தாஜ்மஹால்.. இதை பாடாத கவிஞர்கள் இந்தியாவில் இல்லை.. இதை வரையாத ஓவியர்கள் இல்லை.. இதன் குறிப்புக்கள் இல்லாத பாடபுத்தகங்களும் இல்லை.. காலங்காலமாய் காதலின் கருப்பொருளாய் அழகின் அடையாளமாய் சித்தரிக்கப்பட்ட ஒரு மாளிகை.. இந்திய சுற்றுலாவின் சின்னம்..
சின்ன வயதிலிருந்தே ஓவியங்களாகவும் புகைப்படங்களாகவும் திரைப்படங்களாகவும் மனதில் பதிந்த ஒரு பிம்பத்தை நேரில் பார்க்கும் போது எப்படியிருக்கும்? ஆக்ரா பிரதான சாலையிலிருந்து தாஜ்மஹால் இருக்கும் இடத்திற்கு ஒட்டகத்தில் வந்து இறங்கினோம். முன்னால் ஒரு பெரு மண்டபம்... சற்றே குறுகலான வாயில்.. அதன் வாசலை நெருங்கும் வரை தாஜ்மஹால் இருக்கும் இடமே தெரியவில்லை. அதைக்கடந்தவுடன் நம் முன்னால் வாவ்.. நிஜ தாஜ்மஹால்... உலக அதிசயத்தை தரிசித்துக்கொண்டிருகிறோம் என்கிற பிரமிப்பே வாய் பிளக்கவைகிறது. சட்டென்று தாஜ்மஹாலை தரிசிக்கும்போது நம் உடலில் ஏற்படும் மெல்லிய சிலிர்ப்பை அடக்க முடியவில்லை.

தாஜ்மஹால் ஏன் உலக அதிசயம்? இதில் மூன்று விஷயங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.. இதன் அழகு, இதிலுள்ள அதிநுட்ப நுணுக்கம் மற்றும் இதன் நேர்த்தி.. இந்த மூன்றும் சேர்ந்துதான் இன்று தாஜ்மஹாலை உலகத்தின் சிறந்த கலைப்படைப்பாக விளங்க வைக்கிறது. தாஜ் அழகுபற்றி சொல்லவே வேண்டாம். இருபுறமும் உள்ள தோட்டங்களை ரசித்துவிட்டு தாஜ்மஹால் செல்வதற்கே கொஞ்ச நேரம் பிடிக்கிறது. தாஜ்மகாலில் ஒவ்வொன்றும் மிக நுட்பமாக அதி கவனத்துடன் அமைக்கப்பட்டிருகிறது. முதல் வாயிலைக்கடந்தவுடன் கொஞ்சம் சிறியதாக தெரியும், அனால் அருகே செல்ல செல்ல அதன் பிரமாண்டம் அதிகரிக்கும். பின் அந்த பளிங்கு மாளிகையின் படிகளில் ஏறினால் மேல்கூரைகூட தெரியாது. தாஜ்மஹாலை சுற்றியுள்ள நான்கு தூண்களும் சற்றே சாய்ந்து இருக்கும். ஏதாவது அசம்பாவிதம் நடந்து அந்த தூண்கள் விழுந்தாலும் தாஜ்மஹாலில் விழாது. தாஜ்மஹால் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் உலோக தூண் பாரசீக மற்றும் இந்து குறியீடுகளை கொண்டது. முதலில் தங்கத்தினால் செய்யப்பட்ட இதை எடுத்துவிட்டு ஆங்கிலேயர்கள் பித்தளை தூணாக மாற்றினார்.

