Monday, October 25, 2010

காந்தி நேரு வாழ்ந்த இடங்கள் - ஒரு வடஇந்தியப் பயணம்

காந்தி ஸ்மிருதி..... காந்தி கடைசியாக வாழ்ந்த பிர்லா மாளிகை..

உள்ளே நுழைந்தவுடன் காந்தி வாழ்கையில் நடந்த சில சம்பவங்களை பொம்மை வடிவில் சித்தரிக்கும் ஒரு சிறு கண்காட்சி.. தென்ஆப்ரிக்க ரயில் பயணம், தண்டி போராட்டம், அந்நிய துணிகள் எரிப்பு, கஸ்தூரிபாய் மரணம், காந்தி சுடப்பட்டது, பின் இறுதி சடங்கு என்று பல நிகழ்வுகள் தத்ரூபமாக அமைக்கப்படிருந்தன...அங்கு வந்த அனைவரின் மனதையும் கவர்ந்தது.


பொம்மை வடிவில் காந்தி கண்காட்சி
 
காந்தியின் கடைசி பயணம்
ஜனவரி 30 , 1948 .. மாலை ஐந்து மணி.. காந்தி கடைசியாக  பிரத்தனைகாக வெளியே வந்த அறை கதவு இன்றும் அப்படியே இருக்கிறது (காந்தி படத்தில் முதல்  காட்சியே  இதுதான்) அந்த அறையிலிருந்து அவர் சுட்டு கொல்லப்பட்ட இடம் வரை அவர் காலடி தடங்கள் பதிக்கப்பட்டு உள்ளது.. அவர் சுடப்பட்டு வீழ்த்த இடத்தில ஒரு சிறு மண்டபம் அமைக்கபட்டிருகிறது... பத்து பேர் அடங்கிய ஒரு வெளிநாட்டு குழுவுக்கு இந்தியா பெண்மணி ஒருவர் காந்தியின் கடைசி நிமிடங்களைப் பற்றி விவரித்துக்கொண்டிருந்தார்... கூட்டத்துக்கு நடுவே  கோட்சே  எப்படி  வந்தார்,  சுட்டவுடன் காந்தியின் என்ன சொன்னார், பின் என்ன நடந்தது  என்பதையெல்லாம்  சொல்லி கொண்டிருக்கும்போது,  ஒருவர் மிகவும் அக்கறையாக 'கோட்சேக்கு என்ன ஆயிற்று' என்று விசாரித்தார்.  'கூட்டம் அவரை எதுவும் செய்யவில்லை.. அஹிம்சையின் உச்சம் அது.. பின்னர் நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கியது' என்ற பதிலை கேட்டவுடன் அவர் முகத்தில் திருப்தி...!

இதே இடத்தில காந்தியின் மல்டி-மீடியா மியூசியம் என்று ஒன்று இருக்கிறது.. அது அவ்வளவு சுவாரசியமாக இல்லை. காந்தியை மல்டி-மீடியா விஷுவல் விளைவுகளோடு பொருத்திப்பார்க்கும் முயற்சி அது. காந்தியின் எளிமைக்கு சற்று முரண்பட்டதாக இருந்தது.

முதலில் காந்தி ஸ்மிருதி செல்லவேண்டும் என்றவுடன் டாக்ஸி டிரைவர்  இந்திரா காந்தி மெமோரியல் சென்று விட்டார்.. பிறகு 'மகாத்மா காந்தி ஸ்மிருதி' என்றவுடன் பின் சரியான இடத்துக்கு அழைத்துச் சென்றார். தில்லியில் வெறும் காந்தி என்று சொன்னால் குழப்பம் வந்து விடுமோ?  

தீன் மூர்த்தி பவன் ..பிரதமராக நேரு பவனி வந்த இடம்..  தில்லி கனார்ட் பிளேசில் காந்தி காந்தி ஸ்மிருதிக்கும் தீன் மூர்த்தி பவனுக்கும் அதிக தூரம் இல்லை.

இதில் நேருவை பற்றி 'AtoZ' இருக்கிறது - நேருவின் வாழ்க்கை கண்முன் நிறுத்தும் புகைப்படங்கள், அவர் படித்த புத்தகங்கள், அவருடைய பேச்சு ஒலி நாட்கள், அவர் எழுதிய கடிதங்கள், அவர் உபயோகித பொருட்கள்.. கடைசியாக நேரு உயிர் பிரிந்த அறை...

