Monday, July 20, 2015

சோழ நாட்டில் சில மணி நேரங்கள்....


இந்த வருடமும் எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் நடத்தும் 'பொன்னியின் செல்வன்' மெகா நாடகத்துக்கு சென்றிருந்தேன். கல்கியின் இந்த பெரும் புதினத்தை நான்கு மணிநேரத்திற்குள் அடக்கி காட்சித் திரையில் கொண்டு வந்த எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் மற்றும் மேஜிக் லாண்டேன் குழுவினருக்கும் ஒரு பெரும் பூங்கொத்துடன் வாழ்த்துக்கள்.

 வீராணம் எரிக்கரைஒரம் ஆடிபெருக்கு விழாக் கொண்டாட்டங்களுடன் துவங்கும் காட்சிகள், நம்மை அப்படியே ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. பெண்கள் ஆடிப் பாடிகொண்டே ஏரியில் விளக்குகளை மிதக்க விடுவது, அங்கு நடக்கும் பூ மற்றும் காய்கறி வணிகம், விழாவை வேடிக்கை பார்க்க வருவோர், அங்கும் இங்கும் நடந்து சென்று கொண்டிருக்கும் கோட்டை காவலர்கள் என்று அப்படியே நம் பண்டைய கலாச்சாரத்தை அப்படியே நம் கண் முன் நிறுத்துகிறது. பின் நாடகம் விறுவிறுவென வீறுநடை போட்டு நகர்கிறது. வந்திய தேவன் வருகை, கடம்பூர் மளிகை நள்ளிரவு கூட்டம்,   வந்திய தேவன் கோட்டைக்குள் நுழைதல், நந்தினி குந்தவை சந்திப்பு, இலங்கை பயணம், பொன்னியின் செல்வன் அறிமுகம், என்று தடதடவென பயணித்து  சேந்தன் அமுதன் மகுடம் சூட்டும் வரையிலான காட்சிகளை, பல அத்தியாயங்கள் கொண்ட கல்கியின் புதினத்தை, நான்கே மணி நேரத்தில் அதன் சாரமும் வீரமும் பிரமாண்டமும் சற்றும் குறையாமல் நமக்கு விருந்தளிதிருக்கிரார்கள்.

 

நாடகம் முழுவதும் ஒரேவிதமான காட்சி அமைப்புதான்... கோட்டை போன்ற ஒரு அமைப்பு.. மேடையின் இரு பக்கத்திலும் மாடம் போன்று ஒரு முகர்ப்பு... அவ்வளவுதான். அனால் அதையே கடம்பூர் கோட்டையாகவும், சோழ சக்ரவர்த்தியின் மாளிகையாகவும், ஆபத்துதவிகள் பதுங்கும் காடாகவும், வீராணம் ஏரியாகவும் மற்றும் கல்கி வர்ணித்த அதனை இடங்களையும் இந்த ஒரே காட்சி அமைப்பில் உருவகப்படுதியுள்ளர்கள்.  இவற்றுடன், காலை, அந்தி, நள்ளிரவு போன்ற பொழுதுகளை சித்தரிக்கும் ஒளி அமைப்புகளும்,  வரலாற்று காட்சிகளுக்கே உரித்தான அபாரமான இசையும் ஒரு பெரும் பிரம்மாண்டத்தை நமக்கு நாடக வடிவில் தந்திருக்கிறார்கள். பூங்குழலி உதவியுடன் வந்தியதேவனின் நள்ளிரவு இலங்கை படகுப் பயணம், பார்த்திபேந்திரனின் வாள் சண்டை, குரவைக்கூத்து, பொன்னியின் செல்வனின் யானை சவாரி போன்றவை நம் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.

பொன்னியின் செல்வன் நாடகம் நடந்த பத்து நாட்களும் மியூசிக் அகாடமி அரங்கம் நிரம்பி வழிந்தது. சென்ற வருடத்தைப் போலவே. பொன்னியின் செல்வன் நாவலை பிரமித்துப் படித்திருந்த மக்கள், தாங்கள் கற்பனை செய்து வைத்திருந்த கதாபத்திரங்களை கண்டவுடன் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தார்கள். பொன்னியின் செல்வன், வந்திய தேவன், ஆதித்ய கரிகாலன், நந்தினி, குந்தவை அறிமுகங்களின் போது ஏதோ ரஜினி படம் போல விசிலடித்து கைத்தட்டி மகிழ்ந்தார்கள். கல்கி எழுத்தின் வீச்சு எவ்வளவு தூரம் இருக்கிறது என்பது புரிகிறது.

பொன்னியின் செல்வன் என்பது சில பாகங்களாக எடுக்கவேண்டிய  திரைப்படம். அல்லது சில வருடங்கள் ஓடக்கூடிய மெகா சீரியல். அதை சில மணிநேர நாடக வடிவில் கொண்டு வந்து சாதனை புரிந்திருக்கிறார்கள்.

நாடகம் முடிந்து வெளியில் வந்தவுடன், சோழ சாம்ராஜ்யத்துக்குள் உலவி வந்த உணர்வு  ஏற்பட்டது. 

