ரிஷிகேஷில் வந்து இறங்கியது ஜானகிதேவி சோமானி பவன். அது ஹோட்டல் அல்ல..குறைந்த அளவில் அறைகளை கொண்டு நடத்தப்படும் ஒரு அறக்கட்டளை. அறை கிடக்க கொஞ்சம் நேரமானது. அதற்குள் எங்காவது குளித்துவிட்டு சிற்றுண்டி சாப்பிடலாமா என்று ரிசப்ஷனில் கேட்டேன். 'செய்யலாம்..பின்புறம் செல்லுங்கள்' என்றார்கள். சரி பின்னால் ஏதோ ஒரு பொது குளியலறை இருக்கும் என்று சென்றால்... என்ன ஆச்சரியம்.. என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை...
அகண்ட கங்கை நதி பிரவாகமெடுத்து ஓடிக்கொண்டிருகிறது.. பின்னால் ஓங்கி உயர்ந்து நிற்கும் இமயமலைச் சாரல்... 'ஒ'வென்ற ஓசையுடன் நகர்துகொண்டிருக்கும் தண்ணீரின் சலசலப்பைத்தவிர வேறெந்த சப்தமும் இல்லை. நான் என்னை மறந்த நிலையில் நின்றுகொண்டிருந்தேன். கங்கை நதியில்தான் என்ன ஒரு கம்பீரம், என்ன ஒரு ரம்யம், இந்தியாவுக்கு இயற்கை அளித்த கொடை இந்த கங்கையும் இமயமும்... சிறிது நேரம் கழித்துதான் நான் பார்ப்பது நிஜம் என்ற உணர்வே வந்தது. ரொம்பநாள் பசியோடு இருந்தவன் அவசரஅவசரமாக உண்பதைப்போல, எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு அந்த இயற்கை கொஞ்சும் எழிலை என் இரு கண்களில் பதித்துக்கொண்டேன். கங்கையின் பயணம் மிகப்பெரியது..இயத்தில் உள்ள பனிப்பாறைகள் உருகி கங்கோத்ரியில் துவங்கி பாகிரதி நதியாக தேவப்பிரயாகை வந்து அடைகிறது. இதோடு இன்னொரு பக்கம் அலக்நந்தா நதி இணைத்துக்கொள்ள அங்கிருந்து கங்கை நதி தன் பயணத்தை துவக்குகிறது. ரிஷிகேஷத்தில் இமயமலையை விட்டு இறங்கி ஹரித்வாரம், கான்பூர், காசி, பாட்னா, கொல்கத்தா வழியாக சென்று, 2500 கி.மீ பயணித்து, வங்காள விரிகுடாவில் கலக்கிறது.. இமயத்திலிருந்து நேரடியாக வருதால் ரிஷிகேசத்தில் மாசுபடாத கங்கை சாம்பல்நிறத்தில் ஓடிக்கொண்டிருகிறது.
சோமானி பவன் பின்புறம் |
கங்கையின் அருகே நின்று ரசிப்பதற்கு ஒரு படித்துறை.. இறங்குவதற்கு சில படிகள். கங்கையின் வளைவு நெளிவுகளூடே இந்தப்படிதுறை கிட்டத்தட்ட ரிஷிகேஷம் முழுவதும் நீண்டுகொண்டே செல்கிறது. அங்கங்கு தூவப்படும் சம்மங்கிப் பூக்கள் நதியோடு பயணித்துக்கொண்டிருகிறது. வெளியில் வெயில்.. ஆனால் கங்கையில் காலை வைத்தால் ரத்தம் உறைந்துபோகுமோ என்று நினைக்கும் அளவுக்கு குளிர்ச்சி...! நம் உடல் உஷ்ணம் அந்த குளிர்த நீருடன் ஒத்துபோவதற்க்கு கொஞ்ச நேரம் பிடிக்கிறது. பிறகென்ன.. ரிஷிகேஷத்தில் இருந்த இரண்டு நாட்களும் கங்கையில் ஆனந்த குளியல்தான்..அந்த சுகானுபவத்தை அனுபவிக்கத்தான் முடியும்.. வார்த்தையில் விவரிக்க முடியாது. அனால் அங்கு கங்கையின் வேகம் அதிகம். இரண்டு படிகளுக்கு மேல் கிழே இறங்கினால் கால் நழுவுகிறது. (ஏதோ படித்துறையில் நின்று கொண்டு குளித்ததையே பெரியதாக நினைத்துக்கொண்டிருந்தேன்.. அனால் அடுத்தநாள் நடு கங்கையில் இறங்கப்போகிறேன் என்று அப்போது தெரியாது.. அதை அடுத்த பதிவில் பாப்போம்)
லக்ஷ்மன் ஜுலா |
