Thursday, November 18, 2010

ரம்யமான ரிஷிகேஷம் - ஒரு வடஇந்தியப் பயணம்

அமிர்தசரசிலிருந்து ஹரித்வார் வந்து இறங்கினோம். அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து ரிஷிகேஷ் சென்றோம். அங்கு எல்லாமே நம்மவூர் ஷேர் ஆட்டோ  அளவுக்கு  இருக்கிறது.. ஒரு மணிநேரம் அந்த 'லோட லோட' ஆட்டோவில் பயணித்து ரிஷிகேஷ் வந்து சேர்ந்தோம். நடுநடுவே கங்கையின் பல கிளை நதிகளைப் பார்க்க முடிந்தது.

ரிஷிகேஷில் வந்து இறங்கியது ஜானகிதேவி சோமானி பவன். அது ஹோட்டல் அல்ல..குறைந்த அளவில் அறைகளை கொண்டு நடத்தப்படும் ஒரு அறக்கட்டளை. அறை கிடக்க கொஞ்சம் நேரமானது. அதற்குள் எங்காவது குளித்துவிட்டு சிற்றுண்டி சாப்பிடலாமா என்று ரிசப்ஷனில் கேட்டேன். 'செய்யலாம்..பின்புறம் செல்லுங்கள்' என்றார்கள். சரி பின்னால் ஏதோ ஒரு பொது குளியலறை இருக்கும் என்று சென்றால்... என்ன ஆச்சரியம்.. என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை...

அகண்ட கங்கை  நதி  பிரவாகமெடுத்து ஓடிக்கொண்டிருகிறது.. பின்னால் ஓங்கி உயர்ந்து நிற்கும் இமயமலைச் சாரல்... 'ஒ'வென்ற ஓசையுடன் நகர்துகொண்டிருக்கும் தண்ணீரின் சலசலப்பைத்தவிர வேறெந்த சப்தமும் இல்லை. நான் என்னை மறந்த நிலையில் நின்றுகொண்டிருந்தேன். கங்கை நதியில்தான் என்ன ஒரு கம்பீரம், என்ன ஒரு ரம்யம், இந்தியாவுக்கு இயற்கை அளித்த கொடை இந்த கங்கையும் இமயமும்...  சிறிது நேரம் கழித்துதான் நான் பார்ப்பது நிஜம் என்ற உணர்வே வந்தது. ரொம்பநாள் பசியோடு இருந்தவன் அவசரஅவசரமாக உண்பதைப்போல, எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு அந்த இயற்கை கொஞ்சும் எழிலை என் இரு கண்களில் பதித்துக்கொண்டேன். கங்கையின் பயணம் மிகப்பெரியது..இயத்தில் உள்ள பனிப்பாறைகள் உருகி கங்கோத்ரியில் துவங்கி பாகிரதி நதியாக தேவப்பிரயாகை வந்து அடைகிறது. இதோடு இன்னொரு பக்கம் அலக்நந்தா நதி இணைத்துக்கொள்ள அங்கிருந்து கங்கை நதி தன் பயணத்தை துவக்குகிறது. ரிஷிகேஷத்தில் இமயமலையை விட்டு இறங்கி ஹரித்வாரம், கான்பூர், காசி, பாட்னா, கொல்கத்தா வழியாக சென்று, 2500 கி.மீ பயணித்து, வங்காள விரிகுடாவில் கலக்கிறது.. இமயத்திலிருந்து நேரடியாக வருதால் ரிஷிகேசத்தில்  மாசுபடாத கங்கை சாம்பல்நிறத்தில் ஓடிக்கொண்டிருகிறது. 


