Showing posts with label பயணக் கட்டுரைகள். Show all posts
Showing posts with label பயணக் கட்டுரைகள். Show all posts

Sunday, September 9, 2012

டப்ளின் சங்கமம்


நம்ம ஊர் சென்னை சங்கமம் போலவே டப்ளினில் 'திருவிழா.. எங்க தெரு விழா' நடக்கிறது. பல்வேறு பூங்காக்களில் தெருக்களில் நடக்கும் இந்த 'டப்ளின் சங்கமத்துக்கு' கூட்டம் அலை மோதுகிறது. ஒருமாத காலம் அயர்லாந்தில் தங்கியிருந்த காலத்தில் இவ்வளவு பேர் ஒரே இடத்தில்  கூடியிருந்ததை அப்போதுதான் பார்த்தேன். 

ஒரு பூங்காவில் கழைகூத்தாடி நிகழ்ச்சி, தொடர்ந்து பாட்டு நடனம் எல்லாம் நடந்துகொண்டிருந்தது. பூங்காவை சுற்றி பல பல கடைகள் - பல துரித உணவுகள், ஐஸ்கிரீம், பாப்கார்ன் எல்லாம்.. அதை சுற்றியுள்ள தெருவில் போக்குவரத்துக்கு தடை செய்பட்டு சிறுவர்களுக்கான பல விளையாடுக்கள் நடந்துகொண்டிருந்தன.

இந்த நிகழ்சிகள் பல ஆண்டுகளாக கோடையின்போது நடக்குமாம். 'பல ஆண்டுகளாக' என்று சொல்லும்போதே அரசியல் கலக்காமல், ஆட்சி மாற்றத்தால் நிறுத்தி வைக்கப்படாமல், மக்களை மட்டும் மனதில் வைத்து நடைபெற்றுவருகிறது என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. 









விக்லோ - அயர்லாந்தின் தோட்டம்


டப்ளினிளிருந்து ஒரு மணி நேர பஸ் பயணத்தில் இருக்கிறது அயர்லாந்தின் தோட்டம் என்று அழைக்கப்படும் 'விக்லோ' மாவட்டம். முழுவதும் அடர்த்தியான பச்சைப் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டிருக்கும் மலைத்தொடர்... பசுமையைத் தவிர வேறொன்றும் அறியாத பிரதேசம்.  இயற்கை வளங்கள் போதாதென்று அங்கங்கே செயற்கை புல்வெளிகள் வேறு..

விக்லோவை 'ஐரோப்பாவின் ஹாலிவுட்' என்று கூட அழைகிறார்கள்.. அந்த அளவுக்கு பல காலமாக பல சினிமா படப்பிடிப்பு இங்கு நடக்கிறது (கோலிவுட்க்கு ஊட்டி மாதிரி ஹாலிவுட்க்கு விக்லோ போல).

சாலி கேப் என்று ஒரு இடம்.. இதன் மலைப்பாதையில் சைக்கிள் ஓட்டுவது மிகப் பிரபலம்.. பல கிலோ மீட்டர்கள் நீளும் இந்த மலைபதையில் விக்லோவின் அழகை ரசித்துகொண்டே சைக்கிள் ஓட்டுவது பலரின் பொழுதுபோக்கு. சாலி கேப் பாதையில் அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஒரு இடம் கின்னஸ் ஏரி, கின்னஸ் எஸ்டேட் இங்கு இருப்பதால் இந்தப்பெயர்.. இங்கு கின்னஸ் பற்றி குறிப்பிட்டாக வேண்டும்.. கின்னஸ் என்பது அயர்லாந்தின் பிரபலாமான பீர் தயாரிக்கும் கம்பெனி, கிட்டத்தட்ட 250  வருடங்களாக இயங்கும் நிறுவனம் (இதற்கும் கின்னஸ் சாதனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை). பசுமை படர்ந்த மலைகளின் நடுவே உள்ள ஒரு பள்ளதாக்கில் கருநீல நிறத்தில் உறைந்து போன ஒரு தண்ணீர் பரப்பாக காட்சி அளிக்கிறது அந்த ஏரி. அதன் கரையில்  கவர்ச்சியான வெள்ளை மணல்கள்.. இந்த இயற்கை பேரழகை முழுவதும் உள்வாங்கிக்கொள்வதற்கே கொஞ்ச நேரம் பிடிக்கிறது.. இதன் அழகில் லயித்த ஒரு பீர் பிரியர் 'இந்த எரியே ஒரு பீர் கோப்பை போலவும் வெள்ளை கரைகள் பீர் நுரை போலவும் தெரிகிறது இல்லையா' என்றார். (படம் பார்க்க..) இதை பார்த்ததுமே அவருக்கு போதை ஏறிவிட்டது போலும்.

