள்ளலாம். செட்டிநாடு வித்யாஷ்ரம் அரங்கில் 6.30 மணிக்கு கச்சேரி என்றால் ஐந்து மணிக்கே கூட்டம் பிதுங்கி வழிகிறது. அரங்கிற்கு வெளியே உள்ள டி.வி திரையில் கச்சேரியை மக்கள்  படிக்கட்டு, தரையெல்லாம் உட்கார்ந்து பார்கிறார்கள். (சென்ற முறை அருணா சாய்ராம் கச்சேரிக்கு  டிக்கெட் வாங்க முதல்நாள் மியூசிக் அகாடமி சென்றேன்.. அங்கு அவர்கள் சொன்னது: "நாளைக்கு காலையில் சரியா ஆறு மணிக்கு  கௌண்டர்  திறப்போம்..  கியூவில் வந்து நின்னுடுங்க சார். உங்களுக்கு லக் இருந்தா டிக்கெட் கிடைக்கலாம்").

சரி லக் இருந்தால் அருணாசாய்ராமின் அடுத்த கச்சேரிக்கு போகலாம் என்று அங்கிருந்து மெதுவாக நழுவி பக்கத்தில் இருக்கும் குன்னக்குடியின் ராகா மையத்துக்கு வந்தேன். ராஜேஷ் வைத்யாவின்  வீணை   இசை. மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங், கீ போர்டு இத்யாதிகளுடன் மனுஷன் அசுரத்தனமாக வீணை வாசித்துக்கொண்டிருந்தார். கன்னாடக சங்கீதமும் மேற்கத்திய சங்கீதமும் கலந்த ஒரு துள்ளல் இசை அது. ஒரு வீணையில் இதனை தொனிகளும்  வேகமும்  சாத்தியாமா  என்று ஆச்சரியப்படவைக்கும் அதே சமயம் ஆட்டம் போடவைக்கும் இசை.. ஒரு இனிய புதிய அனுபவம்.

இனி அடுத்த வாரம்...

Sunday, November 22, 2009

உலகை உலுக்கிய புகைப்படங்கள்

இந்த வாரம் ஆனந்த விகடனில் 37 வருடங்களுக்கு முன்னால் உலகை உலுக்கிய வியட்நாம் யுத்தப் புகைப்படத்தில் தோன்றும் சிறுமியின் பேட்டி  வெளியாகியிருக்கிறது.. அதைப் படித்தவுடன் சில எண்ணங்கள்..

உலகில் நடக்கும் பல போர்க்குற்றங்களை, இயற்கையின் சீரழிவை, பல கட்டுரைகள் விளக்க முடியாததை ஒருசில புகைப்படங்கள் விளக்கி விடும். விஷுவல் மீடியாவுக்கு அந்த அளவுக்கு வலிமை உண்டு. நேபாம் குண்டு வெடித்து தீக்காயங்களுடன் ஓடிவரும் இந்த சிறுமியின் புகைப்படம் அமெரிக்காவையே உலுக்கியது. வியட்நாம் யுத்தம் முடிவுக்குவர இதுவும் ஒரு காரணமாக இருந்ததது. அதேபோல், இராக் போர்கைதிகளை அமெரிக்கா நடத்திய விதத்தை பலர் விமர்சனம் செய்தாலும், இந்த புகைப்படம் வெளிவந்த பிறகுதான் சில மாற்றங்கள் ஏற்பட்டது.

விஷவாயு தாக்கிய ஒரு குழந்தையை புதைக்கும் இந்தப் படம் போபால் துயரத்தை உலகுக்கு உணர்த்தியது. சூடானில் சிறுவன் சாவுக்காக காத்திருக்கும் கழுகின் படம் பஞ்சத்தின் கொடுமையை உணர்த்தியது. (இதை எடுத்த புகைப்படக்காரர் மூன்று மாதங்களில் தற்கொலை செய்துகொண்டார்).

ஆனால் இதைவிட அவலம் மிகுந்த போர்குற்றங்கள், போர்கைதிகளை நடத்தியவிதம், பாலியல் கொடுமைகள் எல்லாம் நடந்து முடிந்த இலங்கையில் இது போன்ற ஒரு ஆவணம் கிடைக்கவில்லை. கிளஸ்டர் குண்டுவீச்சு, விசாரணை என்றபெயரில் வன்கொடுமைகள், குழந்தைகள் நோயாளிகள் மீது குண்டுவீச்சு போன்றவை கட்டுரை மட்டும் பேட்டிகள் மூலம் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறதே தவிர, இது போல ஒரு விஷுவல் பதிவு இல்லை. இதை உணர்ந்துதான், இலங்கை அரசு எந்த ஒரு பத்திரிகையாளரையும், ஏன் தொண்டு நிறுவனங்களைக்கூட நெருங்க விடவில்லை.

தனக்கு ஏற்பட்ட அவலங்களை சொல்லிக்கொள்ளக் கூட இதுபோல ஒரு ஆவணம் இல்லை என்பதுதான் இலங்கைத்  தமிழனின் வரலாற்றுக் கொடுமை...!

Monday, November 16, 2009

சச்சின் டெண்டுல்கர் மராட்டியனா.. இந்தியனா..

இதுவரை எந்த சர்ச்சையிலும் மாட்டிக்கொள்ளாத சச்சின் டெண்டுல்கர் இப்போது சிவசேனா பால் தாக்ரேயிடம்  சிக்கிக்கொண்டு விட்டார்.  "நான் மராட்டியன் என்பதில் பெருமை கொள்கிறேன்.. ஆனால் இந்தியன் என்பதுதான் முதலில்" என்று சச்சின் சொல்லப்போக, கோபமடைந்த தாக்ரே  "நீ கிரிக்கெட் மட்டும் விளையாடு.. அரசியல் விளையாடதே" என்று கடித்திருகிறார்.

முதலில் மராட்டியன் முதலா இந்தியன் முதலா என்கிற விவாதமே முட்டாள்தனம். தமிழன், மராட்டியன், குஜராத்தி என்பதெல்லாம் இனம். ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு மொழி கலாச்சாரம் உண்டு. இந்தியா என்பது நாடு. இதையும் அதையும் ஒப்பிடவே முடியாது. ஒருவனுக்கு நாட்டுப்பற்று எவ்வளவு அவசியமோ அவ்வளவு இனப்பற்றும் மொழிபற்றும் அவசியம். இதில் எது முதலாவது என்ற கேள்விக்கே இடமில்லை.. இரண்டுமே தேவை. இனப்பற்று  இருப்பதனால்தான் இலங்கை தமிழர்கள் படும் இன்னல்களை கண்டு நாம் கண்ணீர் வடிக்கிறோம். நாட்டுப்பற்று இருப்பதால்தான் இந்தியா-இலங்கை கிரிக்கெட் போட்டி நடந்தால் இந்தியா வெற்றிபெற வேண்டும் என்று மட்டுமே நினைப்போம்  - ஒருவேளை  இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அத்தனைபேரும்  தமிழர்களாக  இருந்தாலும் கூட.

 ஜப்பான், ஜெர்மனி போல நாடும் இனமும் ஒன்றாகிவிட்டால் இந்தப் பிரச்சனையே இருக்காது. ஆனால் அது இந்தியாவில் சாத்தியமில்லை. அதனால் இது முதலா அது முதலா என்று கேள்வி கேட்காமல், உணர்ச்சியின் அடிப்படையில் பார்க்காமல்,  இரண்டுமே தேவை என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இல்லாவிட்டால் நாட்டுபற்றும் இல்லாமல் மொழிபற்றும் இல்லாமல் 'நான் முதல்ல இந்தியன்.. அப்புறம்தான் தமிளன்..' என்ற விஜயகாந்த் வசனங்களை மட்டுமே  கேட்டுக்கொண்டிருப்போம்.

அதுசரி.. இந்த 'முதலில் எது' விளையாட்டு விளையாடுபவர்கள் மாநிலங்களுக்கு கீழே போவதில்லை.. 'நீ முதலில் தமிழனா அல்லது தஞ்சவூரானா' அல்லது 'நீ முதலில் தஞ்சவூரானா அல்லது மாயவரத்தானா' என்றெல்லாம் யாரும் கேட்பதில்லை. அதேபோல் 'நான் முதலில் ஒரு ஆசியன்.. பிறகுதான் இந்தியன்..' என்று யாரும் சொல்வதில்லை. அவரவர் வசதிக்கு ஏற்ப அரசியலிலும் சினிமாவிலும் மட்டுமே விளையாடப்படும் விளையாட்டு இது.

சச்சின் டெண்டுல்கரால் மராட்டிய இனத்துக்குப் பெருமை.. இந்திய நாட்டுக்குப்  பெருமை...என்பதை சச்சின், பால் தாக்கரே இருவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

Thursday, November 5, 2009

திகில் ஹைக்கூ

நிலவில் இறங்கிய
ஆம்ஸ்ராங் கண்டான்
மனிதக்காலடித் தடங்கள்...!

விண்ணில் குதித்த
யூரிகாகரின் கேட்டான்
பறவைகளின் படபடப்பு...!

