Thursday, December 17, 2015

சென்னை மழை உணர்த்தும் உண்மைகள்



ஒரு மழை எதையெல்லாம் உணர்த முடியும்? இதுவரை உலகில் கொட்டிய மழை என்ன உணர்த்தியதோ தெரியவில்லை... ஆனால் சென்னை பெருமழை பல விஷயங்களை  உணர்த்தியது. செயல்படாத ஒரு அரசாங்கத்தை, மக்கள் கோபத்தை, இளைஞர்களின் எழுச்சியை, சமூக வலைதளங்களின் வலிமையை, சாதி மதம் அற்ற தன்மையை... இன்னும் பல பல...!  இதுவரை அமைதியாக இருந்தவர்கள் எல்லாம் இந்த அரசை தூற்றிக்கொண்டிருக்கிறார்கள். மந்திரிகள் காரை மறித்து நியாயம் கேட்கிறார்கள்... கவுன்சிலர்களை அடித்து துரத்துகிறார்கள்.... அரசாங்கம் அரண்டு கிடக்கிறது... மக்களை சந்திக்க அச்சப்படுகிறது. இப்படி ஒரு வீரியத்தை நமக்குள் விதைத்திருக்கிறது சென்னை மழை. ஆனால் இந்த வீரியமும் இந்த எழுச்சியும் இந்த ஒற்றுமையும் நமக்குள் எப்போதும் இருந்திருந்தால் இன்று துளியளவேனும் மக்களைக் கண்டு பயப்படும் அரசு நமக்குக் கிடைத்திருக்கும். ஓரளவுக்கு செயல்படும் அமைச்சர்களும் அதிகாரிகளும் கிடைத்திருப்பார்கள். நாம் அதை செய்ய தவறியதால்தான் இப்போது இந்த பாதுகாப்பற்ற நேரங்களை கடந்துகொண்டிருக்கிறோம். நாம் செய்த தவறுதான் என்ன? எல்லாவற்றிக்கும் நாம் சரியான சமயத்தில் சரியான கோணத்தில் கேள்வி கேட்காததே காரணம்.

ஒரு ஐந்து ஆண்டுகள் பின்னோக்கி செல்வோம்...!

அப்போது  மத்தியில் காங்கிரஸ் அரசும் மாநிலத்தில் திமுக அரசும் பல விஷயங்களில் சறுக்கிக்கொண்ருந்தது. திமுகவின் ஊழல்கள், இலங்கை பிரச்னையில் அவர்கள் நடந்துகொண்ட விதம், குடும்ப அரசியல் போன்றவை காரசாரமாக விவாதிக்கப்பட்டது ... தீவிரமாக விமர்சிக்கப்பட்டது. பல ஊடகங்கள் மூன்று வருடங்களாகவே திமுக அரசை பலமாக எச்சரித்துக்கொண்டிருந்தது. இப்போதுள்ள அளவுக்கு சமூகவலைத்தளங்கள் அப்போது  இல்லாவிட்டாலும் நாமும் நம் பங்குக்கு கடுமையாக அதே சமயம் உண்மையாக விமர்சித்தோம். விளைவு திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று தீர்மானித்தோம்.

யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்த நம்மால், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் தெளிவாக முடிவெடுக்க முடியவில்லை. அதிமுகவை மீண்டும் தேர்ந்தெடுத்தோம். முன்றைய ஆட்சிகளில் தான் செய்த தவறை ஜெயலலிதா மீண்டும் செய்ய மாட்டார் என்று நம்பினோம். அவர் திருந்தி விடுவார் என்று பல ஊடகங்களும் அரசியல் வல்லுனர்களும் ஆருடம் சொன்னர்கள். ஆனால் தான் ஒரு 'புதிய ஜெயலலிதா' என்றெல்லாம் அவர் காட்டிக்கொள்ள கூட விருப்பப்படவில்லை. திமுக ஆட்சியில் இருந்தபோது கூட ஒரு எதிர்கட்சித் தலைவராக எந்த கடமையும் செய்யவில்லை.. சட்டசபை செல்லவில்லை.. திமுக பல விஷயங்களில்  தவறு செய்தபோது போராட்டங்கள் என்று எதையும் பெரிதாக நடத்தவில்லை... ஆனாலும் அவரை நம்பினோம்... ஆட்சியில் அமரவைத்து அழகு பார்த்தோம். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த விமர்சன வீரியத்தை மறந்து விட்டோம்.   

