Monday, July 20, 2009

தூக்கத்துக்கு விலை என்ன?


கடந்த வாரம் ஓமன் தலைநகர் மஸ்கட் சென்றிருந்தேன். மூன்று நாள் வேலைகளை முடித்துவிட்டு அடுத்த நாள் காலை கிளம்ப வேண்டும். மறு நாள் காலை 10.45 க்கு துபாய்க்கு விமானம். அங்கிருந்து மதியம் 3 மணிக்கு சென்னைக்கு விமானம். முதல் நாள் இரவு டின்னரை முடித்துவிட்டு ஹோட்டல் ரூமில் ரொம்ப நேரம் தொலைக்காட்சியில் மைகேல் ஜாக்ஸனைப் பற்றி ஒரு நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தேன். இரவு 12 மணிக்கு டி.வியை அணைத்துவிட்டு என் அலைபேசியில் காலை 6 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு தூங்கினேன். 6 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு காலை உணவை முடித்துக்கொண்டு ஹோட்டல் பில் செட்டில் செய்துவிட்டு நிதானமாக கிளம்பலாம் என்று திட்டம்.

பொதுவாக அலாரம் அடிப்பதற்கு அரைமணி நேரம் முன்னதாக எனக்கே விழிப்பு வந்துவிடும். அலாரம் அடிக்கட்டும் என்று சும்மா படுத்துக்கொண்டிருப்பேன். இங்கேயும் கொஞ்சம் தூக்கத்துக்கு பிறகு விழிப்பு வந்தது. மணி நாலோ ஐந்தோ இருக்கும் என்று நினைத்து அலாரம் அடிக்கட்டும் என்று கொஞ்சம் புரண்டு படுத்தேன். ரொம்ப நேரமாக அலாரம் அடிக்கவில்லை. இன்னும் அறை இருட்டாகத்தான் இருந்தது. சரி மணி ஆறு ஆக இன்னும் ஐந்து பத்து நிமிடங்கள்தான் இருக்கும் என்று எழுந்து கொண்டேன். பல் துலக்க போனவன் மணி என்னதான் ஆகிறது பார்த்துவிடலாம் என்று நினைத்து அலைபேசியை கையில் எடுத்தேன். அலைபேசி அலாரம் அடிக்கவில்லை... ஷாக் அடித்தது.

மணி காலை 9.45. இன்னும் ஒரு மணி நேரத்தில் விமானம் கிளம்பிவிடும்.

என்னை என்னாலேயே நம்ப முடியவில்லை.. ஜன்னல் திரையை கொஞ்சம் விலக்கிப் பார்த்தேன்.. வெயில் சுளீர் என்று அடித்தது. உண்மைதான்.. கிட்டத்தட்ட பத்து மணி ஆகப்போகிறது. நான்தான் அலாரம் சரியாக வைக்கவில்லை. எனக்கு தலை சுற்றியது... எங்கிருந்து கிளம்பி எப்படி விமானத்தை பிடிப்பது.. அதுவும் பன்னாட்டு விமானம். மூளை வேலை செய்வதற்கு கொஞ்ச நேரம் பிடித்தது..!

சரி.. அடுத்து என்ன செய்வது?

நிச்சயம் இந்த விமானத்தை பிடிக்க முடியாது.. சரி 3மணிக்கு கிளம்பும் துபாய் விமானத்தை பிடித்தால் என்ன? அதற்க்கு மஸ்கட்டிலிருந்து துபாய்க்கு காரில் செல்லவேண்டும்.. அதிவேகத்தில் போனால் கூட 4 மணி நேரமாகும் என்றார் ஹோட்டல் ஊழியர்..! இக்கட்டான நேரத்தில் அந்த ரிஸ்க்கை எடுப்பது என்று முடிவு செய்தேன். சிதறிக்கிடந்த துணிகளையெல்லாம் பெட்டியில் அள்ளிப்போட்டுக்கொண்டு ஹோட்டல் பில் கட்டிவிட்டு காரில் உட்கார்ந்தபோது மணி 10.30.

