Monday, December 14, 2009

சென்னை இசை விழாவில் என் உலா - இரண்டாவது வாரம்

கர்நாடக சங்கீதத்தின் 'எவர் கிரீன்' பாடகர் ஜேசுதாஸ்தான். பல வருடங்களாக ஒலித்துக்கொண்டிருக்கும் அதே குரல்.. அதே இனிமை.. அதே ரசிகர் கூட்டம்...எழுபது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் இவர் குரல் மட்டும் இன்னும் இருபதுதான். கடந்த பத்தாம் தேதி  நாரதகான சபாவில் ஜேசு கச்சேரி.  (இவர் கச்சேரிக்கு மட்டும்  டிக்கெட் பிரீமியம் விலை).

'என்ன புண்ணியம் செய்தேனோ', 'தெளியலேலு ராமா', 'இமகிரிதனையே'  என்று ஆரம்பித்தவர், 'நடசி நடசி' பாட்டுக்காக கரகரப்ரியாவில் வித்தியாசமாக ஆலாபனை செய்தார். இப்போது நடுநடுவில் பேச்சுக் கச்சேரியும் செய்கிறார். நடுவில் வயலின்காரரை 'நீ என்ன  வாசிக்கற' என்ற கண்டிப்பு வேறு.

துக்கடாவில் முழுவதும் 'ஜேசுதாஸ் பிராண்ட்' பாடல்கள்தான். புதிதாக எதுவும் இல்லை ('என் நெஞ்சில் பள்ளிகொண்டவன்', 'ஜானகி ஜானே, 'மேரோ மேரோமன')... அனால் எவ்வளவு முறை கேட்டாலும் திகட்டாத பாடல்கள். இன்னொரு முறை இந்தவருடமும் ஜேசுதாஸ் கச்சேரி அனுபவம்.

கணேஷ் குமரேஷ் வயலினுக்குள் தேன் நிரப்பிக்கொண்டு வாசிப்பார்களா என்று தெரியவில்லை... அவ்வளவு இனிமை. பாரதிய வித்யா பவனில் இந்த இருவர் சகானா, தேவகாந்தரி, இந்தோளம் போன்ற மென்மையான ராகங்களையே  கையாண்டனர்.  இந்த இருவரோடு மூவராக இணைந்த மிருதங்க  வித்வான்  அவர்களுக்கு  ஈடுகொடுத்து  வாசித்தார். கணேஷ் சிருங்கார ரசமஞ்சரி பாடலை  வாய்விட்டு பாடியது அருமை. .   

சர்வம் பிரம்ம மயம் வாசிப்பு தாலாட்டு பாடுவது போல் இருந்தது. கடைசியாக துக்கடாவில் மேற்கத்திய குறிப்புக்கள், ஹரிவராசனம் முதலியவை இடம் பெற்றிருந்தன.

கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்சில் சுதா ரகுநாதன் கடம் இல்லாமல்  மோர்சிங்கை  வைத்து கச்சேரித்தார் (தமிழ் அகராதியில் புதிதாக சேர்த்துக்கொள்ளலாம்). அவர் மெல்லிய தங்கக்கம்பி குரலோடு மீண்டும் ஒரு 'சுதா ஸ்டாண்டர்ட்' கச்சேரி. கடைசியிலும்  'சுதா பிராண்ட்' பாடல்கள்தான் (தீராத விளையாட்டு பிள்ளை).  'செந்தமிழ் நாடென்னும் போதினிலே'வோடு தில்லானாவும், வந்தேமாதிரத்தில்  மங்களமும் பாடியது கூடுதல் சிறப்பு.

