Wednesday, December 31, 2008

தமிழ்நாடு 2008


எதிர்பாராத
திருப்பம்
:
இரு குடும்பங்கள் மோதல், தீ வைப்பு, உயிரிழப்பு, வியாபார மோதல் என்று மெகா சீரியல் கணக்காக ஓடிக்கொண்டிருந்த கலைஞரின் குடும்பக் கதை, திடீரென ஒரு குரூப் போட்டோவோடு சுபமாக முடிந்தது.

மிகப்பெரிய இழப்பு: தமிழனை வெவ்வேறு தளங்களில் படிக்கத் தூண்டிய எழுத்தாளர் சுஜாதாவின் மரணம்.

பெரிய ஏமாற்றம்: ஆளுங்கட்சி பல இடங்களில் சறுக்கிக்கொண்டிருக்க, முக்கியமான பிரச்சனைகளில் அவர்களை உலுக்காமல் 13ம் வார்டில் தண்ணீர் வரவில்லை, 123ம் வார்டில் ரோடு போடவில்லை என்று போராட்டம் நடத்திக்கொண்டிருந்த ஜெயலலிதா.

தொடரும் சோகம்: முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இலங்கையில் தமிழர்கள் படுகொலை தொடர இன்னும் அதை அரசியலாக்கும் தமிழக அரசியல் கட்சிகள், இன்னும் அதை விடுதலை புலிகளின் கண்ணோட்டத்திலேயே பார்க்கும் மேதாவி பத்திரிகையாளர்கள் மற்றும் தமிழர்களுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் மௌனம் சாதிக்கும் மத்திய அரசு.

புது வரவு: காவேரி பிரச்னை, இலங்கை பிரச்னை, காஷ்மீர் பிரச்னை இவைகளோடு சேர்ந்துகொண்ட ஒகேனக்கல் பிரச்னை.

வடநாட்டு திடீர் நண்பர்கள்: சேதுவில் தலையிட்ட சாதுக்கள், இதுவரை தமிழ்நாடு இந்தியாவின் எந்த திசையில் இருக்கிறது என்பதைக்கூட கண்டுகொள்ளாத ஆனால் தமிழ்நாடு கடலோரத்துக்கு மட்டும் உரிமை கொண்டடும் ராஜ்நாத் சிங் மற்றும் அசோக் சின்கால்.

பண்டிகை மாற்றம்: தமிழ்ப் புத்தாண்டை தை முதல் தேதிக்கு மாற்றி அதை சட்ட சபையில் சட்டமாக நிறைவேற்றி சாதனை படைத்தார் முதல்வர். இந்த வருடம் தீபாவளியை மே மாதத்துக்கும் கிருஸ்துமஸ் பண்டிகையை ஆகஸ்ட் மாதத்துக்கும் மாற்றி அமைப்பார் என்று நம்பலாம். சட்ட வல்லுனர்கள் கவனிக்க... தீபாவளி தேதி மாற்றத்தை இந்திய பாராளுமன்றமும் கிருஸ்துமஸ் தேதி மாற்றத்தை அமெரிக்க பாராளுமன்றமும் அங்கீகரிப்பது முக்கியம்... போப்பாண்டவரைப் பற்றி கவலையில்லை..

தமிழ்நாட்டின் சாதனையாளர்கள்: சந்திராயன் அண்ணாமலை, சதுரங்க ஆனந்த், கேரம் இளவழகி, ஹிதேன்திரனுடைய பெற்றோர்.

தமிழ்நாட்டின் வேதனையாளர்கள்: சட்ட கல்லூரி மாணவர்கள்.

தமிழ்நாட்டின் ரோதனையளர்கள்: சுப்ரமணிய சுவாமி, டி.ராஜேந்தரோடு இந்த வருடம் சேர்ந்துகொண்ட ரஜினிகாந்த்.

தமிழ்நாட்டின் அபாயம்: நிஷா புயல் மற்றும் விஜயகாந்தின் வளர்ச்சி.

Sunday, December 21, 2008

அபினவ் பிந்திராவும் துப்பாக்கியும்

ஒலிம்பிக்ஸ் தங்கம் வென்ற அபினவ் பிந்திராவையும் மும்பை தீவிரவாதத்தில் உயிரிழந்த கமாண்டோக்களையும் ஒப்பிட்டு ஒரு முட்டாள்தனமான மின்அஞ்சல் உலவிவருகிறது. இரண்டுபேரும் துப்பாக்கி ஏந்தியிருக்கிறார்களாம். அனால் இந்திய அரசு பிந்திராவுக்கு 3 கோடியும் உயிரிழ்ந்த கமாண்டோவுக்கு வெறும் 5 லட்ச ரூபாயும் கொடுத்ததாம். 'என்ன தேசம் இது.. ' என்று விவரிக்கிறது அஞ்சல்.

இப்படி ஒரு சொடுக்கில் பலருக்கு மினஞ்சல்அனுப்புவார்கள் எவ்வளவுபேர் உயிரிழந்தவர்களுக்கான வீரவணக்க கூட்டங்களில் கலந்துகொண்டார்கள் என்று தெரியவில்லை..!

நாட்டுக்காக தியாகம் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் போதாது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.. பண உதவி மட்டுமல்ல அவர்கள் குடும்பங்களை பாதுகாக்க வேண்டியது அரசு மற்றும் ஒவ்வொரு இந்தியனின் கடமை..

அனால் எதற்காக ஒரு விளையாட்டு வீரரை வம்புக்கு இழுக்கவேண்டும்? இதேபோல் கார்கில் போர் நடந்தபோது ராணுவத்தினரையும் சச்சின் டெண்டுல்கரையும் ஒப்பிட்டு ஒரு மினஞ்சல் உலவியது. இவையெல்லாம் நம் தெளிவான சிந்தனையை மழுங்கடிக்கக்கூடிய செய்திகள்.

ராணுவத்தினர் துப்பாக்கி வைத்திருப்பதால் துப்பாக்கிசுடும் வீரருடன் ஒப்பிடமுடியுமா? காலால் எட்டி உதைத்தால் கால்பந்து வீரருடன் ஒப்பிடுவார்களா? ஒரு ராணுவ வீரர் ஓடிப்போய் தீவிரவாதியைப் பிடித்ததால் பி.டிஉஷாவோடு ஒப்பிடுவர்களா?

இருவேறு துறைகளில் இருப்பவர்களை எப்படி ஒற்றுமைப்படுத்த முடியும்? அப்படியென்றால் சினிமாவில் காஷ்மீர் தீவிரவாதிகளை தமிழ் டயலாக் பேசியே திருத்தும் கேப்டன்களையும், பத்து அடியாட்களை ஒரே சமயத்தில் புரட்டி எடுக்கும் சூப்பர் ஸ்டார்களையும் ஏன் இந்த நிஜ ஹீரோக்களோடு ஒப்பிடக்கூடாது? (இந்த நிழல் ஹீரோக்கள் நிஜ ஹீரோக்களிவிட, விளையாட்டு வீரர்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்)

விளையாட்டு வீரர்களும் ராணுவ வீரர்களும் நம் நாட்டுக்கு வெற்றியை தேடித் தருகிறார்கள்.. நம் நாட்டை எண்ணி பெருமிதம் கொள்ள வைகிறார்கள்.. பணத்தின் அடிப்படையில் அவர்களை ஒப்பிடுவது மாபெரும் தவறு. இந்த நியதி எல்லா நாட்டிற்கும் பொருந்தும். உலகில் எந்த நாட்டிலும் ராணுவத்தினர் விளையாட்டு வீரர்களைவிட அதிகம் சம்பாதிப்பது இல்லை.

உங்களிடம்
மினஞ்சல் வசதியிருந்தால் உயிரிழ்ந்த கமாண்டோக்களுக்கு அதிக உதவி செய்ய அரசை வற்புறுத்துங்கள்.. ராணுவ பட்ஜெட்டில் இதற்காக அதிக நிதி ஒதுக்க சொலுங்கள். தேவையில்மால் இந்தியாவுக்கு தங்கம் வாங்கிகொடுத்த அபினவ் பிந்திராவின் தலையை போட்டு உருட்டாதீர்கள்...!

இதுபோல வெட்டி செய்திகளால் உயிரிழந்தவர்களுக்கும் உபயோகமில்லை..! பிந்திராவுக்கும் நிம்மதியில்லை..!

Monday, December 8, 2008

நாணம்..!

மேகஆடையை அவிழ்த்து
ஆட்டம்போட்ட
மழைகண்டு
நாணத்தில்
ஒளிந்து கொண்டது ..!

ஆட்டம் முடிந்ததும்
வெட்கத்தோடு மெதுவாக
எட்டிப்பார்த்தது
ஐந்துமணிச் சூரியன்..!



Sunday, December 7, 2008

வைரமுத்துவின் பாற்கடல்

அண்மையில் நான் படித்துமுடித்த புத்தகம் வைரமுத்துவின் 'பாற்கடல்'. குமுதம் இதழில் வந்த கேள்வி-பதில்களின் தொகுப்பு.

வாசகர்களின் 378 கேள்விகளுக்கு தேன் தோய்த்த பலாச்சுளையாய் விடையளித்திருக்கிறார் கவிஞர். 'கேட்கப்படாத கேள்விகளுக்காய் பூட்டிக்கிடக்கும் பூமி' என்ற முன்னுரையுடன் தொடங்கும் இந்தப் புத்தகம் அரசியல், சினிமா, அறிவியல், இசை, மருத்துவம் மற்றும் கலைஞர் என்று பல திசைகளில் பயணிக்கிறது.

கவிப்பேரரசு வைரமுத்து கொழுத்து திரண்டு நிற்கும் ஒரு கறவை பசு. அவரிடன் இலக்கியப் பாலையும் தமிழ் பாலையும் கறக்காமல் வெறும் நுகர்ந்து பார்த்திருக்கிறார்கள் வாசகர்கள்.. கலைஞரிடன் உங்களுக்கு பிடித்த நகைச்சுவை, உங்களுக்கு பிடித்த பாடகர்கள், இசையமைப்பாளர்கள், உங்கள் காலை உணவு என்ன - என்று பல கேள்விகள் இதே ரகம். இதையும் தாண்டி ஒருசில புத்திசாலித்தனமான வினாக்களும் உண்டு -

நெள
எழுத்தில் தொடங்கும் சொல் உண்டா? (நெள என்றல் மரக்கலம், நெளவி என்றல் மான் என்கிறார் கவிஞர்)

பாரதி
காலத்திலேயே அவரை விமர்சித்தவர்?

காந்திக்கு
ஏன் நோபல் பரிசு கொடுக்கவில்லை?

மரணத்துக்குப்பின்
வாழ்வு?

படைப்பாளிகள்
பதிலளிக்க கடமைப்பட்டவர்களா? .. இப்படி சில..

வைரமுத்துவின் தமிழ் ஆளுமையும் புலமையும் சேர்ந்து புத்தகத்துக்கு சுவை கூட்டுகிறது. பல் தேய்ப்பது எப்படி என்ற கேள்விக்குக்கூட பல விளக்கங்களுடன் ரசனையோடு பதிலளித்திருக்கிறார். காலை நடைபயிற்சிக்கு முக்கியமானது எது, ரோடு போடுவது எப்படி, நிலா எப்படி தோன்றியது என்ற கேள்விகளின் பதில்கள் ரசிக்கத்தக்கவை.

