Showing posts with label நினைவோ ஒரு பறவை. Show all posts
Showing posts with label நினைவோ ஒரு பறவை. Show all posts

Friday, February 26, 2010

சச்சின் டெண்டுல்கரின் ஆனந்த தாண்டவம்

அது 1997ம்  ஆண்டு.. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டி.முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் மளமளவென ரன்களை குவித்துக்கொண்டிருந்தார்.  பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிக்கொன்டிருந்தார். அனில் கும்ப்ளேவின் ஒரு ஓவரில்  வரிசையாக மூன்று சிக்சர்கள் அடித்தார்.

50 , 100 , 150  என்று ரன்களை கடந்துகொண்டிருந்தார் சயீத் அன்வர். ஸ்டேடியத்தில் உட்கார்ந்து மேட்ச் பார்த்துகொண்டிருந்த எனக்கும் என் நண்பர்களுக்கும் எங்கேயாவது 200 ௦ரன்கள் எடுத்துவிடுவாரோ பக் பக் என்று அடித்துகொண்டிருந்ததது... கடைச்யாக 194  ரன்களில் அவுட் ஆனார் அன்வர். அப்போது என்றாவது ஒருநாள் இந்த சாதனையை சச்சின் முறியடிப்பார் என்று நினைத்தேன்.  13 வருடங்கள் கழித்து குவாலியர் மாட்சில் சச்சின் அந்த சாதனையை நிகழ்த்தியிருகிறார்.

ஆனால் அன்வரின் ஆட்டத்துக்கும் சச்சினின் ஆட்டத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. சயீத் அன்வர் அதிரடியாகவும் அதே சமயம் ஆர்ப்பாட்டதுடனும் ஆடினார். அவருக்கு முந்தய சாதனையான வீவியன் ரிச்சர்ட்சின் 189  ரன்களை கடந்தபோது பேட்-அப் செய்தார். 200 ௦ ரன்கள் எடுக்கவேண்டும் என்ற பதட்டத்தில் 194 ரன்களில் அவுட் ஆனார். அன்று அவர் பொறுமையாக ஆடியிருந்தால் 200 ரன்கள் எடுத்திருக்க முடியும். சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் விளையாடியதால் பதட்டம் அவரை  தொற்றிக்கொண்டது. அவுட் ஆனதும் மனமில்லாமல் மைதானத்தைவிட்டு வெளியேறியது கண்கூடாகத் தெரிந்தது.

அதற்க்கு நேர் எதிர் சச்சின். குவாலியர் மாட்ச்சில் 194 ரன்களை கடந்தபோது சச்சின் பேட்-அப் செய்யவில்லை. 200  ரன்களை கடக்க அவசரப்படவில்லை. சச்சின் 190  ௦ ரன்களில் இருக்கும்போது கேப்டன் தோனியே அதிகம் விளையாடினர்.. சச்சினுக்கு வாய்ப்பே வரவில்லை. 50வது ஓவரின் நடுவில் கிடைத்த ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்து சரியாக 200 ரன்கள் எடுத்தார். அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் கூட போயிருக்கலாம். அதற்காக சச்சின் கவலைப்படவில்லை. இதே போல் போன மாதம் பங்களாதேஷ் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிபெற சொற்ப ரன்களே இருந்தபோது, சச்சின் 96  ரன்களில் இருந்தார். அப்போது எதிர்முனையில் விளையாடிக்கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து இலக்கை கடந்தார். சச்சின் நினைத்திருந்தால் தான் 100 எடுக்கவேண்டும் என்ற விருப்பத்தை தினேஷ் கார்த்திக்கிடம் வெளிப்படுத்தியிருக்க முடியும். ஆனால் கடைசிவரை '96 நாட்-அவுட்' ஆகவே இருந்தார். இதுவே சச்சின் சாதனைகளை குறிவைத்து ஆடவில்லை என்பதற்கு சாட்சி. சாதனைக்கு ஆடாததால்தான் அவரால் சாதிக்க முடிகிறது.