சின்ன வயது புகைப்படங்களில் ஒரு இளவரசனின் கம்பீரத்தோடு நேரு மிளிர்கிறார் நேரு..ஒரு 'royal family 'யில் வளர்த்தவர் என்று கண்கூடாக தெரிகிறது. அவர் தன தந்தை மோதிலால் நேருவுக்கு எழுதிய கடிதங்களில் ஆங்கிலப் புலமை வெளிப்படுகிறது. தன தாய்க்கு மட்டும் ஹிந்தியில் கடிதம் எழுதிருக்கிறார். இளம் வயதில் இந்தியப் பாரம்பரியத்தோடு மேற்கத்திய பாணியில் அவர் வாழ்கை முறை அமைந்திருகிறது.

இந்தியா சுதந்திரம் கிடைத்தபோது மற்றும் காந்தி கொலையுண்டபோது அவர் ஆற்றிய உரை ஒலி நாடாக்கள் கேட்பதற்கு சிலிர்ப்பூடுகின்றன..

தில்லி செல்லப்போகிறேன் என்றதும் 'அங்கு காமன் வெல்த் கேம்ஸ் நடக்கிறது.. எக்கச்சக்க போக்குவரத்து நெரிசல் இருக்கும்.. பாதி இடங்களுக்கு செல்லவே முடியாது...' என்று ஆளாளுக்கு பயமுறுத்தினார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை.. போக்குவரத்து மிக சீராக இருந்தது.. முக்கிய சாலைகளில் CWG க்கு தனி பாதைகள் உண்டு. சைக்ளிங், மராத்தான் போட்டிகள் நடக்கும் தேதியில் மட்டும் சில பிராதன சாலைகள் மூடப்பட்டன. எல்லா மெட்ரோ நிலையத்திலும் உதவி மையம், அங்கங்கே அறிவுப்புகள் என்று பிரச்னை இல்லாமல் இருந்தது. நாங்கள் சென்ற பல இடங்களில் CWG விளையாட்டு வீரர்களும் வந்திருந்தார்கள். (நிறைய பேர் தென்பட்டது அக்ஷர்தாமில்). தில்லியில் நான் மெட்ரோ, ஆட்டோ, டாக்ஸி, சைக்கிள் ரிக்க்ஷா என்று எல்லாவிதமான போக்குவரத்திலும் சென்றேன். 

எல்லா இடங்களிலும் பொதுவான ஒரு விஷயம் - கோவிலாகட்டும், மசூதியாகட்டும், கோட்டைகளாகட்டும், காந்தியாகட்டும், நேருவாகட்டும் - பாதுகாப்பு எக்கச்சக்கம்.. பல பரிசோதைகளை கடந்துதான் உள்ளே செல்லவே முடிகிறது..

இனி சீக்கியர்களின் புனிதத்தலமான அமிர்தசரஸ் பொற்கோவில்...

- பயணம் தொடரும்...

 

Friday, October 22, 2010

தில்லி உலா - ஒரு வடஇந்தியப் பயணம்

காந்தி சமாதி
தில்லியில் அடுத்தநாள் காலையில் காந்தி சமாதியுடன் துவங்கினோம்.. ஒருசில வெளிநாட்டவர் தவிர யாரும் இல்லை.. அவர்களும் சமாதி அருகே வரவில்லை.. பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை காந்தி சமாதி வந்திருக்கிறேன்.. விடுமுறை நாட்களில் காலைவேளையில் பலர் சமாதியை சுற்றி உள்ள புல்வெளியில் அமர்ந்திருப்பார்கள். இந்தமுறை நானும் காந்தியும் மட்டும் தனியே.. காந்தியை போலவே ஆர்ப்பாட்டம் இல்லாமல் எளிமையான இருக்கிறது அந்த இடம்... ஹே ராம் என்ற எழுத்துகளுடன்..

செங்கோட்டை
பிறகு செங்கோட்டை (Red fort)... 17ம்  நூற்றாண்டில் ஷாஜகான் கட்டிய கோட்டை.. பின்னர் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்  இருந்து  விடுதலைக்கு பிறகு இந்தியா இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்தது. 2003 ல் தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.. இன்று யுனஸ்கோவால்  அங்கீகரிக்கப்பட்ட 'உலகப் பாரம்பரிய' இடங்களுள் ஒன்று.  