வைரமுத்து வாசகர்களின் கேள்விகளைக் கொண்டு இந்தப் பாற்கடலை கடைந்திருக்கிறார்... இதில் அமுது மட்டுமே வழிந்தோடுகிறது.

Saturday, November 29, 2008

சமாதானப் புறாக்களுக்கு எதிரே தீவிரவாதம்


அரபிக் கடல் அலைமோதிச் செல்லும் மும்பை கேட் வே ஆப் இந்தியாவில் நின்றுகொண்டு புறாக்களுக்கு தானியங்களை இறைத்தபடி எதிரே உள்ள தாஜ் ஹோட்டலின் அழகை ரசித்தவர்களின் நானும் ஒருவன்.

மும்பையின் அடையாளமாக இருந்த தாஜ் ஹோட்டல் இந்த வாரம் உலகத்தின் எல்லா நாளிதழ்களிலும் தலைப்புசெய்தியாக இடம் பெற்றது. இந்தப்பக்கம் பல நூறு புறாக்கள் சமாதான மொழி பேசிக்கொண்டிருக்க தாஜ் ஹோட்டல் தீவிரவாதிகளின் கூடாரமானது. இந்தியாவின் இந்த வருட தொடர் வெடிகுண்டுகளுக்கெல்லாம் உச்சம், தீவிரவாதிகள் கடைபிடித்திருக்கும் இந்த புதிய முறை.

வழக்கம்போல ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் அறிக்கை விட்டுகொண்டிருந்தாலும் இந்தமுறை மக்களும் ஊடகங்களும் விடுத்திருக்கும் புதிய குரல் : "அரசில்வாதிகளே.. உங்கள் சண்டையை நிறுத்துங்கள்.. தீவிரவாதத்தை எதிர்க்க இப்போது ஒற்றுமை தேவை.."

ஆம்.. இப்போதைய தேவை சட்ட மாற்றங்களோ, வெறும் அறிக்கைகளோ, சம்பிரதாய கூட்டங்களோ அல்ல.. ஒற்றுமையான ஒரு அணுகுமுறை..

குண்டு எந்த மாநிலத்தில் வெடித்தது என்பதை பொறுத்து மாநில அரசையோ மத்திய அரசையோ புகார்கூறாத அணுகுமுறை.. இந்திய இராணுவம் - கடலோர காவல் படை - மத்திய மற்றும் மாநில புலனாய்வுத்துறை - அதிரடிப்படை - மாநில காவல் துறை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படும் அணுகுமுறை..

இந்த அணுகுமுறைதான் செப்டம்பர் 11 க்கு பிறகு தீவிரவாதம் தலைதூக்காமல் அமெரிக்காவை காப்பாற்றியது.

பிரிந்து கிடந்த இந்தியாவை சுலபமாகக் கைப்பற்றியது பிரிட்டன். காந்திக்கு முன் நடந்த எந்த போராட்டமும் வெற்றி பெறவில்லை. மத-இன-மொழி உணர்வுகளைக் கடந்து சிதறிக்கிடந்த இந்தியாவை ஒன்று சேர்த்துப் போராடி வெற்றி கண்டார் காந்தி.

இன்றும்
இந்தியா சிதறிக் கிடப்பதுதான் தீவிரவாதிகளின் சாதகமான விஷயம். இப்போதைய தேவை ஒரு சுதந்திரப்போராட்டத்துக்கான ஒற்றுமை, உறுதி. ஆனால் அதை வழிநடத்திச்செல்லக்கூடிய தலைவன் யார்?

Friday, November 28, 2008

வி.பி.சிங்...

மும்பை வெடிகுண்டு சத்தங்களுக்கு நடுவில் இந்தியாவின் ஒரு உண்மையான, ஊழலற்ற அரசியல்வாதி மறைந்துபோன செய்தி ஊடகங்களில் அதிகம் இடம் பிடிக்கவில்லை.

பிரதமர் பதவியோடு பல பதவிகளை வகித்த வி.பி.சிங் பெயர் எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டிலும், குதிரை பேரத்திலும், ஆட்சி கவிழ்ப்பிலும், தரமற்ற அரசியலிலும் இடம் பெற்றதில்லை. பிராந்திய அடையாளங்கள் இல்லாமல், மத-இன உணர்வுகள் இல்லாமல், இந்தியாவை ஒரு தேசிய கண்ணோட்டத்தில் பார்த்த பிரதமர்களில் வி.பி.சிங் ஒருவர்.

உ.பி முதலமைச்சராக இருந்தபோது குறிப்பிட்ட நாட்களுக்குள் சாம்பல் கொள்ளையர்களை அடக்குவேன் என்று சபதமிட்டு அது நடக்காமல் போனதும் பதவியை துறந்தவர்..!

காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக ராணுவ அமைச்சராக இருந்தபோதும் fairfax, bofors முறையீடுகளை எந்தவொரு சமாதானத்திற்கும் இடம்கொடுக்காமல் வெளியுலகத்துக்கு கொண்டு வந்தவர்..! காங்கிரஸ் ஆட்சிக்கு நிதிஉதவி செய்துவந்த அம்பானி அமிதாப் போன்றவர்களிடம் வருமானவரி சோதனை நடத்திய நடுநிலையாளர்..!

பிரசார் பாரதி அறிக்கை முலம் இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கைக்கு விதை ஊன்றியவர்..!

இரு துருவங்களான கம்யூனிஸ்டுகளையும் ப.ஜா.காவையும் ஒரே அலைவரிசையில் இணைத்த சாதனையாளர். அதே சமயம், கூடவந்தவர்களின் கூட்டணி அரசியலையும், காங்கிரஸின் காலைவாரும் அரசியலையும், பா.ஜா.காவின் காவி அரசியலையும் தாக்குப்பிடிக்கமுடியாமல் தோற்றுப் போனவர்..! சந்திரசேகர் - ராஜீவ் காந்தி - அத்வானியின் மும்முனைத் தாக்குதலில் வீழ்ந்து போனவர்.

காங்கிரஸிலேயே நீடித்திருந்தால், ராஜீவின் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவராக, நரசிம்மராவுக்கு பதிலாக பிரதமராகியிருக்கக் கூடியவர்..!

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உண்மையிலேயே கவலைப்பட்டவர்..!

தன்
உடலில் புற்று நோய் தொடங்கியதை அறிந்தவுடன் அரசியலைத் துறந்தவர். கிட்டத்தட்ட பதினேழு வருடமாக புற்று நோயுடன் போராடிய தன்னம்பிகையாளர்..!

கடைசியாக, வாரிசு அரசியலில் நம்பிக்கையில்லாத சொற்ப இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர்..!

விஸ்வநாத் பிரதாப் சிங் இந்திய ஜனநாயகத்தின் இலக்கணங்களுக்கு ஏற்ற அரசியல்வாதியாக இருந்தார். ஆனால் இந்திய ஜனநாயகத்தைப்போலவே பலர் இவரை சரியாக புரிந்துகொள்ளவில்லை.

Saturday, November 22, 2008

பாத சேவை

இரண்டு கறுப்பின மக்கள் வெள்ளையர்களின் காலணிகளுக்கு பாலிஷ் போடும் இந்தக் காட்சியை அமெரிக்காவில் உள்ள ஆர்லாண்டோ நகரத்தில் அண்மையில் படம் பிடித்தேன்.

இது எங்கோ தெருவோரத்தில் நடந்தது அல்ல. வங்கி தொடர்பான ஒரு சர்வதேச கண்காட்சியில், பல நாட்டவர்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் இந்தப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இது போல காட்சியை மும்பை நரிமன் பாயிண்ட்டில் உள்ள ஷூ பாலிஷ் சிறுவர்களாக பார்த்துப் பழகிய நமக்கு அமெரிக்காவில் இப்படி நடப்பது ஆச்சரியமாக இருக்கலாம்.

இதை ஒரு 'சேவை' என்று தொழில் ரீதியாக அங்கீகரித்தாலும் ஒரு கறுப்பினத்தவனுக்கு வெள்ளையன் இதுபோல பாத சேவை செய்யும் காட்சி அமெரிக்காவில் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே..!

ஒபாமா... உண்மையான 'மாற்றத்தை' காண்போமா?

Thursday, November 13, 2008

வருங்கால வழக்கறிஞர்கள்..

சென்னை சட்டக்கல்லூரியில் நடந்த இந்த வன்முறை தொலைக்காட்சியிலும் நாளிதழ்களிலும் வெளிவந்ததால் பரபரப்பானது. இவர்கள்தான் வருங்காலத்தில் சட்டத்தை மேம்படுத்தும் வக்கீல்களாகவும் நீதியை நிலை நாட்டும் நீதிபதிகளாகவும் வலம் வரப்போகிறவர்கள்..! சட்டத்தை கையில் எடுக்கும் இவர்களை நம்பித்தான் நாம் சட்டத்தை ஒப்படைக்கப்போகிறோம்..

கொஞ்சம்கூட மனிதத்தன்மையே இல்லாத மிருககுணம் இந்த மாணவர்களுக்கு எங்கிருந்து வந்தது? சினிமாவின் பாதிப்பா அல்லது அரசியலின் பாதிப்பா?

ஆனால் நமக்கு இதெல்லாம் நகைச்சுவை காட்சிகள்தானே? திரையில் கவுண்டமணி செந்திலைப் போட்டு அடிக்கும்போதும் வடிவேலு தர்ம அடி வாங்கும்போதும் குடும்பத்தோடு பார்த்து கைதட்டி ரசித்தவர்கள்தானே நாம்..! இதையும் ரசித்துவிட்டுப்போவோமே..!

Wednesday, November 5, 2008

ஒபாமா வெற்றி

அப்ரகாம் லிங்கனும் மார்டின் லுதர் கிங்கும் சிந்திய இரத்தத்துக்கு அமெரிகர்கள் இன்று அர்த்தமுள்ள பதில் கொடுத்திருக்கிறார்கள். காலங்காலமாய் நசுக்கப்பட்ட கறுப்பின மக்களுக்கு இன்று ஒரு மகத்தான நாள். எந்த இனம் அமெரிக்காவில் அடிமைப்படுத்தப்பட்டதோ, எந்த இனம் அங்கு அருவருப்பாக நோக்கப்பட்டதோ அதே இனத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று அமெரிகாவின் அதிபர் பதவியில் அமரப் போகிறார். இது ஒபாமாவுக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல.. ஒரு இனத்திற்கே கிடைத்த வெற்றி.

ஆனால் இந்த மாறுதல் அமெரிக்காவில் நிகழ 200 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. கீழை நாடுகளில் நடந்த அரசியல் மாற்றங்களின் வேகம்கூட அமெரிக்காவில் இல்லை.

இங்குஒரு தலித் முதல்வராகியிருக்கிறார்..

