Sunday, February 28, 2016

திமுக வின் நெகட்டிவ் பிரசாரம்


போன வாரம் முழுக்க தி.மு.க.வின் ஒரு பக்க பேப்பர் விளம்பரங்கள் வைரலாக பரவியது.. எல்லோரையும் பேச வைத்தது, அந்த விதத்தில் அவர்களுக்கு அது வெற்றிதான்..! ஆனால் விளம்பரம் வெற்றி பெற்ற அளவுக்கு அது மக்களை திமுக பக்கம் ஈர்க்கவில்லை...!

'ஆளுங்கட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது இருக்கிறது, அதனால் எங்களுக்கே வோட்டு போடுங்கள்' என்பது காலங்காலமாய் நடக்கும் எதிர்மறை பிரசாரம். தன் சொந்த பலத்தில் இல்லாமல் அடுத்தவர் பலவீனத்தில் வெற்றி பெறுவது என்பது எல்லா தேர்தலிலும் நடக்கிறது. கடந்த முறை அதிமுக வெற்றி பெற்றதும் அப்படித்தான்...!  ஒண்ணரை லட்சம் கோடி ஊழல் நடந்தது என்று அதிமுகவுக்கு வாக்களித்தோம்... அது நம்மை இரண்டரை  லட்சம் கோடி கடனில் தள்ளியது. இந்த முறை இதுபோல் நெகட்டிவ் பிரச்சாரம் எடுபடாது. "அவங்க சரியில்லைனுதான் தெரியுமே...! நீங்க என்ன செய்ய போறீங்க..." என்றுதான் மக்கள் கேட்கிறார்கள். நாம் செய்த தவறு, போன தேர்தலில் நாம் இப்படி கேட்கவில்லை. 

திமுகவுக்கு இந்த எதிர்மறை விளம்பரங்கள் தேவையில்லை, அதுவும் சினிமா காமெடி வசனங்களையும் பாடல்களையும் வைத்து அவர்கள் கிண்டலடிப்பது, அவர்களின் முதிர்சியற்ற தன்மையையே காட்டுகிறது. ஒரு காலத்தில் தன் அடுக்கு மொழியாலும் தமிழ் ஆளுமையாலும் மக்களை கவர்ந்த ஒரு கட்சி இன்று சினிமா வசனங்களை நம்பியிருப்பது நகைப்புக்குரியது. 'வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்', 'தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்' என்றெல்லாம் முழங்கியவர்கள் இன்று 'வர்ர்ர்ரும்.. ஆனா வராது.' என்கிறார்கள். 'ஆலுமா டோலுமா' என்று பாடுகிறார்கள். ஸ்டாலின் பேசும்போது வளர்சியப்பற்றி பேசுகிறார்... மதுவிலக்கு , லோக் ஆயுக்தா கொண்டு வருவேன் என்கிறார். தொழில் விவசாய வளர்சி பற்றி பேசுகிறார்.. ஆனால் விளம்பரம் வேறு மாதிரியாக இருக்கிறது. 'நமக்கு நாமே' திட்டத்தின் மூலம் அத்தனை தொகுதிகளுக்கும் சென்று வந்த அவரால் தமிழ்நாட்டின் டாப் 10, அல்லது ஒவ்வொரு மாவட்டத்தின் டாப் 10 தேவைகள் என்னென்ன, அதை நாங்கள் எப்படி நிறைவேற்றுவோம், அதற்கான திட்டங்கள் என்னென்ன  என்றெல்லாம் நேர்மறையாக  விளம்பரப்படுத்த முடியாதா? மக்கள் இதைதான் எதிர்பார்கிறார்கள். 

மக்களின் இந்த எதிர்ப்பார்ப்பை அன்புமணி சரியாக புரிந்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறன். 'அன்புமணியாகிய நான்..' என்று அவர் கொடுத்த விளம்பரம் (ஏதோ பதவி ஏற்கும் தொனியில் இருந்தாலும்) நாட்டுக்கு தேவையான விஷயங்களை பேசுகிறது. மதுவிலக்கு, வேளாண்மை புரட்சி பற்றி பேசுகிறது. இது பாசிடிவ் அணுகுமுறை. இந்த அணுகுமுறை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்