அன்று அன்வர் ஆடியது ருத்ர தாண்டவம். இன்று சச்சின் ஆடியது ஆனந்த தாண்டவம். நாளை சச்சினின் சாதனையை யாரவது முறியடிக்கலாம்.. ஆனால் சச்சின் மாதிரி அடக்கமான பணிவான ஒரு கிரிக்கெட் வீரரை பார்ப்பது அரிது.

Monday, July 20, 2009

தூக்கத்துக்கு விலை என்ன?


கடந்த வாரம் ஓமன் தலைநகர் மஸ்கட் சென்றிருந்தேன். மூன்று நாள் வேலைகளை முடித்துவிட்டு அடுத்த நாள் காலை கிளம்ப வேண்டும். மறு நாள் காலை 10.45 க்கு துபாய்க்கு விமானம். அங்கிருந்து மதியம் 3 மணிக்கு சென்னைக்கு விமானம். முதல் நாள் இரவு டின்னரை முடித்துவிட்டு ஹோட்டல் ரூமில் ரொம்ப நேரம் தொலைக்காட்சியில் மைகேல் ஜாக்ஸனைப் பற்றி ஒரு நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தேன். இரவு 12 மணிக்கு டி.வியை அணைத்துவிட்டு என் அலைபேசியில் காலை 6 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு தூங்கினேன். 6 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு காலை உணவை முடித்துக்கொண்டு ஹோட்டல் பில் செட்டில் செய்துவிட்டு நிதானமாக கிளம்பலாம் என்று திட்டம்.

பொதுவாக அலாரம் அடிப்பதற்கு அரைமணி நேரம் முன்னதாக எனக்கே விழிப்பு வந்துவிடும். அலாரம் அடிக்கட்டும் என்று சும்மா படுத்துக்கொண்டிருப்பேன். இங்கேயும் கொஞ்சம் தூக்கத்துக்கு பிறகு விழிப்பு வந்தது. மணி நாலோ ஐந்தோ இருக்கும் என்று நினைத்து அலாரம் அடிக்கட்டும் என்று கொஞ்சம் புரண்டு படுத்தேன். ரொம்ப நேரமாக அலாரம் அடிக்கவில்லை. இன்னும் அறை இருட்டாகத்தான் இருந்தது. சரி மணி ஆறு ஆக இன்னும் ஐந்து பத்து நிமிடங்கள்தான் இருக்கும் என்று எழுந்து கொண்டேன். பல் துலக்க போனவன் மணி என்னதான் ஆகிறது பார்த்துவிடலாம் என்று நினைத்து அலைபேசியை கையில் எடுத்தேன். அலைபேசி அலாரம் அடிக்கவில்லை... ஷாக் அடித்தது.

மணி காலை 9.45. இன்னும் ஒரு மணி நேரத்தில் விமானம் கிளம்பிவிடும்.

என்னை என்னாலேயே நம்ப முடியவில்லை.. ஜன்னல் திரையை கொஞ்சம் விலக்கிப் பார்த்தேன்.. வெயில் சுளீர் என்று அடித்தது. உண்மைதான்.. கிட்டத்தட்ட பத்து மணி ஆகப்போகிறது. நான்தான் அலாரம் சரியாக வைக்கவில்லை. எனக்கு தலை சுற்றியது... எங்கிருந்து கிளம்பி எப்படி விமானத்தை பிடிப்பது.. அதுவும் பன்னாட்டு விமானம். மூளை வேலை செய்வதற்கு கொஞ்ச நேரம் பிடித்தது..!

சரி.. அடுத்து என்ன செய்வது?

நிச்சயம் இந்த விமானத்தை பிடிக்க முடியாது.. சரி 3மணிக்கு கிளம்பும் துபாய் விமானத்தை பிடித்தால் என்ன? அதற்க்கு மஸ்கட்டிலிருந்து துபாய்க்கு காரில் செல்லவேண்டும்.. அதிவேகத்தில் போனால் கூட 4 மணி நேரமாகும் என்றார் ஹோட்டல் ஊழியர்..! இக்கட்டான நேரத்தில் அந்த ரிஸ்க்கை எடுப்பது என்று முடிவு செய்தேன். சிதறிக்கிடந்த துணிகளையெல்லாம் பெட்டியில் அள்ளிப்போட்டுக்கொண்டு ஹோட்டல் பில் கட்டிவிட்டு காரில் உட்கார்ந்தபோது மணி 10.30.