இடுகாட்டின்
கல்லறைக்குள்
பேச்சுச் சத்தம்...!

எதிர்வெயிலில்
முன்னால் விழுந்தது
என் நிழல்...!

நடுவானில்
ஒரு முக்கிய அறிவிப்பு
பைலட்டுக்கு நெஞ்சுவலி...!

Tuesday, October 20, 2009

கவிஞன்


மண்ணைப் பிசைபவன் குயவன்...!
மொழியைப் பிசைபவன் கவிஞன்...!
மரத்தை அறுப்பவன் தச்சன்...!
மனதை அறுப்பவன் கவிஞன்...!
செப்பைத் தட்டுவான் கொல்லன்...!
சிந்தையைத் தட்டுவான் கவிஞன்...!

Sunday, October 18, 2009

அருகி வரும் இனங்கள்

அருகி வரும் இனங்கள்
அவனியில் ஆயிரம்..!
ஆப்ரிக்க கருப்பு காண்டாமிருகம்
மூவாயிரத்துக்கும் குறைவு..!
வங்காளப் புலிகள்
இரண்டாயிரத்துக்கும் குறைவு..!
சீன பெரிய பாண்டாக்கள்
ஆயிரத்துக்கும் குறைவு..!
பர்மீய காட்டு ஆமைகள்
மொத்தம் பதினேழு..!
இலங்கைத்தமிழர்கள்...
இப்போதைக்கு உலகிற்கு கவலையில்லை...
இன்னும் சில லட்சங்கள் மீதமுள்ளது..!

Tuesday, September 29, 2009

தமிழக அரசின் ஜிங்-ஜாங் திரைப்பட விருதுகள்

முன்பெலாம் தூர்தர்ஷன் ஒளியும் ஒளியும் நிகழ்ச்சியில் எம்ஜிஆர் பாட்டுபோட்டால் உடனே ஒரு சிவாஜி பாட்டு போடுவார்கள். கமல் பாட்டு போட்டால் அடுத்தது ரஜினி பாட்டு போடுவார்கள்.. இது அவர்களே வகுத்துக்கொண்ட நியதி.

இப்போது அதே நியதியை தமிழக அரசும் கடைபிடிக்கிறது. 2007, 2008 ம் ஆண்டு சிறந்த நடிகர் விருது கமல்-ரஜினி இருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக
திரை விருதுகளில்தான் சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த வில்லன் (?) சிறந்த சண்டை பயிற்சியாளர் என்ற விருதுகள் எல்லாம் உண்டு. அதாவது ஒரு திரைப்படத்தில் கண்டிப்பாக ஒரு காமெடியன், ஒரு வில்லன், சண்டைகள் இருக்க வேண்டும் என்பது இவர்கள் கருத்து. அதேபோல் நகைச்சுவையில் சிறந்த நடிகர், நடிகை என்கிற இரண்டு விருதுகள் உண்டு. வில்லனுக்கு ஒரே விருது. வில்லி விருதெல்லாம் கிடையாது. (தமிழ் மசாலா சினிமா பார்முலாபடி பெண்கள் வில்லன் வேஷத்தில் நடிக்கக் கூடாது - அப்படியே இருந்தாலும் கடைசியில் திருந்தி விடவேண்டும்). ஆனால் நல்லவேளையாக சிறந்த அம்மா சென்டிமென்ட் படம், தாலி சென்டிமென்ட் படம், சிறந்த பன்ச் டயலாக் போன்ற விருதுகள் கொடுக்கவில்லை.

சிறந்த வில்லன் விருதை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது புரியாத புதிர். எந்த வில்லன் அதிகம் கொலை செய்கிறார், எவ்வளவு பேரை கற்பழிக்கிறார்கள் என்று ஏதாவது ஒரு கணக்கு வைத்திருப்பார்களோ?

இதில்
இன்னொரு கூத்து என்ன தெரியுமா? முதலாவது சிறந்த படம், இரண்டாவது சிறந்த படம், மூன்றாவது சிறந்த படம் என்று மூன்று பரிசுகள் கொடுப்பார்கள். இதைத்தவிர சிறப்பு சிறந்த படம் என்று ஒன்று உண்டு. இதே போல நடிகர்-நடிகைகளுக்கும் சிறப்பு பரிசு உண்டு. அதாவது கிட்டத்தட்ட முன்னணியில் இருக்கும் அத்தனை நடிகர்களுக்கும் எதாவது ஒரு விருது நிச்சயம் (அத்தனை ரசிகர் மன்றங்களையும் திருப்தி படுத்தவேண்டுமே...!)

இனி
அறிவிக்கப்பட்டுள்ள விருதுகளை பார்ப்போம்..

1
. சிறந்த படம் 'சிவாஜி'. சிறந்த இரண்டாவது படம் 'மொழி'. எந்த விதத்தில் சிவாஜி மொழியைவிட சிறந்தது என்று புரியவில்லை. மொழியே புரியாமல் 'ஒருகூடை சன்லைட் ... நான் செக்கச்செவப்பேய்..' என்று பாடியதற்க்கா அல்லது மிகுந்த மொழிப்பற்றுடன் அங்கவை-சங்கவை என்று பெயர் வைத்து 'தமிழின் நிறம் கறுப்பு' என்று அறிவித்தறக்கா? ஸ்ரேயாவின் நளினங்களுக்கா அல்லது 'பழகிப்பார்த்த' கலாச்சாரத்துக்கா?

2. அகில இந்திய அளவிலேயே சிறந்த படமாக காஞ்சிவரம் தேர்வு செயப்பட்டிருகிறபோது தமிழக அரசு அதை கண்டுகொள்ளவில்லை (என் வழி தனிவழி என்று ரஜினி படத்துக்கு விருது கொடுத்திருகிறார்கள்). தேசிய அளவில் தமிழில் சிறந்த படமாக தேர்தெடுக்கப்பட்ட 'பெரியார்' படத்துக்கு வெறும் சிறப்பு பரிசு கிடைத்திருக்கிறது. பெரியாரின் பகுத்தறிவைவிட ரஜினி ஸ்டைல்தான் முக்கியம் என்கிறது தமிழக அரசு.

3. இந்தியாவில் சிறந்த நடிகர் பிரகாஷ்ராஜ்.. ஆனால் அதை நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம்.. ரஜினியைவிட ஒரு சூப்பர் ஸ்டார் இருக்க முடியுமா என்ன? போனால் போகிறது பிரகாஷ்ராஜுக்கு குணச்சிர நடிகர் விருது கொடுத்து விடலாம்.

4. விருதுகள் இன்னும் அலுக்கவில்லை கலைஞருக்கு... சிறந்த வசனகர்த்தாவாக கலைஞரே தேர்வு செய்திருக்கிறார் (ஸாரி.. செய்யபட்டிருக்கிறார்). நல்லவேளையாக அவர் எந்தப்படத்திலும் நடிக்காததால் வாய்ப்பு கமல்-ரஜினிக்கு போனது. ஆமாம்.. விழாவில் இந்த விருதை கலைஞருக்கு யார் கொடுப்பார்கள்? அவர் காலில் அவரே விழுவாரோ?

5. சந்தடிசாக்கில் சந்தோஷ் சுப்பிரமணியம் படமும் ஒரு விருதை வாங்கியிருக்கிறது... ஒரு ரீ-மேக் படத்துக்கு எப்படி விருது அளிக்க முடியும் என்பது வியப்பு..!

6. நல்லவேளையாக சிவாஜி 2007 லும் தசாவதாரம் 2008 லும் வெளியானதால் கமல்-ரஜினி ஜோடிக்கு விருது கொடுப்பதில் சிக்கல் எதுவும் இல்லை. இவை மட்டும் ஒரே ஆண்டில் வெளிவந்திருந்தால் தமிழ்நாடு ஒரு மாபெரும் பிரச்சனையை சந்தித்திருக்கும்.. இலங்கை பிரச்சனை பின் தள்ளப்பட்டிருக்கும். இப்போதும் கமல்-ரஜினி ஜோடி விருதுகளை வாங்கியதால், விஜய்-அஜீத் ஜோடிக்கு இந்தமுறை சான்ஸ் இல்லை. குருவி, வில்லு, ஏகன் போன்ற மகாகாவியங்கள் பரிசீலிக்கப்படவில்லை.

7. தமிழக அரசுக்கு ஒரு யோசனை... விருது கொடுக்க முடியாத நடிகைகளுக்கு முதல் சிறந்த கவர்ச்சி நடிகை விருது, இரண்டாம் சிறந்த கவர்ச்சி நடிகை விருது என்று அள்ளி வீசலாம். அப்படியும் சிலர் விடுபட்டுவிடர்களா? கவலையே இல்லை.. இருக்கவே இருக்கிறது கலைமாமணி விருது..!

இந்த விருதை யார் தேர்வு செய்தார்கள்.. அந்த கமிட்டி மெம்பர்கள் யார் என்று எந்த விவரமும் தெரிவிக்கவில்லை. அது யாராக இருந்தாலும் அவர்களுக்கு கொடுக்க வேண்டியது.. 'சிறந்த ஜிங்-ஜாங்' விருது.


