Sunday, September 9, 2012

சில டப்ளின் காட்சிகள்...

 
ஒரு புறநகர் ரயில்வே ஸ்டேஷன் 
வாழ்வின் அந்திமகாலத்தை நிம்மதியாகக்
கழிக்கும் ஒரு டப்ளின் ஜோடி 

இந்த ஊர் பறவைகளுக்கும் இப்படிதான்..
வித்தியாச வண்ணத்தில் உயரமானவர் 


சாம்பல் நிற காண்டாமிருகம் 
டப்ளின் ஜூவில் ஒரு கம்பீர புலி 

டப்ளின் சங்கமம்


நம்ம ஊர் சென்னை சங்கமம் போலவே டப்ளினில் 'திருவிழா.. எங்க தெரு விழா' நடக்கிறது. பல்வேறு பூங்காக்களில் தெருக்களில் நடக்கும் இந்த 'டப்ளின் சங்கமத்துக்கு' கூட்டம் அலை மோதுகிறது. ஒருமாத காலம் அயர்லாந்தில் தங்கியிருந்த காலத்தில் இவ்வளவு பேர் ஒரே இடத்தில்  கூடியிருந்ததை அப்போதுதான் பார்த்தேன். 

ஒரு பூங்காவில் கழைகூத்தாடி நிகழ்ச்சி, தொடர்ந்து பாட்டு நடனம் எல்லாம் நடந்துகொண்டிருந்தது. பூங்காவை சுற்றி பல பல கடைகள் - பல துரித உணவுகள், ஐஸ்கிரீம், பாப்கார்ன் எல்லாம்.. அதை சுற்றியுள்ள தெருவில் போக்குவரத்துக்கு தடை செய்பட்டு சிறுவர்களுக்கான பல விளையாடுக்கள் நடந்துகொண்டிருந்தன.

இந்த நிகழ்சிகள் பல ஆண்டுகளாக கோடையின்போது நடக்குமாம். 'பல ஆண்டுகளாக' என்று சொல்லும்போதே அரசியல் கலக்காமல், ஆட்சி மாற்றத்தால் நிறுத்தி வைக்கப்படாமல், மக்களை மட்டும் மனதில் வைத்து நடைபெற்றுவருகிறது என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. 









விக்லோ - அயர்லாந்தின் தோட்டம்


டப்ளினிளிருந்து ஒரு மணி நேர பஸ் பயணத்தில் இருக்கிறது அயர்லாந்தின் தோட்டம் என்று அழைக்கப்படும் 'விக்லோ' மாவட்டம். முழுவதும் அடர்த்தியான பச்சைப் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டிருக்கும் மலைத்தொடர்... பசுமையைத் தவிர வேறொன்றும் அறியாத பிரதேசம்.  இயற்கை வளங்கள் போதாதென்று அங்கங்கே செயற்கை புல்வெளிகள் வேறு..

விக்லோவை 'ஐரோப்பாவின் ஹாலிவுட்' என்று கூட அழைகிறார்கள்.. அந்த அளவுக்கு பல காலமாக பல சினிமா படப்பிடிப்பு இங்கு நடக்கிறது (கோலிவுட்க்கு ஊட்டி மாதிரி ஹாலிவுட்க்கு விக்லோ போல).

சாலி கேப் என்று ஒரு இடம்.. இதன் மலைப்பாதையில் சைக்கிள் ஓட்டுவது மிகப் பிரபலம்.. பல கிலோ மீட்டர்கள் நீளும் இந்த மலைபதையில் விக்லோவின் அழகை ரசித்துகொண்டே சைக்கிள் ஓட்டுவது பலரின் பொழுதுபோக்கு. சாலி கேப் பாதையில் அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஒரு இடம் கின்னஸ் ஏரி, கின்னஸ் எஸ்டேட் இங்கு இருப்பதால் இந்தப்பெயர்.. இங்கு கின்னஸ் பற்றி குறிப்பிட்டாக வேண்டும்.. கின்னஸ் என்பது அயர்லாந்தின் பிரபலாமான பீர் தயாரிக்கும் கம்பெனி, கிட்டத்தட்ட 250  வருடங்களாக இயங்கும் நிறுவனம் (இதற்கும் கின்னஸ் சாதனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை). பசுமை படர்ந்த மலைகளின் நடுவே உள்ள ஒரு பள்ளதாக்கில் கருநீல நிறத்தில் உறைந்து போன ஒரு தண்ணீர் பரப்பாக காட்சி அளிக்கிறது அந்த ஏரி. அதன் கரையில்  கவர்ச்சியான வெள்ளை மணல்கள்.. இந்த இயற்கை பேரழகை முழுவதும் உள்வாங்கிக்கொள்வதற்கே கொஞ்ச நேரம் பிடிக்கிறது.. இதன் அழகில் லயித்த ஒரு பீர் பிரியர் 'இந்த எரியே ஒரு பீர் கோப்பை போலவும் வெள்ளை கரைகள் பீர் நுரை போலவும் தெரிகிறது இல்லையா' என்றார். (படம் பார்க்க..) இதை பார்த்ததுமே அவருக்கு போதை ஏறிவிட்டது போலும்.