துபாய்-மஸ்கட் எல்லையில் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கும்... சில சமயம் ஒரு மணி நேரம் கூட கரை நிறுத்திவிடுவார்கள் என்று திடீரென்று கார் டிரைவர் ஒரு வெடிகுண்டைப் போட்டார். கொஞ்சம் குழம்பிய நான் என்ன ஆனாலும் சரி மஸ்கட் விமான நிலயத்துக்கே செல்வது என்று மாற்றி முடிவெடுத்தேன். அடுத்து ஏதாவது ஒரு விமானம் பிடித்து துபாய் சென்றுவிடலாம் என்று திட்டம்.

ஆனால் எந்த ஒரு விமானத்திலேயும் இடம் இல்லை. மஸ்கட்-சென்னை நேரடி விமானத்திலும் இடம் இல்லை.. (இன்று போய் நாளை வா என்றார்கள்). ஒரு சில விமானத்தில் (பஹரின் வழியாக, கத்தார் வழியாக) ஒரே ஒரு டிக்கெட் இருக்கிறது என்பார்கள்..பதிவு செய்யப்போகும்போது "சாரி.. தீர்ந்துவிட்டது" என்பார்கள். இப்படியே மூன்று மணி நேரம் கழிந்தது. கடைசியாக ஒரு டிராவல் ஏஜெண்ட் "ஜெட் விமானத்தில் ஒரு டிக்கெட் இருக்கிறது.. மும்பை வழியாக பயணிக்கவேண்டும்" என்றார்.

யோசிக்கவேஇல்லை.. சரி என்றேன். 106 ரியால் ஆகும் என்றார் (14000 ரூபாய்).. தண்டம் அழுதேன்.. இரவு ஒரு மணிக்குத்தான் விமானம்.. கடைசியாக 12 மணிநேரம் மஸ்கட் விமான நிலையத்திலேயே குப்பைகொட்டி அந்த ஜெட் விமானத்தை பிடித்து மும்பை வந்து சென்னை வந்து சேரும்போது அடுத்தநாள் காலை மணி பத்து.

தூக்கத்துக்கு விலை உண்டா? உண்டு... என் தூக்கத்துக்கு விலை 14000 ரூபாய்...!

Monday, July 6, 2009

இரண்டு நியூயார்க் அனுபவங்கள்


அது 2004 ம ஆண்டு.. உலக வர்த்தக தலைநகரான நியூயார்க் செல்லப்போகிறோம் என்கிற குதூகலத்தில் நானும் என் நண்பனும் சென்னையில் விமானம் ஏறினோம். ஆனால் நியூயார்க்கின் முதல் அனுபவமே ஏமாற்றமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை..

கென்னடி விமான நிலையத்தில் இறங்கி டாக்சி பிடித்து மேன்ஹாட்டனில் உள்ள ஹோட்டலை அடையும்படி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.. 45 டாலர் ஆகும் என்றும் குறிப்பிடிருந்தார்கள்.

விமான நிலையத்தில் இறங்கி தொலைபேசி அட்டை வாங்க நாங்கள் கொஞ்சம் 'ஞே' என்று விழிப்பதை பார்த்து விட்டு ஒருவர் வந்தார். தன் டாக்ஸியில் வரும்படி அழைத்தார்.. அவரே சில உதவிகள் செய்தார். கொஞ்சம் பருமனான உடல்வாகும் தென்அமெரிக்க முகஅமைப்பும் கொண்டவராக இருந்தார். எங்கள் பெட்டிகளை டாக்சியில் ஏற்றினர். போகும் வழயில் அமெரிக்க ஆங்கிலத்தில் ஏதேதோ பேசினார். நியூயார்க்கின் பெருமைகளையெல்லாம் எடுத்துச் சொன்னார்.