சோமானி பவன் பின்புறம்

கங்கையின் அருகே நின்று ரசிப்பதற்கு ஒரு படித்துறை.. இறங்குவதற்கு சில படிகள். கங்கையின் வளைவு நெளிவுகளூடே இந்தப்படிதுறை  கிட்டத்தட்ட  ரிஷிகேஷம் முழுவதும்  நீண்டுகொண்டே செல்கிறது. அங்கங்கு தூவப்படும் சம்மங்கிப் பூக்கள் நதியோடு  பயணித்துக்கொண்டிருகிறது. வெளியில் வெயில்.. ஆனால் கங்கையில் காலை வைத்தால் ரத்தம் உறைந்துபோகுமோ என்று நினைக்கும்  அளவுக்கு குளிர்ச்சி...!  நம் உடல் உஷ்ணம் அந்த குளிர்த நீருடன் ஒத்துபோவதற்க்கு கொஞ்ச நேரம் பிடிக்கிறது. பிறகென்ன.. ரிஷிகேஷத்தில் இருந்த இரண்டு நாட்களும் கங்கையில் ஆனந்த குளியல்தான்..அந்த சுகானுபவத்தை அனுபவிக்கத்தான்  முடியும்.. வார்த்தையில் விவரிக்க முடியாது. அனால் அங்கு கங்கையின் வேகம் அதிகம். இரண்டு படிகளுக்கு மேல் கிழே இறங்கினால் கால்  நழுவுகிறது. (ஏதோ படித்துறையில் நின்று கொண்டு குளித்ததையே பெரியதாக நினைத்துக்கொண்டிருந்தேன்.. அனால் அடுத்தநாள் நடு கங்கையில் இறங்கப்போகிறேன் என்று அப்போது தெரியாது.. அதை அடுத்த பதிவில் பாப்போம்)

 
லக்ஷ்மன் ஜுலா
 ரிஷிகேஷத்தில் கங்கையை கடக்க லக்ஷ்மன் ஜூலா, ராமன்  ஜூலா என்று இரண்டு தொங்கு பாலங்கள் இருக்கின்றன. நடந்து செல்வதற்கு மட்டுமே அமைக்கப்பட்ட மிகவும் குறுகலான இந்த பாலத்தில் இருசக்கர வாகனங்களும் செல்கின்றன..கூடவே ஆடு மாடுகளும்..கையில் உணவுப்பொருட்கள் ஏதாவது வைத்திருந்தால் லபக் என்று அபகரிக்கும் வானரங்கள்... இவற்றுக்கு நடுவே லேசாக ஆடிக்கொண்டிருக்கும் பாலம்... கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.. ஆனால் 1937ல் கட்டப்பட்ட பாலம் இன்னும் வலிமையாகத்தான் இருக்கிறது..

ரிஷிகேஷதிலும் சரி ஹரித்வரதிலும் சரி அந்தி சாயும் நேரத்தில் கங்கைக்கு மங்கள ஆரத்தி காண்பிக்கும் நிகழ்ச்சி மிகப்பிரபலம். மாலை கீழே ஹரித்வாருக்கு இறங்கி வந்தோம். ஹரித்வார கங்கை ரிஷிகேஷ் அளவுக்கு சுத்தம் இல்லை.ஆனாலும் ரிஷிகேஷ் போலவே படித்துறைகள்.. அங்கங்கு பல இடங்களில் ஆரத்தி நிகழ்ச்சி நடந்துகொண்டிருகிறது.. மக்கள் சிறு சிறு கூட்டமாக நின்று கொண்டு ஆரத்தியில் கலந்துகொள்கிறார்கள்.. பின் அனைவரும் கங்கையில் இறங்கி  ஒரு சிறிய பூக்கூடையில் விளக்கு ஏற்றி நதியில் விடுகிறார்கள்.. கங்கைக்கரை முழுவதும் இந்த பூவிளக்குகள் ஊர்ந்து செல்வதே கொள்ளை அழகு. அதுவும் இருள் சூழ்ந்த கங்கை நதியில் மின்மினிப் பூசிகள் போல அங்கங்கே கண்சிமிட்டிக்கொண்டு நகர்கிறது  பூவிளக்குகள்.  இங்கு கரை முழுவதும் சாமியார்கள் ஆதிக்கம் அதிகம். ஒரு சாமியார் சங்கு ஊதிக்கொண்டிருகிறார்.. ஒரு சாமியார் கங்கைக்கரையில் தியானத்தில் இருக்கிறார்.. ஒருவர் உடல்முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு அகோரி வேடத்தில் கோவணத்துடன் காட்சியளிக்கிறார். இவர்கள் முற்றும் துறந்த சன்யாசிகளா அல்லது பண்டாரங்களா.. இல்லை போலிச் சாமியார்களா.. என்று குழப்பம் ஏற்படுத்தும் கலவை அது.

