Saturday, November 6, 2010

ஜாலியன்வாலா பாக் - ஒரு வடஇந்தியப் பயணம்

காந்தி திரைப்படத்தை எந்தனை முறை பார்த்திருப்பேன் என்று தெரியாது. ஆனால் ஒவ்வொரு முறையும் ஜாலியன் வாலாபாக் காட்சியைப் பார்க்கும் போதும் என் கண்களில்  கண்ணீர் எட்டிப்பார்ப்பதைத் தவிர்க்கமுடியாது. 91 ஆண்டுகளுக்குமுன் கொடூர நிகழ்வு நடந்த அந்த இடத்தை நேரில் காணப்போகிறோம் என்றதும், ஒரு சோகம் கலந்த படபடப்புடன் ஜாலியன்வாலா பூங்காவுக்குள் நுழைந்தேன்.

பொற்கோவிலில் இருந்து ஐந்து நிமிடநடை தூரத்தில் இருக்கிறது ஜாலியன்வாலா பாக். சென்னை ஜார்ஜ் டவுன் மாதிரியான ஒரு இடத்தில் ஒரு  குறுக்கிய  சாலையின் ஓரத்தில் இருக்கும் அந்த இடத்துக்கு வரும் மக்கள் கூட்டம் இன்னமும் அதிகம். உள்ளே நுழையும்போதே ஒரு மாபெரும் சரித்திரத்தில் காலடி வைக்கப்போகிறோம் என்ற உணர்வு மேலோங்கியது. நுழைவாயிலில் உள்ள அறிவிப்புபலகையில் அந்த சோகவரலாறு எழுதப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் 13, 1919.. அன்று 'பைசாக்கி' எனப்படும் சீக்கியர்களின் புத்தாண்டு தினம், இந்திய சரித்திரத்தில் ஒரு கனத்த நாளாக மாறிப்போனது. அது ரௌலட் சட்டம் அமலில் இருந்த காலகட்டம். அதை கண்டித்து நாடு முழுவதும் குறிப்பாக பஞ்சாபிலும் லாகூரிலும் ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக அமிர்தசரஸில் ஜாலியன்வாலா பாக் என்கிற திடலில் ஒரு கண்டனக்கூட்டம் ஏற்பாடு செய்யப்படிருந்தது. மாலை 4.30 மணிக்கு ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக கிட்டத்தட்ட 15000 மக்கள் கூடியிருந்தனர் தங்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை அறியாமல்..!

இதை அறிந்த பிரிட்டிஷ் ராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டையர் 100 சிப்பாய்களுடன்  ஜாலியன்வாலா பாக் திடலுக்குள் உள்ளே நுழைந்தான். எந்தவித முன்அறிவிப்போ எச்சரிக்கையோ இல்லாமல் கூட்டத்தை நோக்கி சுட உத்தரவிட்டான். அந்த திடலில் ஒரேஒரு குறுகலான நுழைவாயில் மட்டுமே உள்ளது. அங்கிருந்துதான் சிப்பாய்கள் மக்களை நோக்கி சுட்டனர். யாரும் வேறு எப்படியும் வெளியே செல்ல முடியாது. தொடர்ந்து 20 நிமிடங்கள் இடைவெளியே இல்லாமல் துப்பாக்கிச் சூடு... 1650 ரவுண்டு குண்டுகள் தீர்ந்தபின்னரே நிறுத்தப்பட்டன. முடிவில் கிட்டத்தட்ட 1500 மக்கள் பலியானார்கள். தப்பிப்பதற்காக அருகே உள்ள கிணற்றில் குதித்து 120 பேர் உயிரிழந்தனர்.

இன்று ஜாலியன்வாலா பாக் இந்திய அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு ஹிரோஷிமா போல கொடூரத்தின் நினைவுச் சின்னமாய் காட்சியளிகிறது. இங்கு அந்த இடத்தில் ஒரு நினைவுத்தூண் இருக்கிறது... ஒரு அணையா விளக்கு இருக்கிறது... அந்த கிணறு அப்படியே பாதுகாக்கப்படுகிறது. சுடப்பட்ட இடத்திலிருந்து  100 அடி  தள்ளி  இருக்கும் சுவர்களில் இன்னமும் குண்டு துளைத்த தடயங்கள் இருக்கிறது.  சுவரையே துளைத்திருக்கும் குண்டுகள் மனித உடலை எப்படி சல்லடையாக்கியிருக்கும் என்று நினைக்கும்போதே உள்ளம் பதபதைக்கிறது. ஜாலியன்வாலா பாக்கில் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் நெஞ்சம் கனத்துக்கொண்டே போனது...!