துபாய்-மஸ்கட் எல்லையில் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கும்... சில சமயம் ஒரு மணி நேரம் கூட கரை நிறுத்திவிடுவார்கள் என்று திடீரென்று கார் டிரைவர் ஒரு வெடிகுண்டைப் போட்டார். கொஞ்சம் குழம்பிய நான் என்ன ஆனாலும் சரி மஸ்கட் விமான நிலயத்துக்கே செல்வது என்று மாற்றி முடிவெடுத்தேன். அடுத்து ஏதாவது ஒரு விமானம் பிடித்து துபாய் சென்றுவிடலாம் என்று திட்டம்.

ஆனால் எந்த ஒரு விமானத்திலேயும் இடம் இல்லை. மஸ்கட்-சென்னை நேரடி விமானத்திலும் இடம் இல்லை.. (இன்று போய் நாளை வா என்றார்கள்). ஒரு சில விமானத்தில் (பஹரின் வழியாக, கத்தார் வழியாக) ஒரே ஒரு டிக்கெட் இருக்கிறது என்பார்கள்..பதிவு செய்யப்போகும்போது "சாரி.. தீர்ந்துவிட்டது" என்பார்கள். இப்படியே மூன்று மணி நேரம் கழிந்தது. கடைசியாக ஒரு டிராவல் ஏஜெண்ட் "ஜெட் விமானத்தில் ஒரு டிக்கெட் இருக்கிறது.. மும்பை வழியாக பயணிக்கவேண்டும்" என்றார்.

யோசிக்கவேஇல்லை.. சரி என்றேன். 106 ரியால் ஆகும் என்றார் (14000 ரூபாய்).. தண்டம் அழுதேன்.. இரவு ஒரு மணிக்குத்தான் விமானம்.. கடைசியாக 12 மணிநேரம் மஸ்கட் விமான நிலையத்திலேயே குப்பைகொட்டி அந்த ஜெட் விமானத்தை பிடித்து மும்பை வந்து சென்னை வந்து சேரும்போது அடுத்தநாள் காலை மணி பத்து.

தூக்கத்துக்கு விலை உண்டா? உண்டு... என் தூக்கத்துக்கு விலை 14000 ரூபாய்...!

5 comments:

நிகழ்காலத்தில்... said...

யதார்த்தமான இடுகை

வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

உண்மைதான். சிலசமயம் அதிகாலை நேரத்து விமானம் (காலை 5 மணி) பிடிக்கணுமுன்னா மூணு மணிக்கு எந்திரிச்சாத்தான் குளிச்சுட்டுக் கிளம்பச் சரியா இருக்கும். எங்கூர்லே ஒரு மணி நேரம் முன்னால் போனால் போதும்.

ஆனா........ எங்கே தூங்கிருவேனோன்னு ராத்திரி முழுக்க முழிச்சுக்கிட்டே இருப்பேன். கொடுமை/

ஆனா சென்னையில் இருந்து கிளம்ப எனக்கு நல்ல வசதி. இரவு 11.45 என்பதால் நிதானமா விமானநிலையம் வருவேன்.

நல்ல இடுகை.

ஆமாம். புதுசா இருக்கீங்களே...புதுப் பதிவரா? இல்லை உங்களைக் கவனிக்காம இருந்துட்டேனா?

ரவி சுவாமிநாதன் said...

நன்றி "நிகழ்காலத்தில்.."

ரவி சுவாமிநாதன் said...

நன்றி துளசி கோபால்... நான் ஒரு வருட பழைய பதிவர்.. தொடர்ந்து என் இடுகைகளை விமர்சிக்கவும்..!

VijayGanesh. S said...

This is not expected of you dear... way to go....

Post a Comment

உங்கள் கருத்துக்கள்