Sunday, September 13, 2009

மாண்டபின் மரம்...


மாண்டபின்
மேலுலகம்
மரங்களுக்கு உண்டு...
தெண்டுல்கரின் மட்டை
சொர்க்கம் என்றது...!
தாதாவின் குண்டாந்தடி
நரகம் என்றது...!

Tuesday, August 25, 2009

குறுக்கெழுத்து - 2

இதை கிளிக் செய்து பிரிண்ட் எடுக்கவும்..
Sunday, August 16, 2009

என் சுதந்திரம்

காலை பத்துமணி விழித்து..

இந்திய
தொலைக்காட்சியில்
முதல்முறையாக வெளியாகும்
அதிரடி ஆக்க்ஷன் படம் பார்த்து..

காந்தி கொள்கைகளில்
குறையாடை மட்டும் கடைபிடிக்கும்
கவர்ச்சி நடிகைகளின் பேட்டி ரசித்து..

வெட்டுகுத்து நாயகர்களின்
அஹிம்சை விளக்கம் கேட்டு..

இரட்டைஅர்த்த
நகைச்சுவையை
குடும்பத்துடன் சிரித்து..

தமிழ்
கொல்லும் தொகுப்பாளினிகளின்
காந்தி விளக்கத்தில் மெய்மறந்து..

காந்தி
-கோட்சேவில் சிறந்தவர் யாரென்ற
பட்டிமன்ற தத்துவத்தில் மூழ்கி..

ஏதேனும்
கலவரம் உண்டாவென
செய்திசேனல்களில் அக்கறையுடன் பார்த்து..

சுகமாகக் கழிந்ததென் சுதந்திரதினம்...!

Tuesday, August 11, 2009

இன்னொரு சுதந்திர தினம்

இந்தியாவுக்கு இன்னொரு
சுதந்திர தினம்..
பாரத மாதா
சீனியர் சிட்டிசனாகிவிட்டாள்...
வயதுக்கு
வருவதற்கு முன்பாகவே..!

Sunday, August 2, 2009

நவீன குரங்கு-குல்லா கதை

குரங்கு குல்லா கதையை நாம் சின்ன வயதில் படித்திருப்போம். அதையே கொஞ்சம் நவீனமாக்கி ஒரு மின்னஞ்சல் உலவிவருகிறது.

ஒரு குல்லா வியாபாரி கூடை நிறைய குல்லாவை எடுத்துக்கொண்டு காட்டு வழியே சென்றபோது ஒரு மரத்தடியில் அமர்ந்து படுத்துத் தூங்கிவிட்டான். எழுந்து பார்த்தபோது அத்தனை குல்லாக்களும் அந்த மரத்தின் மேல் உள்ள குரங்குகளின் தலையில்.. என்ன செய்வது என்று தெரியாத குல்லா வியாபாரி தன் தலையில் உள்ள குல்லாவை எடுக்க குரங்குகளும் அதையே செய்தது. உடனே அவன் தன் குல்லாவை தரையில் போட உடனே எல்லா குரங்குகளும் குல்லாவை கழற்றி தரையில் போட்டது. அத்தனை குல்லாக்களையும் அள்ளிக்கொண்டு வியாபாரி சந்தோஷமாக புறப்பட்டான் என்பது கதை.

ஐம்பது வருடங்களுக்குப் பிறகு...

அந்த குல்லா வியாபாரியின் பேரன், தன் தாத்தா போலவே குல்லா வியாபாரம் செய்வதற்காக அதே காட்டுப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது ஒரு மரத்தடியில் உட்கார்ந்து தூங்கினான். கண் விழித்து பார்க்கும்போது அத்தனை குல்லாக்களும் குரங்குகளின் தலையில். பேரன் யோசித்தான்.. தன் தாத்தா சொன்ன கதை ஞாபகம் வந்தது.

தலையிலிருந்து தன் குல்லாவை எடுத்தான்... குரங்குகளும் அதையே செய்தது...

தன் குல்லாவை எடுத்து விசிறிக்கொண்டான்... குரங்குகளும் அதையே செய்தது...

ஆஹா.. தாத்தா வித்தை வேலை செய்கிறதே என்று நினைத்து குல்லாவை தரையில் போட்டான்... ஆனால் குரங்குகள் அதை செய்யவில்லை. மீண்டும் மீண்டும் தன் குல்லாவை தரையில் போட்டுப்பார்த்தான்.. ம்ஹூம்... குரங்குகள் அசையவே இல்லை. அவன் திகைத்துபோய் உட்கார்ந்தபோது, ஒரு குரங்கு குல்லாவை மரக்கிளையில் வைத்துவிட்டு கீழே இறங்கிவந்து அவனை ஓங்கி கன்னத்தில் அறைந்துவிட்டு இப்படிச் சொன்னது:

"உனக்கு மட்டும்தான் தாத்தா இருக்கார்ன்னு நினைப்பா...!"

நீதி 1: நம் ஒவ்வொரு வெற்றியிலிருந்தும் எதிராளி பாடம் கற்றுக்கொள்கிறான் என்பதை மறக்கக் கூடாது.

நீதி 2: ஒரே டெக்னாலஜியை ஐம்பது வருடத்துக்கெல்லாம் உபயோகிக்கக்கூடாது.

Monday, July 20, 2009

தூக்கத்துக்கு விலை என்ன?


கடந்த வாரம் ஓமன் தலைநகர் மஸ்கட் சென்றிருந்தேன். மூன்று நாள் வேலைகளை முடித்துவிட்டு அடுத்த நாள் காலை கிளம்ப வேண்டும். மறு நாள் காலை 10.45 க்கு துபாய்க்கு விமானம். அங்கிருந்து மதியம் 3 மணிக்கு சென்னைக்கு விமானம். முதல் நாள் இரவு டின்னரை முடித்துவிட்டு ஹோட்டல் ரூமில் ரொம்ப நேரம் தொலைக்காட்சியில் மைகேல் ஜாக்ஸனைப் பற்றி ஒரு நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தேன். இரவு 12 மணிக்கு டி.வியை அணைத்துவிட்டு என் அலைபேசியில் காலை 6 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு தூங்கினேன். 6 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு காலை உணவை முடித்துக்கொண்டு ஹோட்டல் பில் செட்டில் செய்துவிட்டு நிதானமாக கிளம்பலாம் என்று திட்டம்.

பொதுவாக அலாரம் அடிப்பதற்கு அரைமணி நேரம் முன்னதாக எனக்கே விழிப்பு வந்துவிடும். அலாரம் அடிக்கட்டும் என்று சும்மா படுத்துக்கொண்டிருப்பேன். இங்கேயும் கொஞ்சம் தூக்கத்துக்கு பிறகு விழிப்பு வந்தது. மணி நாலோ ஐந்தோ இருக்கும் என்று நினைத்து அலாரம் அடிக்கட்டும் என்று கொஞ்சம் புரண்டு படுத்தேன். ரொம்ப நேரமாக அலாரம் அடிக்கவில்லை. இன்னும் அறை இருட்டாகத்தான் இருந்தது. சரி மணி ஆறு ஆக இன்னும் ஐந்து பத்து நிமிடங்கள்தான் இருக்கும் என்று எழுந்து கொண்டேன். பல் துலக்க போனவன் மணி என்னதான் ஆகிறது பார்த்துவிடலாம் என்று நினைத்து அலைபேசியை கையில் எடுத்தேன். அலைபேசி அலாரம் அடிக்கவில்லை... ஷாக் அடித்தது.

மணி காலை 9.45. இன்னும் ஒரு மணி நேரத்தில் விமானம் கிளம்பிவிடும்.

என்னை என்னாலேயே நம்ப முடியவில்லை.. ஜன்னல் திரையை கொஞ்சம் விலக்கிப் பார்த்தேன்.. வெயில் சுளீர் என்று அடித்தது. உண்மைதான்.. கிட்டத்தட்ட பத்து மணி ஆகப்போகிறது. நான்தான் அலாரம் சரியாக வைக்கவில்லை. எனக்கு தலை சுற்றியது... எங்கிருந்து கிளம்பி எப்படி விமானத்தை பிடிப்பது.. அதுவும் பன்னாட்டு விமானம். மூளை வேலை செய்வதற்கு கொஞ்ச நேரம் பிடித்தது..!

சரி.. அடுத்து என்ன செய்வது?

நிச்சயம் இந்த விமானத்தை பிடிக்க முடியாது.. சரி 3மணிக்கு கிளம்பும் துபாய் விமானத்தை பிடித்தால் என்ன? அதற்க்கு மஸ்கட்டிலிருந்து துபாய்க்கு காரில் செல்லவேண்டும்.. அதிவேகத்தில் போனால் கூட 4 மணி நேரமாகும் என்றார் ஹோட்டல் ஊழியர்..! இக்கட்டான நேரத்தில் அந்த ரிஸ்க்கை எடுப்பது என்று முடிவு செய்தேன். சிதறிக்கிடந்த துணிகளையெல்லாம் பெட்டியில் அள்ளிப்போட்டுக்கொண்டு ஹோட்டல் பில் கட்டிவிட்டு காரில் உட்கார்ந்தபோது மணி 10.30.