ஒரு பெண் முஸ்லீம் நாட்டை ஆண்டிருக்கிறார்..

தெற்காசிய நாடுகள் பல பெண் அதிபர்களை, போராளிகளை சந்தித்திருக்கிறது..

வெற்றி பெற்றவுடன் ஒபாமா சொல்லியிருக்கிறார்: "அமெரிக்கா எந்த மாற்றத்தையும் எதிர்கொளும் என்பதில் சந்தேகம் இருப்பவர்களுக்கு இதுதான் விடை...!"

இன்னும் சந்தேகம் இருக்கிறது ஒபாமா... அமெரிக்காவில் இதுவரை ஒரு பெண் ஜனாதிபதியகவில்லை...!

Tuesday, November 4, 2008

என் நீண்ட விமானப் பயணம்

இதுவரை எனது நீண்ட விமானப்பயணம், அர்ஜெண்டினா தலைநகர் 'பியூனோஸ் ஏரிஸ்' நகரிலிருந்து சென்னை வந்ததுதான். என் விமான வழித்தடம் பியூனோஸ்ஏரிஸ் - நியுயார்க் - டோக்கியோ - சிங்கப்பூர் - சென்னை... நான்கு விமானங்கள்.. 50 மணி நேரப் பயணம். சனிக்கிழைமை இரவு தொடங்கிய பயணம் செவ்வாய்க்கிழமை மாலை சென்னையில் முடிந்தது. கிட்டத்தட்ட பூமியை மேலும் கீழும் இடமும் வலமும் அளந்து பார்க்கக்கூடிய ஒரு சோர்வுப் பயணம்.

கிழக்கு-மேற்கு மாறி மாறி வருவதால் எந்த திசையில் இருக்கிறோம், என்ன கால நேரம் என்பதெல்லாம் புரியவேயில்லை.. விமானத்திலிருந்து வெளியே பார்த்தால் வெயில் அடிக்கிறது.. சில மணி நேரங்களில் திடீரென்று கும்மிருட்டாகி பௌர்ணமி நிலவு ஜொலிக்கிறது.. மீண்டும் இரண்டு மணி நேரத்தில் நல்ல வெளிச்சம்... உச்சி வெயில்.. கொஞ்ச நேரத்தில் மீண்டும் நிலா.. ஒரு குத்து மதிப்பாகத்தான் எந்த கிழமையில் இருக்கிறோம் என்று கணிக்க முடிந்தது.

விமானத்தில் சைவ உணவைப்பற்றி கேட்கவே வேண்டாம்... எனக்குக் கிடைத்தது காய்ந்த ரொட்டி.. கொஞ்சம் இலை தழைகள்.. அவ்வப்போது ஆரஞ்சு பழரசம்.. அவ்வளவுதான். ஒரு விமானத்தில் மட்டும் ரொம்ப பரிதாப்பட்டு காய்கறிகளை வெட்டி சாலட் மாதிரி எதாவது செய்து தரட்டுமா என்று கேட்டார்கள்.. கேட்டதே கொஞ்சம் வயிறு நிரம்பியது.

என்னிடம் பேசிக்கொண்டிருந்த சில விமான பணிபெண்கள் 'இவ்வளவு நீண்ட பயணமா' என்று ஆச்சரியப்பட்டார்கள். அவர்களே ஆதங்கப்பட்டது கொஞ்சம் ஆறுதலான விஷயம்...!

சிங்கப்பூர் வந்தவுடன் செங்கல்பட்டு வந்ததுபோல இருந்தது. (கொஞ்ச நேரத்தில் சென்னை வந்துவிடும்..!). விமானம் சென்னையை அடைந்த பொது ஏதோ போர்க்கைதிகள் தாயகம் திரும்புவதைப்போன்று ஒரு உணர்வு ஏற்பட்டது.. மூன்று நாள் தாடி, காய்ந்த வயிறு, தள்ளாடும் உடல், உறக்கம் கெஞ்சும் கண்கள், இவற்றோடு வீடு வந்து சேர்ந்தோம்.

இந்த ஹைடெக் உலகில் என்னதான் குளோபல் வில்லேஜ் என்று பேசினாலும் உலகத்தை சுற்றி வருவது ரொம்ப கடினமான காரியம்தான்.. ஞானப் பழத்தைப் பெற உலகத்தைச் சுற்றி வராமல் சிவன்-பார்வதியை மட்டும் சுற்றி வந்த பிள்ளையாரின் தந்திரம் அப்போதுதான் புரிந்தது..

Friday, October 24, 2008

இது நிலாக் காலம்


தாய்மார்களே..
'நிலா நிலா ஓடிவா' பாட்டை நிறுத்திவிடுங்கள்..

வெள்ளித்திரை வேந்தர்களே..
'வாராயோ வெண்ணிலாவே' என்றது போதும்..

கவிக்குயில்களே..
'வெண்ணிலவே.. விண்ணைத்தாண்டி வருவாயா' என்ற வரிகளுக்கு முடிவுரை எழுதுங்கள்..

உங்கள் அஞ்ஞானத்தை முறியடிக்க இதோ சந்திராயன் சீறிப்பாய்கிறது..

நிலவு..!
இந்தியனுக்கு என்றுமே எட்டாத கனி..
காலங்காலமாய் கண்களுக்குத் தெரிந்த ஆனால் நெருங்க முடியாத அதிசயம்.
நிலவை புரிந்து கொள்ள முடியாத நாம் அதை நோக்கிய காலம் முதலே நம் கற்பனையில் மிதக்க விட்டோம்.

பசிபிக் பெருங்கடலிருந்து பெயர்ந்துபோன பாறை என்ற விஞ்சானவெளிச்சம் வீசியபோதும்
பூமியை சுற்றிவரும் துணைக்கோள் என்று அறிவியல் ஆதரித்தபோதும்
நிலவின்மீது நம் கண்ணோட்டம் மாறவே இல்லை.

நிலவை நோக்குவற்க்கு நம் நிர்வாணக்கண்கள் போதாது...
விஞ்ஞானக் கண்ணாடி தேவை..!

நிலவை யார் இங்கு நிலவாய்ப் பார்த்தது..

நிலவை பெண்ணாக்கி கவிதைப்பாடிக் களித்தோம்..!

குழந்தைகள் சோறுண்ண விளையாட்டு பொம்மையாக்கினோம்..!

பூமியின் நிழல் நிலவின் படிந்தால் பயந்து வீட்டுக்குள் அடைந்தோம்..!

வாழ்க்கைப்பாதையை நிர்ணயிப்பது
நிலவின் வட்டப்பாதை என்று தீர்மானித்தோம்..!

நிலவைக் கடவுளாக்கி மனிதஉருவம் கொடுத்தோம்..!

வளர்வதும் தேய்வதும் நிலவின் காட்சிப்பிழை..!
அதற்க்கு அர்த்தம் கொடுத்தது மனிதப்பிழை..!
முழுநிலவை சல்லடையில் பார்த்தோம்..
பிறைநிலவை ரமலான் என்றோம்
பூரணநிலவில் புனித நீராடினோம்
இருண்ட நிலவில் மட்டும் இறந்தவரை நினைத்தோம்

முற்றத்தில் அண்ணாந்து பார்த்து நிலவை நம் வசதிக்கேற்ப்ப வளைத்துக்கொண்டிருந்த வேளையில்
அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் நிலவிலிருந்து பூமியைப்பார்க்க ஆசைப்பட்டனர்..!

ஆம்ஸ்ட்ராங்கின் சந்திரப்பயணம், சரித்திரத்தை மாற்றிய பயணம்..
மூடநம்பிக்கைகளை மூட்டைகட்டிய பயணம்..

மனிதவாழ்க்கை நிலவிலும் நீடிக்கும் வாய்ப்புகள் உள்ள நிலையில்
திங்களில் மூவர்ணக்கொடி பறக்கப்போகும் இந்த வேளையில்..
சில ஆண்டுகளில் நிலவில் இந்தியன் கால்தடம் பதிப்பான் என்று 'இஸ்ரோ' அறிவித்த பொழுதில்...

தாய்மார்களே..

'நிலா நிலா ஓடிவா' பாட்டை நிறுத்திவிடுங்கள்..
'நிலவை நோக்கி சென்றுவா' என்று பாடுங்கள்..
நிலவின் நிழலில் ஆபத்தில்லை என்பதை உணர்த்துங்கள்..
தாய்பூமியிலிருந்து தனிக்குடித்தனம் போனதுதான்
இந்தத் துணைக்கோள் என்று திருத்துங்கள்..
'நாளை ஏவுகணை ஏறி சந்திரனுக்கு சுற்றுலா செல்லலாம்'
ஊட்டுங்கள்.. நம்பிக்கையையும் சேர்த்து ஊட்டுங்கள்..

ஏனெனில் நாளை என்பது நிலாக்காலம்..
இந்தியன் நிலவைக் கடக்கும் காலம்..

Thursday, October 23, 2008

அழகிய ஜுராங் பூங்கா பறவைகள்


















Sunday, October 5, 2008

கண்ணதாசன் பற்றி...

நான் அப்போது எட்டாம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன். அன்று மதியம் தமிழ் வகுப்பு. தமிழாசிரியர் சோகமுகத்துடன் உள்ளே நுழைந்தார்.
கண்ணதாசனின் இறுதி ஊர்வலம் வருகிறது.. பார்க்க விரும்புபவர்கள் பார்த்து விட்டு வரலாம் என்றார்.

அவர் சொன்னதுதான் தாமதம்.. தி.நகர் பர்கிட் ரோடில் உள்ள எங்கள் பள்ளியிலிருந்து ஓடிவந்து தி.நகர் பேரூந்து நிலையைத்தை அடைந்தோம்.

அதோ கண்ணதாசனின் இறுதி ஊர்வலம் வந்துகொண்டிருக்கின்றது..

முதல்வர் எம்.ஜி.ஆர் முன்னால் நடந்து வந்துகொண்டிருக்க பல திரையுலகப் பிரமுகர்கள் அவரை அமைதியாக பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தர்கள். பின்னால் ஒரு வண்டியில் சாய்ந்த கண்ணாடிப்பேழையில் தமிழ் நெஞ்சங்களை தன் வசீகர வார்த்தைகளால் கொள்ளை கொண்ட அந்தக் கவிஞன் கண்ணயர்த்து உறங்கிக்கொண்டிருந்தான்..

மனதுக்கினிய அந்த கவிஞனை முதன்முதலில் அந்த நிலையில்தான் பார்த்தேன்...

Monday, September 29, 2008

குறுக்கெழுத்து 1

இதை கிளிக் செய்து பிரிண்ட் எடுக்கவும்..
















Saturday, September 20, 2008

முதல் தொலைக்காட்சிப் பெட்டி

1976ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாள்..!

அன்றுதான் எங்கள் வீட்டிற்கு தொலைகாட்சிப் பெட்டி வந்தது. சென்னையில் தொலைக்காட்சி நிலையம் ஆரம்பித்து (15 ஆகஸ்ட் 1975) நான்கு மாதங்களில் எங்கள் வீட்டு கூடத்துக்கு வந்து விட்டது தொலைக்காட்சி பெட்டி.

