Monday, November 16, 2009

சச்சின் டெண்டுல்கர் மராட்டியனா.. இந்தியனா..

இதுவரை எந்த சர்ச்சையிலும் மாட்டிக்கொள்ளாத சச்சின் டெண்டுல்கர் இப்போது சிவசேனா பால் தாக்ரேயிடம்  சிக்கிக்கொண்டு விட்டார்.  "நான் மராட்டியன் என்பதில் பெருமை கொள்கிறேன்.. ஆனால் இந்தியன் என்பதுதான் முதலில்" என்று சச்சின் சொல்லப்போக, கோபமடைந்த தாக்ரே  "நீ கிரிக்கெட் மட்டும் விளையாடு.. அரசியல் விளையாடதே" என்று கடித்திருகிறார்.

முதலில் மராட்டியன் முதலா இந்தியன் முதலா என்கிற விவாதமே முட்டாள்தனம். தமிழன், மராட்டியன், குஜராத்தி என்பதெல்லாம் இனம். ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு மொழி கலாச்சாரம் உண்டு. இந்தியா என்பது நாடு. இதையும் அதையும் ஒப்பிடவே முடியாது. ஒருவனுக்கு நாட்டுப்பற்று எவ்வளவு அவசியமோ அவ்வளவு இனப்பற்றும் மொழிபற்றும் அவசியம். இதில் எது முதலாவது என்ற கேள்விக்கே இடமில்லை.. இரண்டுமே தேவை. இனப்பற்று  இருப்பதனால்தான் இலங்கை தமிழர்கள் படும் இன்னல்களை கண்டு நாம் கண்ணீர் வடிக்கிறோம். நாட்டுப்பற்று இருப்பதால்தான் இந்தியா-இலங்கை கிரிக்கெட் போட்டி நடந்தால் இந்தியா வெற்றிபெற வேண்டும் என்று மட்டுமே நினைப்போம்  - ஒருவேளை  இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அத்தனைபேரும்  தமிழர்களாக  இருந்தாலும் கூட.

 ஜப்பான், ஜெர்மனி போல நாடும் இனமும் ஒன்றாகிவிட்டால் இந்தப் பிரச்சனையே இருக்காது. ஆனால் அது இந்தியாவில் சாத்தியமில்லை. அதனால் இது முதலா அது முதலா என்று கேள்வி கேட்காமல், உணர்ச்சியின் அடிப்படையில் பார்க்காமல்,  இரண்டுமே தேவை என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இல்லாவிட்டால் நாட்டுபற்றும் இல்லாமல் மொழிபற்றும் இல்லாமல் 'நான் முதல்ல இந்தியன்.. அப்புறம்தான் தமிளன்..' என்ற விஜயகாந்த் வசனங்களை மட்டுமே  கேட்டுக்கொண்டிருப்போம்.

அதுசரி.. இந்த 'முதலில் எது' விளையாட்டு விளையாடுபவர்கள் மாநிலங்களுக்கு கீழே போவதில்லை.. 'நீ முதலில் தமிழனா அல்லது தஞ்சவூரானா' அல்லது 'நீ முதலில் தஞ்சவூரானா அல்லது மாயவரத்தானா' என்றெல்லாம் யாரும் கேட்பதில்லை. அதேபோல் 'நான் முதலில் ஒரு ஆசியன்.. பிறகுதான் இந்தியன்..' என்று யாரும் சொல்வதில்லை. அவரவர் வசதிக்கு ஏற்ப அரசியலிலும் சினிமாவிலும் மட்டுமே விளையாடப்படும் விளையாட்டு இது.

சச்சின் டெண்டுல்கரால் மராட்டிய இனத்துக்குப் பெருமை.. இந்திய நாட்டுக்குப்  பெருமை...என்பதை சச்சின், பால் தாக்கரே இருவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

2 comments:

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

உங்களிடம் இதே கேள்வியை -

நீங்கள் முதலில் தமிழனா? அல்ல, இந்தியனா?

