Monday, December 6, 2010

பலூன் படகு பயணம்

ரிஷிகேஷ் செல்பவர்கள் 'river rafting ' என்னும் பரசமூட்டும் நதி படகு பயணத்தை அனுபவித்தே ஆகவேண்டும். நதியின் வேகத்தோடு பயணிப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை காற்றடைக்கப்பட்ட பலூன் படகுகள். அவை நதியின் சீற்றத்துடன் ஈடுகொடுக்கக்கூடியவை.. பாறைகளில் மோதினாலும் உடையாதவை.. கங்கை நதியில் பலூன் படகு பயணம் செல்ல ரிஷிகேஷத்தில் பல இடங்களில், பல விடுதிகளில் இதற்காக முன்பதிவு செய்துகொள்ளலாம். 12 கி.மீ. பயணத்துக்கு 450 ருபாய், 24 கி.மீ.க்கு 750 ருபாய் என்று விதவிதமான பயணங்கள் உண்டு. சில இடங்களில் கங்கை கரையோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்தில் இரவு தங்கும் வசதியும் உண்டு (ரூ 1000 முதல் 2000 வரை)

நாங்கள் சோமானியா பவனிலேயே பதிவு செய்துகொண்டு காலை 8 மணிக்கு  கிளம்பினோம்.  ஒரு ஜீப்பில் கிளம்பி படகு காற்றடிக்கும் இடத்தை அடைந்தோம்.  எங்களுக்காக ஒரு பெரிய பலூன் படகு தயாராக இருந்தது. அதில் 8பேர்  தாராளமாக  அமர்ந்துகொள்ளலாம்.  சிலர் அந்த பலூன் படகை எடுத்து ஜீப்பின் மேல் போட்டார்கள்.. துடுப்புகளை ஜீப்பின் பின்னால் போட்டு விட்டு நம்மோடு ஏறிக்கொண்டார்கள். ஒரு அரைமணிநேரம் மலைமேல் பயணித்து பிரம்மபுரி (ரிஷிகேஷிலிருந்து 12  கி.மீ) என்ற இடத்தை அடைத்தோம். பிறகு ஒரு மலைச்சரிவில் இரண்டு பேர் படகைத் தூக்கிக்கொண்டு வர நாங்கள் துடுப்புகளை எடுத்துகொண்டு நடந்தோம்.. அதோ.. அழகிய கங்கை நங்கை மலைகளூடே ஆர்பரித்து வந்து கொண்டிருகிறாள். காலைக்கதிரில் கங்கை நதி தங்க நதியாக உருகி ஓடிவருவதை  காணும்போது மனம் குதூகலித்தாலும், அதன் நடுவே பயணிக்க வேண்டும் என்றவுடன் லேசாக பயம் கவ்விக்கொண்டது. கரையை அடைந்ததும் அனைவரும் 'லைப் ஜாக்கெட்' மற்றும் தலைகவசம் அணிந்துகொண்டோம்.  படகை ஆற்றங்கரையில் வைத்துவிட்டு காலை எங்கு வைக்கவேண்டும், துடுப்பை எப்படி செலுத்தவேண்டும் என்கிற  வழிமுறைகளை ஆங்கிலம் கலந்த இந்தியில் சொன்னார்கள். பிறகு நம் செல்போன், பர்ஸ், கேமிரா எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு ஒரு பையில் போட்டு பின்னால் வைத்து விடுகிறார்கள்.

எல்லோரும் படகில் உட்கார்துகொண்டு துடுப்பை கையில் பிடித்துகொண்டோம். 'ஹோய்' என்ற சத்தத்துடன் படகை இரண்டுபேர் தள்ளிவிட படகு கங்கையில் மிதக்கத் தொடங்கியது... கொஞ்சம் துடுப்பு போட்டவுடன் படகு வேகமாக நகரத்தொடங்கியது. தெளிவான  குளிர்ந்த  தண்ணீர்  நம்மீது தூறல் போட்டுக்கொண்டே  வந்தது..  மெதுவாக  நகர்ந்து நகர்ந்து இப்போது நடு கங்கைக்கு வந்து விட்டோம்.  ஒரு இளைஞர் கூட்டம் நம்மை விட அதிவேகத்தில் படகை செலுத்திக்கொண்டு கைஅசைத்துக்கொண்டே விரைவாக கடந்து சென்றனர். நாங்கள் என்னவோ மெதுவாகத்தான் துடுப்பு போட்டுக்கொண்டிருந்தோம். நதியும் ஆர்பட்டமிலாமல் எங்களுடன் சமாதானமாக இருந்தது.   'அமைதியான நதியினிலே ஓடம்' என்று நான் பாட நினைத்ததுதான் தாமதம். அதுவரை அமைதியாக இருந்த நதி ஒரு வளைவு வந்ததும் தன் சீற்றத்தை மெல்ல ஆரம்பித்ததும் படகும் துள்ளிக்குதிக்க ஆரம்பித்தது. கொஞ்ச நேரம்தான்... ஆர்பரித்துவரும் நதியலையில் மோதி படகு செங்குத்தாக மேலே ஏறி இறங்கியது.. அவ்வளவுதான்.. எங்களை கடந்து சென்ற ஒரு பேரலை எங்களை தொப்பலாக நனைத்து விட்டது.  பின் 'அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்' என்று பாடினேன்.