ரிஷிகேஷிலும் இதுபோல நிறைய இடத்தில் ஆரத்தி நிகழ்சிகள் உண்டு. பரமார்த் என்ற கோவில் அருகே உள்ள படிக்கட்டில் ஆரத்தியுடன் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இங்கு பல வெளிநாட்டவர் கலந்துகொள்கின்றனர். இங்குள்ள ஆசிரமத்தைச் சேர்ந்த பல குருகுல மாணவர்கள் காவி உடை அணிந்து தினமும் மாலையில் கங்கை முன்னால் உள்ள படிக்கட்டுகளில் அமர்து இசை முழங்குகிறார்கள். இசைக்கு தாளமிட்டபடியே படித்துறையை உரசிச்செல்கிறது கங்கை. அதற்கு எதிரே  கங்கைக்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் சிவன் சிலை செவ்வானத்தில் பிரகாசிக்கிறது. சூரியன் மறைந்து இருள் கவியும் நேரத்தில் சலசலத்து ஓடும் கங்கையில் நின்று கொண்டு கேட்ட அந்த இசையில் மனம் கரைந்தது.  ஏகாந்தம் என்பார்களே.. அது இதுதானோ..

அங்கு வாழும் மக்களுக்கு கங்கைதான் தெய்வம். காலங்காலமாய்  தங்களை  வாழ்வித்துக்கொண்டிருக்கும் இந்த ஜீவநதியை தினமும் வணங்கி, மலர் தூவி, ஆரத்தி எடுத்து நன்றி தெரிவிக்கிறார்கள். இது ஏதோ சம்பிரதாயத்துக்காக   செய்யப்படும் நிகழ்ச்சி அல்ல..'ஜெய் ஜெய் கங்கா மாதா' என்று உள்ளன்புடன் கங்கையை தொட்டு கும்பிடும்போது  அவர்கள் வாழ்க்கையில் கங்கையும் ஒரு அங்கம் என்று புரிகிறது. 

இனி கங்கையின் நடுவே ஒரு சாகசம்.. பலூன் படகு பயணம்...!

- பயணம் தொடரும்... 


மங்கள ஆரத்தி

காலை நேர கங்கை
இசை நிகழ்ச்சி

Thursday, November 11, 2010

இந்திய பாகிஸ்தான் எல்லை - ஒரு வடஇந்தியப் பயணம்

ஒன்றுபட்ட இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் வாஹா என்ற கிராமம், 1947 பிரிவினைக்குபிறகு கிழக்கு பகுதி இந்தியாவுக்கும் மேற்கு பகுதி பாகிஸ்தானுக்கும் பிரிக்கப்பட்டது. இன்று இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் ஒரே சாலைவழி மார்க்கம் இந்த வாஹா எல்லை. இங்கிருந்து 25 கி.மீ தொலைவில் இந்தப்பக்கம் அமிர்தசரஸ் நகரம்.. அந்தப்பக்கம் லாகூர் நகரம்.

தினமும் அந்தி சாயும் வேளையில் இங்கு ராணுவ மரியாதையுடன் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. அருகே சென்று பார்க்கவேண்டும் என்றால் கொஞ்சம் சீக்கிரமே சென்றால்தான் இடம் கிடைக்கும் என்று பலர் சொன்னார்கள். மாலை 5.30க்கு துவங்கும் நிகழ்ச்சிக்கு 4.45க்கு போய் நின்றேன். அனால் அதற்குள் சாலையின் இருபக்கமும் இருக்கும் பார்வையாளர்களின் மாடம் நிரம்பி வழிந்தது... மாடத்துக்கு வெளியே நின்றுகொண்டுதான் வேடிக்கை பார்க்க முடிந்தது. அதேபோல் அந்தப்பக்கம் பாகிஸ்தான் பார்வையாளர்களின் மாடத்திலும் நல்ல கூட்டம். சராசரியாக ஒரு நாளில் இந்தியப்பகுதியில் மட்டும் 8000 பேர் வருகிறார்களாம்.