நாங்கள் பயணித்த பேருந்தின் ஓட்டுனர் நடத்துனர் எல்லாம் ஒருவரே.. மிக திறமையான ஆசாமி.. லாவகமாக பேருந்தை ஓடிக்கொண்டே ரேடியோ ஜாக்கி போல இடைவிடாது பேசிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு இடத்தை பற்றியும் விவரித்துக்கொண்டே வந்தவர் இந்த இடம் இந்த திரைப்படத்தில் வருகிறது, இதை பற்றி இவர் இப்படி எழுதியிருக்கிறார் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே வந்தார். அவருடைய ஆர்வமும் ஈடுபாடும் திறமையும் ரொம்பவே வியக்க வைத்தது. இங்கு காட்டுவிலங்குகள் உண்டா என்று யாரோ கேட்டதற்கு "விக்லோவில் காட்டு விலங்குகள் எல்லாம் இல்லை.. ஏன் பொதுவாகவே அயர்லாந்திலேயே ஆபத்தான விலங்குகள் எதுவும் கிடையாது".. என்றவர் கொஞ்சம் நிறுத்தி "இங்குள்ள அரசியல்வாதிகள் தவிர.." என்று கமென்ட் அடித்தார்.


ஜாலியான சைக்கிள் பயணம் 
பீர் பாட்டில் ஏரி 

அழகு சேர்க்கும் கோட்டை 
தெளிந்த நீரோடை 

வண்ண வண்ண விக்லோ 

Sunday, August 19, 2012

ஐரோப்பாவின் கடைகோடி தேசத்தில்...

அயர்லாந்து... ஐரோப்பாவின் கடைகோடி தீவு தேசம்... இதில் வட அயர்லாந்து பிரிட்டன் வசம்  இருக்க தென் அயர்லாந்து மட்டும் தனி நாடக,   அயர்லாந்து குடியரசாக இருக்கிறது. கிழக்கே பிரிட்டன் தீவு இருக்க மேற்கே 5000 கிலோமீட்டருக்கு வெறும் கடல்.. கடல்.. அட்லாண்டிக் பெருங்கடல்.  

இதன் தலைநகர்  டப்ளினில் ஒரு மாத காலம் தாங்கும் வாய்ப்பு கிடைத்தது. 

மிக அழகான சிறிய நகரம் டப்ளின். மொத்தமே 18 லட்சம் பேர் வசிக்கும் நகரம்.. (அயர்லாந்து மக்கள்தொகையே 44 லட்சம்தான்.. சென்னையை விட குறைவு). நகரின் மையப்பகுதி தவிர எங்கும் போக்குவரத்தே இல்லை.. பெரிய பெரிய கட்டிடங்கள் இல்லை... ஒரே  மாதிரியான செங்கல்  தெரியும்படியான பிரிட்டிஷ்  பாணி வீடுகள். மேலே  கண்டிப்பாக ஒரு புகைபோக்கி, வீட்டுக்கு  முன்புறம் அழகிய தோட்டம்,  தோட்டத்தில்  வண்ண வண்ண ரோஜாப்பூக்கள்.. டப்ளின் முழுவதும் இதே காட்சிகள்தான். அயர்லாந்தின் செல்லப் பெயர் 'மரகத தேசம்'. எங்கும் பசுமையாக காட்சியளிப்பதால் அதற்கு இந்த பட்டம் - டப்ளினும் இதற்கு குறைந்தது இல்லை. எங்கும் எல்லா இடத்திலும் புல்வெளி.. புல்வெளி.. மரங்கள்.. மரங்கள்.. எங்கும் செழுமையான பசுமை.. அதுவும் காலைநேர டப்ளின் அழகை 'புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா..' என்று தாராளமாகப் பாடலாம்.

