Monday, July 6, 2009

இரண்டு நியூயார்க் அனுபவங்கள்


அது 2004 ம ஆண்டு.. உலக வர்த்தக தலைநகரான நியூயார்க் செல்லப்போகிறோம் என்கிற குதூகலத்தில் நானும் என் நண்பனும் சென்னையில் விமானம் ஏறினோம். ஆனால் நியூயார்க்கின் முதல் அனுபவமே ஏமாற்றமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை..

கென்னடி விமான நிலையத்தில் இறங்கி டாக்சி பிடித்து மேன்ஹாட்டனில் உள்ள ஹோட்டலை அடையும்படி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.. 45 டாலர் ஆகும் என்றும் குறிப்பிடிருந்தார்கள்.

விமான நிலையத்தில் இறங்கி தொலைபேசி அட்டை வாங்க நாங்கள் கொஞ்சம் 'ஞே' என்று விழிப்பதை பார்த்து விட்டு ஒருவர் வந்தார். தன் டாக்ஸியில் வரும்படி அழைத்தார்.. அவரே சில உதவிகள் செய்தார். கொஞ்சம் பருமனான உடல்வாகும் தென்அமெரிக்க முகஅமைப்பும் கொண்டவராக இருந்தார். எங்கள் பெட்டிகளை டாக்சியில் ஏற்றினர். போகும் வழயில் அமெரிக்க ஆங்கிலத்தில் ஏதேதோ பேசினார். நியூயார்க்கின் பெருமைகளையெல்லாம் எடுத்துச் சொன்னார்.

ஹோட்டலில் இறங்கியவுடன் 90 டாலருக்கான பில்லை நீட்டினார். அது அதிகம் என்று தெரிந்தும் களைப்பு மிகுதியால் அவரிடம் விவாதம் செய்யவில்லை.. என் நண்பர் 100 டாலர் நோட்டைக்கொடுக்க, 'என்ன இது' என்றார். பார்த்தால் அவர் கையில் 10 டாலர் நோட்டுதான் இருந்தது. என் நண்பர் 'சாரி' என்று சொல்லி அதை வாங்கிக்கொண்டு இன்னொரு 100 டாலர் கொடுக்க, நம் கதாநாயகன் பத்து டாலர் மீதி கொடுத்துவிட்டு நிதானமாக பெட்டிகளை ஹோட்டலில் இறக்கிவைத்துவிட்டு, 'டாட்டா.. பைபை..' என்று சொல்லி கிளம்பிச் சென்றார்.

பிறகு ஹோட்டல் அறைக்குள் போனபிறகுதான் நாங்கள் 10 டாலர் நோட்டையே எடுத்து வரவில்லை என்று மூளையில் உரைத்தது. டாக்சி டிரைவர் கண நேரத்தில் நோட்டுகளை மாற்றிய வித்தை அப்போதுதான் புரிந்தது. எல்லா அமெரிக்க டாலர்களும் ஒரே அளவில் இருப்பதால் எங்களுக்கும் சந்தேகம் வரவில்லை.

'ஆஹா... நியூயார்க்ல ஏறங்கினஉடனே கவுத்துடாங்களே...' என்று தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்தோம். அப்போதுதான் நம்மூர் ஆட்டோகாரனிடம் ஐந்து ரூபாய்க்கு பேரம் பேசியதெல்லாம் நினைவுக்கு வந்தது.

இந்த வருடம் மீண்டும் நியூயார்க் பயணம் சென்றேன்.. தனியாக..! கென்னடி விமானநிலையத்தில் நின்றபோது கிட்டத்தட்ட அதே உடல்வாகுடன் ஒரு டாக்சி டிரைவர் வந்தார்.. அதே போல் சிலபல உதவிகள் செய்தார். இந்த முறை உஷாராக இருக்கவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன்... அவ்வப்போது கையிலிருந்த டாலர்களை எண்ணிக்கொண்டிருந்தேன்...

இது போதாதென்று நியூயார்க் பற்றி ரொம்ப தெரிந்தால்போல் டாக்சி டிரைவரிடம் காண்பித்துக்கொண்டேன். "அதாம்பா.. ஸ்டாச்சு ஆப் லிபர்ட்டி ரைட்ல ஒரு மெயின் ரோடு வருமே.. அதுல திரும்பி லெப்ட் எடுத்தா பிராட்வே குறுக்குச்சந்துல இருக்கிற ஹோட்டல்.. என்று ஏதேதோ எடுத்துவிட்டேன்.

அமைதியாக கேட்டுகொண்டிருந்த டாக்சி டிரைவர், "என்ன இந்தியாவா" என்றார்.. "ஆஹா தெரிஞ்சுபோச்சா" என்று நினைத்து ஆமாம் "நீங்களும் இந்தியாவா" என்றேன். "இந்தியா மாதிரிதான்" என்று பதில் வந்தது.. அதென்னது.. 'இந்தியா மாதிரி' என்று நான் குழம்பியபோது 'ஆனால் பாகிஸ்தான்' என்றார். இஸ்லாமாபாத்தை சேர்ந்தவராம்... நியூயார்க் வந்து ஐந்து வருடமாகிறதாம்.

பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்று என்று நினைக்கும் ஒரு பாகிஸ்தானியரைப் பார்த்து ஆச்சிரியப்பட்டேன். பிறகு அவர் இந்தியாவை பற்றி நிறைய விசாரித்துக்கொண்டிருந்தார்.

ஹோட்டல் வந்ததும் நம் பழைய டாக்சி டிரைவர் போலவே, பெட்டிகளை இறக்கிவைத்துவிட்டு, ஆனால் சரியான பணம் வாங்கிக்கொண்டு, தன் விசிடிங் கார்டை கொடுத்துவிட்டு, 'உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி' என்று கைகொடுத்துவிட்டு சென்றார்.

இதனால் தெரிவிப்பது என்னவென்றால், நியூயார்க்கில் நல்ல டாக்சியும் இருக்கிறது.. கள்ள டாக்சியும் இருக்கிறது... நீங்கள் யாரிடம் மாட்டிக்கொள்வீர்கள் என்பது உங்களுடைய அதிஷ்டத்தைப் பொறுத்தது.

3 comments:

damildumil said...

அது வேற ஒன்னுமில்லைங்க, நம்ம எப்படி ஆன் சைட்டுக்காக அமெரிக்கா போறோமோ அதே மாதிரி அங்க இருக்கிற டாக்ஸி டிரைவர்கள் எல்லாம் வருசத்திற்கு ஒரு முறை சென்னைக்கு வந்து நம்ம ஆட்டோ டிரைவர்கள் கிட்ட டிரெயினிங் எடுப்பாங்களாம், அப்படி வந்த ஒரு டாக்ஸிகாரன் கிட்ட தான் நீங்க மாட்டிருக்கீங்க.

Cinema Virumbi said...

அன்புள்ள ரவி,
இரண்டாம் பகுதியைப் படித்த பின் வாய் விட்டுச் சிரித்தேன்! பார்த்திபன்- வடிவேலுவின் விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச் சந்து, துபாய் மெயின் ரோடு, துபாய் மாதிரி இருந்தது!


நன்றி!
சினிமா விரும்பி

Cinema Virumbi said...

அன்புள்ள ரவி,
இரண்டாம் பகுதியைப் படித்த பின் வாய் விட்டுச் சிரித்தேன்! பார்த்திபன்- வடிவேலுவின் விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச் சந்து, துபாய் மெயின் ரோடு, துபாய் மாதிரி இருந்தது!


நன்றி!
சினிமா விரும்பி

Post a Comment

உங்கள் கருத்துக்கள்