இதற்குள் இந்தியா விடுதலை இயக்கத்தின் கண்காட்சி வைத்திருகிறார்கள். சிப்பாய் கலகத்திலிருந்து 1947 வரை நடந்த பல நிகழ்வுகள்  புகைப்படங்களாகவும் காட்சிகளாகவும் வைக்கப்படிருந்தன. அதில் சுபாஷ் சந்திரபோசின் அறிய புகைப்படங்கள் நிறைய இருந்தன... அவர் எப்படி காங்கிரசில் இணைந்தார், பின் இந்தியா தேசிய ராணுவம்  அமைத்தது, வீட்டுக்காவலில் இருந்தவர் எப்படி தப்பித்தார், அவரின் மர்ம மரணம் போன்ற விவரங்களுடன்... அவர் தப்பியது பற்றிய விவரங்களும் அங்கே உண்டு - சுபாஷ் அறையில் எப்போதும் விளக்கு எரிந்து கொண்டிருக்குமாம்.. பல நாட்கள் சவரம் செயாமல் தாடி வளர்த்துகொண்டு உருவத்தை மாற்றி பிரிட்டிஷ் போலீசின் கண்களில் மண்ணை தூவிவிட்டு தப்பித்திருக்கிறார். வெளியே தன்னை ஒரு முஸ்லிம் இன்சூரன்ஸ் ஏஜென்ட் என்று அறிமுகம் செய்துகொண்டு இந்தியா எல்லையை கடந்திருக்கிறார். பிறகு கைபர் கணவாய் வழியாக வளைகுடா சென்று அங்கிருந்து மாஸ்கோ சென்று பின் பெர்லினை அடைந்திருக்கிறார்.. ஹிட்லைரை சந்திபதாற்காக..வெளியே வரும்போது 'சுபாஷ் எப்பேர்பட்ட போராளி..' என்று  நினைக்கத் தோன்றுகிறது..

இந்தியா கேட்
குடியரசு தினத்தன்று நாம் டி.வி யில் பார்க்கும் இந்தியா கேட்-ராஷ்டபதி பவன் சாலை நேரில் ரொம்பவே அழகு. அதை சுற்றி உள்ள புல்வெளி, தடாகங்கள் கூடுதல் அழகு. முப்படைகளின் கொடிகள் பறக்க இந்தியா கேட்டில் அமைந்துள்ள 'அமர் ஜவான்' ஜோதிக்கு ஒரு ராயல் சல்யுட்  அடித்துவிட்டு அந்த இடந்தை விட்டு நகர்ந்தோம்.

ஹுமாயுன் சமாதி
தில்லிக்கு சுற்றுலா செல்பவர்கள் நிறையபேர் ஏனோ ஹுமாயுன் சமாதியை பார்க்க தவறிவிடுவார்கள். (பிரகதி மைதான் மெட்ரோவில் இறங்கி 10 நிமிடத்தில் ஆட்டோவில் செல்லாலாம்). இது 'வாவ்' என்று வியக்கத்தக்க இடம்.. முகலாய  கட்டிடகலையின்  சிறப்பை  தெரிந்துகொள்ள  இந்த இடத்திற்கு செல்லலாம்.  பிரமாதமான வடிவமைப்பு.. முதலில் தோன்றிய ஒரு கட்டம்தான் ஹுமாயுன் சமாதி என்று அருகே சென்று பார்த்தால் அது வெறும் முகர்ப்புதான்.. அங்கிருந்து அடுத்த கட்டிடத்துக்கு கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். இதை கட்ட அந்த காலத்திலேயே 15 லட்ச ருபாய் ஆனதாம் (1571 ). இதுவும் யுனஸ்கோவின் உலக பாரம்பரிய இடம்.

குதுப்பினார்
12 ம்நூற்றாண்டின் அதிசயம்.. முகமது கோரியை போரில் வென்றதற்காக குத்புதீன் ஐபக் கட்டியது..  (சின்ன வயதில்  பாடப்புத்தகத்தில் படித்ததையெல்லாம் கஷ்டப்பட்டு  நினைவுக்கு  கொண்டுவர வேண்டியிருக்கிறது). மிக குறுகிய விட்டதிலிருந்து ஆரம்பித்து 237 அடி உயரத்திற்கு கட்டிடம் எழுப்பியிருக்கிறார்கள்.


 


இனி காந்தி நேரு வாழ்ந்த இடங்கள்...

....... பயணம் தொடரும்....