சஞ்சய் சுப்ரமணியத்தை 'ஆலாபனை ஸ்பெஷலிஸ்ட்' என்றே வர்ணிக்கலாம். ஆந்தோளிகா, பைரவி, ரிஷபப்பிரியா (இந்த ராகம் சஞ்சய் சொல்லித்தான் தெரியும்) ராகங்களில் அவர் செய்த ஆலாபனை ஒரு அமைதியான நதியினிலே ஓடத்தில் பயணிப்பது போல இருந்தது. அதேசமயம் திடீர் ஏற்ற இறக்கத்துடன் அளவில்லாத வெள்ளம் வரும்போது ஒரு ரோலர் கோஸ்டர் பயண உணர்வையும் தந்தது.

சஞ்சயின் பலம் அவரது அசாத்திய கூட்டணி. அவர் ஆலாபனைகளுக்கு  ஈடுகொடுக்க நாகை முரளீதரனால்தான் (வயலின்) முடியும். சஞ்சய் தாலாட்டினால் நாகை தென்றலாக வீசுகிறார். அவர் வேகம் கூடினால் இவர் புயலாக மாறுகிறார்.

இவர் கச்சேரியில் துக்கடாக்கள் இல்லை. தனி ஆவர்த்தனம் முடிந்தும், விஸ்தாரமாக தில்லானா பாடினார். பாரதியாரின் 'நின்னையே ரதியென்று ' பாடலை ஆலாபனைகளுடன் பல்வேறு ராகங்களில் அவர் பாடியது எல்லோரையும் கிறங்கடித்தது.

அவர் தந்த பரவசத்துக்கு, கச்சேரி முடிந்ததும் எழுந்த கரகோஷமே சாட்சி.

Monday, December 7, 2009

சென்னை இசை விழாவில் என் உலா - முதல் வாரம்

சென்னையில் குளிரும் இசையும் ஒரே சமயத்தில் துவங்கி விடும். டிசம்பர் முதல் தேதியில் வெளியாகும் சபா விளம்பரங்களிருந்து  இசைவிழா  களைகட்ட  தொடங்கிவிடும். ஒவ்வொரு முறையும் பல கச்சேரிகளை குறித்து வைத்துக்கொண்டு அதில் பாதிதான் நிறைவேற்றுவேன்.  இந்தமுறை நூறு சதவிகிதம்  நிறைவேற்றவேண்டும்  என்று திட்டம்... பார்க்கலாம்..

கடந்த வெள்ளிகிழமை மார்கழி மகாஉற்சவம் சார்பில் டி.எம்.கிருஷ்ணா கச்சேரி.. எல்லா பாடல்களும் இயற்கையை பற்றியது... மழை, மேகம், மயில், காதல் என்று பல பல ரசங்களை சமஸ்க்ரிதம், மலையாளம், வங்காளம் என்று எல்லா மொழிகளையும் பாடி பிரமாதப்படுத்திவிட்டார். அதுவும் வங்காள மொழியில் ரவீந்திரநாத் தாகூரின் மழை பற்றிய பாடல் அற்புதம். 

தில்லி காஜு பர்பி, மலையாள பாயசம், பெங்காலி ரசகுல்லா என்று திகட்ட திகட்ட இனிப்பு கொடுத்தவர் எங்கே தமிழ்நாட்டுக்கு அல்வா கொடுத்துவிடுவரோ என்று பார்த்தால்,  கடைசியில் அல்வாதான் கொடுத்தார் ஆனால் (எஸ்.எம்.கிருஷ்ணா மாதிரி இல்லாமல்) டி.எம்.கிருஷ்ணா கொடுத்தது  ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா.. அதுவும் எட்டயபுரத்து அல்வா..  அவர் பாடியது பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே... அதுவும் வித்தியாசமான ஒரு  ராகமாலிகாவில்  பாடி  எல்லோரையும்  திருப்திப்படுத்தினார்..

கடைசியில் 'வாழிய செந்தமிழ்' பாடி கச்சேரியை நிறைவு செய்தது கூடுதல் சிறப்பு.