நான் வசித்த மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனியில் எங்கள் வீட்டில்தான் முதன்முதலில் டி.வி வந்திறங்கியது. அதற்க்கு முன் அசோக் நகரில் யாரோ டிவி வைத்திருக்கிறாள் என்று கேள்விப்பட்டு அந்த வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு சுவர் இடுக்கிலிருந்து லேசாகத் தெரியும் டிவி பிம்பத்தை பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. டி.வி வந்த விஷயம் எப்படியோ மெல்ல மெல்ல காலனி முழுவதும் கசிந்து, சாரை சாரையாக மக்கள் கூட்டம் எங்கள் வீட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டது.

அது டெலிவிஸ்டா டி.வி.. அந்தகாலத்து மாடல்.. டிவி போட்டவுடன் ஒரு ஐந்து நிமிடம் கழித்துதான் ஒலி எழும்ப ஆரம்பிக்கும்.. ஒளி வருவதற்கு இன்னும் ஒரு ஐந்து நிமிடம் பிடிக்கும்..

அன்று ஞாயிற்றுக்கிழமை. மாலை 'குழந்தையும் தெய்வமும்' படம்.. கிட்டத்தட்ட 50 பேர் எங்கள் வீட்டில் உட்கார்ந்து படம் பார்த்தார்கள். பல பேரை அதற்க்கு முன்னால் நாங்களே பார்த்ததில்லை.

நான் எப்போதோ பார்த்த சிலர் எனக்கு திடீர் நண்பர்கள் ஆனார்கள்... அதுவரை 'எனிமி'யாக சிலர் என் நட்பை புதுப்பித்துக்கொண்டார்கள்.

உரிமையோடு உள்ளே நுழைந்த சிலர்.. மெல்ல பேச்சுக்கொடுத்துக்கொண்டே நைசாக உள்ளே நுழைந்த சிலர்.. "டிவி பொட்டில படமெல்லாம் காமிபாங்களா.." என்று அப்பாவியாய் கேட்டுக்கொண்டு சிலர்.. இவை போதாதென்று ஏதோ திரையரங்கத்துக்கு செல்வது போல் நொறுக்குத்தீனிகளுடன் நுழைந்த சிலர்.. என்று எங்கள் வீடே அன்று திருவிழா கோலம் பூண்டிருந்தது. படம் முடிந்து அவர்கள் சென்றவுடன் வீட்டை சுத்தம் செய்வதற்கே ஒரு மணி நேரம் பிடித்தது.

இந்தக்கூத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நீடித்தது. இதற்கு சரிபாதி கூட்டம் செவ்வாய்கிழைமை நாடகத்திற்கும் வெள்ளிக்கிழைமை ஒளியும் ஒளியும் நிகழ்ச்சிக்கும் வந்தது. சிலர் 'காண்போம் கற்ப்போம் ' , 'வயலும் வாழ்வும்', 'மனை மாட்சி'யைக் கூட விட்டு வைக்கவில்லை.

கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து பின் எங்கள் குடும்பம் மட்டும் டிவி பார்க்கிற நிலை ஏற்படுவதற்கு சில மாதங்கள் பிடித்தது.

Monday, September 15, 2008

சிவாஜி நினைவுகள்..

அது 2001ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு மாலைப் பொழுது...

தொலைக்காட்சியில் அந்த செய்தியைக் கேட்டவுடன் என்னால் நம்ப முடியவில்லை. தமிழர்களில் இதயங்களில் ஒரு நாற்காலியை போட்டுக்கொண்டு நிரந்தரமாக உட்காந்திருக்கும் அந்த நடிகர் திலகத்தின் வாழ்கையிலும் மரணம் என்ற சம்பவம் நிகழுமா? சிவாஜி என்ற மாமனிதனுக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டதா?

கலங்கின கண்கள்.. துடித்தது நெஞ்சு.. கண்ணீர் கவிதையாக மாறியது...

சிவாஜி மரணம்...

அறிவு ஏற்கிறது..
உணர்வு மறுக்கிறது..

தமிழ் சினிமாவின்
செல்லுலாய்ட் சிங்கம் தன்
சீற்றத்தை முடித்துக்கொண்டது...

அரை நூற்றாண்டு
தமிழனின்
பொழுதுபோக்கு
மறைந்து போனது..!

ஐம்பத்து வருட
வெள்ளித்திரை
வீரன்
விடைபெற்றான்..!

சிவாஜி..
எங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்தாய்..!

பாத்திரமாக நீ மாறினாய்.. அதை
வாழ்கையில் நடித்தது நாங்கள்...!
கண்ணாடிப் பேழையில்
நடிக்காத வேடத்தில் நீ ..
உண்மையாக அழுதது நாங்கள்...!

முன்னுறு படங்களில்
மொத்த வாழ்கையை முடித்த நீ
மரணத்தால் மரிக்கவில்லை..!

பராசக்தியில் தொடங்கிய பயணம்
படையப்பாவரை பத்திரமாக
பாதுகாக்கப்படும்..!

தொலைகாட்சியில்
நாளுக்கு பத்து
படங்கள்..
அதில் நாலைந்து நீ..

வானொலியில்
பலர் விரும்பும் பாடல்கள்..
அதில் பெரும்பான்மை நீ..

ஞாயிறு மாலை..
கையிலே தேநீர்..
சின்னத்திரையில் சிவாஜி..
சுகமான அனுபவம்..

தமிழனின் கேளிக்கை
காலாவதியாகும் வரை இந்த
மூன்றெழுத்துச் சொல்
முணுமுணுக்கப்படும்..!


Sunday, September 7, 2008

ஒரு திறந்தவெளி அருங்காட்சியகம்

(2008 அமுதசுரபி தீபாவளி மலரில் வெளிவந்தது)

ஒரு நகரத்திற்கு அழகு சேர்ப்பவை அதன் புராதனமான கட்டிடங்கள். உலகின் எந்த ஒரு நகரமாக இருந்தாலும் அதன் பாரம்பரியமிக்க கட்டிடங்கள் அல்லது கோபுரங்கள்தான் அந்த நகரின் அடையாளமாகக் காட்டப்படும். உதாரணத்திற்கு சென்னைக்கு சென்ட்ரல் ரயில்நிலையம்... கொல்கத்தாவிற்கு விக்டோரியா அரண்மனை..

ஆனால் ஒரு நகரம் முழுவதுமே இதுபோல அழகான கட்டிடங்களும் தொன்மையான கோட்டைகளும் இருந்தால்.. நினைக்கவே பிரமிப்பாக இருக்கும் அந்த நகரம் ஐரோப்பாவின் மிக அழகான நகரமாகக் கருதப்படும் பிராக்.. செக் குடியரசின் தலைநகரம்.

பிராக் விமான நிலையத்திலிருந்து நகருக்குள் நுழையும் போதே 'இது என்ன.. காலச்சக்கரம் இருநூறு முன்னூறு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்டதோ' என்ற ஐயம் ஏற்படுவதை தடுக்க முடியாது. இங்கு நம்மை வரவேற்பது வானுயர்ந்த கட்டிடங்களோ கண்ணாடி மாளிகைகளோ இல்லை. எல்லாமே பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் பழமையான கட்டிடங்கள். எல்லா கட்டிடங்களையும் ஏதாவது ஒரு அழகிய வேலைப்பாடு அல்லது சிற்பம் அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. அந்த கட்டிடங்களில் சிறிதும் பெரிதுமாக கூர்பான கோபுரங்கள், நுனி முதல் அடி வரை பல சிற்ப வேலைபாடுகள், பல கோபுரங்களில் உச்சியில் கடிகாரங்கள் என்று திரும்பிய இடங்களெல்லாம் வியாபித்திருக்கும் அற்புதங்களைக் கொண்ட இந்த பிராக் நகருக்கு 'நுறு கோபுரங்களின் நகரம்'. 'தங்க கோபுர நகரம்' என்ற பட்டப்பெயர்கள் பொருத்தமானதுதான்..!

பிராக் பத்து லட்சம் மக்களே வசிக்கும் சிறிய நகரம். அதன் மையப்பகுதியில் விசாலமான சாலைகள் எதுவும் கிடையாது. முழவதும் நிறைய சந்துபொந்துகள்தான்.. ஆனால் அவ்வளவும் கல்தரைகளால் அமைக்கப்பட்ட அழகான சந்துபொந்துகள்.. அந்தக் குறுகிய இடங்களிலும் டிராம் வண்டிகள் வளைந்து வளைந்து செல்வது இன்னும் கூடுதல் அழகு.

பிராக் மையப்பகுதியை நடந்துசென்றே காணும் அளவிற்கு அது ஒரு திறந்தவெளி அருங்கட்சியகம். எந்தப்பக்கம் திரும்பினாலும் எந்த சாலைக்குள் நுழைந்தாலும் ஏதாவது ஒரு கட்டிடம் நம்மை கவர்திழுக்கும். நிஜமாகவே 'பிராக்' பார்த்துக்கொண்டுதான் பிராக் நகர சாலைகளை கடக்கமுடியும். அதுவும் புகைப்படபிரியர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம்.. இந்த திறந்தவெளி அருங்கட்சியகத்தில் எந்த இடத்தில் கேமிராவை வைத்தாலும் 'வாவ்' என்று சொல்லக்கூடிய ஒரு புகைபடத்திற்கு உத்திரவாதம் உண்டு.

இங்கு எதையுமே சாதரண கட்டிடம் என்று ஒதுக்கிவிடமுடியாது. இங்குள்ள ஒவ்வொரு கட்டிடங்களிலும், கோட்டைகளிலும், கோபுரங்களிலும் எதாவது ஒரு தனித்தன்மை ஒளிந்திருக்கும். ஒவ்வொன்றும் மற்றொன்றைவிட எதாவது ஒரு விதத்தில் சிறந்ததாக இருக்கும். சாதாரண ஜன்னல்களில் கூட வியப்புமிகு வேலைப்பாடுகளுடன் இருக்கும் மேல்தடுப்பிலிருந்து அதன் கட்டிட அமைப்புவரை பல வித்தியாசங்கள்..! கட்டிடங்கள் மட்டுமல்லாமல் தெருவுக்குதெரு அமைக்கப்பட்டிருக்கும் அற்புதமான சிலைகளையும் பார்க்கும்போது அந்தக் காலகட்டங்களில் பிராக் நகரம் சிற்பிகளின் சொர்கமாக இருந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

பிராக் நகரில் நம்மை ஈர்க்கும் விஷயங்கள் பலப்பல.. அவைகளில் முக்கியமானது அழகிய வில்தாவா நதியின் குறுக்கே அமைக்கப்படுள்ள சார்லஸ் பாலம், விண்ணை முட்டும் பிராக் கோட்டை மற்றும் வானவியல் கடிகாரம்.