ஹோட்டலில் இறங்கியவுடன் 90 டாலருக்கான பில்லை நீட்டினார். அது அதிகம் என்று தெரிந்தும் களைப்பு மிகுதியால் அவரிடம் விவாதம் செய்யவில்லை.. என் நண்பர் 100 டாலர் நோட்டைக்கொடுக்க, 'என்ன இது' என்றார். பார்த்தால் அவர் கையில் 10 டாலர் நோட்டுதான் இருந்தது. என் நண்பர் 'சாரி' என்று சொல்லி அதை வாங்கிக்கொண்டு இன்னொரு 100 டாலர் கொடுக்க, நம் கதாநாயகன் பத்து டாலர் மீதி கொடுத்துவிட்டு நிதானமாக பெட்டிகளை ஹோட்டலில் இறக்கிவைத்துவிட்டு, 'டாட்டா.. பைபை..' என்று சொல்லி கிளம்பிச் சென்றார்.

பிறகு ஹோட்டல் அறைக்குள் போனபிறகுதான் நாங்கள் 10 டாலர் நோட்டையே எடுத்து வரவில்லை என்று மூளையில் உரைத்தது. டாக்சி டிரைவர் கண நேரத்தில் நோட்டுகளை மாற்றிய வித்தை அப்போதுதான் புரிந்தது. எல்லா அமெரிக்க டாலர்களும் ஒரே அளவில் இருப்பதால் எங்களுக்கும் சந்தேகம் வரவில்லை.

'ஆஹா... நியூயார்க்ல ஏறங்கினஉடனே கவுத்துடாங்களே...' என்று தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்தோம். அப்போதுதான் நம்மூர் ஆட்டோகாரனிடம் ஐந்து ரூபாய்க்கு பேரம் பேசியதெல்லாம் நினைவுக்கு வந்தது.

இந்த வருடம் மீண்டும் நியூயார்க் பயணம் சென்றேன்.. தனியாக..! கென்னடி விமானநிலையத்தில் நின்றபோது கிட்டத்தட்ட அதே உடல்வாகுடன் ஒரு டாக்சி டிரைவர் வந்தார்.. அதே போல் சிலபல உதவிகள் செய்தார். இந்த முறை உஷாராக இருக்கவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன்... அவ்வப்போது கையிலிருந்த டாலர்களை எண்ணிக்கொண்டிருந்தேன்...

இது போதாதென்று நியூயார்க் பற்றி ரொம்ப தெரிந்தால்போல் டாக்சி டிரைவரிடம் காண்பித்துக்கொண்டேன். "அதாம்பா.. ஸ்டாச்சு ஆப் லிபர்ட்டி ரைட்ல ஒரு மெயின் ரோடு வருமே.. அதுல திரும்பி லெப்ட் எடுத்தா பிராட்வே குறுக்குச்சந்துல இருக்கிற ஹோட்டல்.. என்று ஏதேதோ எடுத்துவிட்டேன்.

அமைதியாக கேட்டுகொண்டிருந்த டாக்சி டிரைவர், "என்ன இந்தியாவா" என்றார்.. "ஆஹா தெரிஞ்சுபோச்சா" என்று நினைத்து ஆமாம் "நீங்களும் இந்தியாவா" என்றேன். "இந்தியா மாதிரிதான்" என்று பதில் வந்தது.. அதென்னது.. 'இந்தியா மாதிரி' என்று நான் குழம்பியபோது 'ஆனால் பாகிஸ்தான்' என்றார். இஸ்லாமாபாத்தை சேர்ந்தவராம்... நியூயார்க் வந்து ஐந்து வருடமாகிறதாம்.

பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்று என்று நினைக்கும் ஒரு பாகிஸ்தானியரைப் பார்த்து ஆச்சிரியப்பட்டேன். பிறகு அவர் இந்தியாவை பற்றி நிறைய விசாரித்துக்கொண்டிருந்தார்.