 

Tuesday, October 19, 2010

வடஇந்தியப் பயணம் - அக்க்ஷர்தாம், தில்லி

பல வருடங்களாக முயற்சித்து கடைசியில் இந்த வருடம் அக்டோபர் மாதம் வடஇந்திய சுற்றுலா செல்வதென்று தீர்மானித்தேன்.. தில்லி, அமிர்தசரஸ், ரிஷிகேஷ், ஆக்ரா சென்றுவரலாம் என்று திட்டம்.. ஜூலை மாதத்திலிருந்து திட்டம் தீட்டி இனிதே முடிந்தது என் பயணம். ஒவ்வொரு இடமும் ஒவ்வொருவிதமான அனுபவம். இந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு இடுகை போதாது.. விவரமாக விஸ்தாரமாக பல வாரங்களுக்கு உங்களுடன் பகிர்துகொள்ள பல செய்திகள் உள்ளன.

முதலில் தில்லி...

ஆரம்பமே கொஞ்சம் பதற்றம்தான்.. 7.20  மணி விமானத்துக்கு 6.20௦க்கு சென்னை விமானநிலையத்தில் நுழைந்தபோது ஸ்பைஸ் ஜெட் அதிகாரிகள் 'counter closed ' என்றார்கள். அப்புறம் கொஞ்சம் மிஞ்சி பிறகு கெஞ்சி போர்டிங் பாஸ் வாங்கினோம். பிறகுதான் தெரிந்தது அந்த விமானம் 7 மணிக்காம்.. மூன்று மாதத்துக்கு முன்னால் பதிவு செய்த டிக்கெட்டில் 7.20 என்று இருந்தது.

புதிதாக திறக்கப்பட்ட தில்லி விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு இருக்கிறது. உலகில் சிறந்த விமானநிலையங்களில் ஒன்று என்று தாரளமாக சொல்லலாம்.

தில்லியில் மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆசை. கரோல் பாக் ரயில் நிலையத்திலிருந்து அக்ஷர்தாம் கோவிலுக்கு (16 ருபாய்) மெட்ரோவில் சென்றபோது ரயில் லண்டன்-சிங்கப்பூர் மெட்ரோக்களை நினைவுறுத்தினாலும் கூட்டம் மும்பை  ரயில்களை நினைவுறுத்தியது.

அக்க்ஷர்தாம்

இந்தியாவின் பிரமாண்ட ஐந்து நட்சத்திர கோவில். இதை கோவில் என்பதைவிட இந்தியாவில் ஆன்மீக கலாச்சார பண்பாட்டு மையம் என்றே அழைக்கிறார்கள். ஏனென்றால் இங்கு கோவிலுக்கு உண்டான ஆகம விதிகள் எதுவும் கிடையாது. 18ம் நூற்றாண்டில் குஜராத்தில் வாழ்ந்த சுவாமிநாராயண பகவான் பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோவிலுக்கு அவர்தான் முக்கிய மூலவர்.

100 ஏக்கர் பரபளவில் அமைந்திருக்கும் இந்த கோவில் முழுவதும் பழுப்பு கற்களாலும் இத்தாலிய பளிங்கு கற்களாலும் மட்டுமே கட்டபடிருகிறது. உருக்கு, கான்க்ரீட் எங்கும் உபயோகப்படுத்தவில்லை. இவ்வளவு கலைநயத்துடனும் சிற்பங்களுடனும் ஒரு கோவிலை இதற்குமுன் கண்டதில்லை.. ஒவ்வொரு தூணிலும் உள்ள நுணுக்கமான சிற்பங்களிலிருந்து நம் கண்கொள்ளாத அளவிற்கு பிரம்மாண்ட சிற்பங்கள் கொண்ட கலைநயம்... இழைத்து இழைத்து பார்த்து பார்த்து செய்யப்பட சிற்ப வேலைகள்.. மொத்தம் 234 அலங்கரிக்கப்பட்ட தூண்கள், 9 மாடங்கள், தத்ரூபமான பல கோணங்களில் உள்ள யானை சிலைகள் - இவையெல்லாம் எண்ணிக்கையில் வரும் சில விஷயங்கள்.. எண்ணமுடியாதவை எத்தனையோ..