முதலில் ஆரமித்த குளறுபடி சமச்சீர் கல்வியில்..! பாட புத்தகங்களில் வேண்டாத பக்கங்களில் ஸ்டிக்கர் ஒட்டும்பணி அப்போதே தொடங்கி விட்டது. உரிய நேரத்தில் பாட புத்தகங்கள் போகாமல், எதை எடுப்பது எதை விடுப்பது என்று ஆசியர்களுக்குத் தெரியாமல், கிட்டத்தட்ட  நான்கு  மாதங்கள் பள்ளிகளில் பாடமே நடைபெறாமல் இருந்தது. இது எவ்ளளவு பெரிய கொடூர செயல்?  இதை தீவிரமாக எதிர்ப்பதற்கோ, இந்த பிரச்னையை தேசிய அளவில்  எடுத்துச் செல்வதற்கோ நாமும் தயாராக இல்லை... ஊடகங்களும் முயற்சி செயவில்லை.. மாணவர்களின் கல்வியையே பாதிக்கும் இந்த விஷயத்தை  வெறும் முணுமுணுப்போடு கடந்து சென்றோம்.

அடுத்து, கடந்தஆட்சியில் கொண்டுவந்த மதுரவாயில் பறக்கும் சாலை திட்டம், நிதி நகரம், வானூர்தி மண்டலம், துணை நகர திட்டம், புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூலகம் எல்லாம் முடக்கப்பட்டபோது, 'யாரோ இரண்டு பேருக்குள் நடக்கும் தெருச்சண்டை' என்று கிண்டல் செய்து வசதியாக தப்பித்தோம். இந்த திட்டங்கள் எல்லாம் ஏன் நிறுத்துகிறீர்கள் என்ற நம் கோபத்தை அழுத்தமாக பதிவு செய்யக்கூட நம்மால் முடியவில்லை.      
ஒரு இளம்பெண் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிவீசப்பட்ட தகவல் தெரிந்ததும் தில்லி போர்க்களமாக மாறியது.. தில்லி மாணவர்கள் பெரும் திரளாக வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஷீலா தீட்சித் அரசு கவிழ்வதற்கு அதுவே காரணமாக இருந்தது. இது நடந்து சில மாதங்களில் சென்னையில் டி.சி.எஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு சிறுசேரி அருகே ஒரு புதரில் வீசி எறியப்பட்டாள். சில நாட்கள் கழித்து அழுகிய  பிணம் கண்டுபிடிக்கப்பட்டது. நாம் தில்லி  மக்கள் போல பொங்கி எழவேண்டாம்... குறைந்த பட்சம் இந்த அரசு பெண்களுக்கு என்ன பாதுகாப்பு கொடுக்கப்போகிறது என்றாவது விவாதம் செய்திருக்க வேண்டுமே... ம்ஹீம்... யாரோ பெண்ணுக்கு ஏதோ நேர்ந்தால் நமக்கென்ன கவலை என்று மௌனம் காத்தோம். ஜெயலலிதாவும் வழக்கம்போல அந்த அவள் குடும்பத்துக்கு 3 லட்சம் கொடுத்து பிரச்னையை தீர்த்து வைத்தார்.

சதுரங்க விளையாட்டில் காய்களை நகர்த்துவது போல தன் மந்திரிகளை மாற்றிக்கொண்டே இருந்தார் ஜெயலலிதா. நான்கு ஆண்டுகளில் கல்வி அமைச்சர்கள் நான்கு முறை, தொழில்துறை அமைச்சர்கள் முன்று முறை மாற்றப்பட்டனர்... செல்போன் கூட இயக்கத் தெரியாதவர் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரானார். இப்படி இருந்தால் தமிழ்நாட்டில் எப்படி கல்வியும் தொழிலும் முன்னேறும் என்று நாம் வெகுண்டு எழவில்லை. ஒவ்வொருமுறை அமைச்சரவை மாறும் போதும் ஏன் என்று நாம் கேட்கவும் இல்லை... முதல்வர் காரணத்தை சொல்லவும் இல்லை.. அமைச்சர் கூட்டம் அதிகாரிகள் கூட்டம் எல்லாம் அடிமைகூட்டமாக மாறியது.

இலவசமாக டிவி கொடுத்த கருணாநிதியை வன்மையாக கண்டித்த நாம், ஜெ ஆட்சியில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி,ஆடு, கோழி, லாப்டாப் என்று விரிவைடைந்த போது , 'ஆமாம்.. இந்த கழகங்களே இப்படிதான்.. இலவசங்களைக் கொடுத்து  எல்லாரையும் கெடுக்கறாங்க ...!" என்ற மென்மையான  கருத்துடன் நிறுத்திக்கொண்டோம். 'அம்மா' என்ற சொல் ஏதோ ஒரு கார்ப்ரேட் பிராண்ட் போல தன் எல்லா  திட்டத்துக்கும் ஜெயலலிதா தன் பட்டப்பெயரை வைத்தார் (டாஸ்மாக் தவிர). அம்மா கேன்டீன், அம்மா காய்கறி, அம்மா தண்ணீர், அம்மா உப்பு, அம்மா மருந்து, என்று பட்டியல் நீண்டுகொண்டே  போனபோது, நாமும் அடுத்து என்ன ரிலீஸ் இருக்கும் என்று ஏதோ புதுப்பட ரிலீஸ் போல ஜாலியாக யூகித்து facebook ல் அரட்டை அடித்தோம். டாஸ்மாக் தவிர எல்லா இடங்களும் அம்மா படத்தை ஒட்டினார்கள். மாணவர்களுடைய பேரூந்து அட்டையைக் கூட விட்டு வைக்கவில்லை. நாம் வாட்ஸ்அப் மிம்ஸ் சை தாண்டி வேறு எதுவம் செய்லவில்லை.


