ஏம்பா... பூபோட்ட சட்டை....
ஏய்.. ஹீரோ ஹோண்டா.....
எதுவுமே என்னைக் குறிப்பதாக தோன்றவில்லை...!
மனைவியிடம் சண்டை போட்டு கிளம்பிய எனக்கு
பின்னால் வந்த சைக்கிள்காரன் கடைசியா சொன்ன வார்த்தையைத் தவிர...!
"ஏண்டா... வீட்டுல சொல்லிட்டு வந்தியா...!"
மண்ணைப் பிசைபவன் குயவன்...!
மொழியைப் பிசைபவன் கவிஞன்...!
மரத்தை அறுப்பவன் தச்சன்...!
மனதை அறுப்பவன் கவிஞன்...!
செப்பைத் தட்டுவான் கொல்லன்...!
சிந்தையைத் தட்டுவான் கவிஞன்...!
இந்தியாவுக்கு இன்னொரு
சுதந்திர தினம்..
பாரத மாதா
சீனியர் சிட்டிசனாகிவிட்டாள்...
வயதுக்கு வருவதற்கு முன்பாகவே..!
ஜனநாயகத்தில்
வாக்காளர்கள்தான் நீதிபதிகளாம்..!
அப்படியானால்
வோட்டுப்போட்ட குற்றத்துக்காக
நீதிபதிகளுக்கு மட்டும் ஏன்
ஐந்தாண்டுகால
கடுங்காவல் தண்டனை?
1
அந்த நடைபாதை பிச்சைக்காரனின்
மூச்சு நின்றவுடன்
அரசாங்க மருத்துவமனையின் பிணவறையில்
இடம் கிடைத்தது...!
2
கால்கள் கட்டப்பட்டு
தலைகீழாக தொங்கவிடப்பட்டு
மிதிவண்டியின் கைப்பிடியில்
பயணிக்கும்
கோழிகள் அறியாது
தன் இறுதிப்பயணத்தை...!
3
இந்த வாய்க்கரிசிமட்டும்
நேற்று கிடைத்திருந்தால்
பட்டினிச்சாவை
ஓரிருநாள்
தள்ளிப்போட்டிருக்கலாம்...!
ஆணையத்தால்
அரசியலால்
நீதிமன்றத்தால்
தீர்க்கமுடியாததை
வருடாவருடம்
தீர்த்துவைக்கிறது
மழை...!
('கீற்று.காம்'ல் வெளிவந்தது)
ஏசுவின் அன்பு
மதமானது...!
புத்தரின் ஜென்
மார்கமானது...!
மார்க்சின் பொதுவுடமை
அரசியலானது...!
சங்கரரின் அத்வைதம்
தத்துவமானது...!
காந்தியின் அஹிம்சை
வெறும் சரித்திரமானது...!
('கீற்று.காம்'ல் வெளிவந்தது)
வாழ்க்கையில் எதுவுமே
என் கட்டுப்பாட்டில் இல்லை...!
எனக்கு
வாழ்கைப்பட்டவளைத் தவிர...
அவளுக்கு
அதுவும் இல்லை...!