அடுத்த நாள் கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சார்பில் உன்னிகிருஷ்ணன் கச்சேரி... ஏனோ அவ்வளவாக சோபிக்கவில்லை.. பாடல்கள் தேர்வும் சுமார்தான்..'சிதம்பரத்துக்கு வாருமையா' பாடல் கொஞ்சம் தேவலாம்.. அவரின் விருப்பப்பாடலாகிய காவடி சிந்துகூட ஏனோ எடுபடவில்லை..தனிஆவர்த்தனம் முடிந்து மூன்றே துக்கடாக்கள் பாடி அவசரவசரமாக இரண்டு மணி நேரத்தில் கச்சேரியை முடித்து விட்டார்...

என்ன ஆச்சு உன்னி?

சென்னையில் கூட்டம் அலைமோதும் இடங்களில் மெரினா பீச், சுற்றுலா பொருட்காட்சி, இவைகளோடு அருணா சாய்ராம் கச்சேரியும் சேர்த்துக்கொள்ளலாம். செட்டிநாடு வித்யாஷ்ரம் அரங்கில் 6.30 மணிக்கு கச்சேரி என்றால் ஐந்து மணிக்கே கூட்டம் பிதுங்கி வழிகிறது. அரங்கிற்கு வெளியே உள்ள டி.வி திரையில் கச்சேரியை மக்கள்  படிக்கட்டு, தரையெல்லாம் உட்கார்ந்து பார்கிறார்கள். (சென்ற முறை அருணா சாய்ராம் கச்சேரிக்கு  டிக்கெட் வாங்க முதல்நாள் மியூசிக் அகாடமி சென்றேன்.. அங்கு அவர்கள் சொன்னது: "நாளைக்கு காலையில் சரியா ஆறு மணிக்கு  கௌண்டர்  திறப்போம்..  கியூவில் வந்து நின்னுடுங்க சார். உங்களுக்கு லக் இருந்தா டிக்கெட் கிடைக்கலாம்").

சரி லக் இருந்தால் அருணாசாய்ராமின் அடுத்த கச்சேரிக்கு போகலாம் என்று அங்கிருந்து மெதுவாக நழுவி பக்கத்தில் இருக்கும் குன்னக்குடியின் ராகா மையத்துக்கு வந்தேன். ராஜேஷ் வைத்யாவின்  வீணை   இசை. மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங், கீ போர்டு இத்யாதிகளுடன் மனுஷன் அசுரத்தனமாக வீணை வாசித்துக்கொண்டிருந்தார். கன்னாடக சங்கீதமும் மேற்கத்திய சங்கீதமும் கலந்த ஒரு துள்ளல் இசை அது. ஒரு வீணையில் இதனை தொனிகளும்  வேகமும்  சாத்தியாமா  என்று ஆச்சரியப்படவைக்கும் அதே சமயம் ஆட்டம் போடவைக்கும் இசை.. ஒரு இனிய புதிய அனுபவம்.

இனி அடுத்த வாரம்...

Sunday, November 22, 2009

உலகை உலுக்கிய புகைப்படங்கள்





















இந்த வாரம் ஆனந்த விகடனில் 37 வருடங்களுக்கு முன்னால் உலகை உலுக்கிய வியட்நாம் யுத்தப் புகைப்படத்தில் தோன்றும் சிறுமியின் பேட்டி  வெளியாகியிருக்கிறது.. அதைப் படித்தவுடன் சில எண்ணங்கள்..

உலகில் நடக்கும் பல போர்க்குற்றங்களை, இயற்கையின் சீரழிவை, பல கட்டுரைகள் விளக்க முடியாததை ஒருசில புகைப்படங்கள் விளக்கி விடும். விஷுவல் மீடியாவுக்கு அந்த அளவுக்கு வலிமை உண்டு. நேபாம் குண்டு வெடித்து தீக்காயங்களுடன் ஓடிவரும் இந்த சிறுமியின் புகைப்படம் அமெரிக்காவையே உலுக்கியது. வியட்நாம் யுத்தம் முடிவுக்குவர இதுவும் ஒரு காரணமாக இருந்ததது. அதேபோல், இராக் போர்கைதிகளை அமெரிக்கா நடத்திய விதத்தை பலர் விமர்சனம் செய்தாலும், இந்த புகைப்படம் வெளிவந்த பிறகுதான் சில மாற்றங்கள் ஏற்பட்டது.

