
இந்த வாரம் ஆனந்த விகடனில் 37 வருடங்களுக்கு முன்னால் உலகை உலுக்கிய வியட்நாம் யுத்தப் புகைப்படத்தில் தோன்றும் சிறுமியின் பேட்டி வெளியாகியிருக்கிறது.. அதைப் படித்தவுடன் சில எண்ணங்கள்..
உலகில் நடக்கும் பல போர்க்குற்றங்களை, இயற்கையின் சீரழிவை, பல கட்டுரைகள் விளக்க முடியாததை ஒருசில புகைப்படங்கள் விளக்கி விடும். விஷுவல் மீடியாவுக்கு அந்த அளவுக்கு வலிமை உண்டு. நேபாம் குண்டு வெடித்து தீக்காயங்களுடன் ஓடிவரும் இந்த சிறுமியின் புகைப்படம் அமெரிக்காவையே உலுக்கியது. வியட்நாம் யுத்தம் முடிவுக்குவர இதுவும் ஒரு காரணமாக இருந்ததது. அதேபோல், இராக் போர்கைதிகளை அமெரிக்கா நடத்திய விதத்தை பலர் விமர்சனம் செய்தாலும், இந்த புகைப்படம் வெளிவந்த பிறகுதான் சில மாற்றங்கள் ஏற்பட்டது.
விஷவாயு தாக்கிய ஒரு குழந்தையை புதைக்கும் இந்தப் படம் போபால் துயரத்தை உலகுக்கு உணர்த்தியது. சூடானில் சிறுவன் சாவுக்காக காத்திருக்கும் கழுகின் படம் பஞ்சத்தின் கொடுமையை உணர்த்தியது. (இதை எடுத்த புகைப்படக்காரர் மூன்று மாதங்களில் தற்கொலை செய்துகொண்டார்).
ஆனால் இதைவிட அவலம் மிகுந்த போர்குற்றங்கள், போர்கைதிகளை நடத்தியவிதம், பாலியல் கொடுமைகள் எல்லாம் நடந்து முடிந்த இலங்கையில் இது போன்ற ஒரு ஆவணம் கிடைக்கவில்லை. கிளஸ்டர் குண்டுவீச்சு, விசாரணை என்றபெயரில் வன்கொடுமைகள், குழந்தைகள் நோயாளிகள் மீது குண்டுவீச்சு போன்றவை கட்டுரை மட்டும் பேட்டிகள் மூலம் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறதே தவிர, இது போல ஒரு விஷுவல் பதிவு இல்லை. இதை உணர்ந்துதான், இலங்கை அரசு எந்த ஒரு பத்திரிகையாளரையும், ஏன் தொண்டு நிறுவனங்களைக்கூட நெருங்க விடவில்லை.
தனக்கு ஏற்பட்ட அவலங்களை சொல்லிக்கொள்ளக் கூட இதுபோல ஒரு ஆவணம் இல்லை என்பதுதான் இலங்கைத் தமிழனின் வரலாற்றுக் கொடுமை...!