நான்காம் சார்லஸ் பதினாலாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சார்லஸ் பாலத்தில் இரு பக்கங்களிலும் அழகான முப்பது சிலைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. எல்லாம் பல பாதிரியார்கள் மற்றும் கிருத்துவத்தை விளக்கும் சிலைகள்! வில்தாவா நதியில் ஏற்பட்ட பல வெள்ளங்களை தாங்கி 600 வருடங்களாக இன்னும் நிலைத்துநிற்கின்றது இந்த கற்பாலம். அந்தி நேரத்தில் வில்தாவா நதியில் கதிரவன் கரைந்து கொண்டிருக்க சார்லஸ் பலமும் அதன் பின்னணியில் தெரியும் பிராக் கோட்டையும் பார்ப்பதற்கு கொள்ளை அழகு..! இந்தக்காட்சியை புகைப்படம் எடுப்பதற்காகவே மாலை நேரங்களில் அங்கு சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள்.

பிராக் கோட்டை ஒன்பதாம் நுற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டு பின் பல மன்னர்களால் தொடர்ந்து விரிவாக்கப்பட்டது. கோட்டை, அரண்மனை, தேவாலயம், தோட்டங்கள் என்று பல இடங்களை உள்ளடங்கியிருக்கும் இந்தக் கோட்டையில் இருபதாம் நுற்றாண்டில் கூட சில பகுதிகள் கட்டி முடிக்கப்பட்டன. பல மன்னர்கள் ஆண்டுவந்த இந்தக் கோட்டை, என்று செக் ஜனாதிபதியின் அதிகாரபூர்வமான மையம். கின்னஸ் சாதனைப்படி உலகிலுள்ள பழம்பெரும் கோட்டைகளில் பெரியது பிராக் கோட்டைதான்..!

பிராக் நகரின் தவிர்க்க முடியாத இன்னொரு இடம் பழைய டவுன் ஹால் கோபுரத்தில் அமைந்துள்ள வானவியல் கடிகாரம். சூரியன், சந்திரன் மற்றும் பூமியின் பல நிலைப்பாட்டைக் குறிக்கும் இந்தக்கடிகரம் 1410 ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் பின்னணியில் பல கதைகள் உண்டு..! இந்தக் கடிகாரத்தை வெற்றிகரமாக நிறுவிய ஹனுஸ் என்ற மேதைக்கு பல வெளிநாடுகளிலிருந்து அழைப்பு வந்தது. இதனால் கோபமடைந்த பிராக் நகர கவுன்சிலர்கள், இவர் இதேபோல் இன்னொரு கடிகாரத்தை நிறுவக்கூடாது என்பதற்காக ஹனுஸ் கண்களை குருடாக்கிவிட்டார்களாம். ஹனுஸ் இறப்பதற்கு முன்பு இந்தக் கடிகாரத்தின் பல பாகங்களை உடைத்துவிட்டு இதை சரிசெய்பவர்கள் பைத்தியமாக அலைவார்கள் என்று சாபமும் கொடுத்துவிட்டாராம். (இதை சிலர் பின்னணிக் கதை என்கிறார்கள்... சிலர் பின்னப்பட்ட கதை என்கிறார்கள்..) பல முறை பழுது பார்க்கப்பட்டாலும், நுர்ர்ர்ரண்டுக்கணக்காக ஓடிக்கொண்டிருந்த கடிகாரத்திற்கு இரண்டாம் உலகப்போரின் இறுதி நாட்களில் மீண்டும் சோதனை ஏற்ப்பட்டது. போரில் தூற்று பிராக் நகரை விட்டு வெளியேறும் தறுவாயில் இருந்த நாஜிப்படையினரால் இந்த கடிகாரத்தின் கோபுரம் கொளுத்தப்பட்டது. கடிகாரத்தின் பல பாகங்கள் சிதைந்துபோன நிலையில் பின்னர் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

இத்தகைய புராதனமான சின்னங்களைத்தவிர, ஜொலிக்கும் முகர்ப்பைக்கொண்ட யூத கோவில், பழம்பெரும் செயின்ட் ஜார்ஜ் தேவாலயம், செக் பாரம்பரியத்தை விளக்கும் தேசிய அருங்காட்சியகம் என்று பிராக் நகரின் பார்க்கவேண்டிய பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

பிராக் நகரில் எப்படி இவ்வளவு பொக்கிஷங்கள் பல நூற்றாண்டுகளாய் பாதுகாக்கப்படுகின்றன? இது எப்படி சாத்தியமாயிற்று? மற்ற நாடுகளைப்போல் செக் குடியரசு கடந்துவந்த வரலாற்றுப் பாதை கொஞ்சம் கரடுமுரடனதுதான். ஆனால் தொன்று தொட்டு இந்த நாட்டை ஆண்ட பல மன்னர்கள் இந்த பாரம்பரியத்தை காப்பாற்றியதோடு மட்டுமல்லாமல் மெருகேற்றவும் செய்திருகிறார்கள். கடந்த நூற்றாண்டில்தான் இந்த நாட்டிற்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டன. முதல் உலகப்போருக்குபிறகு செக் நாடும் சுலோவோகிய நாடும் இணைந்து உருவானதுதான் 'செக்கோஸ்லோவோகியா'. (இதை ஆங்கிலத்தில் பிழையின்றி எழுதுபவர்களுக்கு பரிசு கொடுக்கலாம்)... இரண்டாம் உலகப்போரின்போது 1939ம் ஆண்டு நாஜிப்படையினர் பிராக் நகரை முற்றுகையிட்டு பிராக் கொட்ட்டையைக் கைப்பற்றினார்கள். பின்பு ஆறு வருடம் ஹிட்லரின் வெறியாட்டம் தொடர்ந்தது. இங்கு வாழ்ந்துகொண்டிருந்த யூதர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர். அமெரிக்கா வேறு தன் பங்கிற்கு 'குறி தவறுதலாக' குண்டு போட்டது. (83 மைல் தள்ளியிருக்கும் ஒரு ஜெர்மானிய நகரை குறி வைத்து பின் சொதப்பிவிட்டதாம்). இத்தனை துயரங்களிலும் சந்தோஷப்படக்கூடிய ஒரே விஷயம் அதிக 'குண்டு மழை' பொழியப்படாத இடங்களில் பிராக் நகரமும் ஒன்று என்பதுதான்...! மற்ற ஐரோப்பிய நகரங்களைப் போல அதிகம் பாதிப்பு இல்லாமல் தப்பித்துக்கொண்டது பிராக் நகரம். இதன் பல கட்டிடங்கள் இன்னும் 'உயிரோடு' இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

இரண்டாம் உலகப்போர் முடிந்து நாஜிக்கள் வெளியெறியதும் உள்ளே நுழைந்தது சோவியத் படை..! அதன் பிறகு நடந்த உள்நாட்டு கலவரங்களைத் தடுத்து செக்கோஸ்லோவோகியாவை சோவியத் தன் தலைமையில் கம்யூனிஸ நாடாக அறிவித்தது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, 1993ம் ஆண்டு செக்கோஸ்லோவோகியா கலைக்கப்பட்டு மீண்டும் செக், சுலோவோக்கியா என்ற இரு குடியரசு நாடுகளாகப் பிரிக்கப்பட்டன.

இவ்வளவு வரலாற்று நிகழ்வுகளிலிருந்து மீண்டு இன்றைக்கும் நிலைத்து நிற்கும் இந்த புராதானச் சின்னங்களை, யுனெஸ்கோ உலக கலாசார மையமாக அறிவித்துள்ளது. 'சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிராகின் மையப்பகுதி' என்று யுனெஸ்கோவால் பெயரிடப்பட்டுள்ள இந்த இடத்தில் கிட்டத்தட்ட 1300 பாரம்பரிய கட்டிடங்கள் அமைந்துள்ளன.

செக் அரசாங்கமும் இந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்ற பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிராகின் மையப்பகுதியில் எந்த ஒரு கட்டிடங்களிலும் கிறுக்கல்கள் இல்லை.. சுவரொட்டிகள் இல்லை.. ஏன் சிறு சிதைவுகள்கூட இல்லை.. தெரு விளக்குகளைக்கூட பழைமையான வடிவில் அமைத்திருக்கிறார்கள். பிராக் நகரத்தில் பழைய கட்டிடங்களை இடிப்பதற்கு, புது கட்டிடங்களை கட்டுவதற்கு பல தடைகள் விதித்த அரசு, கட்டங்களில் வெளித்தோற்றம் மாறாமல் உள்ளே மட்டும் புதுப்பிப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் சில பிராக் பெருசுகள் 'அந்தக்காலத்தைப்போல் இல்லை' என்று அங்கலாய்கிறார்கள். 'முன்பு விமானத்திலிருந்து பார்க்கும் போது நகரம் முழுவதும் அழகான சிவப்பு ஓட்டுக்கூரைகளாக மட்டும்தான் தெரியும்.. இப்போது பல புதிய அமைப்புகள் நகரின் அழகை கெடுத்து விட்டன' என்பது அவர்களின் வருத்தம்..!

எது எப்படியிருந்தாலும், ஐரோப்பிய பயணம் செல்பவர்களின் பட்டியலில் நிச்சயம் இருக்கவேண்டிய இடம் பிராக்.

Sunday, August 17, 2008

ஜனநாயகம்

ஜனநாயகத்தில்
வாக்காளர்கள்தான் நீதிபதிகளாம்..!
அப்படியானால்
வோட்டுப்போட்ட குற்றத்துக்காக
நீதிபதிகளுக்கு மட்டும் ஏன்
ஐந்தாண்டுகால
கடுங்காவல் தண்டனை?



கைரேகை

கைரேகையும் உன் கையில்...!
வாழ்க்கையும் உன் கையில்..!
கைரேகையின் கையில்
வாழ்க்கை இல்லை..!

Friday, August 15, 2008

காதல் தீவிரவாதி..


காதலெனும் விமானம் கொண்டு
என் இதயம் துளைத்த
தீவிரவாதியே..!

சம்மதம் கிடைக்காவிடில்
தற்கொலைப்படையாவேன் என்ற
பயங்கரவாதியே..!

காதல் தீயைப் பற்றவைத்து
என் மனதைச் சிதைத்த

வன்முறையாளனே..!

எத்தடைகளையும் தகர்த்தெரிவேன்
என்ற சூளுரையில்
போர்க்குணம் கொண்டவனே..!

பார்த்த பெண்ணை மணம்புரியாவிடில்
சொத்து இல்லையென
அப்பா அறிவித்தபோது மட்டும் ஏன்
அகிம்சாமூர்த்தியானாய்?

Thursday, July 31, 2008

நேர்மை... நாணயம்...நேரம் தவறாமை...


(ஆகஸ்ட் 2007 வடக்கு வாசல் இதழில் வெளிவந்தது)

சூரியன் உதிக்கும் நாட்டுக்கு செல்லப்போகிறோம்...!
உழைப்பாளர்களின் தேசம் காணப்போகிறோம்....!
சுறுசுறுப்புக்கு உதாரணமான மக்களைச் சந்திக்கப்போகிறோம்...!

ஜப்பான் பயணம் என்றதும் என்னுள் ஆர்ப்பரித்த எண்ணஅலைகள் இவை...

