Sunday, August 29, 2010

இணைய கள்ளர்கள்

வர வர இணையத்தில் உளவு பார்க்கும் வேலை அதிகரித்துவிட்டது. நம் கணணியை இணையத்தில் இணைத்துவிட்டால் கண்டவர்கள் நம் கோப்புகளை களவாடுகிறார்கள். நம் cookies மற்றும் browsing history மூலம் பல தகவல்கள் திருடப்படுகின்றன.

எனக்கு சென்ற வாரம் ஏற்பட்ட அனுபவம் இதோ..

அக்டோபர் மாதத்தில் அமிர்தசரஸ், டேராடூன், ஆக்ரா போகலாம் என்று திட்டம். இதற்காக டேராடூனிலிருந்து  ஆக்ராவுக்கு ஏதாவது விமானம் இருகிறதா என்று ஒரு வலை பக்கத்தை மேய்ந்தேன்... என் விவரம்,   மின்அஞ்சல் எதையும்  கொடுக்கவில்லை. குறிப்பிட்ட வழித்தடத்தில் எந்த விமானமும் இல்லை என்று தெரிந்தவுடன் இணையத்தை துண்டித்துவிட்டேன். மறுநாள் என் ஹாட்மெயிலில் மின்அஞ்சல்களைப்  பார்த்துகொண்டிருந்தபோது ஓரத்தில் ஒரு விளம்பரம்.... 'Flights  from  Dehradun  to  Agra   - lowerst  fare ' என்று இருந்தது...

ஆஹா.. என் அதிஷ்டத்தை நினைத்து எனக்கே மெய்சிலிர்த்தது.. நமக்கு தேவைப்படும் நேரத்தில் ஏதோ ஒரு நிறுவனம் புதிதாக இந்த வழித்தடத்தில் விமான சேவையை தொடங்கியிருகிறதே என்று ஆசை ஆசையாய்  அந்த விளம்பரத்தை கிளிக் செய்தேன்... கடைசியில் அதே வலைப்பக்கம்.. அப்படி எந்த ஒரு விமானமும் பறக்கவில்லை. பிறகுதான் தெரிந்தது.. அந்த குறிப்பிட்ட வலைத்தளம் என் browsing history, cookies   மூலம் என் தகவல்களை களவாடி, நான் ஹாட்மெயிலை திறக்கும் போது எனக்கு மட்டுமே உரித்தான ஒரு விளம்பரத்தை கொடுத்திருக்கிறது.

பின் ஒருமுறை அமிர்தசரஸ் ஹோட்டல்களை பற்றி கூகுளில் மேய்ந்தபோது மறுநாள் அமிர்தசரஸ் ஹோட்டல்கள் பற்றிய ஒரு விளம்பரம் என் ஹாட்மெயிலில்  வந்தது.

முன்பெல்லாம் எந்த ஊரிலிருந்து இணையத்தை இணைக்கிறீர்களோ அந்த ஊர் சம்பந்தப்பட்ட தகவல்கள் வரும். ஒரு இணையத்தளத்தில் ஒரு செய்தியை தேடும்போது அது சம்பந்தமான விளம்பரம் அதே இணையத்தளத்தில் வரும். ஆனால் இந்த இணைய கள்ளர்கள் நவீன மென்பொருள் மூலம் நம் தகவல்களை நம் குணங்களை, நம் விருப்பங்களை அலசி ஆராய்ந்து இதுபோல 'தானியங்கு' விளம்பரங்களை அளிக்கிறார்கள். நமக்கு தெரியாமலேயே நம்மை பின்தொடரும் உளவாளிகள் இவர்கள்.

இணையத்தில் ரகசியம் என்பதே எதுவும் கிடையாது போலிருக்கிறது. ரகசியத்தை வெளியே சொல்லக்கூடாது என்பதற்கு 'இரண்டு என்பது சகவாசம்... மூன்று என்பது கூட்டம்' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.. இதில் இணையம் என்பது...?

Saturday, August 21, 2010

கடைகளுக்கு தண்டனை... சினிமாவுக்கு சலுகை..

சென்னையில் எல்லா கடை பெயர்களும் இப்போது தமிழாக்கம் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் பெயர் வைக்கவேண்டும் என்று உத்தரவு போட்டதுமட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சி என்னென்ன கடைகளை எப்படியெல்லாம் அழைக்கலாம் என்று யோசனையும் கூறியிருக்கிறது. தமிழ் பெயர் வைக்காதவர்களுக்கு லைசன்ஸ், மன்னிக்கவும்... உரிமம் ரத்து செய்யப்படுமாம்.

மாநகராட்சியின் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.. அதே சமயம் இதை ஏன் அரசு தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்லவில்லை என்றும் புரியவில்லை..

சென்னை தெருக்கள் முழுவதும் இப்போது தமிழ் மணம் வீசுகிறது.. உதாரணத்துக்குச் சில...

மெடிகல்ஸ் - மருந்தகம்
கலர் லேப் - வண்ணக் கூடம்
செல் வேர்ல்ட் - அலைபேசி உலகம்
பியுட்டி பார்லர் - அழகூட்டு நிலையம்
ஸ்டேஷனரி - எழுது பொருளகம்
பேக்கிரி -  அடுமனை அல்லது வெதுப்பகம்
ஆப்டிகல்ஸ் - கண்ணாடியகம்
பிசினஸ் சென்டர் - வர்த்தக நடுவகம்
ஸ்நாக்ஸ் - நொறுவைகள்
ஹார்ட்வேர் - வன்பொருளகம்       

இருந்தாலும் ஒரு விஷயம் நெருடுகிறது.. கடைகளில் தமிழ்ப் பெயர் இல்லையென்றால் தண்டனை.. சினிமாவுக்கு தமிழ்ப் பெயர் வைத்தால் சலுகை..

என்ன நியாயம் இது? ஏன் இந்த பாரபட்சம்?