இந்த அதிஅற்புதமான கட்டிடதுக்குப்பின் 22000 பணியாளர்களின் 20 வருட உழைப்பு இருக்கிறது, உலகின் தலை சிறந்த நிபுணர்களின் கைவண்ணம் இருக்கிறது. மேலும் இதன் பணிகளுக்கு கிட்டத்தட்ட ஆயிரம் யானைகள் உபயோகப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. அந்த காலத்திலேயே 3.5 கோடி ருபாய் செலவு பிடித்தது (அப்போது சுப்ரீம் கோர்ட் எல்லாம் இல்லை.. யாரும் பொதுநலவழக்கு தொடரமுடியாது).. இருக்காத பின்னே.. இங்கு பதிக்கப்பட்ட ஒவ்வொரு கற்களும் உலகத்தின் பலதிசைகளிருந்து எடுத்து வரப்பட்டன.. ராஜஸ்தானிலிருந்து பளிங்கு கற்கள், சீனாவிலிருந்து நீலப்பச்சை கற்கள் மற்றும் படிகங்கள், அரேபியாவிலிருந்து இரத்தினக்கல், பஞ்சாபிலிருந்து சிலிகன் கற்கள், இலங்கையிலிருந்து நீலக்கல், மற்றும் ஆப்கனிஸ்தான், திபெத், ஐரோப்பாவிலிருந்துகூட சில பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

ஆனால் இவையெல்லாம் விட அந்த வெள்ளை மாளிகையில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது. எவ்வளவு முறை திரைப்படங்களிலும் புகைப்படங்களிலும் பார்த்திருந்தாலும், நேரில் பார்க்கும்போது தாஜ்மஹாலின் அழகிலும் நேர்த்தியிலும் லயித்துபோகாமல் இருக்கமுடியவில்லை. இதற்கு காதல் பின்னணியும் ஒரு காரணமாக இருக்கலாம்.. ஏனென்றால் முகலாய சாம்ராஜ்யத்திலும் சரி.. மற்ற சாம்ராஜ்ஜியகளிலும் சரி.. இன்று பாரம்பரிய இடங்களாக திகழ்பவை கோட்டைகளும் அரண்மனைகளும், சமாதிகளும் தான்.. கோட்டைகள் தங்கள் வெற்றியை நிலைநாட்டவும் தங்களின் பாதுகாப்புக்காகவும் கட்டப்பட்டவைகள்.. அரண்மனைகள் தான் எவ்வளவு பெரிய சக்கரவர்த்தி என்பதை உலகுக்கு காட்டுவதற்காக கட்டப்பட்டவை.. பெறும் பொருட்செலவில் கட்டப்படும் சமாதிகளும் இதே காரணங்களுக்காகத்தான்.. ஆனால் தாஜ்மஹால் அன்பினால் காதலினால் ஈர்க்கப்பட்டு ரசித்துக் கட்டப்பட்டது.. அதனால்தான் அந்த மாளிகையில் 400 வருடங்கள் கடந்தும் இன்னும் ஒரு ஜீவன் இருப்பதை மறுக்கமுடியாது.
