Monday, December 14, 2009

சென்னை இசை விழாவில் என் உலா - இரண்டாவது வாரம்

கர்நாடக சங்கீதத்தின் 'எவர் கிரீன்' பாடகர் ஜேசுதாஸ்தான். பல வருடங்களாக ஒலித்துக்கொண்டிருக்கும் அதே குரல்.. அதே இனிமை.. அதே ரசிகர் கூட்டம்...எழுபது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் இவர் குரல் மட்டும் இன்னும் இருபதுதான். கடந்த பத்தாம் தேதி  நாரதகான சபாவில் ஜேசு கச்சேரி.  (இவர் கச்சேரிக்கு மட்டும்  டிக்கெட் பிரீமியம் விலை).

'என்ன புண்ணியம் செய்தேனோ', 'தெளியலேலு ராமா', 'இமகிரிதனையே'  என்று ஆரம்பித்தவர், 'நடசி நடசி' பாட்டுக்காக கரகரப்ரியாவில் வித்தியாசமாக ஆலாபனை செய்தார். இப்போது நடுநடுவில் பேச்சுக் கச்சேரியும் செய்கிறார். நடுவில் வயலின்காரரை 'நீ என்ன  வாசிக்கற' என்ற கண்டிப்பு வேறு.

துக்கடாவில் முழுவதும் 'ஜேசுதாஸ் பிராண்ட்' பாடல்கள்தான். புதிதாக எதுவும் இல்லை ('என் நெஞ்சில் பள்ளிகொண்டவன்', 'ஜானகி ஜானே, 'மேரோ மேரோமன')... அனால் எவ்வளவு முறை கேட்டாலும் திகட்டாத பாடல்கள். இன்னொரு முறை இந்தவருடமும் ஜேசுதாஸ் கச்சேரி அனுபவம்.

கணேஷ் குமரேஷ் வயலினுக்குள் தேன் நிரப்பிக்கொண்டு வாசிப்பார்களா என்று தெரியவில்லை... அவ்வளவு இனிமை. பாரதிய வித்யா பவனில் இந்த இருவர் சகானா, தேவகாந்தரி, இந்தோளம் போன்ற மென்மையான ராகங்களையே  கையாண்டனர்.  இந்த இருவரோடு மூவராக இணைந்த மிருதங்க  வித்வான்  அவர்களுக்கு  ஈடுகொடுத்து  வாசித்தார். கணேஷ் சிருங்கார ரசமஞ்சரி பாடலை  வாய்விட்டு பாடியது அருமை. .   

சர்வம் பிரம்ம மயம் வாசிப்பு தாலாட்டு பாடுவது போல் இருந்தது. கடைசியாக துக்கடாவில் மேற்கத்திய குறிப்புக்கள், ஹரிவராசனம் முதலியவை இடம் பெற்றிருந்தன.

கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்சில் சுதா ரகுநாதன் கடம் இல்லாமல்  மோர்சிங்கை  வைத்து கச்சேரித்தார் (தமிழ் அகராதியில் புதிதாக சேர்த்துக்கொள்ளலாம்). அவர் மெல்லிய தங்கக்கம்பி குரலோடு மீண்டும் ஒரு 'சுதா ஸ்டாண்டர்ட்' கச்சேரி. கடைசியிலும்  'சுதா பிராண்ட்' பாடல்கள்தான் (தீராத விளையாட்டு பிள்ளை).  'செந்தமிழ் நாடென்னும் போதினிலே'வோடு தில்லானாவும், வந்தேமாதிரத்தில்  மங்களமும் பாடியது கூடுதல் சிறப்பு.

சஞ்சய் சுப்ரமணியத்தை 'ஆலாபனை ஸ்பெஷலிஸ்ட்' என்றே வர்ணிக்கலாம். ஆந்தோளிகா, பைரவி, ரிஷபப்பிரியா (இந்த ராகம் சஞ்சய் சொல்லித்தான் தெரியும்) ராகங்களில் அவர் செய்த ஆலாபனை ஒரு அமைதியான நதியினிலே ஓடத்தில் பயணிப்பது போல இருந்தது. அதேசமயம் திடீர் ஏற்ற இறக்கத்துடன் அளவில்லாத வெள்ளம் வரும்போது ஒரு ரோலர் கோஸ்டர் பயண உணர்வையும் தந்தது.

சஞ்சயின் பலம் அவரது அசாத்திய கூட்டணி. அவர் ஆலாபனைகளுக்கு  ஈடுகொடுக்க நாகை முரளீதரனால்தான் (வயலின்) முடியும். சஞ்சய் தாலாட்டினால் நாகை தென்றலாக வீசுகிறார். அவர் வேகம் கூடினால் இவர் புயலாக மாறுகிறார்.

இவர் கச்சேரியில் துக்கடாக்கள் இல்லை. தனி ஆவர்த்தனம் முடிந்தும், விஸ்தாரமாக தில்லானா பாடினார். பாரதியாரின் 'நின்னையே ரதியென்று ' பாடலை ஆலாபனைகளுடன் பல்வேறு ராகங்களில் அவர் பாடியது எல்லோரையும் கிறங்கடித்தது.

அவர் தந்த பரவசத்துக்கு, கச்சேரி முடிந்ததும் எழுந்த கரகோஷமே சாட்சி.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்