இவையெல்லாம் ரசித்துவிட்டு பகவான் சுவாமிநாராயணன் சிலை இருக்கும் மண்டபத்துக்குள் நுழைந்தால்.. அப்பப்பா.. மயக்கமே வந்துவிடும் போலிருந்தது.. என்ன ஒரு ஜொலிஜொலிப்பு.. என்ன ஒரு பளபளப்பு... பெயர் சொல்லமுடியாத பல விலையுயர்ந்த கற்களாலும் ஆபரணங்களாலும் உலோகங்கழலும் மினுமினுகிறது அந்த மண்டபம். நடுவில் தங்க முலாம் பூசப்பட்ட ௧௧ அடி பகவான் சுவாமிநாராயணன் சிலை.. சுற்றி அவரின் சீடர்கள் சிலை.. அந்த இடம் பிரமிக்க வைக்கிறது.. வாய் பிளக்க வைக்கிறது.. ஆனால் தெய்வீகம்? அது மட்டும் ஏனோ வரவில்லை..!

கோவிலுக்கு உள்ளே கேமிரா, செல்போன் அனுமதி இல்லை... அதேபோல் கொஞ்சம்கூட தூசு குப்பைகள் இல்லை..ஒரு நட்சத்திர ஹோட்டல் போல் பராமரிக்கிறார்கள்.

அந்தி நேரத்தில் காட்டப்படும் இசை நீரூற்று பற்றி கண்டிப்பாக குறிப்பிடவேண்டும்.. இசைக்கு ஏற்றால் போல் நடனமாடும் வண்ண நீரூற்றுகள்... நீரூற்றின் வேகத்துக்கு முழங்கும் இசை.. ஆஹா..என்ன ஒரு கனகச்சிதம்..அற்புதமான கோர்வை..அதிலும் கடைசியாக சிவனின் ருத்ரதாண்டவத்துக்கு அதிரும் இசையும் நீரின் வேகமும் அதன் வண்ணங்களும் நம்மை மிரள வைக்கின்றன.

உள்ளே நல்ல உணவகம் உண்டு.. படகு சவாரி உண்டு..இதை ஒரு கோவில், பக்தி என்றெல்லாம் குழப்பிக்கொள்ளாமல் ஒரு அருங்காட்சியகம் போல ஜாலியாக போய் பார்த்துவிட்டு வரலாம். இருந்தாலும் என்னை குழப்பிய ஒரு கேள்வி - இதை கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் பணம் எங்கிருந்து வருகிறது?

இனி தில்லியின் மற்ற இடங்கள்...

- பயணம் தொடர்கிறது.....

Sunday, September 5, 2010

என் பின்னால் வா - மாவோ

மாவோ: என் பின்னால் வா - மருதன் எழுதிய மாவோ எனப்படும் மாவோ சேதுங்கின் வரலாறு நான் தற்போது படித்த புத்தகம்... சீனத் தலைவர் மா சேதுங்கை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தை படிக்கலாம். 

இருநூறு ஆண்டு காலமாக ஐரோப்பா மற்றும் ஜப்பானியர்களுக்கு அடிமைப்பட்டுக்கிடந்த சீனாவை சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்தவர்.  முதன்முதலில் சீனாவில் உழைக்கும் மக்கள் ஆட்சியை மலர செய்தவர் என்ற பெருமைகள் மாவோவுக்கு உண்டு...

மாவோவின் பதிமூன்று வயதிலிருந்து தொடங்குகிறது இந்தப் புத்தகம். நாம் எல்லோரும் நினைப்பதுபோல மாவோ வறுமையில் வாடியவர் இல்லை. கொஞ்சம் வசதியான சூழலில்தான் வளர்ந்தார். கொஞ்சம் பிடிவாதக்காரராக வளர்ந்த மாவோவின் பள்ளிபடிப்பு, கல்லூரி வாழ்கை, விவசாயிகள்-தொழிலாளர்கள் பிரச்னையில் ஈடுபாடு, மாக்சியத்தில் ஈடுபாடு, கம்யூனிஸ்ட் கட்சியில் சேருதல், நீண்ட பயணம், சீனப் புரட்சி, சீனாவைக் கைப்பற்றுதல், அதிபரானபின் வரும் பிரச்சனைகள் என்று மாவோவின் வாழ்கைபாதையை தெளிவாக,  விவரமாக அலசுகிறது இந்தப் புத்தகம்.

'முயற்சித்தால் எதுவும் முடியும்' என்பதற்கு மாவோவின் வாழ்க்கை ஒரு உதாரணம். உலகின் பெரிய நாடான சீனாவை, மிகுந்த இறைநம்பிக்கை பல மூடநம்பிக்கைகளை கொண்ட சீன மக்களை கம்யூனிச பாதையில் அழைத்துச் செல்வது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதேபோல சீனாவில் அப்போது இருந்த ராணுவத்தையும், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய படையையும் தன செம்படை மூலம் விரட்டி அடித்து மொத்த சீனாவையும் மாவோ கைப்பற்றுவார் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். இன்று சீனா சிதறுண்டு போகாமல் (தைவானை தவிர) மொத்தமாக ஒரே ஆட்சியில் கீழே இருக்கிறது என்றால் அதற்க்கு மாவோ அமைத்துக்கொடுத்த அடித்தளம்தான் காரணம்.