ஹோட்டல் வந்ததும் நம் பழைய டாக்சி டிரைவர் போலவே, பெட்டிகளை இறக்கிவைத்துவிட்டு, ஆனால் சரியான பணம் வாங்கிக்கொண்டு, தன் விசிடிங் கார்டை கொடுத்துவிட்டு, 'உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி' என்று கைகொடுத்துவிட்டு சென்றார்.

இதனால் தெரிவிப்பது என்னவென்றால், நியூயார்க்கில் நல்ல டாக்சியும் இருக்கிறது.. கள்ள டாக்சியும் இருக்கிறது... நீங்கள் யாரிடம் மாட்டிக்கொள்வீர்கள் என்பது உங்களுடைய அதிஷ்டத்தைப் பொறுத்தது.

Tuesday, November 4, 2008

என் நீண்ட விமானப் பயணம்

இதுவரை எனது நீண்ட விமானப்பயணம், அர்ஜெண்டினா தலைநகர் 'பியூனோஸ் ஏரிஸ்' நகரிலிருந்து சென்னை வந்ததுதான். என் விமான வழித்தடம் பியூனோஸ்ஏரிஸ் - நியுயார்க் - டோக்கியோ - சிங்கப்பூர் - சென்னை... நான்கு விமானங்கள்.. 50 மணி நேரப் பயணம். சனிக்கிழைமை இரவு தொடங்கிய பயணம் செவ்வாய்க்கிழமை மாலை சென்னையில் முடிந்தது. கிட்டத்தட்ட பூமியை மேலும் கீழும் இடமும் வலமும் அளந்து பார்க்கக்கூடிய ஒரு சோர்வுப் பயணம்.

கிழக்கு-மேற்கு மாறி மாறி வருவதால் எந்த திசையில் இருக்கிறோம், என்ன கால நேரம் என்பதெல்லாம் புரியவேயில்லை.. விமானத்திலிருந்து வெளியே பார்த்தால் வெயில் அடிக்கிறது.. சில மணி நேரங்களில் திடீரென்று கும்மிருட்டாகி பௌர்ணமி நிலவு ஜொலிக்கிறது.. மீண்டும் இரண்டு மணி நேரத்தில் நல்ல வெளிச்சம்... உச்சி வெயில்.. கொஞ்ச நேரத்தில் மீண்டும் நிலா.. ஒரு குத்து மதிப்பாகத்தான் எந்த கிழமையில் இருக்கிறோம் என்று கணிக்க முடிந்தது.

விமானத்தில் சைவ உணவைப்பற்றி கேட்கவே வேண்டாம்... எனக்குக் கிடைத்தது காய்ந்த ரொட்டி.. கொஞ்சம் இலை தழைகள்.. அவ்வப்போது ஆரஞ்சு பழரசம்.. அவ்வளவுதான். ஒரு விமானத்தில் மட்டும் ரொம்ப பரிதாப்பட்டு காய்கறிகளை வெட்டி சாலட் மாதிரி எதாவது செய்து தரட்டுமா என்று கேட்டார்கள்.. கேட்டதே கொஞ்சம் வயிறு நிரம்பியது.

என்னிடம் பேசிக்கொண்டிருந்த சில விமான பணிபெண்கள் 'இவ்வளவு நீண்ட பயணமா' என்று ஆச்சரியப்பட்டார்கள். அவர்களே ஆதங்கப்பட்டது கொஞ்சம் ஆறுதலான விஷயம்...!

சிங்கப்பூர் வந்தவுடன் செங்கல்பட்டு வந்ததுபோல இருந்தது. (கொஞ்ச நேரத்தில் சென்னை வந்துவிடும்..!). விமானம் சென்னையை அடைந்த பொது ஏதோ போர்க்கைதிகள் தாயகம் திரும்புவதைப்போன்று ஒரு உணர்வு ஏற்பட்டது.. மூன்று நாள் தாடி, காய்ந்த வயிறு, தள்ளாடும் உடல், உறக்கம் கெஞ்சும் கண்கள், இவற்றோடு வீடு வந்து சேர்ந்தோம்.

