முதலில் தில்லி...
ஆரம்பமே கொஞ்சம் பதற்றம்தான்.. 7.20 மணி விமானத்துக்கு 6.20௦க்கு சென்னை விமானநிலையத்தில் நுழைந்தபோது ஸ்பைஸ் ஜெட் அதிகாரிகள் 'counter closed ' என்றார்கள். அப்புறம் கொஞ்சம் மிஞ்சி பிறகு கெஞ்சி போர்டிங் பாஸ் வாங்கினோம். பிறகுதான் தெரிந்தது அந்த விமானம் 7 மணிக்காம்.. மூன்று மாதத்துக்கு முன்னால் பதிவு செய்த டிக்கெட்டில் 7.20 என்று இருந்தது.
புதிதாக திறக்கப்பட்ட தில்லி விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு இருக்கிறது. உலகில் சிறந்த விமானநிலையங்களில் ஒன்று என்று தாரளமாக சொல்லலாம்.
தில்லியில் மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆசை. கரோல் பாக் ரயில் நிலையத்திலிருந்து அக்ஷர்தாம் கோவிலுக்கு (16 ருபாய்) மெட்ரோவில் சென்றபோது ரயில் லண்டன்-சிங்கப்பூர் மெட்ரோக்களை நினைவுறுத்தினாலும் கூட்டம் மும்பை ரயில்களை நினைவுறுத்தியது.
அக்க்ஷர்தாம்
இந்தியாவின் பிரமாண்ட ஐந்து நட்சத்திர கோவில். இதை கோவில் என்பதைவிட இந்தியாவில் ஆன்மீக கலாச்சார பண்பாட்டு மையம் என்றே அழைக்கிறார்கள். ஏனென்றால் இங்கு கோவிலுக்கு உண்டான ஆகம விதிகள் எதுவும் கிடையாது. 18ம் நூற்றாண்டில் குஜராத்தில் வாழ்ந்த சுவாமிநாராயண பகவான் பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோவிலுக்கு அவர்தான் முக்கிய மூலவர்.
100 ஏக்கர் பரபளவில் அமைந்திருக்கும் இந்த கோவில் முழுவதும் பழுப்பு கற்களாலும் இத்தாலிய பளிங்கு கற்களாலும் மட்டுமே கட்டபடிருகிறது. உருக்கு, கான்க்ரீட் எங்கும்
உபயோகப்படுத்தவில்லை. இவ்வளவு கலைநயத்துடனும் சிற்பங்களுடனும் ஒரு கோவிலை இதற்குமுன் கண்டதில்லை.. ஒவ்வொரு தூணிலும் உள்ள நுணுக்கமான சிற்பங்களிலிருந்து நம் கண்கொள்ளாத அளவிற்கு பிரம்மாண்ட சிற்பங்கள் கொண்ட கலைநயம்... இழைத்து இழைத்து பார்த்து பார்த்து செய்யப்பட சிற்ப வேலைகள்.. மொத்தம் 234 அலங்கரிக்கப்பட்ட தூண்கள், 9 மாடங்கள், தத்ரூபமான பல கோணங்களில் உள்ள யானை சிலைகள் - இவையெல்லாம் எண்ணிக்கையில் வரும் சில விஷயங்கள்.. எண்ணமுடியாதவை எத்தனையோ..

இவையெல்லாம் ரசித்துவிட்டு பகவான் சுவாமிநாராயணன் சிலை இருக்கும் மண்டபத்துக்குள் நுழைந்தால்.. அப்பப்பா.. மயக்கமே வந்துவிடும் போலிருந்தது.. என்ன ஒரு ஜொலிஜொலிப்பு.. என்ன ஒரு பளபளப்பு... பெயர் சொல்லமுடியாத பல விலையுயர்ந்த கற்களாலும் ஆபரணங்களாலும் உலோகங்கழலும் மினுமினுகிறது அந்த மண்டபம். நடுவில் தங்க முலாம் பூசப்பட்ட ௧௧ அடி பகவான் சுவாமிநாராயணன் சிலை.. சுற்றி அவரின் சீடர்கள் சிலை.. அந்த இடம் பிரமிக்க வைக்கிறது.. வாய் பிளக்க வைக்கிறது.. ஆனால் தெய்வீகம்? அது மட்டும் ஏனோ வரவில்லை..!
கோவிலுக்கு உள்ளே கேமிரா, செல்போன் அனுமதி இல்லை... அதேபோல் கொஞ்சம்கூட தூசு குப்பைகள் இல்லை..ஒரு நட்சத்திர ஹோட்டல் போல் பராமரிக்கிறார்கள்.
அந்தி நேரத்தில் காட்டப்படும் இசை நீரூற்று பற்றி கண்டிப்பாக குறிப்பிடவேண்டும்.. இசைக்கு ஏற்றால் போல் நடனமாடும் வண்ண நீரூற்றுகள்... நீரூற்றின் வேகத்துக்கு முழங்கும் இசை.. ஆஹா..என்ன ஒரு கனகச்சிதம்..அற்புதமான கோர்வை..அதிலும் கடைசியாக சிவனின் ருத்ரதாண்டவத்துக்கு அதிரும் இசையும் நீரின் வேகமும் அதன் வண்ணங்களும் நம்மை மிரள வைக்கின்றன.
உள்ளே நல்ல உணவகம் உண்டு.. படகு சவாரி உண்டு..இதை ஒரு கோவில், பக்தி என்றெல்லாம் குழப்பிக்கொள்ளாமல் ஒரு அருங்காட்சியகம் போல ஜாலியாக போய் பார்த்துவிட்டு வரலாம். இருந்தாலும் என்னை குழப்பிய ஒரு கேள்வி - இதை கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் பணம் எங்கிருந்து வருகிறது?
இனி தில்லியின் மற்ற இடங்கள்...
- பயணம் தொடர்கிறது.....