Friday, October 24, 2008

இது நிலாக் காலம்


தாய்மார்களே..
'நிலா நிலா ஓடிவா' பாட்டை நிறுத்திவிடுங்கள்..

வெள்ளித்திரை வேந்தர்களே..
'வாராயோ வெண்ணிலாவே' என்றது போதும்..

கவிக்குயில்களே..
'வெண்ணிலவே.. விண்ணைத்தாண்டி வருவாயா' என்ற வரிகளுக்கு முடிவுரை எழுதுங்கள்..

உங்கள் அஞ்ஞானத்தை முறியடிக்க இதோ சந்திராயன் சீறிப்பாய்கிறது..

நிலவு..!
இந்தியனுக்கு என்றுமே எட்டாத கனி..
காலங்காலமாய் கண்களுக்குத் தெரிந்த ஆனால் நெருங்க முடியாத அதிசயம்.
நிலவை புரிந்து கொள்ள முடியாத நாம் அதை நோக்கிய காலம் முதலே நம் கற்பனையில் மிதக்க விட்டோம்.

பசிபிக் பெருங்கடலிருந்து பெயர்ந்துபோன பாறை என்ற விஞ்சானவெளிச்சம் வீசியபோதும்
பூமியை சுற்றிவரும் துணைக்கோள் என்று அறிவியல் ஆதரித்தபோதும்
நிலவின்மீது நம் கண்ணோட்டம் மாறவே இல்லை.

நிலவை நோக்குவற்க்கு நம் நிர்வாணக்கண்கள் போதாது...
விஞ்ஞானக் கண்ணாடி தேவை..!

நிலவை யார் இங்கு நிலவாய்ப் பார்த்தது..

நிலவை பெண்ணாக்கி கவிதைப்பாடிக் களித்தோம்..!

குழந்தைகள் சோறுண்ண விளையாட்டு பொம்மையாக்கினோம்..!

பூமியின் நிழல் நிலவின் படிந்தால் பயந்து வீட்டுக்குள் அடைந்தோம்..!

வாழ்க்கைப்பாதையை நிர்ணயிப்பது
நிலவின் வட்டப்பாதை என்று தீர்மானித்தோம்..!

நிலவைக் கடவுளாக்கி மனிதஉருவம் கொடுத்தோம்..!

வளர்வதும் தேய்வதும் நிலவின் காட்சிப்பிழை..!
அதற்க்கு அர்த்தம் கொடுத்தது மனிதப்பிழை..!
முழுநிலவை சல்லடையில் பார்த்தோம்..
பிறைநிலவை ரமலான் என்றோம்
பூரணநிலவில் புனித நீராடினோம்
இருண்ட நிலவில் மட்டும் இறந்தவரை நினைத்தோம்

முற்றத்தில் அண்ணாந்து பார்த்து நிலவை நம் வசதிக்கேற்ப்ப வளைத்துக்கொண்டிருந்த வேளையில்
அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் நிலவிலிருந்து பூமியைப்பார்க்க ஆசைப்பட்டனர்..!

ஆம்ஸ்ட்ராங்கின் சந்திரப்பயணம், சரித்திரத்தை மாற்றிய பயணம்..
மூடநம்பிக்கைகளை மூட்டைகட்டிய பயணம்..

மனிதவாழ்க்கை நிலவிலும் நீடிக்கும் வாய்ப்புகள் உள்ள நிலையில்
திங்களில் மூவர்ணக்கொடி பறக்கப்போகும் இந்த வேளையில்..
சில ஆண்டுகளில் நிலவில் இந்தியன் கால்தடம் பதிப்பான் என்று 'இஸ்ரோ' அறிவித்த பொழுதில்...

தாய்மார்களே..

'நிலா நிலா ஓடிவா' பாட்டை நிறுத்திவிடுங்கள்..
'நிலவை நோக்கி சென்றுவா' என்று பாடுங்கள்..
நிலவின் நிழலில் ஆபத்தில்லை என்பதை உணர்த்துங்கள்..
தாய்பூமியிலிருந்து தனிக்குடித்தனம் போனதுதான்
இந்தத் துணைக்கோள் என்று திருத்துங்கள்..
'நாளை ஏவுகணை ஏறி சந்திரனுக்கு சுற்றுலா செல்லலாம்'
ஊட்டுங்கள்.. நம்பிக்கையையும் சேர்த்து ஊட்டுங்கள்..

ஏனெனில் நாளை என்பது நிலாக்காலம்..
இந்தியன் நிலவைக் கடக்கும் காலம்..

Thursday, October 23, 2008

அழகிய ஜுராங் பூங்கா பறவைகள்


Sunday, October 5, 2008

கண்ணதாசன் பற்றி...

நான் அப்போது எட்டாம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன். அன்று மதியம் தமிழ் வகுப்பு. தமிழாசிரியர் சோகமுகத்துடன் உள்ளே நுழைந்தார்.
கண்ணதாசனின் இறுதி ஊர்வலம் வருகிறது.. பார்க்க விரும்புபவர்கள் பார்த்து விட்டு வரலாம் என்றார்.

அவர் சொன்னதுதான் தாமதம்.. தி.நகர் பர்கிட் ரோடில் உள்ள எங்கள் பள்ளியிலிருந்து ஓடிவந்து தி.நகர் பேரூந்து நிலையைத்தை அடைந்தோம்.

அதோ கண்ணதாசனின் இறுதி ஊர்வலம் வந்துகொண்டிருக்கின்றது..

முதல்வர் எம்.ஜி.ஆர் முன்னால் நடந்து வந்துகொண்டிருக்க பல திரையுலகப் பிரமுகர்கள் அவரை அமைதியாக பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தர்கள். பின்னால் ஒரு வண்டியில் சாய்ந்த கண்ணாடிப்பேழையில் தமிழ் நெஞ்சங்களை தன் வசீகர வார்த்தைகளால் கொள்ளை கொண்ட அந்தக் கவிஞன் கண்ணயர்த்து உறங்கிக்கொண்டிருந்தான்..

மனதுக்கினிய அந்த கவிஞனை முதன்முதலில் அந்த நிலையில்தான் பார்த்தேன்...