இந்த ஹைடெக் உலகில் என்னதான் குளோபல் வில்லேஜ் என்று பேசினாலும் உலகத்தை சுற்றி வருவது ரொம்ப கடினமான காரியம்தான்.. ஞானப் பழத்தைப் பெற உலகத்தைச் சுற்றி வராமல் சிவன்-பார்வதியை மட்டும் சுற்றி வந்த பிள்ளையாரின் தந்திரம் அப்போதுதான் புரிந்தது..

Sunday, October 5, 2008

கண்ணதாசன் பற்றி...

நான் அப்போது எட்டாம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன். அன்று மதியம் தமிழ் வகுப்பு. தமிழாசிரியர் சோகமுகத்துடன் உள்ளே நுழைந்தார்.
கண்ணதாசனின் இறுதி ஊர்வலம் வருகிறது.. பார்க்க விரும்புபவர்கள் பார்த்து விட்டு வரலாம் என்றார்.

அவர் சொன்னதுதான் தாமதம்.. தி.நகர் பர்கிட் ரோடில் உள்ள எங்கள் பள்ளியிலிருந்து ஓடிவந்து தி.நகர் பேரூந்து நிலையைத்தை அடைந்தோம்.

அதோ கண்ணதாசனின் இறுதி ஊர்வலம் வந்துகொண்டிருக்கின்றது..

முதல்வர் எம்.ஜி.ஆர் முன்னால் நடந்து வந்துகொண்டிருக்க பல திரையுலகப் பிரமுகர்கள் அவரை அமைதியாக பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தர்கள். பின்னால் ஒரு வண்டியில் சாய்ந்த கண்ணாடிப்பேழையில் தமிழ் நெஞ்சங்களை தன் வசீகர வார்த்தைகளால் கொள்ளை கொண்ட அந்தக் கவிஞன் கண்ணயர்த்து உறங்கிக்கொண்டிருந்தான்..

மனதுக்கினிய அந்த கவிஞனை முதன்முதலில் அந்த நிலையில்தான் பார்த்தேன்...

Saturday, September 20, 2008

முதல் தொலைக்காட்சிப் பெட்டி

1976ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாள்..!

அன்றுதான் எங்கள் வீட்டிற்கு தொலைகாட்சிப் பெட்டி வந்தது. சென்னையில் தொலைக்காட்சி நிலையம் ஆரம்பித்து (15 ஆகஸ்ட் 1975) நான்கு மாதங்களில் எங்கள் வீட்டு கூடத்துக்கு வந்து விட்டது தொலைக்காட்சி பெட்டி.

நான் வசித்த மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனியில் எங்கள் வீட்டில்தான் முதன்முதலில் டி.வி வந்திறங்கியது. அதற்க்கு முன் அசோக் நகரில் யாரோ டிவி வைத்திருக்கிறாள் என்று கேள்விப்பட்டு அந்த வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு சுவர் இடுக்கிலிருந்து லேசாகத் தெரியும் டிவி பிம்பத்தை பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. டி.வி வந்த விஷயம் எப்படியோ மெல்ல மெல்ல காலனி முழுவதும் கசிந்து, சாரை சாரையாக மக்கள் கூட்டம் எங்கள் வீட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டது.

அது டெலிவிஸ்டா டி.வி.. அந்தகாலத்து மாடல்.. டிவி போட்டவுடன் ஒரு ஐந்து நிமிடம் கழித்துதான் ஒலி எழும்ப ஆரம்பிக்கும்.. ஒளி வருவதற்கு இன்னும் ஒரு ஐந்து நிமிடம் பிடிக்கும்..

அன்று ஞாயிற்றுக்கிழமை. மாலை 'குழந்தையும் தெய்வமும்' படம்.. கிட்டத்தட்ட 50 பேர் எங்கள் வீட்டில் உட்கார்ந்து படம் பார்த்தார்கள். பல பேரை அதற்க்கு முன்னால் நாங்களே பார்த்ததில்லை.

நான் எப்போதோ பார்த்த சிலர் எனக்கு திடீர் நண்பர்கள் ஆனார்கள்... அதுவரை 'எனிமி'யாக சிலர் என் நட்பை புதுப்பித்துக்கொண்டார்கள்.