இதற்கு நடுவில் நாடாளுமன்ற தேர்தல் வந்தது. என் நண்பர் ஒருவர் "அம்மா கேண்டின் செம்ம ஹிட்...!  இட்லி சாம்பார் செம டேஸ்ட் .. இத வெச்சே இந்த முறை அம்மா வோட்டு அள்ளிடுவாங்க பாருங்க...!" என்றார்.. இலவசங்களை கேலி செய்யும் பல படித்த நண்பர்களும் அதை ஆமோதித்தனர். சாம்பார் ருசியை வைத்து இந்தியாவின் பிரதம மந்திரியைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்கும் கூட தள்ளப்பட்டோம்.

ஒன்று, காங்கிரஸ்க்கு க்கு ஒரு மாற்று வேண்டும் என்று பிஜேபி க்கு வோட்டு போடலாம், அல்லது என்ன இருத்தலும் காங்கிரசை விட்டால் வேறு வழியில்லை என்று காங்கிரஸ்க்கு வோட்டு போடலாம். இல்லை காங்கிரஸ்சும் வேண்டாம் பிஜேபியும் வேண்டாம் என்று எதாவது ஒரு மூன்றாவது அணிக்கும் வோட்டு போடலாம். அனால் எந்த கூட்டணியிலும் இல்லாத பிராந்திய கட்சியான அதிமுகவுக்கு அமோகமாக ஆதரவு அளித்து  37 உறுபினர்களை (அல்லது 37 அடிமைகளை) பாராளுமன்றத்துக்கு அனுப்பி இந்தியாவின் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும்  கொடுத்தது நாம்தான்...!. அனால் அந்த 37 பேர் என்ன ஆனார்கள் என்று நாம் கவலைப்படவில்லை. இப்போது எழும் 'திமுகவும் வேண்டாம் அதிமுகவும் வேண்டாம்' என்ற கோஷம் கடந்த சட்டசபை தேர்தலில் மட்டுமல்ல, நாடாளுமன்ற தேர்தலிலும் எழவில்லை.


'இந்தியாவிலேயே முதன் முறையாக' என்று சொல்லிகொள்ளும் அளவுக்கு பல அசிங்கங்கள் அரங்கேறின. பேருந்திலும் எம்ஜிஆர் சமாதியிலும் இரட்டை இலை சின்னத்தைப் பதித்து விட்டு, அது வெறும் செடிகொடி, குதிரை இறக்கை என்றெல்லாம் நீதிமன்றத்தில் கூச்சமே இல்லாமல் வாதாடினார்கள். அது கட்சி சின்னம் போல தோன்றுவதால் தேர்தல் நேரத்திலாவது அதை மறைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கண்டித்தத்தை அடுத்து, இலையை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்தார்கள். அதிமுக அரசு ஒட்டிய இரண்டாவது ஸ்டிக்கர் அது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் ஸ்டிக்கர் பிய்த்து எறியப்பட்டது. இடையில் ஊழல் வழக்கில் ஜெயலலிதா பதவி இழந்தார். பதவி இழந்தும் தன்னை 'மக்கள் முதல்வர்' என்று அறிவித்துக்கொள்வது, அமைச்சர்கள்  காவடிஎடுத்து, மண்சோறு சாப்பிட்டு சட்டையில்லாமல் மண்ணில் அங்கபிரதக்ஷணம் செய்ததெல்லாம் இதுவரை இந்தியா கண்டிராத ஒன்று. இந்திய அரசியல் சட்டத்தைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல், தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்புகள் எல்லாம் முதல்வராக ஜெ வே நீடித்தார். ஒரு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை... ஒரு கோப்பும் நகரவில்லை.. மெட்ரோ ரயில் ஓடவில்லை.. முதலீட்டாளர் மாநாடு நடக்கவில்லை.. எதைப்பற்றியும் யாரும் கவலை கொள்ளவில்லை.. தண்டனை கிடைத்தது ஜெயலலிதாவுக்கா இல்லை மக்களுக்கா என்று நினைக்கும் அளவுக்கு ஒரு மாநில அரசே எட்டு மாத காலம் முழுமையாக ஸ்தம்பித்தது. அமைச்சர்கள்  கோவில் கோவிலாக ஏறி இறங்கியதைத் தவிர  வேறு எதுவும் செய்யவில்லை. நாமும் புரட்சியெல்லாம் ஏதும் செய்யவில்லை... அமைதி காத்தோம்...!

