இந்தமுறை நான்கு நாட்கள் முன்னதாகவே டிக்கெட் வாங்கியதால் நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாடெமியில் அருணா சாய்ராம் கச்சேரி கேட்கமுடிந்தது. அருணாவின் கச்சேரி டுவென்டி டுவென்டி மேட்ச் மாதிரி... முதல் ஓவரிலேயே களைகட்டும். அவரின் புகழ் மிக்க 64 நாயன்மார்களின் பாடல்களில் ஆரம்பித்தது குதூகலம். பிறகு 'சாமஜவரகமணா' பாடி இந்தொளத்தில் கொஞ்சம் தாலாட்டு, கொல்கத்தா காளியின் பள்ளியெழுச்சி பாடலான 'ஜாகோ துளி ஜாகோ' பெங்காலி பாடல், அவரின் விசேஷ உருப்படியான மராத்தி 'அபங்' பாட்டு என்று அடுத்ததடுத்து சிலிர்ப்புகளுக்கு பஞ்சம் இல்லை.
ஏற்கனவே அது ஒரு 'ஹை வோல்டேஜ்' கச்சேரி.. அதோடு தனி ஆவர்த்தனத்தில் கொன்னக்கோல் வேறு.. ஆரவாரத்துக்கு கேட்கவா வேண்டும்..
அருணா கச்சேரிகளில் அவையினர் விண்ணப்பம் அதிகமாக உள்ளது. அதில 'விஷமக்காரக் கண்ணன்', 'மாடு மேய்க்கும்' பாடல்கள்தான் முக்கியமான நேயர் விருப்பம். இதற்க்கு அருணா 'ஒரே பாடலையே பாடுகிறேன் என்ற குற்றச்சாட்டு வருமே' என்றவர், இந்தமுறை 'விஷமம்', அடுத்தமுறை 'மாடு' என்று சமரசம் செய்தார். என்றாலும் 'விஷமம்' கொஞ்சம் மெல்லிசை ரகம்தான்...!
இனிமையான மென்மையான ஆரவாரமில்லாத கச்சேரி விரும்புகிறவர்கள் 'ரஞ்சினி காயத்ரி' போகலாம். மியூசிக் அகாடெமியில் அன்று கூட்டம் நிரம்பி வழிந்தது. அகாடெமி என்பதாலோ என்னமோ சம்பிரதாயமான வழியிலேயே பயணித்தனர் பாடகர்கள். கொஞ்சம் விறுவிறுப்பு எதிர்பார்பவர்களுக்கு அவ்வளவு பரபரப்பு இருக்காது. ஆனால் எல்லாவற்றையும் விட 'துர்க்கா-லக்ஷ்மி-சரஸ்வதி' மேல் ராகம் தானம் பல்லவி பாடியது எல்லாரையும் லயிக்க வைத்தது. துக்கடாவில் 'மானாட மழுவாட' என்ற பாடலை பாடினார் ('மானாட மயிலாட' எல்லாம் அகாடெமியில் பாடலாமா என்று கேட்டவுடன் பக்கத்தில் உட்கார்திருந்த ஒரு பெரியவர் முறைத்தார்). கடைசியில் ஒரு மராத்தி பஜன் பாடி நிறைவு செய்தனர் ரஞ்சினி காயத்ரி சதோதரிகள்.
கொஞ்சம் வித்தியாசமான இசை நிகழ்ச்சிக்கு போகலாமே என்று தேடியபோது கடம் கார்த்திக்கின் 'இதயத்துடிப்பின் சங்கமம்' கண்ணில் பட்டது. பல இசைக்கருவிகளுடன் ஒருங்கிணைந்த, கர்நாடக சங்கீதத்துக்கும் ஃயூஷன் இசைக்கும் இடைப்பட்ட ஒரு இசை நிகழ்ச்சி அது. கடம் மற்றும் கொன்னகொலில் கார்த்திக்.. சைலன்ட் வயலின் என்ற இசைக்கருவியில் எம்பார் கண்ணன்... (இது கொஞ்சம் பாதி உடைந்துபோன வயலின் மாதிரி இருக்கிறது.. யமஹா கம்பெனியின் தயாரிப்பாம்..வயலின் போல கணீரென்று ஓசை எழுப்பும் இந்த வாத்தியத்துக்கு ஏன் 'சைலென்ட் வயலின்' என்று பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை)... கீ போர்டில் 14 வயது சிறுவன் சத்யநாராயணன்.. எலெக்ட்ரானிக்ஸ் டிரம்சில் அருண் குமார் மற்றும் மிருதங்கம், கஞ்சிரா.
ஐம்புலன்களை பற்றிய 'பெண்டா மியூசிக்' என்ற இசைக்கோவை, அமைதியை வலியுறுத்தி அற்புதமான ஒரு இசையமைப்பு, கரகரப்ரியா ராகத்தில் மனதை வருடும் ஒரு ஆலாபனை என்று எல்லாமே வழக்கத்துக்கு மாறுபட்டு இருந்தது. கார்த்திக் வாய்ப்பாட்டு, கடம், கொன்னக்கோல் என்று சகலமும் செய்கிறார்.. பாட்டை மட்டும் தவிர்ப்பது நல்லது.
அருண்குமார் டிரம்ஸ்சில் அப்படி ஒரு வெறியாட்டம் நடத்தினார்.. அவர் வாத்தியத்தில் சாதாரண டிரம்ஸ் ஓசை தவிர நம்மூர் தவில், கேரள செண்டமேளம், சிந்தூர் ஓசை எல்லாம் இயற்கையாக அசலாக ஒலிக்கிறது.
நிகழ்ச்சியின் சிறப்பம்சம் வகுளாபரணம் என்ற ராகத்தில் அரேபிய சங்கீதத்தை இசைத்ததுதான். இந்த ராகத்துக்கு பெர்ஷியன் சாயல் உண்டாம்.. எம்பார் கண்ணனின் மெய்மறந்து வாசித்த இசை, எல்லோருக்கும் அரேபியா பாலைவனத்தில் கொஞ்சநேரம் சுற்றித்திரிந்த உணர்வை ஏற்படுத்தியது. கடைசியில் பல பாடல்களின் பல்லவிகளை ராகமாலிகாவாக வாசித்து பரவசப்படுத்தினார் எம்பார் கண்ணன்.
இதுபோல வித்தியாசமான இசை நிகழ்சிகளுக்கு அதிக வரவேற்ப்பு இல்லை. ராணி சீதை மன்றத்தில் அன்று கால்வாசி கூட அரங்கம் நிறையவில்லை. கொஞ்சம் மாறுபட்ட இசை வழங்கினால் இது ஏதோ கர்நாடக சங்கீதத்துக்கு சம்பந்தம் இல்லை என்ற மனோபவத்தை நீக்கினால்தான், இதுபோல முயற்சிகள் வெற்றிபெறும். நம் சங்கீதம் நம் எல்லைகளைத் தாண்டி பயணிக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்