விமான நிலையத்திலிருந்து இத்தனை மணிக்கு கிளம்பும் பேரூந்து பிடிக்கவேண்டும்... பேரூந்தைவிட்டு இறக்கியவுடன் அருகிலிருக்கும் ஒரு டாக்சி பிடித்து இந்த வரைபடத்தைக் காண்பிக்கவேண்டும்.. இத்தனை யென் கொடுக்கவேண்டும்... ஹோட்டல் அறையின் குறியிடு இது என்று எதோ கணிணி மென்பொருள்போல மின்அஞ்சல் அனுப்பியிருந்தார்கள். இதில் எதுவும் பிசகாமல் அப்படியே நடந்தது ஜப்பானின் ஆச்சரியங்களில் ஒன்று. ஒவ்வொரு ஜப்பானியருக்கும் உள்ளே ஒரு கம்ப்யூட்டர் இயங்கிக்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் வந்தது. தொழில்நுட்பம் உச்சத்தில் இருந்தாலும் ஜப்பான் இன்னும் தன் பாரம்பரிய பழக்கவழக்கங்களை கைவிடவில்லை. இடுப்பை வளைத்து வணக்கம் சொல்லும் அழகைப்பார்க்கும்போது நாம் எத்தனைமுறை கைகூப்பி வணக்கம் சொல்லியிருக்கிறோம் என்று எண்ணத்தோன்றுகிறது. ஐரோப்பிய நாகரீகமான கைகொடுக்கும் பழக்கம் நம்மை எப்போதோ வசப்படுத்திவிட்டது.
வணங்குவது மட்டுமல்ல... எதையுமே இரண்டு கையால் கொடுப்பது.. யாரையும் 'சான்' என்று அடைமொழியுடன் அழைப்பது.. என்று ஜப்பானுக்கே உரிய பழக்கங்கள் பல...! உடையைத்தவிர ஜப்பானியர்களை மேற்கத்திய நாகரிகம் ஆக்கிரமிக்கவில்லை.

ஜப்பான் மக்களின் அடையாளங்களில் ஒன்று அவர்கள் பழகும் முறை. எப்படித்தான் அவர்களுக்குள் அவ்வளவு பவ்யம் இருக்கிறதோ தெரியவில்லை.. சகமனிதர்களிடம் வன்மம் இல்லாத ஒரு தன்மை.. எப்போதுமே மென்மையாக பேசும் ஒரு குணம்.. உலகப்பொருளாதாரத்தை தன் கைக்குள் அடக்கிவைத்திருகிறோம் என்ற கர்வம் இல்லாத ஒரு நடத்தை.. இவையெல்லாம்தான் ஜப்பானியர்களை ம்ற்ற இனங்களைவிட ஒருபடி மேலே உயர்த்திக்காட்டுகிறது.

அதிர்ந்து பேசும் ஜப்பானியர்களைப் பார்ப்பதே வெகு அபூர்வம். அவர்கள் அலைபேசிகூட அலறுவதில்லை... மௌன மொழியே பேசுகிறது.

இந்திய உணவுகள் பெரும்பாலும் ஜப்பானில் கிடைப்பதில்லை. அதிலும் தாவிரப்பட்சிணிகளுக்கு திண்டாட்டம்தான். சொற்ப எண்ணிக்கைகளில் இருக்கும் சில உணவகங்களில்கூட ஜப்பான் சாயல் படிந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பப் புரட்சியால் ஜப்பானுக்கு பல இந்தியர்கள் வரத்தொடங்கியிருக்கிறார்கள். வருங்காலத்தில் பல இந்திய உணவகங்கள் ஜப்பானில் தோன்றலாம்.

உணவு தவிர ஜப்பானில் இந்தியர்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை மொழி. 'இங்கு ஆங்கிலத்துக்கு இடம் இல்லை' என்று எழுதிவைக்காத குறையாக அங்கு 'எங்கும் ஜப்பானியம் எதிலும் ஜப்பானியம்' என்பதுதான் கொள்கை. உணவுப்பொருட்களிலும் சரி.. தொலைக்காட்சி வாஷிங்மெஷின் போன்ற சாதனங்களிலும் சரி.. பெயர் மற்றும் விளக்கங்கள் எல்லாம் ஜப்பானியத்திலேயே இருக்கின்றது. குளிர்சாதன ரிமோட் கன்ட்ரோலை அலுவலகத்துக்கு எடுத்துச்சென்று அங்குள்ள ஜப்பானியர்களிடமிருந்து அதில் என்ன எழுதியிருக்கிறது என்று புரிந்துகொண்டு அதை சரிவர இயக்குவதற்கு ஒரு வாரம் பிடித்தது. சில சமயம் பாலுக்கு பதிலாக மோர் வாங்கிக்கொண்டு வந்த வேடிக்கைகளும் நடந்தது.

ஜப்பானில் உதவி கேட்பது நமது பிறப்புரிமை..! உதவி செய்வது அவர்கள் பிறப்புரிமை..! ஏதோ போன ஜென்மத்தில் கடன் பட்டவர்கள் போல நாம் கேட்கும் முன் தாமாகவே உதவிசெய்யும் தன்மை எல்லா ஜப்பானியர்களிடமும் உள்ளது. இதில் ரயில் நிலைய டிக்கெட் அதிகாரிகளைப்பற்றி குறிப்பிட்டாகவேண்டும். நாம் ஏதாவது கேட்டுவிட்டால் போதும்.. இருக்கையிலிருந்து எழுந்து வந்து நமக்காக டிக்கெட் எடுத்துக்கொடுத்து சரியான ரயிலை அடையாளமும் காட்டிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். சிலர் டோக்கியோ ரயில் வரைபடத்தை எடுத்து விளக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

தினம் அறுபது லட்சம் மக்களை சுமந்து செல்லும் மெட்ரோ ரயில்கள்தான் டோக்கியோவின் எலும்புக்கூடு. கிட்டத்தட்ட 200ரயில் நிலையங்கள் உள்ள டோக்கியோவில் எந்த ஒரு இடத்திற்கும் ரயில் மூலமாகவே அடையாளம் சொல்லப்படுகிறது. டோக்கியோ மற்றும் அதன் புறநகரில் எந்த பகுதியாயிருந்தாலும் ஏதாவது ஒரு ரயில் நிலையத்திலிருந்து அதிகபட்சம் 10 நிமிட நடையில் அடைந்து விடலாம். (9நிமிட நடை, 11நிமிட நடை என்றெல்லாம் குறிப்பிடிருப்பார்கள். குத்துமதிப்பாக 10நிமிட நடை என்று கூறுவதில்லை). 8.47மணிக்கு ஒரு ரயில் குறிப்பிட்ட ரயில் நிலையத்திற்கு வரும் என்று அறிவித்தால் அந்த நேரத்துக்கு அந்த ரயில் வந்தேதீரும். அதுமட்டுமல்ல.. ஒரு ரயில் நிலையத்திலிருந்து இன்னொரு ரயில் நிலையத்திற்கு சாதாரண ரயிலில் போனால் இவ்வளவு நிமிடங்கள் ஆகும்.. விரைவு ரயிலில் போனால் இவ்வளவு நிமிடங்கள் ஆகும் என்ற விவரங்கள் எல்லா ரயில் நிலையத்திலும் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கால அட்டவணையை இணையத்திலும் பார்த்து தெரிந்துகொள்ளலாம். கொஞ்சம் கூட பிசகாமல் இந்த நேரங்கள் கடைபிடிக்கப்படும்.

ஒரேயொரு விதத்தில் மட்டும் டோக்கியோ ரயில்களையும் இந்திய நகர ரயில்களையும் ஒப்பிடலாம். அது ஜனநெரிசல்.. காலை நேரங்களில் ஒரு ரயிலில் 4000பேர் சர்வசாதரணமாக பயணிக்கிறார்கள். ஆனால் ரயிலுக்கு வரிசையில் நிற்பது, இறங்குபவர்களுக்கு அழகாக பிரிந்து வழிவிடுவது என்பதையெல்லாம் நம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. டோக்கியோவில் உள்ள சின்சுகு என்ற ரயில்நிலையம்தான் உலகத்திலேயே அதிக மக்கள் நடமாட்டம் உள்ள ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தை தினமும் 20லட்சம் மக்கள் கடந்து செல்கிறார்கள்.

ஜப்பானியர்கள் நேரத்தை கடைப்பிடிப்பது மட்டுமல்லாமல் நேரத்தை எப்படி சுருக்கக் கற்றுக் கொண்டார்கள் என்பதற்கு 'ஷின்காஷன்' என்ற புல்லட் ரயில்கள் சாட்சி. மணிக்கு 200கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரயில்கள், ஜப்பானின் முக்கிய நகரங்களை சிலமணிநேரத்தில் கடந்துவிடுகிறது. 99% புல்லட் ரயில்கள் ஒருநிமிடதிற்கும் குறைவான அளவு தாமதத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறது. முப்பது நிமிடமெல்லாம் தாமதமாக வந்தால் தொலைகாட்சி செய்திகளில் அறிவிக்கப்படுமாம். இவ்வளவு வேகத்தில் பறக்கும் புல்லட் ரயில்கள் கடந்த நாற்பது வருடங்களாக எந்த ஒரு பெரிய விபத்தையும் சந்தித்ததில்லை.

பிரசித்தி பெற்ற ஜப்பானியர்களின் நேர்மையை அனுபவிப்பதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஒருமுறை என் மாத ரயில் அட்டையை தவற விட்டுவிட்டேன். பிறகு ஒருவாரத்துக்கான அட்டையை வாங்கி உபயோகித்து வந்தேன். இரண்டு நாட்கள் கழித்து என் அலுவலத்திலிருந்து என் ரயில் அட்டை குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இருப்பதாக தகவல் வந்தது. ரயில் அட்டையை கண்டெடுத்த யாரோ ஒரு புண்ணியவான் அதை தவறாக உபயோகப்படுத்தாமல் ரயில்வே அதிகாரியிடம் கொடுத்திருக்கிறார். ரயில்வே அதிகாரியும் என் அட்டையில் பதிந்திருக்கும் என் மொபைல் எண்ணைக் கண்டுபிடித்து மொபைல் எண்ணைஅழைக்காமல் என் அலுவலகத்தை தொடர்புகொண்டு செய்தி தெரிவித்திருக்கிறார்கள். அந்த ரயில் நிலையத்திற்கு சென்றவுடன் என் பாஸ்போர்டை சரிபார்த்து ரயில் அட்டையை திருப்பிக்கொடுதார்கள்.

என் ஆச்சரியம் இதோடு நின்றுவிடவில்லை. நான் வாங்கிய வார அட்டையின் மீதமுள்ள நாட்களுக்கு பணத்தை திரும்பக் கொடுத்துவிட்டார்கள்.

நான் எதுவும் பேசமுடியாமல் அசந்துபோய் நின்றுகொண்டிருந்தேன்...!