ரிஷிகேஷதிலும் சரி ஹரித்வரதிலும் சரி அந்தி சாயும் நேரத்தில் கங்கைக்கு மங்கள ஆரத்தி காண்பிக்கும் நிகழ்ச்சி மிகப்பிரபலம். மாலை கீழே ஹரித்வாருக்கு இறங்கி வந்தோம். ஹரித்வார கங்கை ரிஷிகேஷ் அளவுக்கு சுத்தம் இல்லை.ஆனாலும் ரிஷிகேஷ் போலவே படித்துறைகள்.. அங்கங்கு பல இடங்களில் ஆரத்தி நிகழ்ச்சி நடந்துகொண்டிருகிறது.. மக்கள் சிறு சிறு கூட்டமாக நின்று கொண்டு ஆரத்தியில் கலந்துகொள்கிறார்கள்.. பின் அனைவரும் கங்கையில் இறங்கி ஒரு சிறிய பூக்கூடையில் விளக்கு ஏற்றி நதியில் விடுகிறார்கள்.. கங்கைக்கரை முழுவதும் இந்த பூவிளக்குகள் ஊர்ந்து செல்வதே கொள்ளை அழகு. அதுவும் இருள் சூழ்ந்த கங்கை நதியில் மின்மினிப் பூசிகள் போல அங்கங்கே கண்சிமிட்டிக்கொண்டு நகர்கிறது பூவிளக்குகள். இங்கு கரை முழுவதும் சாமியார்கள் ஆதிக்கம் அதிகம். ஒரு சாமியார் சங்கு ஊதிக்கொண்டிருகிறார்.. ஒரு சாமியார் கங்கைக்கரையில் தியானத்தில் இருக்கிறார்.. ஒருவர் உடல்முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு அகோரி வேடத்தில் கோவணத்துடன் காட்சியளிக்கிறார். இவர்கள் முற்றும் துறந்த சன்யாசிகளா அல்லது பண்டாரங்களா.. இல்லை போலிச் சாமியார்களா.. என்று குழப்பம் ஏற்படுத்தும் கலவை அது.
ரிஷிகேஷிலும் இதுபோல நிறைய இடத்தில் ஆரத்தி நிகழ்சிகள் உண்டு. பரமார்த் என்ற கோவில் அருகே உள்ள படிக்கட்டில் ஆரத்தியுடன் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இங்கு பல வெளிநாட்டவர் கலந்துகொள்கின்றனர். இங்குள்ள ஆசிரமத்தைச் சேர்ந்த பல குருகுல மாணவர்கள் காவி உடை அணிந்து தினமும் மாலையில் கங்கை முன்னால் உள்ள படிக்கட்டுகளில் அமர்து இசை முழங்குகிறார்கள். இசைக்கு தாளமிட்டபடியே படித்துறையை உரசிச்செல்கிறது கங்கை. அதற்கு எதிரே கங்கைக்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் சிவன் சிலை செவ்வானத்தில் பிரகாசிக்கிறது. சூரியன் மறைந்து இருள் கவியும் நேரத்தில் சலசலத்து ஓடும் கங்கையில் நின்று கொண்டு கேட்ட அந்த இசையில் மனம் கரைந்தது. ஏகாந்தம் என்பார்களே.. அது இதுதானோ..
அங்கு வாழும் மக்களுக்கு கங்கைதான் தெய்வம். காலங்காலமாய் தங்களை வாழ்வித்துக்கொண்டிருக்கும் இந்த ஜீவநதியை தினமும் வணங்கி, மலர் தூவி, ஆரத்தி எடுத்து நன்றி தெரிவிக்கிறார்கள். இது ஏதோ சம்பிரதாயத்துக்காக செய்யப்படும் நிகழ்ச்சி அல்ல..'ஜெய் ஜெய் கங்கா மாதா' என்று உள்ளன்புடன் கங்கையை தொட்டு கும்பிடும்போது அவர்கள் வாழ்க்கையில் கங்கையும் ஒரு அங்கம் என்று புரிகிறது.
இனி கங்கையின் நடுவே ஒரு சாகசம்.. பலூன் படகு பயணம்...!
- பயணம் தொடரும்...
மங்கள ஆரத்தி |
காலை நேர கங்கை |
இசை நிகழ்ச்சி |
1 comment:
நீங்கள் கூறுவதை கேட்கும் போது எப்போது இந்த இடத்திற்கு போவோம் என்று ஆவலாக இருக்கிறது. இமயமலை செல்வது என்பது என் நீண்ட நாள் ஆசை.. காசி கூட.
உங்களின் அடுத்த பகுதியை படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.
Post a Comment
உங்கள் கருத்துக்கள்