Tuesday, July 14, 2015

நால்வர் அணியின் கடைசி மனிதர்

தமிழ் திரைஇசையின் உச்சநிலை என்றால் அது அந்த நால்வர் சேர்ந்து பணியாற்றிய அந்த கால கட்டம்தான். சிவாஜி-கண்ணதாசன்-டிஎம்எஸ்-எம்எஸ்வி இந்த நால்வர் கூட்டணியில் உருவான பாடல்கள் தான் தமிழ் திரையுலகின் சாகாவரம் பெற்ற பாடல்கள். எம்எஸ்வி யின் இசை வடிவத்துக்கு கண்ணதாசன் மொழி வடிவம் கொடுக்க, டிஎம்எஸ் அதற்கு குரல் வடிவம் கொடுக்க, சிவாஜி அதற்கு நடிப்பு வடிவம் கொடுத்தார்.

பொன் ஒன்று கண்டேன் ...
ஆறு மனமே ஆறு .. அந்த ஆண்டவன் கட்டளை ஆறு..
அமைதியான நதியினிலே ஓடும் ..
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா ..
கொடி அசைந்ததும் காற்று வந்ததா ..
மலர்த்தும் மலராத பாதி மலர் போல ..


போன்ற காலம் கடந்தும் நிற்கின்ற பாடல்களை கொடுத்த கூட்டணி அது. அந்த நால்வர் அணியின் கடைசி மனிதர் மெல்லிசை மன்னர் எம்எஸ்வி இன்று மறைந்து விட்டார்.

தூய சாஸ்த்ரிய சங்கீதமாக இருந்த திரை இசையை மெல்லிசை வடிவத்துக்குள் மாற்றி  திரை பாடல்களை பாமரனுக்கும் கொண்டு சென்றவர் எம்எஸ்வி. அதேசமயம், கனமான கர்நாடக இசை ராகங்களிலும் தன்னை பொருத்திக்கொண்டார். - மாதவி பொன் மயிலாள், உள்ளத்தில் நல்ல உள்ளம், நீயே உனக்கு என்றும் நிகரானவன் போன்ற பாடல்கள் அதற்கு சாட்சி.

அதேபோல், பல மேற்கத்திய பாணி இசையும் தமிழில் புகுத்தியுள்ளார் (துள்ளுவதோ இளமை, யார் அந்த நிலவு, முத்து குளிக்க வாரீகளா). நினைத்தாலே இனிக்கும் படத்தில் அவரது புதிய பாணி இசையை கேட்க முடியும். டிஎம்எஸ் மட்டுமல்லாமல் பிபிஎஸ், பி சுசீலா போன்ற மகத்தான பாடகர்களின் உன்னதமான இசையை வெளிக்கொணர்தவர். இன்றைக்கும் நாம் லயிக்கும் பி சுசீலாவின் 'சிட்டு குருவி முத்தம் கொடுத்து', 'உன்னை ஒன்று கேட்பேன்', 'கண்கள் எங்கே', 'நாளை இந்த வேளை பார்த்து' போன்ற பாடல்கள் அவர் இசையில் உதிர்ந்த முத்துக்கள். பிபிஎஸ்ஸின் 'மயக்கமா கலக்கமா', 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்', 'ரோஜா மலரே ராஜகுமாரி' போன்ற பாடல்கள் அவர் இசையில் தெறித்த மாணிக்கங்கள்.

எம்ஜிஆரின் கவர்ச்சி பிம்பம் வளர்ந்ததற்கு எம்எஸ்வியின்  பங்கு மகத்தானது. எம்ஜிஆர் மறைந்து பல ஆண்டுகள் ஆனபிறகும் கூட, இன்றும் தேர்தல் நேரத்தில் அவர் பாடல்கள் மட்டுமே ஒலிக்கப்படுகின்றன. 'நான் ஆணையிட்டால்', 'அதோ அந்த பறவைபோல வாழவேண்டும்' என்ற பாடல்களை கேட்டு துள்ளிக்குதித்து இரட்டை இலைக்கு ஓட்டுபோடும் தலைமுறை இன்றும் இருக்கிறதென்றால் அது எம்எஸ்வி யால் மட்டுமே சாத்தியம். எம்ஜியாருக்கும் சிவாஜிக்கும் தத்துவம், காதல், சோகம் என்று எல்லா உணர்வையும் எம்எஸ்வி தன்  இசையால் தொட்டிருந்தாலும் இருவருக்கும் அவ்வளவு வித்தியாசங்களை கொண்டு வந்தார். தத்துவத்துக்கு எம்ஜிஆர்  பாணியில் 'உலகம் பிறந்தது எனக்காக' என்று உற்சாகமாகவும் சிவாஜிக்கு 'சட்டி சுட்டதடா கை  விட்டதடா...' என்று சோகமாகவும் இசைத்தார். காதல், எம்ஜியாருக்கு குதூகலத்தோடு 'நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான்' என்றும் சிவாஜிக்கு மென்மையாக 'முத்துக்களோ கண்கள்' என்றும் இசைக்கபட்டது.

"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை...
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை..."

இது கண்ணதாசன் தனக்காக எழுதிய வரிகள்... இது எம்.எஸ்.வி க்கும் பொருந்தும். இந்த காற்று மண்டலத்தில் அவரது இசை என்றும் கலந்திருக்கும். உலகம் முழுவதும் உள்ள  தமிழர்களின் காதுகளில் அவரது சங்கீதம் ஒலித்துtகொண்டே இருக்கும்...

இசைக் கலைஞர்கள் மரணிப்பதில்லை... அவர்கள் தங்கள் இசை மூலம் மக்களிடம் வாழ்ந்துகொண்டே இருகிறார்கள்...  காலம் காலமாய்...