கொஞ்சம் யோசித்துப் பார்த்தபோது இது நமக்கு மட்டுமே வியப்பான விஷயம் என்று புரிந்தது. அவர்களைப் பொறுத்தவரை அது சாதரண செயல். தங்கள் கடமையை செய்வதாகத்தான் அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் நேர்மை, நாணயம், உண்மை, தரம் இவையெல்லாம் அவர்கள் செயல்முறையிலேயே கலந்திருக்கின்றது. அவர்கள் அப்படித்தான் வளர்க்கப்படுகிறார்கள். நான் சிரமப்பட்ட ஒரே விஷயம் நான் எதற்காக வந்திருக்கின்றேன் என்று விளகுவதற்குதான். காணாமல் போன ரயில் அட்டையை தேடி வந்திருக்கிறேன் என்று அந்த அதிகாரிக்கு விளக்குவதற்கு ஒரு ஓரங்க நாடகமே நடத்தவேண்டியிருந்தது.

நாணயத்திலும் நாணயம் கடைபிடிப்பவர்கள் ஜப்பானியர்கள். அவர்களுடைய 'ஒரு யென்' நாணயத்திற்கு (currency) மதிப்பே இல்லை. 100 யென்னுக்கு குறைந்து எந்த ஒரு பொருளும் கிடைக்காது. ஆனாலும் பொருட்களின் விலை 128யென், 299 யென் என்றெல்லாம் இருக்கும். இருந்தாலும் மீதி சில்லறை துல்லியமாகக் கொடுக்கப்படும்..அது ஒரு யென்னாக இருந்தாலும்...!

ஜப்பானில் புத்த மதம் மற்றும் ஷிண்டோ என்ற மதமும் பின்பற்றப்படுகின்றன
என்று சொன்னாலும், மதம் அவர்கள் அன்றாட வாழ்வில் குறுக்கிடுவதே இல்லை. இனப்பற்று மதப்பற்றைவிட மேலோங்கியிருக்கிறது. மதம் அவர்கள் அகராதியில் கடைசிப் பக்கங்களில் மட்டுமே இருக்கிறது. எம்மதமும் சம்மதம் என்ற மதச்சார்பின்மையைவிட மதமே தேவையில்லை என்ற மதப்பற்றின்மை இவர்களை ஆட்கொள்கின்றது. திருமணம், இறப்பு போன்ற விஷயங்களுக்கு மட்டுமே மத சம்பிரதாயங்கள் தேவைப் படுகிறது. குறிப்பாக சுப காரியங்கள் ஷிண்டோ மதமுறைப்படியும், இறப்பு, மூதாதையரை வணங்குவது போன்றவைகள் புத்த மத முறைப்படியும் நடக்கிறது. இதைத்தவிர கிருஸ்துமஸ் பண்டிகையும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ஒருசில புத்த கோவில்களைத்தவிர டோக்கியோவில் மத அடையாளங்கள் பெரிதாக எதுவும் இல்லை. ஆனால் டோக்கியோவிற்கு மிக அருகிலேயே இருக்கும் காமகுரா என்ற இடத்தில் பல புத்த கோவில்கள் உள்ளன. ஒரு காலத்தில் ஜப்பான் தலைநகரமாக இருந்த காமகுரா இன்று அதன் புண்ணியஸ்தலங்களில் ஒன்று. பதிமூன்றம் நூற்றண்டில் கட்டப்பட பிரமாண்ட வெண்கல புத்தர் சிலை இங்கு இருக்கிறது. இங்கிருந்த கோவில் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மிகப்பெரிய ஒரு சுனாமியால் சிதைந்து போனதாம். கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில் உள்ள புத்தர் மட்டும் இன்னும் வெயில், பனி, பூகம்பத்தால் தன்னை காத்துக்கொண்டிருக்கிறார். கெங்கோஜி, எங்ககுஜி போன்ற பிரபல ஜென் கோவில்களும் காமகுரவில்தான் உள்ளன. ஜென் கோவில்கள் டோக்கியோவின் பரபரப்புக்கு கொஞ்சம் கூட சம்மந்தம் இல்லாமல் ரம்யமான சூழலில் அடர்ந்த மரங்களுகிடையே அமைதிவழிந்தோடக்கூடிய இடமாக உள்ளது.

ஜப்பானில் மண்வளம் இல்லை... கனிம வலம் இல்லை... பூகம்பம், சுனாமி, எரிமலை போன்ற இயற்கை சீற்றங்கள் அவ்வப்போது பதம் பார்க்கும் பூமி.. எனினும் முக்கியமாக வாகனம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மட்டுமே இன்று ஜப்பானை உலகப் பொருளாதார வல்லரசாக வைத்திருக்கிறது. இரண்டாம் உலகப்போர் முடிவில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்ட ஒரு நாடு, எல்லாவற்றையும் இழந்து நிராயுதபாணியாக நின்ற ஒரு நாடு, ஐம்பத்து ஆண்டுகளில் பிரமிக்கத்தக்க வகையில் வளர்ந்து இன்று உலகையே ஆட்டிப்படைப்பது எப்படி?

அதன் தொழில்நுட்பமா.. அல்லது உழைப்பா.. அல்லது நேர்மையா...

இவையெல்லாம் விட இந்த மாற்றத்துக்கு மூலகாரணம், இது அரசும் மக்களும் செய்து காட்டிய கூட்டுமுயற்சி. அரசாங்கம் நினைப்பதையே மக்கள் நினைகிறார்கள்.. மக்கள் நினைப்பதையே அரசாங்கம் நினைக்கிறது.. எந்த ஒரு தொழில்நுட்பமும் கடைசி ஜப்பானியனைப் போய்ச் சேருகிறது. இந்தியாவில் உள்ளது போல் மக்களிடமிருந்து அரசு அன்னியப்பட்டுப்போனது இங்கு நிகழவில்லை.

ஜப்பானியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது..!



Saturday, July 26, 2008

செப்டம்பர் 11


பயங்கரவாதத்தின் உச்சம்...
அமெரிக்காவில் அரங்கேற்றம்...

அந்த விமானம் தகர்த்து
உலக வர்த்தக மையத்தை அல்ல...
உலக மானுட மையத்தை...

புதன்கிழமை சூரியன்
பெருமையுடன் சொன்னது...
"நேற்று என் உதயத்தை மறைத்த கட்டிடங்கள்
இன்று வழி விட்டுவிட்டன... நானே என்றும் நிரந்தரம்..."

அன்றிரவு வந்த சந்திரன்
சத்தம் போட்டுச் சொன்னது:
"ஏ.. மனிதர்களே ... என்னிடம் வரவேண்டாம்..
உங்கள் பயங்கரவாதம் பூமியோடு புதையட்டும்..."

நியூயார்க் மேகங்கள்
மொத்தமாய் சொன்னது
நாங்கள் தவழுவதை தடைசெய்த கட்டிடங்கள்
எங்களோடு சேர்ந்தது ... புகைமண்டலமாய்...!

'அரிது..அரிது.. மானிடராய் பிறத்தல் அரிது.."
என்ற ஒளவையே.. நீ இன்றிருந்தால்
'எளிது..எளிது..மானிடரை மாய்த்தல் எளிது..'
என்றுரைப்பாயோ..!

உச்சம் எட்டியது பயங்கரவாதம்..
அச்சம் அடைந்தது மானுடம்..
சொச்சமானது மனித உயிர்கள்..
மிச்சமானது சாம்பல் மட்டும்..

வல்லரசுகளே..!
அப்பாவி மக்களை அழிப்பது
போர்முனையில் மட்டும் தர்மம் என்று
போதிக்காதீர்கள்..
ஜப்பான் அணுவீச்சில்..
வளைகுடாப் போரில்..
பாலஸ்தீன பிரச்சனையில்
நடந்ததுகூட 'போர்' என்ற போர்வையில்
நடந்த பயங்கரவாதம்தான்..!

பங்குச்சந்தையின் வீழ்ச்சியை..
தங்கத்தின் விலைஉயர்வை..
ஜோதிடர்களின் கணிப்பை மட்டும்
ஆராயும் வர்த்தக மனிதர்களே..
அடுத்த விமானம் அணுஉலையை அண்டினால்
ஆருடம் சொல்லக்கூட ஆள் இருக்காது
அமெரிக்காவும் இருக்காது.. அடுத்தவீடும் இருக்காது..

பயங்கரவாத இடிபாடுகளிலிருந்து
தீவிரவாத நெருப்பிலிருந்து
மானுடத்தை மீட்க முன்னேறுங்கள் ..
இப்போதைய தேவை
பாயும் ஏவுகளைகள் அல்ல..
பறக்கும் புறாக்கள்..

முதல் புறா பறக்கட்டும் வாஷிங்டன்னிலிருந்து...!

Sunday, June 29, 2008

ஊட்டி ரோஜாத் தோட்டம்






தெருவோரம்...

1

அந்த நடைபாதை பிச்சைக்காரனின்

மூச்சு நின்றவுடன்

அரசாங்க மருத்துவமனையின் பிணவறையில்

இடம் கிடைத்தது...!

2

கால்கள் கட்டப்பட்டு

தலைகீழாக தொங்கவிடப்பட்டு

மிதிவண்டியின் கைப்பிடியில்

பயணிக்கும்

கோழிகள் அறியாது

தன் இறுதிப்பயணத்தை...!

3

இந்த வாய்க்கரிசிமட்டும்

நேற்று கிடைத்திருந்தால்

பட்டினிச்சாவை

ஓரிருநாள்

தள்ளிப்போட்டிருக்கலாம்...!

காவிரிப் பிரச்சனை

ஆணையத்தால்
அரசியலால்
நீதிமன்றத்தால்
தீர்க்கமுடியாததை
வருடாவருடம்
தீர்த்துவைக்கிறது
மழை...!

சிகரெட்

அவன்
சிகரெட் மீது
பற்று வைத்தான்...!
சிகரெட் அவன்மீது
புற்று வைத்தது...!

Saturday, June 28, 2008

எகிப்திய மண்ணில் சில நாட்கள்

(2007ம் ஆண்டு அமுதசுரபி தீபாவளி மலரில் வெளிவந்தது)

இன்னும் சற்று நேரத்தில் எகிப்து தலைநகர் கைரோ விமான நிலையத்தை அடைவோம்' என்ற அறிவிப்பு வந்தபோது விமானம் எகிப்திய பாலைவனத்தை கடந்துகொண்டிருந்தது.

விமானத்திலிருந்து பாலைவனத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்... எவ்வளவு சுவாரசியமான தேசம் எகிப்து...! இதோ இந்த பாலைவன மண்ணில்தானே உலகின் பழம்பெரும் எகிப்திய நாகரீகம் தோன்றியது... இந்த மண்ணில்தானே இன்றும் நிலைத்து நிற்கும் பிரமிடுகள் கட்டப்பட்டன... அதே சமயம் 'நைல் நதியின் நன்கொடையும்' இந்த மண்தானே..! இன்று ஆப்ரிக்க கண்டத்தில் இருந்தாலும் வளைகுடாவின் ஒரு அங்கமாகவே கருதப்படும் நாடு இதுதானே..! வளைகுடாவின் அங்கமாக இருந்தாலும் மதகட்டுப்பாடுகள் இல்லாத பகுதி இதுதானே..! சூயஸ் கால்வாய் மூலம் மத்திய தரைகடலும் செங்கடலும் இணையும் இடம் இதுதானே..!