துபாய்-மஸ்கட் எல்லையில் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கும்... சில சமயம் ஒரு மணி நேரம் கூட கரை நிறுத்திவிடுவார்கள் என்று திடீரென்று கார் டிரைவர் ஒரு வெடிகுண்டைப் போட்டார். கொஞ்சம் குழம்பிய நான் என்ன ஆனாலும் சரி மஸ்கட் விமான நிலயத்துக்கே செல்வது என்று மாற்றி முடிவெடுத்தேன். அடுத்து ஏதாவது ஒரு விமானம் பிடித்து துபாய் சென்றுவிடலாம் என்று திட்டம்.

ஆனால் எந்த ஒரு விமானத்திலேயும் இடம் இல்லை. மஸ்கட்-சென்னை நேரடி விமானத்திலும் இடம் இல்லை.. (இன்று போய் நாளை வா என்றார்கள்). ஒரு சில விமானத்தில் (பஹரின் வழியாக, கத்தார் வழியாக) ஒரே ஒரு டிக்கெட் இருக்கிறது என்பார்கள்..பதிவு செய்யப்போகும்போது "சாரி.. தீர்ந்துவிட்டது" என்பார்கள். இப்படியே மூன்று மணி நேரம் கழிந்தது. கடைசியாக ஒரு டிராவல் ஏஜெண்ட் "ஜெட் விமானத்தில் ஒரு டிக்கெட் இருக்கிறது.. மும்பை வழியாக பயணிக்கவேண்டும்" என்றார்.

யோசிக்கவேஇல்லை.. சரி என்றேன். 106 ரியால் ஆகும் என்றார் (14000 ரூபாய்).. தண்டம் அழுதேன்.. இரவு ஒரு மணிக்குத்தான் விமானம்.. கடைசியாக 12 மணிநேரம் மஸ்கட் விமான நிலையத்திலேயே குப்பைகொட்டி அந்த ஜெட் விமானத்தை பிடித்து மும்பை வந்து சென்னை வந்து சேரும்போது அடுத்தநாள் காலை மணி பத்து.

தூக்கத்துக்கு விலை உண்டா? உண்டு... என் தூக்கத்துக்கு விலை 14000 ரூபாய்...!

Monday, July 6, 2009

இரண்டு நியூயார்க் அனுபவங்கள்


அது 2004 ம ஆண்டு.. உலக வர்த்தக தலைநகரான நியூயார்க் செல்லப்போகிறோம் என்கிற குதூகலத்தில் நானும் என் நண்பனும் சென்னையில் விமானம் ஏறினோம். ஆனால் நியூயார்க்கின் முதல் அனுபவமே ஏமாற்றமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை..

கென்னடி விமான நிலையத்தில் இறங்கி டாக்சி பிடித்து மேன்ஹாட்டனில் உள்ள ஹோட்டலை அடையும்படி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.. 45 டாலர் ஆகும் என்றும் குறிப்பிடிருந்தார்கள்.

விமான நிலையத்தில் இறங்கி தொலைபேசி அட்டை வாங்க நாங்கள் கொஞ்சம் 'ஞே' என்று விழிப்பதை பார்த்து விட்டு ஒருவர் வந்தார். தன் டாக்ஸியில் வரும்படி அழைத்தார்.. அவரே சில உதவிகள் செய்தார். கொஞ்சம் பருமனான உடல்வாகும் தென்அமெரிக்க முகஅமைப்பும் கொண்டவராக இருந்தார். எங்கள் பெட்டிகளை டாக்சியில் ஏற்றினர். போகும் வழயில் அமெரிக்க ஆங்கிலத்தில் ஏதேதோ பேசினார். நியூயார்க்கின் பெருமைகளையெல்லாம் எடுத்துச் சொன்னார்.

ஹோட்டலில் இறங்கியவுடன் 90 டாலருக்கான பில்லை நீட்டினார். அது அதிகம் என்று தெரிந்தும் களைப்பு மிகுதியால் அவரிடம் விவாதம் செய்யவில்லை.. என் நண்பர் 100 டாலர் நோட்டைக்கொடுக்க, 'என்ன இது' என்றார். பார்த்தால் அவர் கையில் 10 டாலர் நோட்டுதான் இருந்தது. என் நண்பர் 'சாரி' என்று சொல்லி அதை வாங்கிக்கொண்டு இன்னொரு 100 டாலர் கொடுக்க, நம் கதாநாயகன் பத்து டாலர் மீதி கொடுத்துவிட்டு நிதானமாக பெட்டிகளை ஹோட்டலில் இறக்கிவைத்துவிட்டு, 'டாட்டா.. பைபை..' என்று சொல்லி கிளம்பிச் சென்றார்.

பிறகு ஹோட்டல் அறைக்குள் போனபிறகுதான் நாங்கள் 10 டாலர் நோட்டையே எடுத்து வரவில்லை என்று மூளையில் உரைத்தது. டாக்சி டிரைவர் கண நேரத்தில் நோட்டுகளை மாற்றிய வித்தை அப்போதுதான் புரிந்தது. எல்லா அமெரிக்க டாலர்களும் ஒரே அளவில் இருப்பதால் எங்களுக்கும் சந்தேகம் வரவில்லை.

'ஆஹா... நியூயார்க்ல ஏறங்கினஉடனே கவுத்துடாங்களே...' என்று தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்தோம். அப்போதுதான் நம்மூர் ஆட்டோகாரனிடம் ஐந்து ரூபாய்க்கு பேரம் பேசியதெல்லாம் நினைவுக்கு வந்தது.

இந்த வருடம் மீண்டும் நியூயார்க் பயணம் சென்றேன்.. தனியாக..! கென்னடி விமானநிலையத்தில் நின்றபோது கிட்டத்தட்ட அதே உடல்வாகுடன் ஒரு டாக்சி டிரைவர் வந்தார்.. அதே போல் சிலபல உதவிகள் செய்தார். இந்த முறை உஷாராக இருக்கவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன்... அவ்வப்போது கையிலிருந்த டாலர்களை எண்ணிக்கொண்டிருந்தேன்...

இது போதாதென்று நியூயார்க் பற்றி ரொம்ப தெரிந்தால்போல் டாக்சி டிரைவரிடம் காண்பித்துக்கொண்டேன். "அதாம்பா.. ஸ்டாச்சு ஆப் லிபர்ட்டி ரைட்ல ஒரு மெயின் ரோடு வருமே.. அதுல திரும்பி லெப்ட் எடுத்தா பிராட்வே குறுக்குச்சந்துல இருக்கிற ஹோட்டல்.. என்று ஏதேதோ எடுத்துவிட்டேன்.

அமைதியாக கேட்டுகொண்டிருந்த டாக்சி டிரைவர், "என்ன இந்தியாவா" என்றார்.. "ஆஹா தெரிஞ்சுபோச்சா" என்று நினைத்து ஆமாம் "நீங்களும் இந்தியாவா" என்றேன். "இந்தியா மாதிரிதான்" என்று பதில் வந்தது.. அதென்னது.. 'இந்தியா மாதிரி' என்று நான் குழம்பியபோது 'ஆனால் பாகிஸ்தான்' என்றார். இஸ்லாமாபாத்தை சேர்ந்தவராம்... நியூயார்க் வந்து ஐந்து வருடமாகிறதாம்.

பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்று என்று நினைக்கும் ஒரு பாகிஸ்தானியரைப் பார்த்து ஆச்சிரியப்பட்டேன். பிறகு அவர் இந்தியாவை பற்றி நிறைய விசாரித்துக்கொண்டிருந்தார்.

ஹோட்டல் வந்ததும் நம் பழைய டாக்சி டிரைவர் போலவே, பெட்டிகளை இறக்கிவைத்துவிட்டு, ஆனால் சரியான பணம் வாங்கிக்கொண்டு, தன் விசிடிங் கார்டை கொடுத்துவிட்டு, 'உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி' என்று கைகொடுத்துவிட்டு சென்றார்.

இதனால் தெரிவிப்பது என்னவென்றால், நியூயார்க்கில் நல்ல டாக்சியும் இருக்கிறது.. கள்ள டாக்சியும் இருக்கிறது... நீங்கள் யாரிடம் மாட்டிக்கொள்வீர்கள் என்பது உங்களுடைய அதிஷ்டத்தைப் பொறுத்தது.

Saturday, June 13, 2009

கோனார்க் சூரியக் கோவில்


Sunday, May 31, 2009

இந்தியா வோட்டு, தமிழனுக்கு வேட்டு

இத்தனை நாள் இலங்கை இனப்படுகொலையை ஏதோ கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதுபோல ரசித்துக்கொண்டிருந்த இந்திய அரசு, கடைசியாக தமிழனுக்கு அந்த துரோக செயலையும் செய்து முடித்துவிட்டது. பல ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ஐ.நா வில் கொண்டுவந்த மனிதஉரிமை விசாரணையில் இலங்கைக்கு ஆதவாக வோட்டுபோட்டு இலங்கைக்கு தன் விசுவாசத்தை காட்டிகொண்டது. இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளுக்கு இருக்கும் உணர்வுகூட இந்தியாவுக்கு இல்லை... வெட்கக் கேடு..!