நாங்கள் பயணித்த பேருந்தின் ஓட்டுனர் நடத்துனர் எல்லாம் ஒருவரே.. மிக திறமையான ஆசாமி.. லாவகமாக பேருந்தை ஓடிக்கொண்டே ரேடியோ ஜாக்கி போல இடைவிடாது பேசிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு இடத்தை பற்றியும் விவரித்துக்கொண்டே வந்தவர் இந்த இடம் இந்த திரைப்படத்தில் வருகிறது, இதை பற்றி இவர் இப்படி எழுதியிருக்கிறார் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே வந்தார். அவருடைய ஆர்வமும் ஈடுபாடும் திறமையும் ரொம்பவே வியக்க வைத்தது. இங்கு காட்டுவிலங்குகள் உண்டா என்று யாரோ கேட்டதற்கு "விக்லோவில் காட்டு விலங்குகள் எல்லாம் இல்லை.. ஏன் பொதுவாகவே அயர்லாந்திலேயே ஆபத்தான விலங்குகள் எதுவும் கிடையாது".. என்றவர் கொஞ்சம் நிறுத்தி "இங்குள்ள அரசியல்வாதிகள் தவிர.." என்று கமென்ட் அடித்தார்.


ஜாலியான சைக்கிள் பயணம் 
பீர் பாட்டில் ஏரி 

அழகு சேர்க்கும் கோட்டை 
தெளிந்த நீரோடை 

வண்ண வண்ண விக்லோ 

Sunday, August 19, 2012

ஐரோப்பாவின் கடைகோடி தேசத்தில்...

அயர்லாந்து... ஐரோப்பாவின் கடைகோடி தீவு தேசம்... இதில் வட அயர்லாந்து பிரிட்டன் வசம்  இருக்க தென் அயர்லாந்து மட்டும் தனி நாடக,   அயர்லாந்து குடியரசாக இருக்கிறது. கிழக்கே பிரிட்டன் தீவு இருக்க மேற்கே 5000 கிலோமீட்டருக்கு வெறும் கடல்.. கடல்.. அட்லாண்டிக் பெருங்கடல்.  

இதன் தலைநகர்  டப்ளினில் ஒரு மாத காலம் தாங்கும் வாய்ப்பு கிடைத்தது. 

மிக அழகான சிறிய நகரம் டப்ளின். மொத்தமே 18 லட்சம் பேர் வசிக்கும் நகரம்.. (அயர்லாந்து மக்கள்தொகையே 44 லட்சம்தான்.. சென்னையை விட குறைவு). நகரின் மையப்பகுதி தவிர எங்கும் போக்குவரத்தே இல்லை.. பெரிய பெரிய கட்டிடங்கள் இல்லை... ஒரே  மாதிரியான செங்கல்  தெரியும்படியான பிரிட்டிஷ்  பாணி வீடுகள். மேலே  கண்டிப்பாக ஒரு புகைபோக்கி, வீட்டுக்கு  முன்புறம் அழகிய தோட்டம்,  தோட்டத்தில்  வண்ண வண்ண ரோஜாப்பூக்கள்.. டப்ளின் முழுவதும் இதே காட்சிகள்தான். அயர்லாந்தின் செல்லப் பெயர் 'மரகத தேசம்'. எங்கும் பசுமையாக காட்சியளிப்பதால் அதற்கு இந்த பட்டம் - டப்ளினும் இதற்கு குறைந்தது இல்லை. எங்கும் எல்லா இடத்திலும் புல்வெளி.. புல்வெளி.. மரங்கள்.. மரங்கள்.. எங்கும் செழுமையான பசுமை.. அதுவும் காலைநேர டப்ளின் அழகை 'புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா..' என்று தாராளமாகப் பாடலாம்.