- கேட்டால், என்ன பதில் கொடுப்பீர்கள்?

‘இரண்டுமே தேவை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்’ என்று எழுதிவிட்டீர்கள்.

ஆனால், எது முதலில்? என்று கேட்டால், அக்கேள்வியே முட்டாள்தனமானது என்கிறீர்கள்.

ஒன்று மட்டும் நினைவில்கொள்வது நல்லது. மராட்டியர் மட்டுமல்ல, இதர பல மாநிலத்தவருக்கும் இப்பிரச்ச்னையுண்டு.

வட கிழக்கு மாநிலமக்கள், ‘தாங்கள் இந்தியர் முதலில்’ பின்னர்தான் நாகாக்கள், மணிப்புரிகள் etc என்றெல்லாம் சொல்வதில்லை. ஒரேயடியாக தாங்கள் மலைஜாதியனர் என்று ஒரே போடாகப்போட்டு விடுகின்றனர்.

இந்தியாவின் முதல் வெளியுறவுத்துறை செயலளரான கேபிஎஸ் மேனோன், தன் சுயசரிதையில் (Many Worlds) - ‘I am a Malayalee to the tips of my fingers' என்றுதான் எழுதுகிறார். அவரைப்போல் கார்ட்டூனிஸ்ட் அபுவும் ‘நான் முதலும் கடைசியிலும் மலையாளியே’

இவர்கள் அனைத்து இந்தியா வரையில் பேர் பெற்றவர்கள்.

நீங்கள் சொன்ன மாதிரி இந்தியாவின் பலமொழிகள், பல இனக்குழுக்கள் (ethnicity) பல பண்பாடுகள் (cultures) இருக்கின்றபடியால், இந்தியாவுக்கு இது ஒரு பெரும் பிரச்னை.

இன்னும் இந்தியா அப்பிரச்னையை மூடி மறைத்து இல்லயென்பதைப்போல நாடகமாடிக்கொண்டு இருக்கிறது. இன்னும் ஒரு நல்ல எல்லோருக்கும் பிடிதத முடிவை இந்தியா எடுக்கவில்லை.

First recognize you have a disease. Only then, you will really take steps to cure it.

This is for you, also. Confront the problem face to face and find out a solution, cant you?

ரவி சுவாமிநாதன் said...

அன்புள்ள பர்னாண்டோ அவர்களுக்கு

தங்களின் ஆழ்ந்த கருத்துகளுக்கு நன்றி.

நீங்கள் முதலில் தமிழனா அல்லது இந்தியனா என்று கேட்டாலும் என் பதில் ஒன்றுதான். ஒரு இனம் என்பது கலாசாரம், பண்பாடு, மொழி இவைகளை சார்ந்துள்ளது. நாடு என்பது அரசியல் பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு இவைகளை சார்ந்துள்ளது. இரண்டும் வெவ்வேறு திசைகளில் இருக்கிறது என்பதே என் கருத்து. அப்படியிருந்தும் சில சமயங்களில் இரண்டுக்கும் நடுவே ஒரு மெல்லிய கோடு வருவதை தவிர்க்க இயலாது. அப்படியிருக்கும் சமயங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் முதன்மையை தீர்மானிக்கும்.

என் நாட்டு தேசியகீதம் என் மொழியில் இல்லை.. என் பிரதமர் எவரும் இதுவரை தமிழ் பேசியது இல்லை... இவற்றை நான் ஒத்துகொள்ளத்தான் வேண்டும். அதேசமயம் வேறு ஒரு மொழியோ கலாச்சாரமோ என்னை ஆதிக்கம் செல்லுத்த அனுமதிக்க முடியாது. இது இந்தியாவின் பிரச்சனைதான். அனால் அதில் மூடிமறைக்க ஒன்றும் இல்லை. அதேசமயம் எல்லோருக்கும் பிடித்த எந்த மாதிரி ஒரு முடிவை இந்தியா எடுக்க முடியும் என்றும் புரியவில்லை.

Post a Comment

உங்கள் கருத்துக்கள்