மீண்டும் அதிசயத்திலும் அதிசயமாக எல்லோருடைய எதிர்பார்ப்பையும் மீறி ஜெயலலிதா விடுதலை பெற்று முதல்வரானார். உடனே அனைத்து ஊடகங்களும் 'ஜெயலலிதா தன் மோசமான நிலையிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்... இனி அவர் அணுகுமுறையில் பல மாற்றங்கள் இருக்கும்.. இனி அவர் செய்யவேண்டிய டாப் 10 விஷயங்கள்' என்றெல்லாம் எழுதி தள்ளின. இனி ஜெயா அப்படியிருப்பர் இப்படியிருப்பார் என்றெல்லாம் பல வல்லுனர்கள் கணித்தனர்... நாமும் அப்படியே நம்பினோம்... ஆம்... நம்பிக்கொண்டே இருந்தோம்... ஜெயலலிதாவை நாம் தங்க தாம்பாளத்தில் வைத்து தாங்கிக்கொண்டே இருந்தோம். தமிழ்நாட்டில் எந்த தலைவரையும்  செய்த தவறுகளை மறந்து நாம் இவ்வளவு தூரம் ஆதரித்துக் கொண்டே இருந்ததில்லை. எல்லோருக்கும் ஒரு அலட்சிய புன்னகையை பரிசாகக் கொடுத்து விட்டு 'அட முட்டாள்களா... நான் என்றைக்கும் அப்படியேதான் இருப்பேன்' என்றபடி தன் வழக்கமான பணிகளை தொடர்ந்தார் ஜெ. டாஸ்மாக் கை மூட வேண்டும் என்று அனைவரும் போராடிய போது சசி பெருமாள் மரணம், கோவன் கைது, மாணவர்களுக்கு அடிதடி போன்றவைகளே நமக்கு பதிலாகக் கிடைத்தது. தன் அரசைப்பற்றி விமர்சனம் செய்த விகடன் மீது வழக்கு தொடர்ந்தார்.

கடைசியாக வந்தது சென்னை பெருவெள்ளம். வெள்ளம் நம் கால்களை தொட்டு நெருப்பாக சுட்டபோதுதான்  இது செயல்படாத அரசு என்பது நமக்கு புரிந்தது. கண் எதிரே நம் உடமைகள் தண்ணீருக்கு இரையாகும் போது மட்டும் தான் நமக்கு கோபம் வந்தது. ஏழை பணக்காரன் என்ற வித்யாசமில்லாமல் உணவுக்கு அலைந்தபோது உணவுப்பொட்டலங்கள் மீது அதிமுக அரசு மூன்றாவது முறை ஸ்டிக்கர் ஒட்டியபோதுதான் நமக்கு ஆணவத்தின் வீரியம் புரிந்தது. அதிகாரம் இல்லாத பொம்மை அமைச்சர்கள், தனிச்சையாக முடிவெடுக்க முடியாத அதிகாரிகள், ராணுவம் -தனியார்-ஊடகங்கள்-சமூக இயக்கங்கள் என்று திரண்ட நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க முடியாத அரசு இவைகள்தான் கடந்த ஐந்து ஆண்டுகள் நடந்தேறிய அரசாங்க லட்சணத்தின் உச்சகட்டம்

இனியாவது விழித்தெழுவோம்.. நம்மை ஆள்பவர்கள் செய்யும் தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டுவோம். போராட வேண்டிய நேரத்தில் போராடுவோம்.. இனி ஜெயலலிதாவின் பச்சைப் புடவை, கருணாநிதியின் மஞ்சள் சால்வை, விஜயகாந்தின் யோகாசனம்இவையேல்லாம் நமக்கு  தேவையில்லாத விஷயங்கள். சென்னை மழை நமக்கு கொடுத்துள்ள ஒற்றுமையை, ரௌத்திரத்தை, அதிகாரத்தை முறையாக பயன்படுத்துவோம்.


சென்னை மழை நமக்கு பல உண்மைகளை உணர்த்தியுள்ளது. அனால் அதை உணர்த்துகொள்வதற்கு நாம் கொடுத்த விலை மிக அதிகம்.


1 comment:

Unknown said...

சவுக்கடி கட்டுரை தமிழ் மக்களுக்கு ....

Post a Comment

உங்கள் கருத்துக்கள்