இரு மாடங்களுக்கும்  இடையே  சில  அடி  தூரம்தான்..  இருபக்கமும் இரும்பு வாயிற்கதவு... இங்கு காக்கி நிற உடையிலும் அங்கு கரும்பச்சை உடையிலும் எல்லையோர காவல் படையினர்... அந்த இடமே அவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இந்திய நுழைவில் 'இந்தியா' என்று ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதப்பட்டு மேலே மூவர்ணக்கொடி பறந்துகொண்டிருகிறது.. அந்தப்பக்கம் பாகிஸ்தான் கொடி..கூடவே ஜின்னாவின் படம். (இந்தியாவில் காந்தி படம் இல்லை..காந்தி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பொதுவானவர் என்று விட்டு விட்டார்களோ?).

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்  இருபக்கமும்  வாயிற்கதவின் முன் ஒரு பெறும்   கூட்டம்  நடனமாடிக்கொண்டிருகிறது,  தங்கள்  தேசியக்   கொடியுடன்..! பல தேசபக்திப்பாடல்கள் ஒளிபரப்பப்படுகின்றன ('ஜெய் ஹோ'வும் உண்டு). நம் பக்கம் 'ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்', 'பாரத் மாதாகி ஜே', 'வந்தே மாதரம்' போன்ற கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.. ராணுவத்தை சேர்ந்த ஒரு அதிகாரி வேறு கையை உயர்த்தி 'இன்னும் இன்னும்' என்று கூட்டத்தை உசுப்பேத்திவிடுகிறார்.. இதேபோல பாகிஸ்தான் பக்கமும்...! இதெல்லாம் முடிந்தபிறகு நிகழ்ச்சி தொடங்கியது. இரண்டு இரண்டு பேராக ராணுவ வீரர்கள் அதிவேகமாக நடந்து கதவு அருகே நின்று கொள்கிறார்கள். பிறகு சிலர் கிட்டத்தட்ட தலைக்குமேல் காலை உயர்த்தி சத்தத்துடன் தரையில் அடித்து நடந்து செல்கிறார்கள்.  இதற்கு இணையாக பாகிஸ்தான் பக்கமும் அணிவகுப்பு நடைபெற்றுக்கொண்டிருகிறது. பாகிஸ்தான் வீரர்கள் வெடுக்கென தலையை திருப்பி கையை உயர்த்தி உடலை சிலிர்த்துக் கொள்கிறார்கள். அது என்ன ராணுவ சைகை என்று புரியவில்லை. பிறகு சடாரென்று கதவு திறக்கப்படுகிறது. இந்திய பாகிஸ்தான் வீரர்கள் ஏதோ போருக்கு தயாராவதுபோல நின்றுகொண்டு கைகுலுக்கிக்கொள்கிறார்கள். பிறகு சரியாக சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் இரு கொடிகளும் இறக்கப்டுகின்றன. பிறகு கதவு மீண்டும் வேகமாக மூடப்படுகிறது. அவ்வளவுதான்.. நிகழ்ச்சி முடிந்தது.

அங்கு இருக்கும் போது சில அடிதூரத்தில் இன்னொரு நாட்டைப்பார்ப்பது ஒரு திரில்லான அனுபவம்தான். கொஞ்சம் தேசப்பற்று வருவது என்னமோ உண்மைதான். ஆனால் ஒரு நாட்டின் எல்லையில் நிற்கும்போது எதற்காக இவ்வளவு கோஷங்கள், ஆர்பாட்டங்கள் ஏன் என்று புரியவில்லை. ஏதோ தேசபக்தியை வேண்டுமென்றே திணிப்பதாக எனக்குப்பட்டது. இதுபோன்ற ஒரு இடத்தை மக்காவ்-சீன எல்லையில் பார்த்திருக்கிறேன். (அப்போது மக்காவ் தனி நாடு - போர்சுகல் காலனியாக இருந்தது). அங்கு மக்கள் அமைதியாக இரு நாடுகளுக்கும் சென்று வந்து கொண்டிருப்பார்கள்.. ஆர்ப்பாட்டம் எதுவும் இருக்காது. ஐரோப்பாவிலும் இதுபோல இருநாடுகளுக்கும் சாலைப் போக்குவது இருக்கிறது எந்தவித கோஷங்களும் இல்லாமல்...! அனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லை என்றதும் அதற்கு ஒரு தனி வீரியம் வந்துவிடுகிறது.

நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும் போதே ஒரு பறவைக்கூட்டம் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பறந்து கொண்டிருந்தது... "ஏ மனிதப்பிறவிகளே...! ஆறறிவு படைத்த  உங்களுக்குத்தான் இத்தனை நாடுகள், இத்தனை பிரிவினைகள், இனங்கள், மதங்கள் எல்லாம்.. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல விசா, பாஸ்போர்ட் எல்லாம்.. நாங்கள் சுதந்திரப்பறவைகள்.. எங்களை எந்த எல்லையும் தடுக்கமுடியாது" என்று நம்மைப் பார்த்து ஏளனம் செய்து பறந்தன..!

இனி பஞ்சாபிலிருந்து நேராக இமயத்தின் அடிவாரத்தில் ஒரு ரம்யமான பிரதேசம்.. ரிஷிகேஷம்..

- பயணம் தொடரும்

Saturday, November 6, 2010

ஜாலியன்வாலா பாக் - ஒரு வடஇந்தியப் பயணம்

காந்தி திரைப்படத்தை எந்தனை முறை பார்த்திருப்பேன் என்று தெரியாது. ஆனால் ஒவ்வொரு முறையும் ஜாலியன் வாலாபாக் காட்சியைப் பார்க்கும் போதும் என் கண்களில்  கண்ணீர் எட்டிப்பார்ப்பதைத் தவிர்க்கமுடியாது. 91 ஆண்டுகளுக்குமுன் கொடூர நிகழ்வு நடந்த அந்த இடத்தை நேரில் காணப்போகிறோம் என்றதும், ஒரு சோகம் கலந்த படபடப்புடன் ஜாலியன்வாலா பூங்காவுக்குள் நுழைந்தேன்.

பொற்கோவிலில் இருந்து ஐந்து நிமிடநடை தூரத்தில் இருக்கிறது ஜாலியன்வாலா பாக். சென்னை ஜார்ஜ் டவுன் மாதிரியான ஒரு இடத்தில் ஒரு  குறுக்கிய  சாலையின் ஓரத்தில் இருக்கும் அந்த இடத்துக்கு வரும் மக்கள் கூட்டம் இன்னமும் அதிகம். உள்ளே நுழையும்போதே ஒரு மாபெரும் சரித்திரத்தில் காலடி வைக்கப்போகிறோம் என்ற உணர்வு மேலோங்கியது. நுழைவாயிலில் உள்ள அறிவிப்புபலகையில் அந்த சோகவரலாறு எழுதப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் 13, 1919.. அன்று 'பைசாக்கி' எனப்படும் சீக்கியர்களின் புத்தாண்டு தினம், இந்திய சரித்திரத்தில் ஒரு கனத்த நாளாக மாறிப்போனது. அது ரௌலட் சட்டம் அமலில் இருந்த காலகட்டம். அதை கண்டித்து நாடு முழுவதும் குறிப்பாக பஞ்சாபிலும் லாகூரிலும் ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக அமிர்தசரஸில் ஜாலியன்வாலா பாக் என்கிற திடலில் ஒரு கண்டனக்கூட்டம் ஏற்பாடு செய்யப்படிருந்தது. மாலை 4.30 மணிக்கு ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக கிட்டத்தட்ட 15000 மக்கள் கூடியிருந்தனர் தங்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை அறியாமல்..!