மாவோவின் தத்துவம் எப்படி மக்களை சென்றடைந்தது? அவர் எப்படி மக்கள் தலைவரானார்? ஏனெனில் மாவோ வெறும் கொரில்லா போராளி மட்டும் அல்ல. அவர் மக்கள் பிரச்சனையை அறிந்து மக்களோடு போராடினார். எந்த காரணம் கொண்டும் மக்களை துன்புறுத்தவில்லை. தனது செம்படையை மக்கள் சேவைக்கும் ஈடுபடுத்தினார். கிராமம் கிராமமாக சென்று விவசாயிகள் நிலையை கண்டறிந்தார். வரலாற்று சிறப்பு மிக்க நெடும்பயணத்தில் மாவோவோடு விவசாயிகளும் நடந்தே சென்றனர்... கிட்டத்தட்ட ஒரு வருடம்.. பத்தாயிரம் கிலோமீட்டர்கள்... தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருந்தார்கள்... இந்த முயற்சிதான் மக்கள் மத்தியில் மாவோவின் செல்வாக்கை உயர்த்தியது. அதனால்தான் 'என் பின்னால் வா' என்று மாவோ அழைத்தவுடன் சீன தேசமே அவர் பின்னல் அணி திரண்டது. 

மாவோ மாக்சியத்தில் எப்படி ஈடுபாடு கொண்டார், எப்படி கம்யூனிசம் அவரை ஈர்த்தது என்பதுபற்றி இந்த நூலில் அதிக விளக்கங்கள் இல்லை. நூலகத்தில் பல புத்தகங்களை படித்தார்,  சோவியத்தை  உதாரணமாக  எடுத்துகொண்டார்  என்று மட்டும் இருக்கிறது. அதே போல் மாவோவுக்கு மிகுந்த அவப்பெயர் வாங்கிகொடுத்த 'கலாச்சார புரட்சி' பற்றி இதில் எதுவும் விளக்கவில்லை. சுருக்கமாக சொன்னால் மாவோவின் மறுபக்கம் இந்த புத்தகத்தில் இல்லை.

இந்தப்புத்தகத்தில் மாவோ சேதுங் என்ற முழுப்பெயர் எங்கும் இடம்பெறவில்லை. மாவோ என்றே இருக்கிறது.

'தெளிவான அரசியல் கொள்கை... தீர்க்கமான போர்த் தந்திரம், அசர வைக்கும் மக்கள் பலம்' - இந்த மூன்று ஆயுதங்களைப் பயன்படுத்தி மாவோ நிகழ்த்திக்காட்டிய புரட்சி சீனாவை ஒரு புதியதிசையில் செலுத்தியது... உழைக்கும் மக்கள் வரலாற்றில் மாவோ ஒரு வீர சகாப்தம்' என்ற பின்னூட்டத்துடன் முடிகிறது இந்த நூல்.

  

Sunday, August 29, 2010

இணைய கள்ளர்கள்

வர வர இணையத்தில் உளவு பார்க்கும் வேலை அதிகரித்துவிட்டது. நம் கணணியை இணையத்தில் இணைத்துவிட்டால் கண்டவர்கள் நம் கோப்புகளை களவாடுகிறார்கள். நம் cookies மற்றும் browsing history மூலம் பல தகவல்கள் திருடப்படுகின்றன.

எனக்கு சென்ற வாரம் ஏற்பட்ட அனுபவம் இதோ..

அக்டோபர் மாதத்தில் அமிர்தசரஸ், டேராடூன், ஆக்ரா போகலாம் என்று திட்டம். இதற்காக டேராடூனிலிருந்து  ஆக்ராவுக்கு ஏதாவது விமானம் இருகிறதா என்று ஒரு வலை பக்கத்தை மேய்ந்தேன்... என் விவரம்,   மின்அஞ்சல் எதையும்  கொடுக்கவில்லை. குறிப்பிட்ட வழித்தடத்தில் எந்த விமானமும் இல்லை என்று தெரிந்தவுடன் இணையத்தை துண்டித்துவிட்டேன். மறுநாள் என் ஹாட்மெயிலில் மின்அஞ்சல்களைப்  பார்த்துகொண்டிருந்தபோது ஓரத்தில் ஒரு விளம்பரம்.... 'Flights  from  Dehradun  to  Agra   - lowerst  fare ' என்று இருந்தது...