ஃபாரோஸ் மன்னர்களுக்காக கட்டப்பட்ட பிரமிடுகள், நாலாயிரம் வருடமாக பாதுகாத்துவரப்படும் எகிப்திய அரசர்களின் உடல்கள், அழகிய நைல் நதி என்று எப்போதோ எகிப்தைப் பற்றி படித்த பல செய்திகளை அசைபோட்டுகொண்டிருந்தேன். இவற்றோடு 'பட்டது ராணி பார்க்கும் பார்வை', 'நதியா நதியா நைல் நதியா..' என்ற பாடல்களும் என் நினைவுக்கு வந்தன. விமானம் கைரோவில் இறங்கி 'இவற்றையெல்லாம் நேரில் காணப்போகின்றாய்' என்று குதூகலப்படுத்தியது.

நைல் நதியைக் காண ஆசைப்பட்டுக்கொண்டிருந்த நான், கைரோவில் தங்கியிருந்தது நைல் நதிக்கரையோரம் அமைந்திருந்தன ஃபிளமெங்கோ ஹோட்டலில்.. ஜன்னலிலிருந்து பார்த்தால் அழகிய நைல் நதி ஆரவாரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. நான் கைரோவில் தங்கியிருந்த ஐந்து நாட்களும் காலையில் கண் விழிப்பது நைல் நதியில்தான். கொஞ்ச நேரம் அந்த சௌந்தர்ய நதியை உள்வாங்கிக்கொண்டால் போதும்.. தனியாக தியானம் எதுவும் தேவையில்லை. காலை நேரங்களில் மஞ்சள் வெயில் கரைந்துகொண்டிருக்கும் நதியில் விதவிதமான படகுகள் கோடுபோடும் காட்சி, நம் விழிகளை இடம் பெயர்க்க மறுக்கும்.

எதியோப்பிய மலைகளிலிருந்து புறப்படும் நைல், கைரோவை அடையும்போது கொஞ்சம் அகலம் குறைந்தாலும் அதன் அழகு குறையவில்லை. கைரோவை கடந்தவுடன் நைல் பல நதிகளாக பிரிந்து மத்தியதரைக்கடலில் கலக்கிறது. nail

நைல் நதியை மட்டும் ரசித்துக்கொண்டிருந்தால் போதுமா.. பிரமிடுகளைக்கான என் மனது துடித்தது.. கைரோவில் என் கடைசி நாளன்று என் பிரமிட் கனவு பலித்தது. எகிப்தில் பல பிரமிடுகள் இருந்தாலும் கீசா பகுதியில் உள்ள கிரேட் பிரமிடுகள்தான் உலக அதிசயமாக கருதப்படுகின்றது. கைரோ நகரத்திலிருந்து அரை மணி நேரப்பயணத்தில் அமைந்துள்ளது கிரீட் பிரமிடு. கீசா பகுதியில் நாம் காலடி வைத்ததுமே நமக்கு ஏற்படுவது 4000 வருடங்களுக்கு பின்னால் சென்ற உணர்வு. அந்த பகுதியில் உள்ள முன்று கம்பீர பிரமிடுகள் நம்மை வரவேற்கின்றன.

அதற்க்கு முன் பிரமிடுகளைப்பற்றி ஒரு சிறு விளக்கம்..

பிரமிடு என்பது பண்டைய எகிப்திய அரசர்களின் உடல்களை அடக்கம் செய்யும் இடம். எகிப்து அரசர்கள் இறந்தபிறகு சவப்பெட்டியில் அவர்கள் உடலோடு தங்கம் மற்றும் பல செல்வங்களையும் வைத்து பிரமிடுக்குள் அடக்கம் செய்துவிடுவார்கள். இப்படிப்பட்ட அரசர்கள் இறவா நிலையை அடைவார்கள் என்பது அந்தக்கால எகிப்திய நம்பிக்கை. இப்படி அடக்கம் செய்யப்பட உடல்கள் மம்மி என்று அழைக்கப்படுகிறது.. மம்மி என்பது mumification process செய்யப்பட்ட, அதாவது பதப்படுத்தப்பட்ட உடல்கள் என்று அர்த்தம். பிறகு எகிப்தில் கிருத்துவர்கள் வருகையால் இந்தப்பழக்கம் கைவிடப்பட்டது.

பிரமிடுகளில் புதையல் இருக்கும் விஷயத்தை கேள்விப்பட்ட பல கொள்ளையர்கள், அதை முற்றுகையிட்டு பல மம்மிக்களை தூக்கிஎறிந்துவிட்டு செல்வங்களை கவர்ந்து சென்றார்கள். இந்தக் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற ஃபாரோஸ் என்ற அரச குடும்பத்தை சேர்ந்த மம்மிக்கள்தான் இன்று உலகில் சில அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன.

நாலாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய எகிப்திய நாகரிகத்திற்கு இன்றைய சாட்சி பிரமிடுகள். கட்டிடக்கலை வளர்ச்சியடையாத அந்த காலத்தில் வியக்கத்தக்க தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்ட பிரமிடுகள் உலகின் முதல் அதிசயம். பதிமூன்று ஏக்கர் நிலப்பரப்பில் நான்கு முக்கோண வடிவத்தில் 480 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள கிரேட் பிரமிடு போன்ற ஒரு கட்டிட அமைப்பை தற்போது கட்டுவதுகூட கடினம். கனசதுர வடிவில் அமைக்கப்பட்ட லட்சக்கணக்கான பாறைகளை அடுக்கிவைத்து கிரேட் பிரமிடை கட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு பாறையும் கிட்டத்தட்ட பல டன்கள் எடை கொண்டவை.. ஒரு லட்சம் பேர் பணிபுரிந்து 20 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அந்தப் பாறைகள் எப்படி அந்த வடிவில் அமைக்கப்பட்டது, அதை எப்படி அடுக்கி வைத்தார்கள் என்பதெல்லாம் இன்னமும் புரியாத புதிர்..!

பிரமிடுக்குள் பல இடங்களில் குகை போன்ற அமைப்பு இருக்கிறது. இதற்குள்தான் உடல்களை அடக்கம் செய்வார்களாம். குகைக்குள் குனிந்து தவழ்ந்துதான் செல்லவேண்டும். அப்படி ஒரு குகைக்குள் நுழைந்தபோது கல்லால் செய்யப்பட ஒரு சவப்பெட்டி கண்ணில் பட்டது. அதற்குள் சாம்பல் நிற மண்ணில் எலும்பு போன்ற சிலவும் இருந்தன. கைடுகளைக்கேட்டால் அங்கு ஒரு உடல் இருந்தது என்கிறார்கள். நம்புவதற்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தேவை.

மூன்று பிரமிடுகளையும் சுற்றிப்பார்க்க மூன்று மணிநேரம் பிடிக்கும். நடக்க முடியாதவர்கள் ஒட்டக அல்லது குதிரை சவாரி செய்யலாம். நம்மூர் சுற்றுலா மையங்களில் உள்ளதுபோல ஒட்டக, குதிரைகாரகள் பரிசுப்பொருட்களை விற்கும் சிறுவர்கள் நம்மைத் துரத்திகொண்டே வருகிறார்கள். நம்மைப்பார்த்த உடனேயே 'இந்தியா.. இந்தியா..' என்று கேட்டுவிட்டு 'மகாராஜா' என்று அழைக்கிறார்கள். மகாராஜாவைத்தவிர அவர்களுக்கு தெரிந்த இன்னொரு இந்தியப்பெயர் 'அமிதாப் பச்சன்'.

கைரோவில் நாம் பார்க்கவேண்டிய மற்றொரு இடம் அரசு அருங்காட்சியகம். அகழ்ந்து எடுக்கப்பட்ட பண்டைய எகிப்திய சிலைகள், நாணயங்கள், கலைப்பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப் படிருக்கின்றன. கிட்டத்தட்ட தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் போன்றது.. ஆனால் மிகப் பெரியது.

அருங்காட்சியகத்திற்கு நுழைவுக்கட்டணம் 50 பவுண்டு (ஒரு எகிப்திய பவுண்ட் கிட்டத்தட்ட 7.5 ருபாய்). மம்மிக்கள் இருக்கும் அறைக்குச் செல்வதற்கு மட்டும் 100 பவுண்டு..! 'தி ராயல் மம்மீஸ் ஹால்' என்று பெயரிடப்பட்ட அந்த அறையின் உள்ளே அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 மம்மிகள் கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டிருந்தன. எல்லோரும் 3500 வருடங்களுக்கு முன்னால இறந்து போனவர்கள். சுருங்கிப்போன உடலில் அங்க அடையாளங்கள் தெரிந்தாலும் எலும்பும் தோலும் சேர்ந்து கருகிப்போன ஒரு மரக்கட்டையைப்போல மாறியிருக்கிறது. ஆனாலும் சில மம்மிகளில் பல்லும், தலைமுடியும், நகங்களும் அப்படியே இருக்கிறது. ஒரு மம்மிக்கு அத்தனை பற்களும் கொஞ்சம் பல் எயிறும் தெரிந்தது. சிரிந்துக்கொண்டே இறந்திருப்பார் போலும்..!

இத்தனை 'வயதான' பிணங்களுக்கு நடுவே நிற்பது என்பது ஒரு பயம் கலந்த பரவசம்தான்..! 100 பவுண்டு கொடுத்ததற்காக கொஞ்சநேரம் கூடவே அந்த பரவசத்தை அனுபவித்தேன்.

மனித உடல்கள் மட்டுமல்லாது அந்த அரசர்கள் செல்லமாக வளர்த்துவந்த பிராணிகளையும் கூடவே அடக்கம் செய்து விடுவார்களாம். முவாயிரம் வருட (!)நாய், குரங்கு எல்லாம் அந்த அருங்காட்சியகத்தில் இருந்தன.

பிரமிடுகளையும் அருங்காட்சியகத்தையும் பார்த்துவிட்டு கொஞ்சநேரம் பண்டைய எகிப்திய நாகரீகத்தில் திளைத்து வெளியேவரும்போது எனக்குத் தோன்றியது... அன்றைய மனித நாகரீகம் காலத்தால் அழியாத பிரமிடுகளைக் கட்டியது. இன்றைய மனித நாகரீகம் உலகையே அழிக்கவல்ல ஆயுதங்களைக் கண்டுபிடித்திருக்கிறது..!

ஏற்காடு பூக்கள்






காதல் அனுபவம்




மாற்றம்

('கீற்று.காம்'ல் வெளிவந்தது)

ஏசுவின் அன்பு
மதமானது...!

புத்தரின் ஜென்
மார்கமானது...!

மார்க்சின் பொதுவுடமை
அரசியலானது...!

சங்கரரின் அத்வைதம்
தத்துவமானது...!

காந்தியின் அஹிம்சை
வெறும் சரித்திரமானது...!

கட்டுப்பாடு

('கீற்று.காம்'ல் வெளிவந்தது)

வாழ்க்கையில் எதுவுமே
என் கட்டுப்பாட்டில் இல்லை...!

எனக்கு
வாழ்கைப்பட்டவளைத் தவிர...

வளுக்கு
அதுவும் இல்லை...!