Sunday, February 1, 2009

தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின்

இத்தனை நாள்வரை நம்மையெல்லாம் சிரிக்க வைத்துக்கொண்டிருந்த நகைச்சுவை திலகம் நாகேஷ் இன்று நம்மை கண்கலங்க வைத்துவிட்டார்..! நாகேஷ் நினைவில் மூழ்கிய நான், அவரின் சில படங்களை அசைபோட்டேன்.

நீர்க்குமிழி, எதிர்நீச்சல் போன்ற படங்களில் சோகத்தை உள்ளடக்கிக்கொண்டு வெளியே கலகலப்பாக இருக்கும் கதாபாத்திரம் நாகேஷுக்கு..! கிட்டத்தட்ட இதே போன்ற பாத்திரத்தில் நடித்த 'மார்டன் டைம்ஸ்' படத்தின் சார்லி சாப்ளினுக்கு இணையாக நடித்திருப்பார். இரண்டும் கே.பாலச்சந்தரின் படங்கள். கே.பி இயக்கத்தில் அவர் மின்னிய மற்ற படங்களின் ஒன்று 'அனுபவி ராஜா அனுபவி'.. இதில் இரட்டை வேடம். இரண்டுமே மிகைபடுத்தாத இயற்கையான நடிப்பு.. (மறக்க முடியுமா 'முத்துக்குளிக்க வாரீகளா' பாடலை..!) இன்னொரு படம் 'பாமா விஜயம்'. பாலையா, மேஜர், முத்துராமனோடு கலக்கிய காமெடி..

நாகேஷின் மைல்கல் படம் கே.பி வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய 'சர்வர் சுந்தரம்'.. கதாநாயகனாகவும் காமெடியனாகவும் பின்னியெடுத்திருப்பார்..

நாகேஷின் 'கிளாசிக் காமெடி' திருவிளையாடல்தான்.. இன்றும் தமிழகத்தின் பட்டிதொடியிலும் கேட்கப்படும் ஒலிச்சித்திரம். வேறொரு புலவரின் பாடலை அரசவையில் பாடி பரிசு பெரும் அவசரத்தையும், மாட்டிக்கொண்டவுடன் உண்டான பதட்டத்தையும், தன் இயலாமையை நினைத்து தனியாக புலம்புவதையும் மிக அற்புதமாக சித்தரித்திருப்பார்..!

இயக்குனர் ஸ்ரீதரும் நாகேஷை அமர்களமாக கையாண்டிருக்கிறார்.. காதலிக்க நேரமில்லை படத்தில் ஒரு சினமா இயக்குனராகவும் (ஓஹோ ப்ரொடக்க்ஷன்ஸ்) ஊட்டி வரை உறவு படத்தில் டாக்டராகவும் நடித்திருப்பார்.

தில்லானா மோகனாம்பாள் படத்தில் நகைச்சுவை வில்லன் வேஷம் (இந்த வைத்தியை தெரியாதவங்க யாரவது இருக்க முடியுமோ..) 'காமெடி டிராக்' என்று தனியாக இல்லாமல் கதையோடு இழைந்திருக்கும் பாத்திரம். எல்லோரையும் ஏகவசனத்தில் அழைத்துக்கொண்டு சர்வசாதரணமாக நடித்திருப்பார் நாகேஷ்.

சிவாஜி படங்களில் நாகேஷ் நகைச்சுவை பிரமாதமாக இருக்கும். சிவாஜிக்கு இணையாக இருக்கும் (உ.ம் கலாட்டா கல்யாணம்). மாற்ற நடிகர்களோடு அவர் கலக்கிய முக்கியமான படங்கள் - ஜெய்சங்கரோடு பட்டினத்தில் பூதம், ஜெயலலிதாவோடு மேஜர் சந்திரகாந்த், ரவிச்சந்திரனோடு நான் (கொமட்ல குத்துவேன்). அதேசமயம் எம்.ஜி.ஆர் படங்களின் அவர் அவ்வளவாக சோபித்ததில்லை. மேலும் நாகேஷ் இயக்குனரின் நடிகர்.. கே.பி, ஸ்ரீதர் ஏ.பி.என் போன்றவர்கள்தான் நாகேஷின் நடிப்பு உச்சத்தை வெளிக்கொணர்த்திருக்கிறார்கள். நாகேஷை வீணடித்த படங்களும் உண்டு (தளபதி, தசாவதாரம்)

