கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பழைய மகாபலிபுரம் சாலையில் (ராஜீவ் காந்தி சாலை) பெருங்குடி முதல் நாவலூர் வரை சுங்கசாவடி அமைத்து கார், பஸ் மற்றும் கனரக வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்துக்கொண்டிருக்கிறார்கள். இதை நிர்வகிப்பது தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்துறை (TNRDC). ஏற்கனவே இது மிக அதிகம் என்று பலர் புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில் இப்போது ஜூலை முதல் கட்டணத்தை வேறு உயர்த்தியிருக்கிறார்கள். புதிய கட்டணத்தின்படி இந்த சாலையில் ஒருமுறை சென்று திரும்புவதற்கு கார்களுக்கு 38 ரூபாயும் பஸ்களுக்கு 100 ரூபாயும் வசூலிக்கப்போகின்றனர்.
ஆனால் இந்த கட்டணமெல்லாம் சில குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டும் கிடையாது... அது வேறு எதுவும் இல்லை.. கட்சி கொடியோ அரசியல் தலைவர்கள் படங்களோ உள்ள வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பது இங்கு எழுதப்படாத விதி. அவர்கள் மட்டும் இலவசமாக எவ்வளவுமுறை வேண்டுமானாலும் இந்த சாலையை உபயோகப்படுத்தாலாம். கட்சி கொடிகள் உள்ள வாகனங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது என்பது தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு. நான் இதைப் பற்றி அந்த சுங்கசாவடி அதிகாரிகளிடம் பலமுறை கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள் "என்ன சார் செய்வது.. அவர்களிடம் கட்டணம் கேட்டால் தகராறு செய்கிறார்கள்.. அதனால் அவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்பது மேலிடத்து உத்திரவு" என்றார்.
ஆனால் ஒன்று... இந்த 'கட்சி கொடி' சலுகையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது... எல்லோருக்கும் இந்த சலுகையில் சமத்துவம். என்ன.. போன வருடம் மே மாதம் வரை தி.மு.க வாகனங்கள் பெரும்பான்மையாக இருக்கும்.. இப்போது அ.தி.மு.க வாகனங்கள்... அவ்வளவுதான் வித்யாசம். சில தே.தி.மு.க, ப.ம.கா கொடிகள் உள்ள வாகனங்கள் கூட கட்டணம் செலுத்தாமல் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். இந்த நாட்டில் பொதுமக்களுக்கு ஒரு விதி, அரசியல்வாதிகளுக்கு ஒரு விதி என்பது சுங்கக்கட்டணத்திலும் கூட பிரதிபலிக்கிறது.
இந்த சாலையில் தினமும் காரில் பயணிபவர்களுக்கு ஒரு டிப்ஸ்... 50 ருபாய் செலவழித்து எதாவது ஒரு கட்சிக்கொடியை உங்கள் காரில் மாட்டிவிட்டால் போதும்... தினமும் 38 ருபாய் மிச்சப்படுத்தலாம்.