டப்ளினில் பிரச்சனையான ஒரு  விஷயம் அதன் வானிலை. டப்ளின்  வானிலையைப்  பற்றி  குறிப்பிடும்போது   'ஒரே நாளில் நான்கு பருவம் (four seasons in a day ) என்று சொல்லுவார்கள். ஒரே நாளில் வெயில், மழை, குளிர், காற்று என்று மாறிக்கொண்டே இருக்கும் பருவநிலை. அதுவும் 30  நிமிடங்களுக்கு ஒருமுறை அடுத்து என்ன  வரப்போகிறது என்று கணிக்கமுடியாத வானிலை மாற்றம். மழை பெய்கிறதே என்று குடை எடுத்துக்கொண்டு போனால் நல்ல வெயில் அடிக்கும். வெயில் அடிக்கிறதே என்று ஸ்வெட்டர் போடாமல் போனால் குளிர்காற்று ஊசிபோல குத்தும். ரொம்பவும் குளிருகிறதே என்று ஜெர்கின் அணிந்துசென்றால் அப்போதுதான் நல்ல வெயில் அடித்து கடுப்பேத்தும். எனவே எப்போதும் வெளியேசெல்லும்போது   குடை, ஸ்வெட்டர், ஜெர்கின் இத்யாதிகளை கைவசம்  வைத்திருப்பது அவசியம்.

பேருக்கு ஏற்றால்போல அயர்லாந்து மக்கள் அயராது உழைப்பவர்கள் எல்லாம் கிடையாது.. எல்லோரும்  கொஞ்சம் சுகவாசிகள்தான்...! மாலை ஐந்து ஐந்தரை மணிக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்து நாயுடன் நடை, மெல்லோட்டம், சைக்கிள் பயிற்சி என்று வெளியே கிளம்பிவிடுவார்கள். அதுவும் கொஞ்சம் வெயில் அடித்தால் போதும்.. ஒரே கொண்டாட்டம்தான்.. வெப்பஅளவு   அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்றாவாறு அவர்கள் உடைகளும்   குறைந்து கொண்டே வருவதைக் காணலாம். ஆனால் அயர்லாந்து பொருளாதாரம் இப்போது இருக்கும் மந்த நிலையில் வேலையின்மை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவரும் இந்த நிலையில் இவர்கள் இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே சுகவாசிகளாக காலம்  தள்ளமுடியும் என்று தெரியவில்லை..

டப்ளின் பற்றி இன்னும் சுவாரசியமான தகவல்கள் வரும் பதிவுகளில்...

Tuesday, July 17, 2012

கட்சி கொடி இருந்தால் சுங்கம் ரத்து


கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பழைய மகாபலிபுரம் சாலையில் (ராஜீவ் காந்தி சாலை) பெருங்குடி முதல் நாவலூர் வரை சுங்கசாவடி அமைத்து கார், பஸ் மற்றும் கனரக வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்துக்கொண்டிருக்கிறார்கள். இதை நிர்வகிப்பது தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்துறை (TNRDC). ஏற்கனவே இது மிக அதிகம் என்று பலர் புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில் இப்போது ஜூலை முதல் கட்டணத்தை வேறு உயர்த்தியிருக்கிறார்கள். புதிய கட்டணத்தின்படி இந்த சாலையில் ஒருமுறை சென்று திரும்புவதற்கு கார்களுக்கு 38 ரூபாயும் பஸ்களுக்கு 100 ரூபாயும் வசூலிக்கப்போகின்றனர்.


ஆனால் இந்த கட்டணமெல்லாம் சில குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டும் கிடையாது... அது வேறு எதுவும் இல்லை.. கட்சி கொடியோ அரசியல் தலைவர்கள் படங்களோ உள்ள வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பது இங்கு எழுதப்படாத விதி. அவர்கள் மட்டும் இலவசமாக எவ்வளவுமுறை வேண்டுமானாலும் இந்த சாலையை உபயோகப்படுத்தாலாம். கட்சி கொடிகள் உள்ள வாகனங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது என்பது தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு. நான் இதைப் பற்றி அந்த சுங்கசாவடி அதிகாரிகளிடம் பலமுறை கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள் "என்ன சார் செய்வது.. அவர்களிடம் கட்டணம் கேட்டால் தகராறு செய்கிறார்கள்.. அதனால் அவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்பது மேலிடத்து உத்திரவு" என்றார்.