இலங்கை போரில் மனித உரிமை மீறல் எல்லாருக்கும் தெரிந்ததே.. தடை செய்யப்பட்ட வெடிகுண்டுகளை பயன்படுத்தியது, மருத்துவமனையில் கல்விநிலையங்களில் குண்டு வீசியது, சொந்த நாட்டு மக்களையே அகதிகளாய் வைத்திருப்பது, போன்றவற்றை ஊடகங்களும் செஞ்சிலுவைச்சங்கமும் படம் பிடித்துக் காட்டியது. இதோ, டைம்ஸ் பத்திரிகை கடைசி கட்ட போரில் 20000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளது. அங்கு செல்ல செஞ்சுலுவை சங்கம் உட்பட இந்த அமைப்புகளுக்கும் அனுமதி இல்லை. போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் சுட்டுத்தளியது இலங்கை இராணுவம்.


ஹிட்லருக்கு பிறகு இந்த உலகத்தில் மிகப்பெரிய மனித பேரழிவை நடத்திக்காட்டியிருகிறது இலங்கை அரசு. (ஹிட்லர் கொன்று குவித்த யூதர்களின் எண்ணிக்கை இலங்கை தமிழர்களைவிட அதிகம் என்பதால் ஹிட்லருக்கு பிறகு ராஜபக்க்ஷே அரசு என்று சொல்லலாம் -மற்றபடி இனவெறி ஒன்றுதான்). அதுபோல ஹிட்லர் நடத்திய concentration campக்கும் இலங்கை அரசு நடத்தும் அகதிகள் முகாமுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

தக்குனூன்டு நாடு இலங்கை.. சராசரி இந்திய மாநிலங்களைவிட சிறியது. இருந்தாலும் இந்தியாவுக்கு தட்டிகேட்க திராணியில்லை... தமிழனுக்கு நாதியில்லை.. தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா ஒரு வல்லரசா அல்லது வலிமை இழந்த அரசா? இந்தியாவுக்கு இலங்கையினாலேயே ஆபத்து காத்திருக்கிறது என்பதை உணருகிறதா இந்திய அரசு? இதோ, சீனா இலங்கையில் கடற்படையை அமைத்துக்கொள்ள இடம் தேடிக்கொண்டுகிறது. பல துறைமுகங்கள் சீன உதவியுடன்தான் இலங்கையில் கட்டப்படுகினறன. பாகிஸ்தான் இலங்கைக்கு ஆயுதங்களை வினியோகித்துக் கொண்டேயிருக்கிறது.


இவையெல்லாம் தெரிந்தும் இந்தியா இலங்கைக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை... எல்லாவற்றுக்கும் மேலாக ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவாகவும் வோட்டு போட்டுள்ளது. அடுத்தது டெல்லி வரப்போகும் ராஜபக்க்ஷேக்கு சிவப்பு கம்பளம் விரிக்க மன்மோகன் சிங்கும் எஸ்.எம்.கிருஷ்ணாவும் தயாராகி விட்டனர். ஏனென்றால் அங்கு படுகொலை செய்யப்பட்டது தமிழ் இனம்தானே.. சீக்கியர்களோ அல்லது ஆஸ்திரேலியா-வாழ் இந்தியர்களோ இல்லையே?


தமிழ்ப் பிணக்குவியல்களை ஒட்டுமொத்தமாக தகனம் செய்து அந்த சாம்பலின் மீது வெற்றிக்கொடி நட்டிருக்கும் இலங்கை ராணுவத்தினருக்கு இந்த வோட்டு மூலம் ஆறுகோடி தமிழர்களை கொண்ட இந்திய தேசம் அங்கீகாரம் அளித்திருக்கிறது.

Sunday, May 17, 2009

2009 தேர்தலில் தமிழ்நாடு - ஒரு பருந்துப் பார்வை

மற்ற எந்த பாராளுமன்ற தேர்தல்களைவிட இந்த முறை தமிழக மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களிதிருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இந்த ஒரு முறைதான் எந்தவித உணர்ச்சிகளுக்கும் அடிபணியாமல் நிதானமாக யோசித்து செயல்பட்டிருகிறார்கள்.

ஒரு பருந்துப் பார்வை:

பாம.க தோல்வி
பாம.க இடம்பெறும் கூட்டணிதான் வெற்றிபெறும் என்ற மாயையை மக்கள் தகர்த்தெறிந்திருக்கிறார்கள். மத்திய அரசின் கட்சி சொட்டுவரை நனைந்துவிட்டு, அந்த மத்திய அரசையே குறை கூறும் பா.ம.க வின் கண்ணீரை மக்கள் விரும்பவில்லை. தங்கள் விருப்பப்படி யாரோடு வேண்டுமானாலும் சேரலாம் எப்போது வேண்டுமானாலும் விலகலாம் என்ற கொள்கையோடு இருந்த பா.ம.க.வினருக்கு இது ஒரு பாடம்.

இலங்கை பிரச்சனை
இந்த தேர்தலில் இலங்கை தமிழர்கள் படுகொலை நிச்சயமாக ஒரு உணர்ச்சிபூர்வமான பிரச்சனையாக இருந்தது... அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, ஊடகங்களும், திரைப்படத்துறையினரும் ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்தியிருந்தார்கள். தேர்தல் முடிவையே தீர்மானிக்கும் பிரச்சனையாக அது இருந்தது. ஆனால் மக்கள், தமிழர்கள் இனப்படுகொலைக்கு தி.மு.க வைவிட காங்கிரஸின் இயலாமைதான் காரணம் என்ற எண்ணத்தில் காங்கிரசை பல இடங்களின் தோற்கடித்திருகிரர்கள். 16 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 9 தொகுதிகளையே வென்றிருக்கிறது. வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் கூட சொற்ப வித்தியாசத்திலேயே வென்றிருகிறார்கள். மக்கள் கோபம் தி.மு.க வைவிட காங்கிரசையே அதிகம் பாதித்திருக்கிறது. அதே சமயம், மக்கள் மற்ற கட்சிகளையும் நம்ப தயாராக இல்லை.

தொழில் பகுதிகளில் காங்கிரஸ் தோல்வி
தமிழ்நாட்டின் தொழில் மாவட்டங்களான கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம், தென்காசி போன்ற தொகுதிகளில் தி.மு.க-காங்கிரஸ் தோல்வியை தழுவியிருக்கிறது. இந்தப் பகுதிகளில் மின்தடை, ஏற்றுமதி கொள்கைகளில் குளறுபடி, ரூபாய் டாலர் மாறுதல்கள் போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட பல பின்னலாடை நிறுவனங்கள் முடப்பட்டன.. பலர் வேலை இழந்தனர். டெக்ஸ்டைல் தொழிலை அதிகம் கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகளை மக்கள் தண்டித்திருகிறார்கள்.

மதுரை வெற்றி
எதிர்பார்த்த ஒன்று.. அழகிரி ஒருவர்தான் வெற்றிபெற்ற பிறகு தொகுதி மக்களை கவனிக்க வேண்டிய அவசியம் இல்லாதவர். ஏனென்றால் கவனிக்க வேண்டியதை தேர்தலுக்கு முன்பே கவனித்து விட்டார்.

தென் மாவட்டங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி
ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி தொகுதிகளில் தி.மு.வெற்றி பெற்றிருக்கிறது. தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம், குளைச்சல் துறைமுகம், நாந்குநேரி தொழில் பேட்டை, சேது சமுத்திர திட்டம் மற்றும் பல தொழில் திட்டங்களை கொண்டுவந்த ஆளும்கட்சிக்கு மக்கள் வாக்களிதிருகிறார்கள். இலங்கைக்கு அருகில் இருந்தும் இங்கு இலங்கை பிரச்சனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை... ஆளும் கட்சிகள் அறிவித்த தொழில் திட்டங்கள் தொடர தங்கள் வளர்ச்சியை கருத்தில் கொண்டே வாக்களிதிருகிறார்கள் தென் மாவட்ட மக்கள்.

டெல்டா பதிகுகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி
மத்திய அரசின் விவசாய கடன்கள் தள்ளுபடி கொள்கை, டெல்டா பகுதிகளான தஞ்சை, நாகை, மயிலாடுதுறை தொகுதிகளில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் தி.மு.போட்டியிட்ட தஞ்சை, நாகை தொகுதிகள் மட்டும் வெற்றி.. காங்கிரஸ் போட்டியிட்ட மயிலாடுதுறைக்கு தோல்வி என்பது, இலங்கை பிரச்சனையில் மக்களுக்கு காங்கிரஸ் மீது மட்டும் தான் கோபம் என்பதைக் காட்டுகிறது.

இதையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாடு மக்கள் கொஞ்சம் தெளிந்த சிந்தனையோடு வாக்களிக்க தொடங்கியிருகிறார்கள் என்பது புரிகிறது. உணர்ச்சிகளின் அடிப்படையிலோ, கூட்டணிகளில் அடிப்படையிலோ இனி வாக்களிக்கமாட்டோமென்று சொல்லாமல் சொல்லியிருகிறார்கள்.

நல்ல தொடக்கம்... வரவேற்ப்போம்..!

Wednesday, May 13, 2009

கலைநயம் மிகுந்த தராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்


Tuesday, April 14, 2009

சர்ச்சில் தோற்றது ஏன்?

இந்தியாஅடுத்த பாராளுமன்ற தேர்தலை சந்திக்கப்போகிறது. என்னதான் இங்கு அரசியல் சீரழிந்தாலும் இந்திய ஜனநாயகம் அசைக்கமுடியாத தூணாக இருக்கிறது... பல பெரும் தலைவர்களையே புரட்டிப்போட்டிருக்கிறது.
ஆனால் இவை எல்லாவற்றையும் விட ஜனநாயகத்தின் வலிமையை இங்கிலாந்து மக்கள் ஒரு முறை நிரூபித்திருகிறார்கள்.

அது 1945ம் வருடம்.. இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த நேரம். இங்கிலாந்துக்கு மட்டும் அல்ல, ஐரோப்பாவுக்கே மகத்தான வெற்றியை தேடித்தந்தார் வின்சென்ட் சர்ச்சில். போரின் இடையில் இங்கிலாந்தில் பிரதமராக பதவியேற்ற சர்ச்சில், தன் பேச்சாற்றல், அபாரமான போர்த்திறன் மூலம் மக்கள் மனதில் ஒரு மகத்தான தலைவனாக இடம் பிடித்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் 83 % மக்கள் சார்ச்சில்தான் உண்மையான் ஹீரோ என்றனர். இந்த சமயத்தில்தான் இங்கிலாந்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. சர்ச்சில் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியும் லேபர் கட்சியும் களத்தில் குதித்தன.

வெற்றிக்களிப்பில் தேர்தலை சந்தித்தார் சர்ச்சில்..! எல்லோரும் கன்சர்வேடிவ் கட்சி மாபெரும் வெற்றிபெறும், சர்ச்சில்தான் மீண்டும் பிரதமர் என்பதில் இமியளவும் சந்தேகம் இல்லை என்று நம்பினார்.

ஆனால் முடிவு எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தது... சர்ச்சில் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அதுவரை இல்லாத அளவுக்கு தோல்வியை தழுவியது.. எதிர்கட்சியான லேபர் கட்சி மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

சர்ச்சிலை தோற்கடித்தற்கு மக்கள் சொன்ன காரணம்: "சர்ச்சில் ஒரு சிறந்த அரசியல் வித்தகர். போரை கையாள்வதில் வல்லவர்.. அவரைத்தவிர யுத்த காலத்தில் ஒரு சிறந்த பிரதமர் இருக்க முடியாது. ஆனால் இப்போது போர் முடிந்துவிட்டது. உடைந்துபோன பொருளாதாரத்தை நிலை நிறுத்தவேண்டும்.. இங்கிலாந்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.. இவற்றுக்கெல்லாம் லேபர் கட்சிதான் சரி.. சர்ச்சிலோ, கன்சர்வேடிவ் கட்சியின் கொள்கைகளோ இதற்க்கு உதவாது.. அவர்கள் போர் முனையில் கெட்டிக்காரர்கள்.. அனால் பொருளாதார சீரமைப்புக்கு அவர்கள் உதவமாட்டார்கள்..!"

தனிப்பட்ட ஒருவரின் சாதனையையும் ஒரு கட்சியின் கொள்கைகளையும் பிரித்துப்பார்க்கும் அளவுக்கு இங்கிலாந்து மக்களின் சிந்தனை மேம்பட்டு இருந்தது. சினிமா பிம்பங்களையும், வெற்று கோஷங்களையும், மரணங்களையும் நம்பி ஓட்டு போடும் நம் மக்கள் எப்போது இதுபோல் சிந்தித்து ஓட்டு போடப்போகிறார்கள்?

Saturday, April 4, 2009

தன் ஃபெராரி காரை விற்ற துறவி


சமீபத்தில்
நான் படித்த புத்தகம்... ராபின் சர்மா எழுதிய 'the monk who sold his ferrari' ... 2007ல் வெளியான பிரபலமான இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு இப்போதுதான் நேரம் கிடைத்தது.

வாழ்கையில் கொடிகட்டிப் பறந்த ஒரு கோடீஸ்வர வழக்கறிஞர் இமயமலை சென்று அங்குள்ள சிவானா யோகிகளிடம் சென்று வாழ்கையில் உண்மையை உணர்த்து கொள்கின்றார். மேர்க்கத்திய நாகரீகத்தில் திளைத்து பணம், தொழில் ஒன்றையே குறிக்கோளாக நம்பி, வாழ்கையின் இனிமையான பக்கங்களை தொலைத்த ஜுலியன் என்ற மனிதருக்கு இந்திய தத்துவங்கள் புதிய வழி காட்டுகின்றன. புத்துணர்ச்சி பெற்ற புது மனிதனாக திரும்ப வந்து தன்னுடன் பணியாற்றிய ஜானிடம் தன் அனுபவங்களைப் பகிந்ர்துகொள்வதே இந்தப் புத்தகம்.

ராபின் சர்மாவின் எழுத்துக்கள் அப்படியே சத்குரு ஜக்கி வாசுதேவின் சிந்தனைனையை ஒத்துப்போகிறது. பாசிடிவ் எண்ணங்களை வளர்த்துக்கொள்வது, எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது, வாழ்கையின் அந்தந்த நிமிடங்களை ரசிப்பது, இயற்கையை போற்றுவது, தினம் யோகா என்று சத்குருவின் தத்துவங்கள் அப்படியே இந்தப்புத்தகத்தில் பிரதிபலிக்கிறது. வறட்டு தத்துவங்களை போதிக்கும் கனத்த புத்தகமாக இல்லாமல் எளிய நாட்டையில் இயல்பான ஆங்கிலத்தில், வாழ்கையை ஆனந்தமாக வைத்துக் கொள்வதைப்பற்றி விளக்கியிருக்கிறார் ஆசிரியர். ஆனந்தமாக இருப்பதற்கு ஒன்றும் மாயவித்தைகள் தேவையில்லை... வாழ்க்கைமுறையை கொஞ்சம் மாற்றி அமைத்துகொண்டால் போதும்.. என்பது இந்தப் புத்தகத்தின் சாராம்சம்.

இதில் குறிப்பிட்டிருக்கும் வாழ்கைக்கு தேவையான உத்திகள் எல்லோருக்கும் பொதுவானவை.. எவரும் பின்பற்றக்கூடியவை.. ஒவ்வொரு பகுதியும் படித்து முடித்தவுடன் ' அட.. சரிதான்' என்று நம்மை நாமே உணரக்கூடியவை. புத்தகம் படித்து முடித்ததும் ஜுலியனைப்போல நாமும் புத்துணர்ச்சி பெற்று புது மனிதனாக உணர்வோம்... நம் எண்ணங்கள் சிறிதளவேனும் தூய்மைப்படுவது உறுதி.

இதில் எனக்கு பிடித்த ஒரு சொலவடை: "வாழ்கையின் இனிமையை அனுபவிப்பதற்கு நேரமில்லாமல் வெறும் பொருள், புகழ் ஈட்டுவதிலேயே கவனம் செலுத்துவது, 'வேகமாக கார் ஓட்டிக்கொண்டிருக்கிறேன்... பெட்ரோல் போட நேரமில்லை' என்பத்தைப் போல.."

Sunday, March 22, 2009

நாளைய விடியல் - 2

நாளைய விடியல் நிரந்தரம் ஆகும்..!
நம்பிக்கை உனக்குள் நங்கூரம் போடும்..!
வாழ்க்கை என்பது உன் வசமாகும்..!
வாழ்ந்துப்பார்த்தால் உண்மை புரியும்..!

தினம் தினம் விழித்தெழு எதிர்பார்போடு...!
நித்தம் பணிகளைப் பட்டியல் போடு...!
அன்றயபணிகளை அன்றே முடித்திடு - பின்
இல்லை உறக்கம் ஏமாற்றத்தோடு...!

மனித சரித்திரத்தைப் புரட்டிப்பார் - உன்
முன்னோரை கொஞ்சம் நினைத்துப்பார் - அவர்
பதித்த தடங்களை எண்ணிப்பார் - பின்
நீசெல்லும் பாதை விளங்கும்பார்...!