விஷவாயு தாக்கிய ஒரு குழந்தையை புதைக்கும் இந்தப் படம் போபால் துயரத்தை உலகுக்கு உணர்த்தியது. சூடானில் சிறுவன் சாவுக்காக காத்திருக்கும் கழுகின் படம் பஞ்சத்தின் கொடுமையை உணர்த்தியது. (இதை எடுத்த புகைப்படக்காரர் மூன்று மாதங்களில் தற்கொலை செய்துகொண்டார்).

ஆனால் இதைவிட அவலம் மிகுந்த போர்குற்றங்கள், போர்கைதிகளை நடத்தியவிதம், பாலியல் கொடுமைகள் எல்லாம் நடந்து முடிந்த இலங்கையில் இது போன்ற ஒரு ஆவணம் கிடைக்கவில்லை. கிளஸ்டர் குண்டுவீச்சு, விசாரணை என்றபெயரில் வன்கொடுமைகள், குழந்தைகள் நோயாளிகள் மீது குண்டுவீச்சு போன்றவை கட்டுரை மட்டும் பேட்டிகள் மூலம் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறதே தவிர, இது போல ஒரு விஷுவல் பதிவு இல்லை. இதை உணர்ந்துதான், இலங்கை அரசு எந்த ஒரு பத்திரிகையாளரையும், ஏன் தொண்டு நிறுவனங்களைக்கூட நெருங்க விடவில்லை.

தனக்கு ஏற்பட்ட அவலங்களை சொல்லிக்கொள்ளக் கூட இதுபோல ஒரு ஆவணம் இல்லை என்பதுதான் இலங்கைத்  தமிழனின் வரலாற்றுக் கொடுமை...!

Monday, November 16, 2009

சச்சின் டெண்டுல்கர் மராட்டியனா.. இந்தியனா..

இதுவரை எந்த சர்ச்சையிலும் மாட்டிக்கொள்ளாத சச்சின் டெண்டுல்கர் இப்போது சிவசேனா பால் தாக்ரேயிடம்  சிக்கிக்கொண்டு விட்டார்.  "நான் மராட்டியன் என்பதில் பெருமை கொள்கிறேன்.. ஆனால் இந்தியன் என்பதுதான் முதலில்" என்று சச்சின் சொல்லப்போக, கோபமடைந்த தாக்ரே  "நீ கிரிக்கெட் மட்டும் விளையாடு.. அரசியல் விளையாடதே" என்று கடித்திருகிறார்.

முதலில் மராட்டியன் முதலா இந்தியன் முதலா என்கிற விவாதமே முட்டாள்தனம். தமிழன், மராட்டியன், குஜராத்தி என்பதெல்லாம் இனம். ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு மொழி கலாச்சாரம் உண்டு. இந்தியா என்பது நாடு. இதையும் அதையும் ஒப்பிடவே முடியாது. ஒருவனுக்கு நாட்டுப்பற்று எவ்வளவு அவசியமோ அவ்வளவு இனப்பற்றும் மொழிபற்றும் அவசியம். இதில் எது முதலாவது என்ற கேள்விக்கே இடமில்லை.. இரண்டுமே தேவை. இனப்பற்று  இருப்பதனால்தான் இலங்கை தமிழர்கள் படும் இன்னல்களை கண்டு நாம் கண்ணீர் வடிக்கிறோம். நாட்டுப்பற்று இருப்பதால்தான் இந்தியா-இலங்கை கிரிக்கெட் போட்டி நடந்தால் இந்தியா வெற்றிபெற வேண்டும் என்று மட்டுமே நினைப்போம்  - ஒருவேளை  இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அத்தனைபேரும்  தமிழர்களாக  இருந்தாலும் கூட.