ஆனால் ஒன்று... இந்த 'கட்சி கொடி' சலுகையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது... எல்லோருக்கும் இந்த சலுகையில் சமத்துவம். என்ன.. போன வருடம் மே மாதம் வரை தி.மு.க வாகனங்கள் பெரும்பான்மையாக இருக்கும்.. இப்போது அ.தி.மு.க வாகனங்கள்... அவ்வளவுதான் வித்யாசம். சில தே.தி.மு.க, ப.ம.கா கொடிகள் உள்ள வாகனங்கள் கூட கட்டணம் செலுத்தாமல் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். இந்த நாட்டில் பொதுமக்களுக்கு ஒரு விதி, அரசியல்வாதிகளுக்கு ஒரு விதி என்பது சுங்கக்கட்டணத்திலும் கூட பிரதிபலிக்கிறது.

இந்த சாலையில் தினமும் காரில் பயணிபவர்களுக்கு ஒரு டிப்ஸ்... 50 ருபாய் செலவழித்து எதாவது ஒரு கட்சிக்கொடியை உங்கள் காரில் மாட்டிவிட்டால் போதும்... தினமும் 38 ருபாய் மிச்சப்படுத்தலாம்.

Monday, July 9, 2012

அவிழும் பிரபஞ்ச ரகசியம்

இந்த பிரபஞ்சத்தின் துவக்க புள்ளிதான் இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒரு பிரம்மாண்ட ரகசியம். மனிதனின் அறிவியல் அறிவு வளரவளர அவன் தன் தோற்றத்தின் ரகசியம், தனக்கு முன் தோன்றிய உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி என்பதிலிருந்து உயிரினங்கள் தோன்றுவதற்கு முன் இந்த பூமியின் அமைப்பு, சூரியனின் பிறப்பு, பால்வீதி மண்டலம் உருவானது, அதற்கெல்லாம் முன்னதாக ஒரு மகா வெடிப்பின் மூலம் இந்த பிரபஞ்சம் உருவானது வரை எல்லாம் கண்டறிந்துவிட்டான். அனால் அந்த மகா வெடிப்பின் காரணம் மட்டும் இன்னும் கண்டுபிடிக்க படாமலே இருந்தது. அங்கேதான் கடவுள் இருக்கிறார்.. அங்கேதான் கடவுளின் படைப்பு துவங்குகிறது என்று எல்லா மதங்களும் சொல்லி வந்தன.

இந்த மகா வெடிப்பு நிகழ்ந்தது 13 .75 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு.. அங்கிருந்துதான் பிரபஞ்ச சரித்திரம் துவங்குகிறது.... அதற்க்கு முன் எந்த சரித்திரத்துக்கும் வாய்ப்பு இல்லை. பல அணுத்துகள்களின் ஒட்டுதல்-உரசுதல் காரணமாக நடந்த அந்த மகாவெடிப்பின் பயனால் பல நட்சத்திர மண்டலங்கள் உருவாகி அவற்றிலிருந்து பல நட்சத்திரங்கள், அதிலிருந்து கோள்கள், துணை கோள்கள் என்று பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. அந்த வெடிப்புக்கு உறுதுணையாக இருந்த முக்கியமாக இருந்த ஒரு அணுத்துகளை கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகள் குழம்பிக்கொண்டிருந்தார்கள். அந்த அணுத்துகள் இப்படிப்பட்ட தன்மைதான் கொண்டிருக்கும் என்று பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி 1964 ல் கூறியதால் அவர் பெயரையே அதற்கு வைத்து ஹிக்ஸ் துகள் என்றார்கள். இதைப்பற்றி யாருக்கும் ஒன்றும் புரியாததால் பின் 'சரி இது ஏதோ கடவுளின் செயல் போலிருக்கிறது என்று நினைத்து 'கடவுள் துகள்' என்று நாமகரணம் சூட்டிவிட்டார்கள்.

இன்று அந்த ரகசியமும் அவிழ்ந்து விட்டது. ஐரோப்பிய அணு ஆராய்ச்சி கழகம் (CERN ) ஒரு செயற்கை மகாவெடிப்பை நிகழ்த்தி ஆய்வுசெய்து கடவுள் துகள் தன்மையை ஒத்த ஒரு அணுத்துகளை கண்டுபிடித்து விட்டார்கள். படைப்பின் மூலம் அறியப்பட்டு விட்டது. இனி இதுதான் கடவுள் துகளா என்று ஆராயவேண்டும்.. இது ஒரு ஆரம்பம்தான், இன்னும் கண்டறியவேண்டியது நிறைய இருக்கிறது. இந்த பிரபஞ்சத்துக்கு முன்னால் எதாவது இருந்ததா அல்லது இதைபோல் வேறு பிரபஞ்சகள் உண்ட என்ற கேள்விகள் விஞ்ஞானிகளின் மூளையை குடைந்துகொண்டே இருக்கும்..!