Saturday, December 26, 2015

'பீப்' குற்றம்... யார் குற்றம்?


நான் அந்த பீப் பாடலைக் கேட்கவில்லை... ஏதோ நான்கு பேர் இணையத்தில் கேட்ட பாடலை, நான்கு கோடி பேர் கேட்கவைத்த புரட்சியில் நான்கு கோடியே ஒன்றாவது நபராக நான் சேர விரும்பவில்லை..  தேவையில்லாமல் அதைக் கேட்டு கூகுள் தேடலிலும் ஹிட் ரேட்டிலும் முதலாவதாக கொண்டு செல்வதற்கு நான் பங்களிக்கவில்லை.. அனால் அந்த பாடலில் விமர்சனங்களிருந்து அது எவ்வளவு கேவலமான பாடலாக இருக்க முடியும் என்று என்னால் யூகிக்க முடிகிறது.

இது போன்ற கேவலங்கள் நம் தமிழ் சினிமாவிலும் தொலைகாட்சித் தொடர்களிலும் பல காலமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது.. என்றைக்கு நம் சினிமாக்களில் பெண்களை உயர்வாக சித்தரிதிருக்கிறார்கள்? விரல் விட்டு எண்ணி விடலாம்..

" ஃ பிகர் ஃ பிகருதான்... நீ சூப்பர் ஃ பிகருதான்.." என்று 20 வருடங்களுக்கு முன்னரே ரஜினி பாடியபோது யாரும் பெண்களுக்கு எதிரான அவதூறு என்று யாரும் நினைக்கவில்லை... 'டாடி மம்மி வீட்டில் இல்லை..விளையாடுவோமா உள்ள' என்றபோதும், 'அடிடா அவள.. வெட்றா அவள..' என்றபோது யாரும் சலசலக்கவில்லை. தமிழ் சினிமாவில் காமெடி சீன் என்ற பெயரில் பெண்களையும் உறவுகளையும் மிக மிக கீழ்த்தரமாக சித்தரிக்கக்கூடிய அருவருக்கத்தக்க வசனங்கள், காட்சிகள் வந்தபோது யாருக்கும் ரத்தம் கொதிக்கவில்லை..மாறாக அதை தினம் தினம் காமெடி சேனல்களில் குடும்பத்துடன் ரசித்துக்கொண்டிருகிறோம். அமெரிகாவில் பீப் சாங் மாதிரி பாடல்கள் கூட நிறைய வந்திருகிறது.. அனால் நம்மைப்போல அசிங்கமான காமெடி சீன்கள் ஆங்கிலப்படத்தில் வந்ததாக தெரியவில்லை... தமிழ், தமிழர்கள், தமிழ் கலாச்சராம் இவை எதுவுமே அறியாத ஒரு வெளிநாட்டவரிடம் நம் தமிழ் சினிமாவின் காமெடி சீன்களை மட்டும்  போட்டுக்காட்டினால், "உலகிலேயே மிக கீழ்தரமான கலாச்சாரம் இந்த தமிழ் கலாச்சாரம்' என்பார். அவ்வளவு ஆபாசம்.. அவ்வளவு அருவருப்பு..!

ஆனால் இப்போது மட்டும் ஏதோ தீடீரென்று ஞானோதயம் வந்தது போல எல்லாரும் குதிக்கிறார்கள்.. இதுவரை கெடாத கலாச்சாரம் இப்போது கெட்டுவிட்டது என்று புலம்புகிறார்கள்.. இது போன்ற பாடல்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டியதுதான்.. இல்லையென்று சொல்லவில்லை.. ஆனால் சிம்பு அனிருத் என்ற இரு நபர்களையும் தனிமைபடுத்தி 'மாட்டினான்டா மன்னாரு' என்பதுபோல அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள்.. இதுவரை 'தழைத்தோங்கிய' கலாச்சாரத்தை இந்த இருவர் மட்டும் சீரழித்து விட்டதாக பொருமுகிறார்கள்.. அவர்கள் படத்துக்கு செருப்பு மாலை போடுகிறார்கள்... துடைப்பத்தால் அடிக்கிறார்கள்.. கொடும்பாவி எரிக்கிரார்கள் .. இன்னும் ஒரு படி மேலேபோய் சிலர் இருவரையும் தூக்கிலிட வேண்டும் என்கின்றனர்.