 ஜப்பான், ஜெர்மனி போல நாடும் இனமும் ஒன்றாகிவிட்டால் இந்தப் பிரச்சனையே இருக்காது. ஆனால் அது இந்தியாவில் சாத்தியமில்லை. அதனால் இது முதலா அது முதலா என்று கேள்வி கேட்காமல், உணர்ச்சியின் அடிப்படையில் பார்க்காமல்,  இரண்டுமே தேவை என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இல்லாவிட்டால் நாட்டுபற்றும் இல்லாமல் மொழிபற்றும் இல்லாமல் 'நான் முதல்ல இந்தியன்.. அப்புறம்தான் தமிளன்..' என்ற விஜயகாந்த் வசனங்களை மட்டுமே  கேட்டுக்கொண்டிருப்போம்.

அதுசரி.. இந்த 'முதலில் எது' விளையாட்டு விளையாடுபவர்கள் மாநிலங்களுக்கு கீழே போவதில்லை.. 'நீ முதலில் தமிழனா அல்லது தஞ்சவூரானா' அல்லது 'நீ முதலில் தஞ்சவூரானா அல்லது மாயவரத்தானா' என்றெல்லாம் யாரும் கேட்பதில்லை. அதேபோல் 'நான் முதலில் ஒரு ஆசியன்.. பிறகுதான் இந்தியன்..' என்று யாரும் சொல்வதில்லை. அவரவர் வசதிக்கு ஏற்ப அரசியலிலும் சினிமாவிலும் மட்டுமே விளையாடப்படும் விளையாட்டு இது.

சச்சின் டெண்டுல்கரால் மராட்டிய இனத்துக்குப் பெருமை.. இந்திய நாட்டுக்குப்  பெருமை...என்பதை சச்சின், பால் தாக்கரே இருவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

Thursday, November 5, 2009

திகில் ஹைக்கூ

நிலவில் இறங்கிய
ஆம்ஸ்ராங் கண்டான்
மனிதக்காலடித் தடங்கள்...!

விண்ணில் குதித்த
யூரிகாகரின் கேட்டான்
பறவைகளின் படபடப்பு...!

இடுகாட்டின்
கல்லறைக்குள்
பேச்சுச் சத்தம்...!

எதிர்வெயிலில்
முன்னால் விழுந்தது
என் நிழல்...!

நடுவானில்
ஒரு முக்கிய அறிவிப்பு
பைலட்டுக்கு நெஞ்சுவலி...!

Tuesday, October 20, 2009

கவிஞன்


மண்ணைப் பிசைபவன் குயவன்...!
மொழியைப் பிசைபவன் கவிஞன்...!
மரத்தை அறுப்பவன் தச்சன்...!
மனதை அறுப்பவன் கவிஞன்...!
செப்பைத் தட்டுவான் கொல்லன்...!
சிந்தையைத் தட்டுவான் கவிஞன்...!

Sunday, October 18, 2009

அருகி வரும் இனங்கள்

அருகி வரும் இனங்கள்
அவனியில் ஆயிரம்..!
ஆப்ரிக்க கருப்பு காண்டாமிருகம்
மூவாயிரத்துக்கும் குறைவு..!
வங்காளப் புலிகள்
இரண்டாயிரத்துக்கும் குறைவு..!
சீன பெரிய பாண்டாக்கள்
ஆயிரத்துக்கும் குறைவு..!
பர்மீய காட்டு ஆமைகள்
மொத்தம் பதினேழு..!
இலங்கைத்தமிழர்கள்...
இப்போதைக்கு உலகிற்கு கவலையில்லை...
இன்னும் சில லட்சங்கள் மீதமுள்ளது..!