டப்ளினில் பிரச்சனையான ஒரு  விஷயம் அதன் வானிலை. டப்ளின்  வானிலையைப்  பற்றி  குறிப்பிடும்போது   'ஒரே நாளில் நான்கு பருவம் (four seasons in a day ) என்று சொல்லுவார்கள். ஒரே நாளில் வெயில், மழை, குளிர், காற்று என்று மாறிக்கொண்டே இருக்கும் பருவநிலை. அதுவும் 30  நிமிடங்களுக்கு ஒருமுறை அடுத்து என்ன  வரப்போகிறது என்று கணிக்கமுடியாத வானிலை மாற்றம். மழை பெய்கிறதே என்று குடை எடுத்துக்கொண்டு போனால் நல்ல வெயில் அடிக்கும். வெயில் அடிக்கிறதே என்று ஸ்வெட்டர் போடாமல் போனால் குளிர்காற்று ஊசிபோல குத்தும். ரொம்பவும் குளிருகிறதே என்று ஜெர்கின் அணிந்துசென்றால் அப்போதுதான் நல்ல வெயில் அடித்து கடுப்பேத்தும். எனவே எப்போதும் வெளியேசெல்லும்போது   குடை, ஸ்வெட்டர், ஜெர்கின் இத்யாதிகளை கைவசம்  வைத்திருப்பது அவசியம்.

பேருக்கு ஏற்றால்போல அயர்லாந்து மக்கள் அயராது உழைப்பவர்கள் எல்லாம் கிடையாது.. எல்லோரும்  கொஞ்சம் சுகவாசிகள்தான்...! மாலை ஐந்து ஐந்தரை மணிக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்து நாயுடன் நடை, மெல்லோட்டம், சைக்கிள் பயிற்சி என்று வெளியே கிளம்பிவிடுவார்கள். அதுவும் கொஞ்சம் வெயில் அடித்தால் போதும்.. ஒரே கொண்டாட்டம்தான்.. வெப்பஅளவு   அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்றாவாறு அவர்கள் உடைகளும்   குறைந்து கொண்டே வருவதைக் காணலாம். ஆனால் அயர்லாந்து பொருளாதாரம் இப்போது இருக்கும் மந்த நிலையில் வேலையின்மை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவரும் இந்த நிலையில் இவர்கள் இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே சுகவாசிகளாக காலம்  தள்ளமுடியும் என்று தெரியவில்லை..

டப்ளின் பற்றி இன்னும் சுவாரசியமான தகவல்கள் வரும் பதிவுகளில்...

Sunday, December 26, 2010

தாஜ்மஹால் தரிசனம்

தாஜ்மஹால்.. இதை பாடாத கவிஞர்கள் இந்தியாவில் இல்லை.. இதை வரையாத ஓவியர்கள் இல்லை.. இதன் குறிப்புக்கள் இல்லாத பாடபுத்தகங்களும் இல்லை.. காலங்காலமாய் காதலின் கருப்பொருளாய் அழகின் அடையாளமாய் சித்தரிக்கப்பட்ட ஒரு மாளிகை.. இந்திய சுற்றுலாவின் சின்னம்..

சின்ன வயதிலிருந்தே ஓவியங்களாகவும் புகைப்படங்களாகவும் திரைப்படங்களாகவும் மனதில் பதிந்த ஒரு பிம்பத்தை நேரில் பார்க்கும் போது எப்படியிருக்கும்? ஆக்ரா பிரதான சாலையிலிருந்து தாஜ்மஹால் இருக்கும்  இடத்திற்கு ஒட்டகத்தில் வந்து இறங்கினோம். முன்னால் ஒரு பெரு மண்டபம்... சற்றே குறுகலான வாயில்.. அதன் வாசலை நெருங்கும் வரை தாஜ்மஹால் இருக்கும் இடமே தெரியவில்லை. அதைக்கடந்தவுடன் நம் முன்னால் வாவ்.. நிஜ தாஜ்மஹால்... உலக அதிசயத்தை தரிசித்துக்கொண்டிருகிறோம் என்கிற பிரமிப்பே வாய் பிளக்கவைகிறது.  சட்டென்று தாஜ்மஹாலை தரிசிக்கும்போது நம் உடலில் ஏற்படும் மெல்லிய சிலிர்ப்பை அடக்க முடியவில்லை.

