Sunday, March 28, 2010

குஷ்பூ விவகாரமும் நீதிமன்றத்தின் விவாதங்களும்

குஷ்பூ விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தின் விவாதங்கள் விநோதமாக இருக்கிறது.

'திருமணத்துக்குமுன் உறவு பற்றி குஷ்பூ பேசுவதற்கு உரிமை இருக்கிறதா இல்லையா அல்லது அவர் பேசியதால் சமூகத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட்டதா இல்லையா' என்பது மட்டுமே விவாதத்தின் சாராம்சமாக இருக்க முடியுமே தவிர அவர் பேசியது சரியா தவறா என்பது பற்றி அல்ல. 'இதைபற்றி பேசுவதற்கு யாருக்கும் உரிமை இருக்கிறது.. இதற்கெல்லாம் வழக்கு தொடர முடியாது' என்று சொல்வதை விட்டு விட்டு ஏதேதோ  கேள்விகள் கேட்டிருக்கிறார்கள் நீதிபதிகள்.

'எவ்வளவு பெண்கள் குஷ்பூ பேச்சை கேட்டு சீரழிந்திருக்கிரார்கள்... உங்களுக்கு மகள் உண்டா.. அப்புறம் உங்களுக்கு என்ன பிரச்னை' என்றெல்லாம் வழக்கு தொடர்ந்தவர்களைப் பார்த்து  கேட்டிருகிறார்கள்  திருமணத்துக்கு முன் உறவு, சேர்ந்து வாழுதல் என்பதெல்லாம் பெண்கள் பிரச்னை மட்டும் இல்லை. இது சமூக பிரச்னை.  அப்படியே ஓரிரு பெண்கள் நடந்துகொண்டார்கள் என்று நிரூபித்தாலும் குஷ்பூவை கைது செய்ய முடியுமா? அப்படியானால் எவ்வளவு இளைஞர்கள் நம் சினிமா கதாநாயகர்களைப் பார்த்து சிகரெட் பிடிக்க கற்றுகொண்டார்கள்? எவ்வளவு பேர் வன்முறையில் ஈடுபட்டார்கள்? (சில சினிமாக்களில் வருவதுபோலத்தான் கொலை செய்தேன் என்று சில கொலையாளிகளே வாக்குமூலம் கொடுத்திருகிறார்கள்) அதற்காக நம் கதாநாயகர்களையும் கைது செய்ய முடியுமா?

 நீதிபதிகள் கடைசியாக 'புராணத்தில் கிருஷ்ணரும் ராதையும் சேர்ந்து வாழ்ந்தார்களே' என்று கேட்டிருப்பது அபத்தத்தின் உச்சம். ஒரு புராண உதாரணத்தை எப்படி நீதிமன்றத்தில் பேசமுடியும் என்று புரியவில்லை. புராண சம்பவங்களை உதாரணம் காட்டும் நீதிபதிகள், இது சேது சமுத்திர வழக்கில் தனக்கு எதிராக திரும்பும் என்று நினைத்துப் பார்த்தார்களா? புராண சம்பவங்கள் மட்டுமல்ல... சமூக கலாச்சாரம் சம்மந்தப்பட்ட எந்த விவாதத்திலும்   இந்த  காலகட்டத்துக்கு  ஒவ்வாத  எந்த  கருத்துகளும் எடுபடாது. அக்பர் பல பெண்களை மணந்தார்... கிளியோபட்ரா பல ஆண்களை மணந்தார் என்றெல்லாம் உதாரணம் சொல்லிகொண்டிருக்க முடியுமா என்ன?

திருமணத்துக்கு முன் உறவு, சேர்ந்து வாழுதல் போன்றவையெல்லாம் சமூக கலாச்சார சிக்கல்கள். இவற்றுக்கெல்லாம் ஒரு சட்ட வடிவம் கொடுத்து 'சரியா தவறா' என்று நிர்ணயிக்க முடியாது. இவை பற்றிய பார்வையெல்லாம் ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏன் ஒவ்வொரு தனிமனிதனுக்கும்  மாறுபடும். அதே சமயம் இவைபற்றி யாரும் பேசக்கூடாது என்றும் சொல்ல முடியாது. அவரவர் கருத்துக்கு அவரவருக்கு உரிமை உண்டு.

இனி தமிழ் கலாச்சார காவலர்களுக்கு...

ஏதோ நாலு பேர் படித்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கக் கிளம்பிய ஒரு செய்தியை இவ்வளவு பெரிசாக ஊதி, உச்சநீதிமன்றமே  அதை  அங்கீகரிக்கும்  நிலையை கொண்டுவந்து, தன முகத்தில் தானே கரிபூசி... தேவையா இதெல்லாம்? குஷ்பூ பேசியதால் தமிழ் கலாச்சாரத்தின் 'moral values ' சீரழிந்துவிட்டது என்று கொடிதூக்குகிறீர்களே.. தமிழ் சினிமாவில் காமெடி என்கிற பெயரில் நடக்கும் கலாசார சீரழிவுக்கு உங்களுக்கு கோபமே வராதா?