ஆஹா.. என் அதிஷ்டத்தை நினைத்து எனக்கே மெய்சிலிர்த்தது.. நமக்கு தேவைப்படும் நேரத்தில் ஏதோ ஒரு நிறுவனம் புதிதாக இந்த வழித்தடத்தில் விமான சேவையை தொடங்கியிருகிறதே என்று ஆசை ஆசையாய்  அந்த விளம்பரத்தை கிளிக் செய்தேன்... கடைசியில் அதே வலைப்பக்கம்.. அப்படி எந்த ஒரு விமானமும் பறக்கவில்லை. பிறகுதான் தெரிந்தது.. அந்த குறிப்பிட்ட வலைத்தளம் என் browsing history, cookies   மூலம் என் தகவல்களை களவாடி, நான் ஹாட்மெயிலை திறக்கும் போது எனக்கு மட்டுமே உரித்தான ஒரு விளம்பரத்தை கொடுத்திருக்கிறது.

பின் ஒருமுறை அமிர்தசரஸ் ஹோட்டல்களை பற்றி கூகுளில் மேய்ந்தபோது மறுநாள் அமிர்தசரஸ் ஹோட்டல்கள் பற்றிய ஒரு விளம்பரம் என் ஹாட்மெயிலில்  வந்தது.

முன்பெல்லாம் எந்த ஊரிலிருந்து இணையத்தை இணைக்கிறீர்களோ அந்த ஊர் சம்பந்தப்பட்ட தகவல்கள் வரும். ஒரு இணையத்தளத்தில் ஒரு செய்தியை தேடும்போது அது சம்பந்தமான விளம்பரம் அதே இணையத்தளத்தில் வரும். ஆனால் இந்த இணைய கள்ளர்கள் நவீன மென்பொருள் மூலம் நம் தகவல்களை நம் குணங்களை, நம் விருப்பங்களை அலசி ஆராய்ந்து இதுபோல 'தானியங்கு' விளம்பரங்களை அளிக்கிறார்கள். நமக்கு தெரியாமலேயே நம்மை பின்தொடரும் உளவாளிகள் இவர்கள்.

இணையத்தில் ரகசியம் என்பதே எதுவும் கிடையாது போலிருக்கிறது. ரகசியத்தை வெளியே சொல்லக்கூடாது என்பதற்கு 'இரண்டு என்பது சகவாசம்... மூன்று என்பது கூட்டம்' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.. இதில் இணையம் என்பது...?

Saturday, August 21, 2010

கடைகளுக்கு தண்டனை... சினிமாவுக்கு சலுகை..

சென்னையில் எல்லா கடை பெயர்களும் இப்போது தமிழாக்கம் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் பெயர் வைக்கவேண்டும் என்று உத்தரவு போட்டதுமட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சி என்னென்ன கடைகளை எப்படியெல்லாம் அழைக்கலாம் என்று யோசனையும் கூறியிருக்கிறது. தமிழ் பெயர் வைக்காதவர்களுக்கு லைசன்ஸ், மன்னிக்கவும்... உரிமம் ரத்து செய்யப்படுமாம்.

மாநகராட்சியின் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.. அதே சமயம் இதை ஏன் அரசு தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்லவில்லை என்றும் புரியவில்லை..

சென்னை தெருக்கள் முழுவதும் இப்போது தமிழ் மணம் வீசுகிறது.. உதாரணத்துக்குச் சில...

மெடிகல்ஸ் - மருந்தகம்
கலர் லேப் - வண்ணக் கூடம்
செல் வேர்ல்ட் - அலைபேசி உலகம்
பியுட்டி பார்லர் - அழகூட்டு நிலையம்
ஸ்டேஷனரி - எழுது பொருளகம்
பேக்கிரி -  அடுமனை அல்லது வெதுப்பகம்
ஆப்டிகல்ஸ் - கண்ணாடியகம்
பிசினஸ் சென்டர் - வர்த்தக நடுவகம்
ஸ்நாக்ஸ் - நொறுவைகள்
ஹார்ட்வேர் - வன்பொருளகம்       

இருந்தாலும் ஒரு விஷயம் நெருடுகிறது.. கடைகளில் தமிழ்ப் பெயர் இல்லையென்றால் தண்டனை.. சினிமாவுக்கு தமிழ்ப் பெயர் வைத்தால் சலுகை..