Sunday, March 8, 2009

இலவச காய்ச்சல்


கடந்த தமிழக தேர்தலின் கதாநாயகன் 'இலவச அறிவிப்புகள்'. தி.மு.க வின் கலர் டெலிவிஷன், இலவச வீடுமனை பட்டா அறிவிப்புகள் யாரும் எதிர்ப்பார்க்காதது...! கொஞ்சம் சுதாரித்துக்கொண்டஅ.தி.மு.க 'இலவச கம்யூட்டர்'களை அறிவித்தது. டி.வி., கம்யூட்டர், டேப்-ரெகார்டர், பிரிட்ஜ் என்று விவேக் அண்டு கோ கணக்காக எல்லா வீட்டு உபயோகப் பொருட்களும் இலவசமாக அறிவிக்கப்பட்டுவிட, என்ன செய்வது என்று திகைத்த விஜயகாந்த், கோவில்களில் இலவச பகவத்கீதை, மசூதிகளில் இலவச குரான் என்று ஏதேதோ சொல்லிப்பார்த்தார்.. கடைசியில் கலர் டி.வி மட்டுமே வென்றது..

இப்போது
இந்த இலவச காய்ச்சல் ஆந்திராவையும் தொற்றிக்கொண்டு விட்டது. ஏக்கர் கணக்கில் நிலம், இலவச மின்சாரம், பெண் குழந்தை பிறந்தால் ஒரு லட்சம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார் புதிதாக கட்சி ஆரம்பித்த சிரஞ்சீவி. ஐ.டி. துறையில் ஆந்திராவை தலை நிமிரச்செய்த சந்திரபாபு நாயுடுவும் இதற்க்கு விதிவிலக்கல்ல... ஏழைகளுக்கு ரொக்கப் பணம் அறிவித்திருக்கிறார். இவர் ஏழைகளை மூன்று விதமாக பிரித்திருக்கிறார். பரம ஏழைகளுக்கு மாதம் 2000 ரூபாயும், 'சுமாரான' ஏழைகளுக்கு 1500 ரூபாயும், கொஞ்சம் 'பணக்கார' ஏழைகளுக்கு 1000 ரூபாயும் கொடுக்கப்போகிறாராம். அதுவும் ஏ.டி.எம் மூலமாக பணத்தை எடுத்துக்கொள்ளலாமாம் (நாயுடு ஹை-டெக் முதல்வராயிற்றே..) இதைத்தவிர இலவச கலர் டி.வி., இலவச மின்சாரம் என்று நீண்டுகொண்டே போகிறது பட்டியல். முதல்வர் ராஜசேகர ரெட்டியின் அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை.

கடைதேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போலத்தான் இருக்கிறது இந்த இலவச அறிவிப்புகள். எந்த கட்சியும் அரசாங்க வருமானத்தை எப்படி அதிகரிப்போம் என்று தேர்தல் வாக்குறுதி தருவதில்லை... செலவழிப்பதை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருகிறது.. ஏதாவது ஒரு கட்சி 'நாங்கள் இலவசமாக எதையும் தரமாட்டோம்.. அவற்றை மக்கள் தாங்களே வாங்கும் அளவுக்கு அவர்கள் தரத்தை உயற்றுவோம்' என்று சொல்கிறதா?

தேர்தல் பிரசாரத்திற்கு ஆயிரம் விதிமுறைகளை வைத்திருக்கும் தேர்தல் ஆணையமோ அல்லது நம் அரசியல் சட்டமோ இதுபோல இலவச அறிவிப்புகளை கண்டுகொள்வதில்லை. ஓட்டுப்போடுவதற்கு பணம் கொடுப்பதற்கும் எனக்கு ஒட்டுப்போட்டால் பணம் கொடுப்பேன் என்று வாக்குறுதி அளிப்பதற்கும் என்ன வித்தியாசம்? நாளை ஏதாவது ஒரு கட்சி சென்னை பெசன்ட் நகரில் 3 பெட்ரூம் அபார்ட்மெண்ட் இலவசமாக தருகிறேன் என்று சொன்னால், குறைந்தபட்சம் நாம் வாய்விட்டு சிரிக்கலாமே தவிர அதைத் தடுப்பதற்கு நம் நாட்டில் எந்த சட்டமும் கிடையாது.

கல்வி, மருத்துவம், (சில சமயங்களில்) விவசாயம் போன்ற துறைகளைதவிர வேறு எதையும் இலவசமாககொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற இலவசங்கள் மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றுவதைத்தவிர வேறு எந்த சாதனையும் செய்யாது. மக்களை தன்மானத்தோடு வாழவைக்கவேண்டிய அரசு, ஏழைகளுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவேண்டிய அரசு, அவர்கள் வாழ்கைத்தரத்தை மேம்படுத்தவேண்டிய அரசு, இப்படி ஒரு சமூகத்தையே அரசாங்கத்திடம் கையேந்த வைப்பது கொடுமையிலும் கொடுமை. அதைவிடக் கொடுமை இது ஏதோ சாதனை போல விளம்பரபடுதிக்கொள்வது..!

ஆனால் தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் பரவியுள்ள இந்த இலவச காய்ச்சல் ஆந்திரா மட்டுமல்லமல் எல்லா மாநிலங்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்புகள்தான் அதிகம் உள்ளது.

Wednesday, March 4, 2009

அமெரிக்கா...!


அன்று இந்தியக் கழுதைகளுக்கும்
அமெரிக்காவிலிருந்து அழைப்பு..!
'ஜாவா' போஸ்டர் உண்டதன் விளைவு...!

இன்று அமெரிக்கர்களுக்கே வேலை விடுப்பு..!
வர்த்தகம் மந்தமடைந்ததால் திருமபு...!

Monday, February 23, 2009

ஆஸ்கார் வென்ற தமிழன்


கடைசியில்
அந்த சாதனையை நிகழ்த்திவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

சின்ன சின்ன ஆசையாய் தன் இசை பயணத்தை துவங்கியவர், திரையுலகத்தின் உச்சகட்ட ஆசையான ஆஸ்கார் விருதை வென்றுவிட்டார். இவர் இசைப்புயல் மட்டுமல்ல... ஆடம்பரமும் கவர்ச்சியும் மிளிரும் ஆஸ்கார் விழாவில் ஆர்பாட்டமில்லாமல் விருது வாங்கிய அமைதிப்புயல்... 'எல்லாப்புகழும் இறைவனுக்கே' என்று அடக்கத்தோடு சொன்ன ஆன்மீகப்புயல்.. ! 'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்ற வள்ளுவர் வாக்குப்படி புகழ் தன் தலை தொடாதபடி பார்த்துக்கொண்டதனால்தான் ரஹ்மானால் இந்த உச்சத்தை அடைய முடிந்தது.

பல அரசியல் சண்டைகளால் தலை குனிந்து நிற்கும் தமிழர்களை சில அங்குலங்களாவது தலைநிமிரச்செய்த ரஹ்மானுக்கு ஒவ்வொரு தமிழனும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறான்.

ஆஸ்கார் அரங்கில் தமிழில் நன்றி சொன்னதற்காக ரஹ்மானுக்கு இன்னொரு சிறப்புப் பூங்கொத்து...!

Sunday, February 22, 2009

சென்னை முதலைப் பண்ணைWednesday, February 11, 2009

எது அதிசயம்?


அண்மையில் நான் படித்த புத்தகம் சத்குரு ஜக்கி வாசுதேவின் 'கேளுங்கள்... கொடுக்கப்படும்'... சத்குருவின் கேள்வி-பதில் தொகுப்பு.. அதில் ஒரு கேள்வி-பதில்.. தலையில் பொளேர் என்று அடித்தாற்போல இருந்தது .

கேள்வி: திருவண்ணாமலையில் ஒரு யோகி ஆசனத்தில் அண்ணாந்து பார்த்து அமர்ந்தபடி அப்படியே காற்றில் எழுவதை இணையதளத்தில் பார்த்தேன். என் கண்களையே நம்பமுடியவில்லை.. இது சாத்தியமா?

பதில்
: சாத்தியம்தான். அனால் உண்மையான் யோகிகள் இந்த சர்க்கஸ் வேலைகள் செய்துகாட்டிக்கொண்டு இருக்க மாட்டார்கள். வாழ்க்கை என்பதே மிக வியக்கத்தக்க அதிசயம். ஒரே மண்ணிலிருந்து ஒவ்வொரு விதையும் வெவ்வேறு மரமாக வெளிவருவது அதிசயம். உண்பதை உடலின் பகுதியாக மாற்றும் உயிரின் அமைப்பு அதிசயம். சேற்றில் செந்தாமரை பூப்பது அதிசயம்.. பூமி சுழல்வது அதிசயம்.

இத்தனை அதிசயங்களை செய்துகாட்டும் இயற்கை ஆர்ப்பாட்டமிலாமல் இருக்கிறது. இந்தப் பேரதிசயங்களின் ஆழத்தை உணரும் ஆர்வத்தை விட்டுவிட்டு, நீங்கள் என்ன அதிசயங்கள் செய்துகாட்ட விரும்புகிறீர்கள்?

இதுபோல ஏதோ கொஞ்சம் திறமையை வைத்துக்கொண்டு சித்து வேலையை காண்பிக்கும் யோகிகள் இயற்கையின் முன்னால் தோற்றுபோவார்கள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். கையிலிருந்து விபூதி வரவழிப்பது, வாயிலிருந்து லிங்கம் எடுப்பது, அந்தரத்தில் மிதப்பதுபோல் தோற்றம் அளிப்பது.. இவையெல்லாம் என்ன பெரிய பிரமாதம்? ஒரு பூ மலர்வதை விடவும், பல மைல்கள் பறந்து வேடந்தாங்கலை அடையும் பறவைகளைவிடவும், மயிகளின் தோகை அழகை விடாவா இவையெல்லாம் அதிசயம்? நாம் ஏன் இயற்கையை மறந்து இதுபோல செயற்கை அதிசயங்களை ரசித்துக்கொண்டிருகிறோம்?

