Sunday, September 5, 2010

என் பின்னால் வா - மாவோ

மாவோ: என் பின்னால் வா - மருதன் எழுதிய மாவோ எனப்படும் மாவோ சேதுங்கின் வரலாறு நான் தற்போது படித்த புத்தகம்... சீனத் தலைவர் மா சேதுங்கை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தை படிக்கலாம். 

இருநூறு ஆண்டு காலமாக ஐரோப்பா மற்றும் ஜப்பானியர்களுக்கு அடிமைப்பட்டுக்கிடந்த சீனாவை சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்தவர்.  முதன்முதலில் சீனாவில் உழைக்கும் மக்கள் ஆட்சியை மலர செய்தவர் என்ற பெருமைகள் மாவோவுக்கு உண்டு...

மாவோவின் பதிமூன்று வயதிலிருந்து தொடங்குகிறது இந்தப் புத்தகம். நாம் எல்லோரும் நினைப்பதுபோல மாவோ வறுமையில் வாடியவர் இல்லை. கொஞ்சம் வசதியான சூழலில்தான் வளர்ந்தார். கொஞ்சம் பிடிவாதக்காரராக வளர்ந்த மாவோவின் பள்ளிபடிப்பு, கல்லூரி வாழ்கை, விவசாயிகள்-தொழிலாளர்கள் பிரச்னையில் ஈடுபாடு, மாக்சியத்தில் ஈடுபாடு, கம்யூனிஸ்ட் கட்சியில் சேருதல், நீண்ட பயணம், சீனப் புரட்சி, சீனாவைக் கைப்பற்றுதல், அதிபரானபின் வரும் பிரச்சனைகள் என்று மாவோவின் வாழ்கைபாதையை தெளிவாக,  விவரமாக அலசுகிறது இந்தப் புத்தகம்.

'முயற்சித்தால் எதுவும் முடியும்' என்பதற்கு மாவோவின் வாழ்க்கை ஒரு உதாரணம். உலகின் பெரிய நாடான சீனாவை, மிகுந்த இறைநம்பிக்கை பல மூடநம்பிக்கைகளை கொண்ட சீன மக்களை கம்யூனிச பாதையில் அழைத்துச் செல்வது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதேபோல சீனாவில் அப்போது இருந்த ராணுவத்தையும், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய படையையும் தன செம்படை மூலம் விரட்டி அடித்து மொத்த சீனாவையும் மாவோ கைப்பற்றுவார் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். இன்று சீனா சிதறுண்டு போகாமல் (தைவானை தவிர) மொத்தமாக ஒரே ஆட்சியில் கீழே இருக்கிறது என்றால் அதற்க்கு மாவோ அமைத்துக்கொடுத்த அடித்தளம்தான் காரணம்.

மாவோவின் தத்துவம் எப்படி மக்களை சென்றடைந்தது? அவர் எப்படி மக்கள் தலைவரானார்? ஏனெனில் மாவோ வெறும் கொரில்லா போராளி மட்டும் அல்ல. அவர் மக்கள் பிரச்சனையை அறிந்து மக்களோடு போராடினார். எந்த காரணம் கொண்டும் மக்களை துன்புறுத்தவில்லை. தனது செம்படையை மக்கள் சேவைக்கும் ஈடுபடுத்தினார். கிராமம் கிராமமாக சென்று விவசாயிகள் நிலையை கண்டறிந்தார். வரலாற்று சிறப்பு மிக்க நெடும்பயணத்தில் மாவோவோடு விவசாயிகளும் நடந்தே சென்றனர்... கிட்டத்தட்ட ஒரு வருடம்.. பத்தாயிரம் கிலோமீட்டர்கள்... தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருந்தார்கள்... இந்த முயற்சிதான் மக்கள் மத்தியில் மாவோவின் செல்வாக்கை உயர்த்தியது. அதனால்தான் 'என் பின்னால் வா' என்று மாவோ அழைத்தவுடன் சீன தேசமே அவர் பின்னல் அணி திரண்டது. 

மாவோ மாக்சியத்தில் எப்படி ஈடுபாடு கொண்டார், எப்படி கம்யூனிசம் அவரை ஈர்த்தது என்பதுபற்றி இந்த நூலில் அதிக விளக்கங்கள் இல்லை. நூலகத்தில் பல புத்தகங்களை படித்தார்,  சோவியத்தை  உதாரணமாக  எடுத்துகொண்டார்  என்று மட்டும் இருக்கிறது. அதே போல் மாவோவுக்கு மிகுந்த அவப்பெயர் வாங்கிகொடுத்த 'கலாச்சார புரட்சி' பற்றி இதில் எதுவும் விளக்கவில்லை. சுருக்கமாக சொன்னால் மாவோவின் மறுபக்கம் இந்த புத்தகத்தில் இல்லை.

இந்தப்புத்தகத்தில் மாவோ சேதுங் என்ற முழுப்பெயர் எங்கும் இடம்பெறவில்லை. மாவோ என்றே இருக்கிறது.

'தெளிவான அரசியல் கொள்கை... தீர்க்கமான போர்த் தந்திரம், அசர வைக்கும் மக்கள் பலம்' - இந்த மூன்று ஆயுதங்களைப் பயன்படுத்தி மாவோ நிகழ்த்திக்காட்டிய புரட்சி சீனாவை ஒரு புதியதிசையில் செலுத்தியது... உழைக்கும் மக்கள் வரலாற்றில் மாவோ ஒரு வீர சகாப்தம்' என்ற பின்னூட்டத்துடன் முடிகிறது இந்த நூல்.

  

2 comments:

surivasu said...

புத்தக சாராம்சம் அருமை. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.

vcv said...

மிக அருமையான.

Post a Comment

உங்கள் கருத்துக்கள்