தாஜ்மஹால் ஏன் உலக அதிசயம்? இதில் மூன்று விஷயங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.. இதன் அழகு, இதிலுள்ள அதிநுட்ப நுணுக்கம் மற்றும் இதன் நேர்த்தி.. இந்த மூன்றும் சேர்ந்துதான் இன்று தாஜ்மஹாலை உலகத்தின் சிறந்த கலைப்படைப்பாக விளங்க வைக்கிறது. தாஜ் அழகுபற்றி சொல்லவே வேண்டாம். இருபுறமும் உள்ள தோட்டங்களை ரசித்துவிட்டு தாஜ்மஹால் செல்வதற்கே கொஞ்ச நேரம் பிடிக்கிறது. தாஜ்மகாலில் ஒவ்வொன்றும் மிக நுட்பமாக  அதி கவனத்துடன்  அமைக்கப்பட்டிருகிறது. முதல் வாயிலைக்கடந்தவுடன் கொஞ்சம் சிறியதாக தெரியும், அனால் அருகே செல்ல செல்ல அதன் பிரமாண்டம் அதிகரிக்கும். பின் அந்த பளிங்கு மாளிகையின் படிகளில் ஏறினால் மேல்கூரைகூட தெரியாது. தாஜ்மஹாலை சுற்றியுள்ள நான்கு தூண்களும் சற்றே சாய்ந்து இருக்கும். ஏதாவது அசம்பாவிதம் நடந்து அந்த தூண்கள் விழுந்தாலும் தாஜ்மஹாலில் விழாது. தாஜ்மஹால் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் உலோக தூண் பாரசீக மற்றும் இந்து குறியீடுகளை கொண்டது. முதலில் தங்கத்தினால் செய்யப்பட்ட இதை எடுத்துவிட்டு  ஆங்கிலேயர்கள் பித்தளை தூணாக மாற்றினார்.

இந்த அதிஅற்புதமான கட்டிடதுக்குப்பின் 22000 பணியாளர்களின் 20 வருட உழைப்பு இருக்கிறது, உலகின் தலை சிறந்த நிபுணர்களின் கைவண்ணம் இருக்கிறது. மேலும் இதன் பணிகளுக்கு கிட்டத்தட்ட ஆயிரம் யானைகள் உபயோகப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. அந்த காலத்திலேயே 3.5 கோடி ருபாய் செலவு பிடித்தது  (அப்போது சுப்ரீம் கோர்ட் எல்லாம் இல்லை.. யாரும் பொதுநலவழக்கு தொடரமுடியாது).. இருக்காத பின்னே.. இங்கு பதிக்கப்பட்ட ஒவ்வொரு கற்களும் உலகத்தின் பலதிசைகளிருந்து எடுத்து வரப்பட்டன.. ராஜஸ்தானிலிருந்து பளிங்கு கற்கள், சீனாவிலிருந்து நீலப்பச்சை கற்கள் மற்றும் படிகங்கள், அரேபியாவிலிருந்து இரத்தினக்கல், பஞ்சாபிலிருந்து சிலிகன் கற்கள், இலங்கையிலிருந்து நீலக்கல், மற்றும் ஆப்கனிஸ்தான், திபெத், ஐரோப்பாவிலிருந்துகூட சில பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

