இந்த வாரம் சில 'இரண்டாவது தடவை' கச்சேரிகள்...
டி.எம்.கிருஷ்ணா கச்சேரியில் பக்கவாத்தியகாரர்கள் ஐந்தடி தள்ளி உட்காருவது நல்லது. கிருஷ்ணா பாடும்போது இரண்டு கைகளையும் ஆக்ரோஷமாக நீட்டி, அசைத்து, வளைத்து, உட்கார்த்த நிலையிலேயே ஒரு சிறு நடனமே ஆடுகிறார். இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைடியில் கொஞ்சம் தாமதமாக 7.30க்கு கச்சேரியை ஆரம்பித்தவர், இரண்டு மணி நேரத்திலேயே முடித்துவிட்டார்.
சேவாக் செஞ்சுரி அடித்ததுபோல் இருந்தது கச்சேரி. முதல் பாட்டிலேயே (பலுக்குகண்ட) விஸ்தாரமாக ஆலாபனை, ஸ்வரஸ்தானம் முடித்து, ஒரு அருமையான தில்லானா பாடி, மூன்றாவது பாட்டிலேயே தனி ஆவர்த்தனத்துக்கு கொடுத்தார் கிருஷ்ணா. பின்னர் விஷ்ணுப்ரியா ராகத்தில் ஒரு ஆலாபனை, ஆபேரியில் ஆனந்தாமான ஒரு துக்கடா, தேஷ் ராகத்தில் ஒரு பெங்காலி பாடல், கடைசியாக ஒரு திருப்பாவை என்று ஜெட் வேகத்தில் பயணித்தது கச்சேரி. இந்த ஜெட் பயணத்திற்கு ஈடுகொடுத்தது சுந்தரேஸ்வரனின் வயலின்..
ரசிகர்களின் நாடித்துடிப்பு அறிந்து, எந்த இடத்திலும் தொய்வில்லாமல் கச்சேரிக்கும் கலையை அறிந்துவைத்திருப்பதினாலோ என்னமோ இன்றைய தேதியில் கர்நாடக சங்கீதத்தின் 'டாப் 5' பாடகர் டி.எம்.கிருஷ்ணா.
அன்று தீபாவளியோ அல்லது வேறு விசேஷமோ இல்லை. அனால் ராஜேஷ் வைத்யா வெடித்தது 10000 வாலா சரவெடி. ஒரு வீணையை வைத்துகொண்டு இதற்க்கு மேல் ஏதாவது செய்யமுடியுமா என்று தெரியவில்லை. அத்தனை வேகம்.. அத்தனை பரபரப்பு.. அவர் வாசித்தது மதுர வீணை என்னும் வீணை வகை... பக்கவாத்தியங்கள் மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கீ போர்டு மற்றும் சிறப்பு சப்தங்கள்.
நாட்டை, வலசி ராகங்களில் கொஞ்சம் ஜனரஞ்சகமாக வேகத் துடிப்புடன் ஆரம்பித்தார். பின்பு வந்த சிந்து பைரவியில் 'வசூல் ராஜா' படத்தில் 'சிணுக்கி சிணுக்கி வந்தா' பாடலில் அவர் வாசித்த வீணை இசை கொஞ்சம் தலை தூக்கியது. பின்பு காபி ராகம் (இது எக்ஸ்ப்பிரசோ காபி என்றார் வைத்யா). எக்ஸ்ப்பிரசோ காபி கொஞ்சம் காரமாக மிகக்குறைந்த அளவே இருக்கும். அதேபோல வெட்டறுத்தவாறு இருந்தது வாசிப்பு. பிறகு பந்துவராளியில் ஒரு ராகம் தானம் பல்லவி, ராகமாலிகாவில் 'சின்னஞ்சிறு கிளியே' வாசித்து நிறைவு செய்தார்.
இதுபோன்ற இசை கலவைகளை எந்த வகையில் சேர்ப்பது.. கர்நாடக சங்கீதமா அல்லது ப்யூஷன் இசையா? எதுவாயிருந்தாலும் வைத்யாவின் வீணை இசையில் ஒருவித ஈர்ப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
ஒரு மாறுதலுக்காக எதாவது ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு போகலாமே என்று பேப்பரை புரட்டியபோது பளீரென்று கண்ணில் பட்டது கிருஷ்ணகுமாரி நரேந்திரன் குழுவினரின் 'சிவ ஸ்வரூப தாண்டவ லகரி' நாட்டிய நாடகம். சிவனின் பல்வேறு தாண்டவங்களின் அழகான தமிழ் வர்ணனையுடன் நிகழ்ச்சி துவங்கியது. சிவனுக்காக ரிஷிகள் தவமிருக்கும் காட்சி திருவிளையாடல் படத்தின் முதல் காட்சியை நினைவூட்டியது. சிவனின் பல்வேறு நிலைகளை, நடனங்களை, அற்புதமாக அபிநயம் பிடித்து நடனமாடினார் நித்யா ஜகந்நாதன். ராவணன் சிவனை எண்ணி வீணைவாசிக்கும் காட்சி ரொம்பவும் அசலாக இருந்தது. (வீணை இசை ராஜேஷ் வைத்யா).
கடைசியில் பதஞ்சலி முனிவருக்காக சிவன் தில்லையில் நடனமாடிய ஆனந்த தாண்டவத்தை ஆனந்தமாக ரசிக்க முடிந்தது. நிகழ்ச்சியின் பலம் முன்னணியில் நடனமாடிய கலைஞர்களும் பின்னணி இசையும்தான்.. நடனத்துக்காக அமைக்கப்பட்ட இசை... இசைகேற்ற நடனம்... ஒன்றோடுஒன்று பின்னிப் பிணைந்தது.. அரங்க அமைப்புகளில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் நிகழ்ச்சி இன்னும் மெருகேற்றப்படிருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்