யூ டியுபில் வெளியான யாரும் அறியாத ஒரு பாடலினால் 'கலாச்சாரம் கெட்டுவிட்டது' என்றால் உருவபொம்மை எரிப்பதும் செருப்பு மாலை போடுவதும் என்ன மிக உயர்வான கலாச்சாரமா? இந்த வன்முறை கலாச்சாரம்  எந்த பண்பாட்டில் சொல்லப்பட்டிருகிறது? ஒருவன் உருவபொம்மையை எரிப்பது அவனையே எரிப்பதற்கான குறியீடு..ஒருவனை தூக்கில் போடவேண்டும் என்று சொல்லவதற்கு நீங்கள் என்ன நீதிபதிகளா? பல ஆயிரம் தமிழர்களை கொன்ற ராஜபக்சேவின் உருவபொம்மை எரித்தோம்.. சிம்புவின் உருவபொம்மையும் எரிக்கிறோம்.. பாகிஸ்தானிலிருந்து வந்து மும்பையில் பயங்கரவாதம் நடத்திய கசாப்பை தூக்கிலிட்டோம். இப்போது சிம்புவையும் தூக்கில் போட வேண்டும் என்கிறோம். இது என்ன உயர்ந்த கலாச்சாரம்? சிம்புவின் பாட்டு, இதுவரை சினிமாவில் இருந்துகொண்டிருந்த ஆபாசங்களின் உச்சம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.. அனால் இதுவரை எதற்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டது யார் குற்றம்? இதுவரை அதை அமோதித்து ரசித்து பார்த்தது யார் குற்றம்? சிம்புவின் குற்றமா?

இது இப்படியென்றால்... வழக்கம் போல இந்த பிரச்சனையிலும் நம் சட்டம், காவல் துறை எல்லாமே சந்தி சிரிக்கிறது. ஒரே பிரச்சனைக்காக பல நபர்கள் பல ஊர் நீதிமன்றகளிலிருந்து வழக்கு தொடர்வதை சட்டம் எப்படி அனுமதிக்கிறது என்றே புரியவில்லை.. வேண்டுமென்றே ஒருவரை ஊர் ஊராக அலைய விடுவதைத் தவிர வேறு என்ன எண்ணம் இருக்க முடியும்? இதேபோல் பலர் பல காவல் நிலையங்களில் FIR பதிவு செய்கிரார்கள் ... எல்லா சட்ட ஒழுங்கு பிரச்னையும் விட்டு விட்டு நம் காவல் துறை வேறு சிம்புவை கைது செய்வதற்கு 5 தனிப்படை அமைத்திருக்கிறதாம் (?)... இவ்வளவு தனிப்படை அமைத்தும் மூன்று வாரங்களாக சிம்புவையே பிடிக்க முடியாத  இவர்கள்...??  சரி வேண்டாம்...! ஆனால்   "விஷயம் இது இல்லை.. நம் காவல் துறை நினைத்தால் யாரையும் உடனடியாக கைது செய்ய முடியும்.. இந்தப்பாடலை யூடியூபில் அப்லோட் செய்தது யார் என்பதை சில மணிகளில் கண்டுபிடித்து விட முடியும்.. ஆனால் சென்னை மழை விமர்சனங்களை  மறக்கடிக்க பீப் சர்ச்சையை லைம்லைட்டில் வைத்திருக்கிறார்கள்" என்று வரும் செய்திகளை நம்பாமல் இருக்க முடியவில்லை...

இதுவரை நாம் அனுமதித்த, வளர்த்து விட்ட ஆபாசங்களுக்கு ஒத்து ஊதியதுதான் பீப் பாடல்... ஆனால் அசல் 'பீப்'கள் ஒதுங்கிக்கொள்ள ஒத்து ஊதியவன் மாட்டிக்கொண்டான்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்