ஆனால் இவையெல்லாம் விட அந்த வெள்ளை மாளிகையில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது. எவ்வளவு முறை திரைப்படங்களிலும் புகைப்படங்களிலும் பார்த்திருந்தாலும், நேரில் பார்க்கும்போது தாஜ்மஹாலின் அழகிலும் நேர்த்தியிலும் லயித்துபோகாமல் இருக்கமுடியவில்லை. இதற்கு காதல் பின்னணியும் ஒரு காரணமாக இருக்கலாம்.. ஏனென்றால் முகலாய சாம்ராஜ்யத்திலும் சரி.. மற்ற சாம்ராஜ்ஜியகளிலும் சரி.. இன்று பாரம்பரிய இடங்களாக திகழ்பவை கோட்டைகளும் அரண்மனைகளும், சமாதிகளும் தான்.. கோட்டைகள் தங்கள் வெற்றியை நிலைநாட்டவும் தங்களின் பாதுகாப்புக்காகவும் கட்டப்பட்டவைகள்.. அரண்மனைகள் தான் எவ்வளவு பெரிய சக்கரவர்த்தி என்பதை உலகுக்கு காட்டுவதற்காக கட்டப்பட்டவை.. பெறும் பொருட்செலவில் கட்டப்படும் சமாதிகளும் இதே  காரணங்களுக்காகத்தான்.. ஆனால் தாஜ்மஹால் அன்பினால் காதலினால் ஈர்க்கப்பட்டு ரசித்துக் கட்டப்பட்டது.. அதனால்தான் அந்த மாளிகையில் 400 வருடங்கள் கடந்தும் இன்னும் ஒரு ஜீவன் இருப்பதை மறுக்கமுடியாது.

தாஜ்மஹால் ஒரு காதல் சின்னம் என்பதில் கருத்து வேறுபாடுகள் இல்லை. ஆனாலும் சில விஷயங்கள் நெருடுகிறது. ஷாஜஹானுக்கு மும்தாஜ் மூன்றாவது மனைவிதான். (மற்ற இரு மனைவிகளுக்கும் தாஜ்மஹலுக்கு இடப்புறமும் வலப்புறமும் 'கொஞ்சம் சாதரணமான' சமாதிகள்.. அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை..) ஷாஜஹானுடன் வாழ்ந்த 18 வருடங்களில் 14 குழந்தைகளை ஈன்றெடுத்து, கடைசி பிரசவத்தில் இறந்து போனார் மும்தாஜ். தன் வாழ்நாளில் பாதிநாட்கள் கர்ப்பிணியாகவே இருந்திருக்கிறார். அதுமட்டும்இல்லாமல் போர்க்களத்துக்கு செல்லும்போதும் கூட ஷாஜஹான் மும்தாஜை கூடவே அழைத்துச்சென்றதாக குறிப்புகள் உள்ளது. இதனால் மும்தாஜ் ஷாஜஹானுடன் சந்தோஷமாக நிம்மதியாக வாழ்திருப்பது சந்தேகம்தான். ஷாஜஹான் மும்தாஜை ஒரு அழகுப்பதுமையாக பார்த்து கண்மூடித்தனமாக காதலித்தாரே தவிர ஒரு மனைவிக்கு  உண்டான  மரியாதையை கொடுத்திருக்கமாட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. இது ஷாஜஹானுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். இதனால்தான் மும்தாஜ் இறந்தபிறகு, தான் ஒரு சக்கரவர்த்தி என்பதையே மறந்து அரசு அலுவல்களில் கவனம் செலுத்தாமல் சில ஆண்டுகள் சோகமாக இருந்திருக்கிறார். கருமையாக இருந்த அவர் தலைமுடி திடீரென முழுவதும் நரைத்துவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. அதனால் திடீரென மும்தாஜ் நினைவாக ஒரு மாளிகை கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார்.. ஏற்கனவே பர்ஹான்பூர்  என்கிற இடத்தில்  புதைக்கப்பட்ட மும்தாஜ் உடல் தோண்டிஎடுக்கப்பட்டு இபோது தாஜ்மகால் உள்ள இடத்தில்  அடக்கம்  செய்யப்பட்டது. பின் 20 ஆண்டுகள் தாஜ்மகாலை  கட்டுவதிலேயே  மும்முரமாக  இருந்தார் ஷாஜஹான்.

