Sunday, December 7, 2008

வைரமுத்துவின் பாற்கடல்

அண்மையில் நான் படித்துமுடித்த புத்தகம் வைரமுத்துவின் 'பாற்கடல்'. குமுதம் இதழில் வந்த கேள்வி-பதில்களின் தொகுப்பு.

வாசகர்களின் 378 கேள்விகளுக்கு தேன் தோய்த்த பலாச்சுளையாய் விடையளித்திருக்கிறார் கவிஞர். 'கேட்கப்படாத கேள்விகளுக்காய் பூட்டிக்கிடக்கும் பூமி' என்ற முன்னுரையுடன் தொடங்கும் இந்தப் புத்தகம் அரசியல், சினிமா, அறிவியல், இசை, மருத்துவம் மற்றும் கலைஞர் என்று பல திசைகளில் பயணிக்கிறது.

கவிப்பேரரசு வைரமுத்து கொழுத்து திரண்டு நிற்கும் ஒரு கறவை பசு. அவரிடன் இலக்கியப் பாலையும் தமிழ் பாலையும் கறக்காமல் வெறும் நுகர்ந்து பார்த்திருக்கிறார்கள் வாசகர்கள்.. கலைஞரிடன் உங்களுக்கு பிடித்த நகைச்சுவை, உங்களுக்கு பிடித்த பாடகர்கள், இசையமைப்பாளர்கள், உங்கள் காலை உணவு என்ன - என்று பல கேள்விகள் இதே ரகம். இதையும் தாண்டி ஒருசில புத்திசாலித்தனமான வினாக்களும் உண்டு -

நெள
எழுத்தில் தொடங்கும் சொல் உண்டா? (நெள என்றல் மரக்கலம், நெளவி என்றல் மான் என்கிறார் கவிஞர்)

பாரதி
காலத்திலேயே அவரை விமர்சித்தவர்?

காந்திக்கு
ஏன் நோபல் பரிசு கொடுக்கவில்லை?

மரணத்துக்குப்பின்
வாழ்வு?

படைப்பாளிகள்
பதிலளிக்க கடமைப்பட்டவர்களா? .. இப்படி சில..

வைரமுத்துவின் தமிழ் ஆளுமையும் புலமையும் சேர்ந்து புத்தகத்துக்கு சுவை கூட்டுகிறது. பல் தேய்ப்பது எப்படி என்ற கேள்விக்குக்கூட பல விளக்கங்களுடன் ரசனையோடு பதிலளித்திருக்கிறார். காலை நடைபயிற்சிக்கு முக்கியமானது எது, ரோடு போடுவது எப்படி, நிலா எப்படி தோன்றியது என்ற கேள்விகளின் பதில்கள் ரசிக்கத்தக்கவை.

வைரமுத்து வாசகர்களின் கேள்விகளைக் கொண்டு இந்தப் பாற்கடலை கடைந்திருக்கிறார்... இதில் அமுது மட்டுமே வழிந்தோடுகிறது.

1 comment:

Anonymous said...

அன்புள்ள ரவி,

குமுதத்தில் வந்த போதே இந்தக் கேள்வி பதில்களை நான் விடாமல் படித்திருக்கிறேன். தமிழ்ப் படைப்பாளிகள் என்றால் (ஓரிருவர் தவிர) விஞ்ஞானத்துக்கும் அவர்களுக்கும் ஸ்நான ப்ராப்தி கூட கிடையாது என்றிருந்த ஒரு தவறான இமேஜை டைனமைட் கொண்டு தகர்த்திருக்கிறார் கவிஞர்!

நன்றி!

சினிமா விரும்பி

Post a Comment

உங்கள் கருத்துக்கள்