இதை அறிந்த பிரிட்டிஷ் ராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டையர் 100 சிப்பாய்களுடன்  ஜாலியன்வாலா பாக் திடலுக்குள் உள்ளே நுழைந்தான். எந்தவித முன்அறிவிப்போ எச்சரிக்கையோ இல்லாமல் கூட்டத்தை நோக்கி சுட உத்தரவிட்டான். அந்த திடலில் ஒரேஒரு குறுகலான நுழைவாயில் மட்டுமே உள்ளது. அங்கிருந்துதான் சிப்பாய்கள் மக்களை நோக்கி சுட்டனர். யாரும் வேறு எப்படியும் வெளியே செல்ல முடியாது. தொடர்ந்து 20 நிமிடங்கள் இடைவெளியே இல்லாமல் துப்பாக்கிச் சூடு... 1650 ரவுண்டு குண்டுகள் தீர்ந்தபின்னரே நிறுத்தப்பட்டன. முடிவில் கிட்டத்தட்ட 1500 மக்கள் பலியானார்கள். தப்பிப்பதற்காக அருகே உள்ள கிணற்றில் குதித்து 120 பேர் உயிரிழந்தனர்.

இன்று ஜாலியன்வாலா பாக் இந்திய அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு ஹிரோஷிமா போல கொடூரத்தின் நினைவுச் சின்னமாய் காட்சியளிகிறது. இங்கு அந்த இடத்தில் ஒரு நினைவுத்தூண் இருக்கிறது... ஒரு அணையா விளக்கு இருக்கிறது... அந்த கிணறு அப்படியே பாதுகாக்கப்படுகிறது. சுடப்பட்ட இடத்திலிருந்து  100 அடி  தள்ளி  இருக்கும் சுவர்களில் இன்னமும் குண்டு துளைத்த தடயங்கள் இருக்கிறது.  சுவரையே துளைத்திருக்கும் குண்டுகள் மனித உடலை எப்படி சல்லடையாக்கியிருக்கும் என்று நினைக்கும்போதே உள்ளம் பதபதைக்கிறது. ஜாலியன்வாலா பாக்கில் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் நெஞ்சம் கனத்துக்கொண்டே போனது...!

இந்த படுகொலைக்காக நடைபெற்ற விசாரணை கமிஷனில் நீதிபதிகள், ஜெனரல் டையரிடம் இப்படிக் கேட்டார்கள்:  "அந்த நுழைவாயில் மிக குறுகலாக இருந்ததால் நீங்கள் கொண்டுவந்திருந்த பீரங்கிகளை உள்ளே எடுத்துசெல்ல முடியவில்லை.. முடிந்திருந்தால் பீரங்கியாலும் மக்களை சுட்டிருப்பீர்கள்..இல்லையா?" - இதற்கு  டையரின் பதில் - "ஆமாம்.. நிச்சயமாக..!".. மேலும் காயமடைந்தவர்களுக்கு என்ன முதலுதவி செய்தீர்கள் என்ற கேள்விக்கு, "அது என் வேலை இல்லை.. மருத்துவமனை அருகில்தான் இருக்கிறது..வேண்டுமென்றால் அவர்கள் அங்கு சென்றிருக்கலாம்" என்று பதிலளித்தான் டையர்.

அந்த காலகட்டத்திலும் சரி.. இப்போதும் சரி.. உலகெங்கும் பல கொடுங்கோல் ஆட்சி நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு இந்தியாவில் இருக்கும் சாட்சி ஜாலியன்வாலா பாக். அனால் என்னதான் சாட்சிகள் இருந்தும் என்ன பலன்?  ஜெனரல் டையர்கள் ஹிட்லர்கலாகவும் ராஜபக்சேக்களாகவும் இந்த உலகில் தோன்றிக்கொண்டுதானே  இருக்கிறார்கள்?

இனி அமிர்தசரஸில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு இடம்... இந்தியாவும்  பாகிஸ்தானும் முத்தமிடும் வாஹா எல்லை... 

 - பயணம் தொடரும்...

நினைவுத்தூண்
குறுகிய நுழைவாயில்
   

குண்டு துளைத்த சுவர்

மரணக் கிணறு