இயற்கையை விட்டுத்தள்ளுங்கள்.. மனிதன் தன் திறமையால் பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறான்.. கட்டிடக்கலை வளர்ச்சியடையாத காலத்தில் வெறும் பாறைகளை வைத்து கட்டப்பட்ட எதிப்திய பிரமிடுகள், காற்றின் ஒலியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இசை, ஒலியிலிருந்து முதிர்ந்த மொழி வடிவம்.. இவையெல்லாம் மனிதன் செய்துகாட்டிய அதிசயங்கள்.. இவற்றோடு ஆன்மிகம் சேரும்போதுதான் அது பிரச்சினையாகிறது.. கொல்கத்தா விக்டோரியா அரண்மனையை சில நிமிடங்கள் காணாமல்போகச்செய்த பி.சி.சர்க்காரை 'மாஜிக் நிபுணர்' என்று கூறும் நாம், சித்து விளையாட்டில் ஈடுபடுவோரை கடவுளோடு ஒப்பிடுகிறோம்..

என்ன செய்வது... கடவுள்தன்மை கொண்ட மனிதர்களை நம்புவதற்குக்கூட நமக்கு அதிசயங்கள் தேவைப்படுகிறது. நெல்லிக்கனியை தங்கமாகியவர் என்றும், உயிர்த்தெழுந்து வந்தவர் என்றும் சொன்னால்தானே நாம் ஆதிசங்கரரையும் ஏசுநாதரையும் ஏற்றுக்கொள்வோம்?

Sunday, February 1, 2009

தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின்

இத்தனை நாள்வரை நம்மையெல்லாம் சிரிக்க வைத்துக்கொண்டிருந்த நகைச்சுவை திலகம் நாகேஷ் இன்று நம்மை கண்கலங்க வைத்துவிட்டார்..! நாகேஷ் நினைவில் மூழ்கிய நான், அவரின் சில படங்களை அசைபோட்டேன்.

நீர்க்குமிழி, எதிர்நீச்சல் போன்ற படங்களில் சோகத்தை உள்ளடக்கிக்கொண்டு வெளியே கலகலப்பாக இருக்கும் கதாபாத்திரம் நாகேஷுக்கு..! கிட்டத்தட்ட இதே போன்ற பாத்திரத்தில் நடித்த 'மார்டன் டைம்ஸ்' படத்தின் சார்லி சாப்ளினுக்கு இணையாக நடித்திருப்பார். இரண்டும் கே.பாலச்சந்தரின் படங்கள். கே.பி இயக்கத்தில் அவர் மின்னிய மற்ற படங்களின் ஒன்று 'அனுபவி ராஜா அனுபவி'.. இதில் இரட்டை வேடம். இரண்டுமே மிகைபடுத்தாத இயற்கையான நடிப்பு.. (மறக்க முடியுமா 'முத்துக்குளிக்க வாரீகளா' பாடலை..!) இன்னொரு படம் 'பாமா விஜயம்'. பாலையா, மேஜர், முத்துராமனோடு கலக்கிய காமெடி..

நாகேஷின் மைல்கல் படம் கே.பி வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய 'சர்வர் சுந்தரம்'.. கதாநாயகனாகவும் காமெடியனாகவும் பின்னியெடுத்திருப்பார்..

நாகேஷின் 'கிளாசிக் காமெடி' திருவிளையாடல்தான்.. இன்றும் தமிழகத்தின் பட்டிதொடியிலும் கேட்கப்படும் ஒலிச்சித்திரம். வேறொரு புலவரின் பாடலை அரசவையில் பாடி பரிசு பெரும் அவசரத்தையும், மாட்டிக்கொண்டவுடன் உண்டான பதட்டத்தையும், தன் இயலாமையை நினைத்து தனியாக புலம்புவதையும் மிக அற்புதமாக சித்தரித்திருப்பார்..!

இயக்குனர் ஸ்ரீதரும் நாகேஷை அமர்களமாக கையாண்டிருக்கிறார்.. காதலிக்க நேரமில்லை படத்தில் ஒரு சினமா இயக்குனராகவும் (ஓஹோ ப்ரொடக்க்ஷன்ஸ்) ஊட்டி வரை உறவு படத்தில் டாக்டராகவும் நடித்திருப்பார்.

தில்லானா மோகனாம்பாள் படத்தில் நகைச்சுவை வில்லன் வேஷம் (இந்த வைத்தியை தெரியாதவங்க யாரவது இருக்க முடியுமோ..) 'காமெடி டிராக்' என்று தனியாக இல்லாமல் கதையோடு இழைந்திருக்கும் பாத்திரம். எல்லோரையும் ஏகவசனத்தில் அழைத்துக்கொண்டு சர்வசாதரணமாக நடித்திருப்பார் நாகேஷ்.

சிவாஜி படங்களில் நாகேஷ் நகைச்சுவை பிரமாதமாக இருக்கும். சிவாஜிக்கு இணையாக இருக்கும் (உ.ம் கலாட்டா கல்யாணம்). மாற்ற நடிகர்களோடு அவர் கலக்கிய முக்கியமான படங்கள் - ஜெய்சங்கரோடு பட்டினத்தில் பூதம், ஜெயலலிதாவோடு மேஜர் சந்திரகாந்த், ரவிச்சந்திரனோடு நான் (கொமட்ல குத்துவேன்). அதேசமயம் எம்.ஜி.ஆர் படங்களின் அவர் அவ்வளவாக சோபித்ததில்லை. மேலும் நாகேஷ் இயக்குனரின் நடிகர்.. கே.பி, ஸ்ரீதர் ஏ.பி.என் போன்றவர்கள்தான் நாகேஷின் நடிப்பு உச்சத்தை வெளிக்கொணர்த்திருக்கிறார்கள். நாகேஷை வீணடித்த படங்களும் உண்டு (தளபதி, தசாவதாரம்)

நாகேஷின் மாறுபட்ட நடிப்பை 'நம்மவர்' படத்தில் பார்க்கலாம். தன் பெண் தற்கொலை செய்தியை கேட்டு ஓடிவந்தவர் ஒரு சொட்டு கண்ணீர்கூட விடாமல் வெறும் வசனம் மட்டும் பேசி மற்றவர்களை கலங்கடித்துவிடுவார்..
இன்று தமிழ் திரைப்படங்களின் காமெடி மலிந்துவிட்டது. 'non-ethical' விஷயங்கள் மட்டுமே காமெடியாக கருதப்டுகிறது.. பெண்களை 'ஈவ் டீசிங்' செய்வது, தண்ணி அடித்து கும்மாளம் போடுவது , பத்துபேர் சேர்ந்து ஒருவரை அடிப்பது, காலால் எட்டி உதைப்பது, இரட்டை அர்த்த வசனங்கள்.. இவைகள்தான் இந்தக்காலத்து நகைச்சுவை காட்சிகள்.. ஒரு சிலபடங்களில் விபச்சாரமும் நகைச்சுவையாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. காமெடி என்ற பெயரில் இதுபோன்ற வக்கிர விஷயங்கள் நம் குழந்தைகளின் மூளையில் விஷமாக ஏறிக்கொண்டிருப்பதை நாம் தவிர்க்க முடியாது.

நாகேஷின் எந்த ஒரு படத்திலும் இந்தமாதிரி அசிங்கங்கள் இருந்ததில்லை. சார்லி சாப்ளின் படங்களைப்போன்று இன்றைக்கும் குடும்பத்தோடு ரசிக்ககூடியதுதான் நாகேஷின் நகைச்சுவை.

Tuesday, January 20, 2009

நாளைய விடியல்

நாளைய விடியல் நிரந்தரம் ஆகும்..!
நம்பிக்கை உனக்குள் நங்கூரம் போடும்..!
வாழ்க்கை என்பது உன் வசமாகும்..!
வாழ்ந்துப்பார்த்தால் உண்மை புரியும்..!

மனம்தான் உந்தன் கடவுள் என
நம்பிக்கை விதையை ஊன்று விடு..!
மனிதனின் மனமே தெய்வீகம் என
நாளைய உலகிற்க்குக் காட்டிவிடு..!

பூமிக்குக் காலங்கள் போல்
வாழ்க்கைக்கும் காலங்கள் உள்ளதன்றோ.. !
இலையுதிர் காலங்கள் மாறும் அன்றோ..!
வசந்தங்கள் உன்கண்ணில் தெரியுமன்றோ..!

முயற்சி என்பது பலமுறைதான் - அதில்
சந்தர்ப்பம் என்பது ஒரு முறைதான்..!
சாமர்த்தியம் உந்தன் வழிமுறைதான் - அதை
நழுவவிட்டால் பின் கல்லறைதான்..!