இந்த படுகொலைக்காக நடைபெற்ற விசாரணை கமிஷனில் நீதிபதிகள், ஜெனரல் டையரிடம் இப்படிக் கேட்டார்கள்:  "அந்த நுழைவாயில் மிக குறுகலாக இருந்ததால் நீங்கள் கொண்டுவந்திருந்த பீரங்கிகளை உள்ளே எடுத்துசெல்ல முடியவில்லை.. முடிந்திருந்தால் பீரங்கியாலும் மக்களை சுட்டிருப்பீர்கள்..இல்லையா?" - இதற்கு  டையரின் பதில் - "ஆமாம்.. நிச்சயமாக..!".. மேலும் காயமடைந்தவர்களுக்கு என்ன முதலுதவி செய்தீர்கள் என்ற கேள்விக்கு, "அது என் வேலை இல்லை.. மருத்துவமனை அருகில்தான் இருக்கிறது..வேண்டுமென்றால் அவர்கள் அங்கு சென்றிருக்கலாம்" என்று பதிலளித்தான் டையர்.

அந்த காலகட்டத்திலும் சரி.. இப்போதும் சரி.. உலகெங்கும் பல கொடுங்கோல் ஆட்சி நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு இந்தியாவில் இருக்கும் சாட்சி ஜாலியன்வாலா பாக். அனால் என்னதான் சாட்சிகள் இருந்தும் என்ன பலன்?  ஜெனரல் டையர்கள் ஹிட்லர்கலாகவும் ராஜபக்சேக்களாகவும் இந்த உலகில் தோன்றிக்கொண்டுதானே  இருக்கிறார்கள்?

இனி அமிர்தசரஸில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு இடம்... இந்தியாவும்  பாகிஸ்தானும் முத்தமிடும் வாஹா எல்லை... 

 - பயணம் தொடரும்...

நினைவுத்தூண்
குறுகிய நுழைவாயில்
   

குண்டு துளைத்த சுவர்

மரணக் கிணறு2 comments:

Cinema Virumbi said...

அன்புள்ள ரவி,

தமிழ்நாட்டில் கீழவெண்மணியில் நினைவுச் சின்னம் அமைத்தவர்கள் ஜாலியன்வாலாபாக்கைப் பார்த்து விட்டு வந்து அதைப் போலவே வடிவமைத்தார்கள் என்று படித்திருக்கிறேன்.

பஞ்சாப் படுகொலைக்குப் பின்பு கொடுமைகள் அத்துடன் நிற்கவில்லை! இந்த டயர் செய்தது 'Error in judgment' என்று கருதப் பட்டு வேலை மட்டும் போயிற்று என்று நினைக்கிறேன். 'டயருக்கு அநீதி இழைக்கப் பட்டதாக நீங்கள் நினைத்தால் இந்த நிதிக்கு நன்கொடை அளியுங்கள்' என்று ஒரு இங்கிலாந்துப் பத்திரிக்கை நிதி திரட்டிக் கொடுக்க நம்ப ஊர் மகாராஜாக்கள் பல பேர் அதில் அள்ளி வழங்கித் தம் ராஜ விசுவாசத்தை நிரூபித்துக் கொண்டனர்! பின்னாளில் மகாராணி இந்தியாவுக்கு வந்த போது ( 'மருதநாயகம்' துவக்க விழாவின் போது என்று ஞாபகம்) ஓட்டை வாயரான அவர் கணவர் 'டயரின் மகன் என்னுடன் படித்தான். இங்கு நடந்ததாக இவர்கள் சொல்லும் மரண எண்ணிக்கை மிகைப் படுத்தப் பட்டது என்று என்னிடம் அடிக்கடி சொல்லுவான் ' என்று திருவாய் மலர்ந்தருளினார்!

நன்றி!

சினிமா விரும்பி

ரவி சுவாமிநாதன் said...

பல புதிய தகவல்களுக்கு நன்றி சினிமா விரும்பி...

பிரிட்டிஷ் அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்த மரண எண்ணிக்கை கிட்டத்தட்ட 400 . பின் காங்கிரஸ் தனியாக ஒரு சர்வே எடுத்து உயிரிழந்தவர்கள் 1500 பேர் இருக்கும் என்று அறிவித்தது. இங்கிலாந்து ராணி இந்தியாவுக்கு வந்தபோது ஜாலியன்வாலா பாகில் மலர்வளையம் வைத்தார்.. அனால் மன்னிப்பு கேட்கவில்லை..

இங்கிலாந்தின் மனோபாவம் இப்படியிருக்க, ரிச்சர்ட் அட்டன்பரோ எடுத்த காந்தி திரைப்படம் மட்டுமே ஜாலியன்வாலா பாக் நிகழ்வுகளை உள்ளதை உள்ளபடி காட்டியது.

Post a Comment

உங்கள் கருத்துக்கள்