நாகேஷின் மாறுபட்ட நடிப்பை 'நம்மவர்' படத்தில் பார்க்கலாம். தன் பெண் தற்கொலை செய்தியை கேட்டு ஓடிவந்தவர் ஒரு சொட்டு கண்ணீர்கூட விடாமல் வெறும் வசனம் மட்டும் பேசி மற்றவர்களை கலங்கடித்துவிடுவார்..
இன்று தமிழ் திரைப்படங்களின் காமெடி மலிந்துவிட்டது. 'non-ethical' விஷயங்கள் மட்டுமே காமெடியாக கருதப்டுகிறது.. பெண்களை 'ஈவ் டீசிங்' செய்வது, தண்ணி அடித்து கும்மாளம் போடுவது , பத்துபேர் சேர்ந்து ஒருவரை அடிப்பது, காலால் எட்டி உதைப்பது, இரட்டை அர்த்த வசனங்கள்.. இவைகள்தான் இந்தக்காலத்து நகைச்சுவை காட்சிகள்.. ஒரு சிலபடங்களில் விபச்சாரமும் நகைச்சுவையாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. காமெடி என்ற பெயரில் இதுபோன்ற வக்கிர விஷயங்கள் நம் குழந்தைகளின் மூளையில் விஷமாக ஏறிக்கொண்டிருப்பதை நாம் தவிர்க்க முடியாது.

நாகேஷின் எந்த ஒரு படத்திலும் இந்தமாதிரி அசிங்கங்கள் இருந்ததில்லை. சார்லி சாப்ளின் படங்களைப்போன்று இன்றைக்கும் குடும்பத்தோடு ரசிக்ககூடியதுதான் நாகேஷின் நகைச்சுவை.

4 comments:

Vijay Ganesh. S said...

Aamam., One would have never put a bad face on nagesh's comedy.

Cinema Virumbi said...

அன்புள்ள ரவி,

மிகவும் ரசிக்கத்தக்க சிறுகட்டுரை! நானும் சில படங்களை நினைத்துப் பார்த்தேன்!
1.' அபூர்வ ராகங்கள்': சமூகத்தில் மிகவும் மதிக்கப் படும் ஓரு டாக்டர் இரவில் குடிகாரனாய் மாறுவதும், பழியைத் தன் கற்பனைத் தம்பியின் மீது போடுவதும் சூப்பர்!
2. அவர் முதல் முறை வில்லனாய் நடித்த கமலின் 'அபூர்வ சகோதரர்கள்'. வில்லனாய் நடித்தால் மக்கள் ஏற்க மாட்டார்களே என்று அவர் தயங்கியதாகவும் கமல் அவரை ஊக்குவித்ததாகவும் கேள்வி!
3. கோமலின் 'சாதிக்கொரு நீதி ' (ஒரிஜினல் நாடகம் ' செக்கு மாடுகள்') யில் வரும் புரட்சிக்கார சாஸ்திரிகள் பாத்திரம். 'மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள், அங்கே ஆஹாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி ' என்ற பாரதியின் வரிகள் இவர் நடிப்பில் உண்மையிலேயே உயிர்த்தெழும்!
4. வேறு ஒரு படம், பெயர் நினைவில்லை. தன் மகனை குண்டர்களிடம் இழந்த அவர் அவர்களின் தலைவனை ஒரு மலைக்கோயிலின் படிகளில் எதிர் கொள்ளும்போது உடம்பெல்லாம் துடிப்பது பார்க்க வேண்டிய காட்சி. 'மஹாத்மா காந்தி கையில தடிக்கு பதிலா ஒரு AK 47 இருந்திருந்தா எதிராளி சலாம் போட்டுட்டுப் போயிருப்பாண்டா! '
5. மற்றும் சில கிரேசியின் படங்கள் : 'மைக்கேல் மதன காம ராஜன்', 'பஞ்சதந்திரம்' போன்றவை
6. வேறு ஏதோ ஒரு பழைய Black & White படத்தில் வசிய மருந்தைத் தவறாக முழுங்கி விட்டுக் குமாரி சச்சுவின் அண்ணன் இவரை ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்த பிறகும் ஜன்னலைப் பிடித்துக் கொண்டு 'மாலுவைக் கொஞ்சம் ஜன்னலண்டை வரச்சொல்லு!' என்பது!
7. 'ஜீவனாம்சம்' படத்தில் வரும் விவாகரத்தில் நம்பிக்கையில்லாத ஒரு divorce லாயர்!
8. 'வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு ' (படம் என்ன 'பத்தாம் பசலி' யா ?)
9. 'இரு கோடுகள்' இல் பாரதியார்!
10. கமலின் 'கடல் மீன்கள்'

சொல்லிக் கொண்டே போகலாம்

நன்றி!

சினிமா விரும்பி

Ravi Swaminathan said...

நன்றி சினிமாவிரும்பி

மிக விவரமான தகவல்கள்..! நீங்கள் சொல்வதுபோல நாகேஷைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்..

ரவி சுவாமிநாதன்

எம்.ஏ.சுசீலா said...

அன்புள்ள ரவி, நாஷுக்கு எற்ற அஞ்சலி. என் வலையிலும் நாகேஷ் பற்றிய சில நினைவுகளைப்பதிவு செய்திருக்கிறேன் .முடிந்தால் பார்த்துக்கருத்துக்கூறுக.
எம்.ஏ.சுசீலா.
http://www.masusila.blogspot.com
susila27@gmail.com

Post a Comment

உங்கள் கருத்துக்கள்