இது ஒருபுறம் இருக்க பின் பல காரணங்களால் எரிச்சலடைந்த ஔரங்கசீப் (மும்தாஜின் இரண்டாவது மகன்) ஆட்சியை கைப்பற்றி தன் தந்தையை சிறையில் அடைத்தார். ஔரங்கசீப் ஒரு முசுடு.. ஷாஜஹனுக்கு இருந்த கலை ஆர்வம் அவருக்கு இல்லை.. இதுபோன்று மாளிகைகள் கட்டுவதெல்லாம் வீண்செலவு என்று நினைப்பவர். ஷாஜஹானை கைது செய்து ஆக்ரா கோட்டையில் அடைத்த ஔரங்கசீப், அங்கிருந்து ஒரு ஜன்னல் வழியே தாஜ்மஹாலை பார்பதற்கு மட்டும் அனுமதி அளித்திருந்தார். பிறகு ஷாஜஹான் உடல்நலம்குன்றி படுத்தபடுக்கையானபோது ஜன்னல் அருகே ஒரு கண்ணாடி வைத்து அதில் தாஜ்மஹால் பிம்பத்தை கண்டுகொண்டிருந்தார்.  கடைசியாக அந்தக் கண்ணாடியை பார்த்த நிலையிலேயே அவர் உயிர் பிரிந்திருக்கிறது. இப்படியாக எல்லா காதல் சரித்திரங்களைப்போலவே ஷாஜகனின் காதல் கதையும் சோகமாகவே முடிந்திருகிறது. 

ஒரே ஒரு சந்தேகம்...ஷாஜஹான் மும்தாஜை நேசித்தது வேண்டுமென்றால் உண்மையாக இருக்கலாம். ஆனால் மும்தாஜ் ஷாஜஹானை எவ்வளவு தூரம் நேசித்தார் என்று தெரியவில்லை..!

எது எப்படியோ... தாஜ்மஹால் இந்தியாவின் காதல் சின்னம்.. அழகியலுக்கான ஒரு அடையாளம்.. அத்தனை வெளிநாட்டவருக்கும் இந்தியா என்றால் முதலில் நினைவுக்கு வருவது தாஜ்மகால்தான்..
 
இந்தியனாகப் பிறந்துவிட்டு தாஜ்மஹாலை தரிசிக்காமல் இருப்பதில் அர்த்தம் இல்லை.

- இனி என் கேமிரா வழியே தாஜ்மஹால்...

Thursday, December 9, 2010

ஆக்ரா பற்றி...

ஆக்ராவில் நாங்கள் தங்கியிருந்தது தாஜ் மஹால் செல்லும் வி.ஐ.பி சாலையில்.. ஆக்ரா ரயில் நிலையத்திலிருந்து தாஜ் மஹால் செல்லும் சாலை, மற்றும் இந்த வி.ஐ.பி சாலை பிரமாதமாக அமைக்கப்பட்டிருக்கிறது, பல வெளிநாட்டவர் வந்து போவதால்.  ஆனால் இந்த வி.ஐ.பி சாலையில் இருப்பது பெறும் தொல்லை என்கிறார்கள் அங்கு வசிக்கும் மக்கள். யாராவது வி.ஐ.பி வந்தால் பாதுகாப்பு கெடுபிடிகள் எக்கச்சக்கமாக இருக்குமாம். கிளிண்டன், முஷாரப் வந்தபோது நான்கு நாட்கள் வீட்டைவிட்டே வெளியில் வரமுடியவில்லையாம்.

அவர்கள் சொன்னமாதிரியே, அன்று தாஜ்மஹாலை பார்க்க காமன்வெல்த் வீரர்கள் வருவதால் அந்த சாலை  போக்குவரத்துக்கு தடை செய்யப்படிருந்தது. முதலில் ஆக்ரா கோட்டை போக தீர்மானித்தோம். ஒரு ஆட்டோக்காரர் குறுக்கு  வழியில் அழைத்துப்போவதாக சொன்னார். மெயின் ரோடுக்கே வராமல் ஆட்டோவை ஆக்ராவின் சந்து பொந்து சாக்கடை மேலெல்லாம் ஒட்டினர். இருபுறம் கழிவுநீர்களுடன் ஒருவர் மட்டும் நடந்து செல்லக்கூடிய பாதைகளில் குடிசைகளை உரசியவாறு சென்றது ஆட்டோ. சில இடங்களில் இரு சக்கரத்தில் மட்டுமே பயணித்தது. தாஜ் மகாலையும் ஆக்ரா கோட்டையையும்  ரசிக்க வந்த நாங்கள் முதலில் கண்டது ஆக்ராவின் சேரிகளைத்தான்.. ஒரு பக்கம்  வி.ஐ.பிக்களை  வரவேற்பதற்காக அழகான தூய்மையான சாலைகள்.. அதே சாலை பக்கத்தில் மிகவும் அசுத்தமான சேரிகள்...