அந்த வளைவைக் கடந்ததும் கங்கை கொஞ்சம் அமைதியானது.. 'வேண்டுமென்றால் நீங்கள் இறங்கலாம்' என்று சமிக்கை கொடுத்தார் படகுக்காரர். அருகிலிருந்த ஒருவர் 'தொப்' என்று நதியில் குதித்து படகிலிருந்த கயிறை பிடித்துக்கொண்டார்..  பின்  படகின்  பின்னால் நீந்திக்கொண்டே வந்தார்.. நானும் இறங்கலாமா என்று யோசிப்பதற்குள் 'நதியின் வேகம் கூடிவிட்டது.. படகில் ஏறுங்கள்' என்ற அறிவிப்பு வந்தது. கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு இடத்தில் சில பாறைகள் தெரிந்தன. கடல் அலைகள் சுவரில் மோதினால் ஏற்படுமே அதுபோல உயர அலைகள். படகு நிலைகொள்ளாமல் ஆடியது.. படகுக்காரர்கள் லாவகமாக படகை திசை திருப்பினார்கள். நாங்கள் கையில் துடுப்பை வைத்துகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். மீண்டும் ஒரு வளைவு.. அதே ரோலர் கோஸ்டர் பயணம்... இப்படி பல ரோலர் கோஸ்டர் பயணத்தில் எங்களுடன் மோதிய அலைகள்  எங்களை  சொட்ட சொட்ட நனைய வைத்துவிட்டது.  செல்போன், கேமிராவை தனியாக எடுத்து வைத்ததன்  அர்த்தம் புரிந்தது.

இப்போது நாங்கள் லக்ஷ்மன் ஜூலாவை கடந்து விட்டோம்.. நீரின் வேகம்  குறைந்தவுடன்  'இறங்கலாம்' என்றார் படகுக்காரர். இந்தமுறை நான் தயாராகிவிட்டேன். கயிறை பிடித்துகொண்டு நடு கங்கையில் குதித்தேன். உடல் முழுவதும் ஜில் என்ற பரவசம்.. காலுக்கு அடியில் பல அடி ஆழம் இருக்கும் என்று தெரிந்தது (50௦அடியாம்). லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் ஜாலியாக மிதந்து கொண்டிருந்தேன். ஐந்து நிமிடம்தான்.. அச்சம், குளிர் எல்லாம் பறந்து விட்டது. இப்போது கயிறையும் விட்டு விட்டு ஆனதமாக நடு கங்கையில் நீந்திக்கொண்டிருந்தேன். படகை விட்டு கொஞ்ச தூரம் தள்ளி மிதக்கும் அளவுக்கு தைரியம் வந்தது. எப்படியும் மார்புக்கு மேலே தண்ணீர் போகாது என்கிற தைரியம்... அலுக்க சலிக்க கங்கையில் நீந்திவிட்டு பின் படகில் ஏறிக்கொண்டேன். கிட்டத்தட்ட ஒரு மணிநேர பயணத்துக்குப் பிறகு கடைசியாக எங்களை நாங்கள் தங்கியிருந்த விடுதியின் பின்புறம் இறக்கி விட்டதுதான் பரவசத்தின் உச்சகட்டம்.

ஏதோ கங்காஸ்நானம் என்று சொல்லிக்கொண்டு தம்மாதூண்டு சொம்பில் கங்கைநீரைக் கொண்டுவந்து தலையில் தெளித்துக்கொள்வார்களே... அதெல்லாம் வீண்... இனி ஏழேழு ஜன்மங்களுக்கும் சேர்த்து கங்காஸ்நானம் செய்தாகிவிட்டது. அவ்வளவு முறை கங்கையில் முங்கி எழுந்தாகிவிட்டது.

ரிஷிகேஷ் செல்பவர்கள் பலூன் படகு சவாரியை அனுபவிக்காமல் வாராதீர்கள். சில  யோசனைகள் - நதியில் இறக்கிவிடுவீர்களா என்று முன்பே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.. சாதாரண கனமில்லாத உடைகளையே  அணிந்துகொள்ளுங்கள்..  ஜீன்ஸ் வேண்டாம்.. ஷூ வேண்டாம்.. செருப்பு அணிந்து கொள்ளுங்கள்..

இனி மொகலாய ஆட்சியின் சின்னம்.. ஆக்ரா நகரம்..!

- பயணம் தொடரும்...

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்