என்ன நியாயம் இது? ஏன் இந்த பாரபட்சம்?

Sunday, July 25, 2010

'மாணவ' தற்கொலைகள் - ஆசிரியர் மட்டும் காரணமா?

இந்த வாரம் ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை படித்தேன். கடலூர் மாவட்டத்தில் ஒரு பள்ளிகூட ஆசிரியை ஐந்தாம் வகுப்பு மாணவியை திட்டியதால் அவமானப்பட்ட அந்த மாணவி மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீ வைத்துகொண்டு தற்கொலை செய்துகொண்டாளாம். ஆசிரியர் திட்டியதால், மதிப்பெண் குறைந்ததால் நடக்கும் தற்கொலைகளைப் பற்றி அடிக்கடி செய்தி வந்துகொண்டிருக்கிறது.

ஆசிரியர்கள் பொதுவாக கண்டிப்பாக இருக்கவேண்டியவர்கள்தான்.. அதேசமயம், அந்த கண்டிப்பு எல்லை மீறும்போது கண்டிக்கபடவேண்டியர்வர்கள்தான்..! ஆனால் இது போன்ற தற்கொலைகளுக்கு ஆசிரியரும் பள்ளிக்கூடமும் மட்டும்தான் காரணமா? இந்த ஒரு சிறிய அவமானத்தால் சிறுமியை தற்கொலை செய்துகொள்ள தூண்டுவது எது? 'தற்கொலை செய்துகொள்' என்று எந்த ஆசிரியரும் சொன்னதும் இல்லை.. 'தற்கொலை செய்துகொள்வது எப்படி' என்று எந்த பாடபுத்தகத்திலும் விளக்கம் இல்லை.

புடவையை உத்திரத்தில் மாட்டி தூக்கு போட்டுக்கொள்வது, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துகொள்வது, அரளி விதையை சாபிடுவது, ரயிலில் தலை வைத்துப் படுப்பது போன்று விதவிதமான தற்கொலைகளை விளாவாரியாக  காட்டுவது நம் சினிமாவும் டிவி மெகா தொடர்களும்தான். இவை இல்லாமல் தற்கொலை பற்றி இவ்வளவு விவரங்கள் ஒரு 10  வயது சிறுமிக்கு தெரிய வாய்ப்பில்லை. அதுவும் நம் சினிமாக்களில் எப்படி எண்ணையை ஊற்றிகொள்வது, தூக்கு எந்த அளவுக்கு இறுக்கமாக இருக்கவேண்டும் என்று ஒரு விஷுவல் பாடமே எடுக்கிறார்கள். சினிமாவில் பாதி தற்கொலைகள் ஹீரோக்களால் காப்பற்றப்படுகின்றன. அனால் நிஜத்தில்?

தனக்கு ஒரு அவமானம் ஏற்பட்டால் தன் உடலை அழித்துக்கொள்ளவேண்டும் என்று போதிப்பதே நம் சினிமாதான். எந்த ஒரு ஆங்கில படத்திலும் தற்கொலை காட்சிகளை நான் பார்த்ததில்லை.

இதற்கும் மேலாக அரசியல் தற்கொலைகளை 'உயிர் தியாகம்' என்று கொண்டாடும் நம் அரசியல்வாதிகளும் ஒரு காரணம். கடந்த வருடம் YSR மறைந்தபோது ஆந்திராவில் நடந்த 'உயிர் தியாகங்கள்' போன்று உலகில் வேறு எங்கும் நடந்ததில்லை.

அவமானங்களை தாங்கும் உறுதியும் அதை மீண்டுவரும் மனத்திடத்தையும் திறமையையும் நம் கல்விமுறை கற்றுக்கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் இதுபோன்ற 'மாணவ' தற்கொலைகளுக்கு பள்ளிகளையும் ஆசிரியர்களையும் மட்டும் குறைசொல்லி பயனில்லை.

குறைந்த பட்சம் புகை பிடிக்கும் மது அருந்தும் காட்சிகளை தடை செய்ததுபோல சினிமாவில் தற்கொலை காட்சிகளையும் சென்சார் செய்யவேண்டும். புகை, மது போன்று இதுவும் ஒரு 'சமூக சீரழிவு' தான்..!