ஆக்ரா கோட்டை.. பல முகலாய மன்னர்கள் வாழ்ந்த இடம்... ஷாஜஹான் சிறை வைக்கப்பட்ட இடம்... இன்று  யுனஸ்கோவால்  அங்கீகரிக்கப்பட்ட கலாச்சார மையம். கோட்டைக்குள் உள்ளுக்குள் பல கட்டிடங்கள் பற்பல வேலைப்பாடுகள், அலங்காரங்கள் இருக்கின்றன.. பல மன்னர்களால் புதுபிக்கப்பட்ட இந்த கோட்டையின் ஒரு மாடத்திலிருந்து தூரத்தில் அந்த பளிங்கு மாளிகை தெரிகிறது. 

ஆக்ராவில் எல்லா முகலாய மன்னர்களுக்கும் அவர்கள் மனைவிகளுக்கும் சமாதிகள் இருக்கிறது.. சில இடங்களில் பல சமாதிகள் ஒரே கட்டிடத்துக்குள் அமைந்துள்ளன. இவற்றுள் என்னை கவர்ந்தது ஆக்ரா அருகே சிகந்தரில் உள்ள அக்பர் சமாதி. இருபக்கமும் உள்ள பெரிய புல்வெளிகளில் மான்களும் மயில்களும் மேய்ந்துகொண்டிருக்க கிட்டத்தட்ட 120 ஏக்கரில் அமைந்துள்ளது. பார்பதற்கு ஹுமாயுன் சமாதி போலவே இருக்கிறது.

கடைசியாக தாஜ் மகாலுக்கு செல்வதற்கு ஆட்டோவில் ஏறினோம். முன்பு வந்தவர் அதிரடி ஆட்டோக்காரர் என்றால் இவர் அப்பாவி ஆட்டோகாரர். 20 ரூபாய் கேட்டார்..  ஏறி உட்கார்ததும் தாஜ்மகால் திறக்க இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது என்றார் 'இதை முதலிலேயே சொல்லவேண்டியதுதானே.. அத்தனை நேரம் நாங்கள் என்ன செய்வது' என்று லேசாக கடித்துகொண்டோம். அதற்கு அவர் 'பிரச்சனையில்லை.. உங்களை மார்கெட் பகுதியில் இறக்கி விடுகிறேன்.. நீங்கள் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்.. அதுவரை காத்திருக்கிறேன்' என்றார். ஒரு 20 ரூபாய்க்காக முக்கால் மணிநேரம் காத்திருந்து எங்களை தாஜ்மகால் வாசலில் இறக்கி விட்டார். அதேபோல தாஜ் வாசலிலிருந்து தாஜ்மஹால் வரை ஒட்டக சவாரி 4 பேருக்கு வெறும் 20 ருபாய்...! தாஜ்மகாலில் ஒரு கைடு 100 ரூபாய்க்கு 2 மணி நேரம் எங்களுடனே இருந்து எல்லாவற்றையும் அற்புதமாக விளக்கினார். காலையிலிருந்து நீங்கள்தான் முதல் போணி என்று வேறு சொன்னார். உலகத்தின் முக்கியமான ஒரு சுற்றுலாதலத்தில் அதுவும் வெளிநாட்டவர்கள் மொய்க்கும் ஒரு இடத்தில் ஏன் இப்படி ஒரு வறுமை என்று புரியவில்லை.

இனி தாஜ் தரிசனம்..!

