Sunday, February 7, 2016

'கெத்து'க்காக ஒரு கூத்து



ஒருவழியாக 'கெத்து' என்பது தமிழ்தான் என்று நீதிமன்றம் சொல்லி விட்டது. பல தரப்பட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு, திருப்புகழ், திருக்குறள், தொல்காப்பியம் போன்ற இலக்கியங்களை அலசி ஆய்வு செய்து இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது. 'கெத்து' என்ற திரைப்படம் தமிழா இல்லையா என்பதை கண்டுபிடிபதற்காக  நடந்த கூத்து இது.

கடந்த தி.மு.க ஆட்சியில், தமிழ் படத்துக்கு தமிழில் பெயர் வைத்ததால் வரிவிலக்கு என்று அறிவித்தார் கருணாநிதி. உடனே திரையுலகம் திரண்டுபோய் அவரை பாராட்டினார்கள். அதே சமயத்தில் சென்னை மாநகராட்சி, கடைகளின் பெயர் தமிழில் எழுதப்பட வேண்டும், பெயர் மட்டுமில்லாமல் அது என்ன கடை என்பதையும் தமிழில் இருக்க வேண்டும் என்று ஆணை பிறபித்தது. (அதாவது மெடிக்கல் ஷாப் என்பது மருந்தகம் என்றும் ஜெராக்ஸ் ஷாப் நகலகம் என்றும் இருக்க வேண்டும்). இல்லையென்றால் கடை உரிமம் ரத்து செய்யப்படும். அதாவது தமிழ் தலைப்புக்காக ஒரு துறையினருக்கு மட்டும் சலுகை மற்றொரு துறையினருக்கு தண்டனை  என்ற விசித்திரமான கொள்கையை கடைபிடித்தது. தமிழில் பெயர் வைக்காவிட்டால் அந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்றெல்லாம் உத்தரவு போட அந்த அரசுக்கு தைரியம் இல்லை.

சென்னையில் கடைகளில் பெயர்கள் அழகூட்டு நிலையம் (பியுட்டி பார்லர்), அடுமனை (பேக்கிரி),  நொறுவைகள் (ஸ்நாக்ஸ்) என்றல்லாம் மாறின, இதற்க்கு மாநகராட்சியும் பல யோசனைகளை சொன்னது. ஆனால் சினிமா பெயரில் பல குளறுபடிகள். ஒரு கதாபாத்திரத்தின் பெயர் சினிமா தலைப்பாக இருந்தாலும் வரிவிலக்கு என்றது. இதன்படி 'நிக்காலோவ் ப்ரஷ்னொவொச்கி' என்று ஒரு தமிழ்ப்படம் வந்தாலும் வரிவிலக்கு  உண்டு. 'சந்தோஷ்' என்று ஒரு படம் இருந்தால் வரிவிலக்கு, 'சந்தோஷம்' என்றால் கிடையாது (சந்தோஷம் என்பது வடமொழிச் சொல்).

அடுத்தது அதிமுக ஆட்சி வந்தது. திமுக எதை செய்தாலும் அதை மாற்றவேண்டும் என்ற 'அம்மா அரசியல் சாசனத்தின்' படி தமிழ் பெயரோடு 'U' சர்டிபிகேட் வழங்கப்பட்ட திரைப்படங்களுக்குதான் வரிவிலக்கு என்றார் ஜெயலலிதா. கூடுதலாக, கதையின் கரு தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்,  வசனங்கள் தமிழில் இருக்கவேண்டும் என்றெல்லாம் சொன்னார். தமிழ் கலாச்சாரம் என்ன என்பதற்கெல்லாம் ஒரு வரையறையே கிடையாது. இதுவரை விலக்கு வாங்கிய எந்த படத்திலும் தமிழ் பண்பாடு இருக்கிறதா என்று ஆராய்ந்தது கிடையாது. 'டங்காமாரி ஊதாரி', 'ஆலுமா டோலுமா' படங்களும், டாஸ்மாக் காட்சிகள் இருக்கின்ற படங்களுக்கும் வரிவிலக்கு கிடைக்கும். படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச வசங்கள் இருக்கலாம். ஆனால் அதெல்லாம் தமிழில் இருந்தால் சலுகை கிடைக்கும். இதுதான் சட்டம்.

இந்த நிலையில்தான் 'கெத்து' தமிழே இல்லை என்று அரசு கத்த, தயாரிப்பாளர்கள் கெத்தாக நீதிமன்றம் ஏற, இந்த வெத்து விஷயத்துக்காக அரசாங்க வக்கீல்கள் வாதாட, நீதிமன்றம் அரசாணையை ரத்து செய்ய, இந்த இத்துப்போன சமாச்சாரத்துக்கா இத்தனை கூத்து என மக்கள் பித்து பிடித்து போய் நின்றனர்.

1 comment:

Cinema Virumbi said...

ரவி,

"கெத்து" ஆதியில் ஒரு கன்னட வார்த்தை என்கிறார்கள்! ஒரு கர்நாடகா தமிழ் நண்பர் என்னிடம் பேசும் போது "கலீஜ்" என்ற மெட்ராஸ் பாஷைச் சொல் கன்னடத்தில் தினசரிப் புழக்கத்தில் உள்ள, அதே பொருள் கொண்ட சொல் என்றார்! மெர்சலாயிட்டேன்!

சினிமா விரும்பி

Post a Comment

உங்கள் கருத்துக்கள்