இதுவரை எனது நீண்ட விமானப்பயணம், அர்ஜெண்டினா தலைநகர் 'பியூனோஸ் ஏரிஸ்' நகரிலிருந்து சென்னை வந்ததுதான். என் விமான வழித்தடம் பியூனோஸ்ஏரிஸ் - நியுயார்க் - டோக்கியோ - சிங்கப்பூர் - சென்னை... நான்கு விமானங்கள்.. 50 மணி நேரப் பயணம். சனிக்கிழைமை இரவு தொடங்கிய பயணம் செவ்வாய்க்கிழமை மாலை சென்னையில் முடிந்தது. கிட்டத்தட்ட பூமியை மேலும் கீழும் இடமும் வலமும் அளந்து பார்க்கக்கூடிய ஒரு சோர்வுப் பயணம்.
கிழக்கு-மேற்கு மாறி மாறி வருவதால் எந்த திசையில் இருக்கிறோம், என்ன கால நேரம் என்பதெல்லாம் புரியவேயில்லை.. விமானத்திலிருந்து வெளியே பார்த்தால் வெயில் அடிக்கிறது.. சில மணி நேரங்களில் திடீரென்று கும்மிருட்டாகி பௌர்ணமி நிலவு ஜொலிக்கிறது.. மீண்டும் இரண்டு மணி நேரத்தில் நல்ல வெளிச்சம்... உச்சி வெயில்.. கொஞ்ச நேரத்தில் மீண்டும் நிலா.. ஒரு குத்து மதிப்பாகத்தான் எந்த கிழமையில் இருக்கிறோம் என்று கணிக்க முடிந்தது.
விமானத்தில் சைவ உணவைப்பற்றி கேட்கவே வேண்டாம்... எனக்குக் கிடைத்தது காய்ந்த ரொட்டி.. கொஞ்சம் இலை தழைகள்.. அவ்வப்போது ஆரஞ்சு பழரசம்.. அவ்வளவுதான். ஒரு விமானத்தில் மட்டும் ரொம்ப பரிதாப்பட்டு காய்கறிகளை வெட்டி சாலட் மாதிரி எதாவது செய்து தரட்டுமா என்று கேட்டார்கள்.. கேட்டதே கொஞ்சம் வயிறு நிரம்பியது.
என்னிடம் பேசிக்கொண்டிருந்த சில விமான பணிபெண்கள் 'இவ்வளவு நீண்ட பயணமா' என்று ஆச்சரியப்பட்டார்கள். அவர்களே ஆதங்கப்பட்டது கொஞ்சம் ஆறுதலான விஷயம்...!
சிங்கப்பூர் வந்தவுடன் செங்கல்பட்டு வந்ததுபோல இருந்தது. (கொஞ்ச நேரத்தில் சென்னை வந்துவிடும்..!). விமானம் சென்னையை அடைந்த பொது ஏதோ போர்க்கைதிகள் தாயகம் திரும்புவதைப்போன்று ஒரு உணர்வு ஏற்பட்டது.. மூன்று நாள் தாடி, காய்ந்த வயிறு, தள்ளாடும் உடல், உறக்கம் கெஞ்சும் கண்கள், இவற்றோடு வீடு வந்து சேர்ந்தோம்.
இந்த ஹைடெக் உலகில் என்னதான் குளோபல் வில்லேஜ் என்று பேசினாலும் உலகத்தை சுற்றி வருவது ரொம்ப கடினமான காரியம்தான்.. ஞானப் பழத்தைப் பெற உலகத்தைச் சுற்றி வராமல் சிவன்-பார்வதியை மட்டும் சுற்றி வந்த பிள்ளையாரின் தந்திரம் அப்போதுதான் புரிந்தது..
Tuesday, November 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அன்புள்ள ரவி சுப்ரமணியம் சார் க்கு என் அன்பான வணக்கங்கள் .... உங்களிடம் இருந்து ஒரு சில தகவல்களை பெற ஆசைபடுகிறேன் ... சார் நானும் எனது நண்பனும் அடுத்த வாரம் முதன்முறையாக வெளிநாடு செல்ல இருக்கிறோம் ... மலேசியா ... நாங்கள் எப்படி விமானத்தில் நடந்து கொள்வது மற்றும் விமான நிலையத்துக்கு எவ்வளவு நேரம் முன்னதாக செல்ல வேண்டும் என நீங்கள் சொல்லவேண்டும் ...... பின்னர் நான் அங்கிருந்து ஒரு LCD tv வாங்கி வர ஆசைபடுகிறேன் .. அதற்கான விதிமுறைகள் வழிமுறைகள் எனக்கு சொல்லி உதவுங்கள் சார்...THANK YOU SIR ...jagacreative@gmail.com
Post a Comment
உங்கள் கருத்துக்கள்