தாஜ்மஹால் ஒரு காதல் சின்னம் என்பதில் கருத்து வேறுபாடுகள் இல்லை. ஆனாலும் சில விஷயங்கள் நெருடுகிறது. ஷாஜஹானுக்கு மும்தாஜ் மூன்றாவது மனைவிதான். (மற்ற இரு மனைவிகளுக்கும் தாஜ்மஹலுக்கு இடப்புறமும் வலப்புறமும் 'கொஞ்சம் சாதரணமான' சமாதிகள்.. அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை..) ஷாஜஹானுடன் வாழ்ந்த 18 வருடங்களில் 14 குழந்தைகளை ஈன்றெடுத்து, கடைசி பிரசவத்தில் இறந்து போனார் மும்தாஜ். தன் வாழ்நாளில் பாதிநாட்கள் கர்ப்பிணியாகவே இருந்திருக்கிறார். அதுமட்டும்இல்லாமல் போர்க்களத்துக்கு செல்லும்போதும் கூட ஷாஜஹான் மும்தாஜை கூடவே அழைத்துச்சென்றதாக குறிப்புகள் உள்ளது. இதனால் மும்தாஜ் ஷாஜஹானுடன் சந்தோஷமாக நிம்மதியாக வாழ்திருப்பது சந்தேகம்தான். ஷாஜஹான் மும்தாஜை ஒரு அழகுப்பதுமையாக பார்த்து கண்மூடித்தனமாக காதலித்தாரே தவிர ஒரு மனைவிக்கு உண்டான மரியாதையை கொடுத்திருக்கமாட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. இது ஷாஜஹானுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். இதனால்தான் மும்தாஜ் இறந்தபிறகு, தான் ஒரு சக்கரவர்த்தி என்பதையே மறந்து அரசு அலுவல்களில் கவனம் செலுத்தாமல் சில ஆண்டுகள் சோகமாக இருந்திருக்கிறார். கருமையாக இருந்த அவர் தலைமுடி திடீரென முழுவதும் நரைத்துவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. அதனால் திடீரென மும்தாஜ் நினைவாக ஒரு மாளிகை கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார்.. ஏற்கனவே பர்ஹான்பூர் என்கிற இடத்தில் புதைக்கப்பட்ட மும்தாஜ் உடல் தோண்டிஎடுக்கப்பட்டு இபோது தாஜ்மகால் உள்ள இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பின் 20 ஆண்டுகள் தாஜ்மகாலை கட்டுவதிலேயே மும்முரமாக இருந்தார் ஷாஜஹான்.
இது ஒருபுறம் இருக்க பின் பல காரணங்களால் எரிச்சலடைந்த ஔரங்கசீப் (மும்தாஜின் இரண்டாவது மகன்) ஆட்சியை கைப்பற்றி தன் தந்தையை சிறையில் அடைத்தார். ஔரங்கசீப் ஒரு முசுடு.. ஷாஜஹனுக்கு இருந்த கலை ஆர்வம் அவருக்கு இல்லை.. இதுபோன்று மாளிகைகள் கட்டுவதெல்லாம் வீண்செலவு என்று நினைப்பவர். ஷாஜஹானை கைது செய்து ஆக்ரா கோட்டையில் அடைத்த ஔரங்கசீப், அங்கிருந்து ஒரு ஜன்னல் வழியே தாஜ்மஹாலை பார்பதற்கு மட்டும் அனுமதி அளித்திருந்தார். பிறகு ஷாஜஹான் உடல்நலம்குன்றி படுத்தபடுக்கையானபோது ஜன்னல் அருகே ஒரு கண்ணாடி வைத்து அதில் தாஜ்மஹால் பிம்பத்தை கண்டுகொண்டிருந்தார். கடைசியாக அந்தக் கண்ணாடியை பார்த்த நிலையிலேயே அவர் உயிர் பிரிந்திருக்கிறது. இப்படியாக எல்லா காதல் சரித்திரங்களைப்போலவே ஷாஜகனின் காதல் கதையும் சோகமாகவே முடிந்திருகிறது.
ஒரே ஒரு சந்தேகம்...ஷாஜஹான் மும்தாஜை நேசித்தது வேண்டுமென்றால் உண்மையாக இருக்கலாம். ஆனால் மும்தாஜ் ஷாஜஹானை எவ்வளவு தூரம் நேசித்தார் என்று தெரியவில்லை..!
எது எப்படியோ... தாஜ்மஹால் இந்தியாவின் காதல் சின்னம்.. அழகியலுக்கான ஒரு அடையாளம்.. அத்தனை வெளிநாட்டவருக்கும் இந்தியா என்றால் முதலில் நினைவுக்கு வருவது தாஜ்மகால்தான்..
இந்தியனாகப் பிறந்துவிட்டு தாஜ்மஹாலை தரிசிக்காமல் இருப்பதில் அர்த்தம் இல்லை.
- இனி என் கேமிரா வழியே தாஜ்மஹால்...