உரிமையோடு உள்ளே நுழைந்த சிலர்.. மெல்ல பேச்சுக்கொடுத்துக்கொண்டே நைசாக உள்ளே நுழைந்த சிலர்.. "டிவி பொட்டில படமெல்லாம் காமிபாங்களா.." என்று அப்பாவியாய் கேட்டுக்கொண்டு சிலர்.. இவை போதாதென்று ஏதோ திரையரங்கத்துக்கு செல்வது போல் நொறுக்குத்தீனிகளுடன் நுழைந்த சிலர்.. என்று எங்கள் வீடே அன்று திருவிழா கோலம் பூண்டிருந்தது. படம் முடிந்து அவர்கள் சென்றவுடன் வீட்டை சுத்தம் செய்வதற்கே ஒரு மணி நேரம் பிடித்தது.

இந்தக்கூத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நீடித்தது. இதற்கு சரிபாதி கூட்டம் செவ்வாய்கிழைமை நாடகத்திற்கும் வெள்ளிக்கிழைமை ஒளியும் ஒளியும் நிகழ்ச்சிக்கும் வந்தது. சிலர் 'காண்போம் கற்ப்போம் ' , 'வயலும் வாழ்வும்', 'மனை மாட்சி'யைக் கூட விட்டு வைக்கவில்லை.

கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து பின் எங்கள் குடும்பம் மட்டும் டிவி பார்க்கிற நிலை ஏற்படுவதற்கு சில மாதங்கள் பிடித்தது.

Monday, September 15, 2008

சிவாஜி நினைவுகள்..

அது 2001ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு மாலைப் பொழுது...

தொலைக்காட்சியில் அந்த செய்தியைக் கேட்டவுடன் என்னால் நம்ப முடியவில்லை. தமிழர்களில் இதயங்களில் ஒரு நாற்காலியை போட்டுக்கொண்டு நிரந்தரமாக உட்காந்திருக்கும் அந்த நடிகர் திலகத்தின் வாழ்கையிலும் மரணம் என்ற சம்பவம் நிகழுமா? சிவாஜி என்ற மாமனிதனுக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டதா?

கலங்கின கண்கள்.. துடித்தது நெஞ்சு.. கண்ணீர் கவிதையாக மாறியது...

சிவாஜி மரணம்...

அறிவு ஏற்கிறது..
உணர்வு மறுக்கிறது..

தமிழ் சினிமாவின்
செல்லுலாய்ட் சிங்கம் தன்
சீற்றத்தை முடித்துக்கொண்டது...

அரை நூற்றாண்டு
தமிழனின்
பொழுதுபோக்கு
மறைந்து போனது..!

ஐம்பத்து வருட
வெள்ளித்திரை
வீரன்
விடைபெற்றான்..!

சிவாஜி..
எங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்தாய்..!

பாத்திரமாக நீ மாறினாய்.. அதை
வாழ்கையில் நடித்தது நாங்கள்...!
கண்ணாடிப் பேழையில்
நடிக்காத வேடத்தில் நீ ..
உண்மையாக அழுதது நாங்கள்...!

முன்னுறு படங்களில்
மொத்த வாழ்கையை முடித்த நீ
மரணத்தால் மரிக்கவில்லை..!

பராசக்தியில் தொடங்கிய பயணம்
படையப்பாவரை பத்திரமாக
பாதுகாக்கப்படும்..!

தொலைகாட்சியில்
நாளுக்கு பத்து
படங்கள்..
அதில் நாலைந்து நீ..

வானொலியில்
பலர் விரும்பும் பாடல்கள்..
அதில் பெரும்பான்மை நீ..

ஞாயிறு மாலை..
கையிலே தேநீர்..
சின்னத்திரையில் சிவாஜி..
சுகமான அனுபவம்..

தமிழனின் கேளிக்கை
காலாவதியாகும் வரை இந்த
மூன்றெழுத்துச் சொல்
முணுமுணுக்கப்படும்..!