- பயணம் தொடரும்

Monday, December 6, 2010

பலூன் படகு பயணம்

ரிஷிகேஷ் செல்பவர்கள் 'river rafting ' என்னும் பரசமூட்டும் நதி படகு பயணத்தை அனுபவித்தே ஆகவேண்டும். நதியின் வேகத்தோடு பயணிப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை காற்றடைக்கப்பட்ட பலூன் படகுகள். அவை நதியின் சீற்றத்துடன் ஈடுகொடுக்கக்கூடியவை.. பாறைகளில் மோதினாலும் உடையாதவை.. கங்கை நதியில் பலூன் படகு பயணம் செல்ல ரிஷிகேஷத்தில் பல இடங்களில், பல விடுதிகளில் இதற்காக முன்பதிவு செய்துகொள்ளலாம். 12 கி.மீ. பயணத்துக்கு 450 ருபாய், 24 கி.மீ.க்கு 750 ருபாய் என்று விதவிதமான பயணங்கள் உண்டு. சில இடங்களில் கங்கை கரையோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்தில் இரவு தங்கும் வசதியும் உண்டு (ரூ 1000 முதல் 2000 வரை)

நாங்கள் சோமானியா பவனிலேயே பதிவு செய்துகொண்டு காலை 8 மணிக்கு  கிளம்பினோம்.  ஒரு ஜீப்பில் கிளம்பி படகு காற்றடிக்கும் இடத்தை அடைந்தோம்.  எங்களுக்காக ஒரு பெரிய பலூன் படகு தயாராக இருந்தது. அதில் 8பேர்  தாராளமாக  அமர்ந்துகொள்ளலாம்.  சிலர் அந்த பலூன் படகை எடுத்து ஜீப்பின் மேல் போட்டார்கள்.. துடுப்புகளை ஜீப்பின் பின்னால் போட்டு விட்டு நம்மோடு ஏறிக்கொண்டார்கள். ஒரு அரைமணிநேரம் மலைமேல் பயணித்து பிரம்மபுரி (ரிஷிகேஷிலிருந்து 12  கி.மீ) என்ற இடத்தை அடைத்தோம். பிறகு ஒரு மலைச்சரிவில் இரண்டு பேர் படகைத் தூக்கிக்கொண்டு வர நாங்கள் துடுப்புகளை எடுத்துகொண்டு நடந்தோம்.. அதோ.. அழகிய கங்கை நங்கை மலைகளூடே ஆர்பரித்து வந்து கொண்டிருகிறாள். காலைக்கதிரில் கங்கை நதி தங்க நதியாக உருகி ஓடிவருவதை  காணும்போது மனம் குதூகலித்தாலும், அதன் நடுவே பயணிக்க வேண்டும் என்றவுடன் லேசாக பயம் கவ்விக்கொண்டது. கரையை அடைந்ததும் அனைவரும் 'லைப் ஜாக்கெட்' மற்றும் தலைகவசம் அணிந்துகொண்டோம்.  படகை ஆற்றங்கரையில் வைத்துவிட்டு காலை எங்கு வைக்கவேண்டும், துடுப்பை எப்படி செலுத்தவேண்டும் என்கிற  வழிமுறைகளை ஆங்கிலம் கலந்த இந்தியில் சொன்னார்கள். பிறகு நம் செல்போன், பர்ஸ், கேமிரா எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு ஒரு பையில் போட்டு பின்னால் வைத்து விடுகிறார்கள்.

எல்லோரும் படகில் உட்கார்துகொண்டு துடுப்பை கையில் பிடித்துகொண்டோம். 'ஹோய்' என்ற சத்தத்துடன் படகை இரண்டுபேர் தள்ளிவிட படகு கங்கையில் மிதக்கத் தொடங்கியது... கொஞ்சம் துடுப்பு போட்டவுடன் படகு வேகமாக நகரத்தொடங்கியது. தெளிவான  குளிர்ந்த  தண்ணீர்  நம்மீது தூறல் போட்டுக்கொண்டே  வந்தது..  மெதுவாக  நகர்ந்து நகர்ந்து இப்போது நடு கங்கைக்கு வந்து விட்டோம்.  ஒரு இளைஞர் கூட்டம் நம்மை விட அதிவேகத்தில் படகை செலுத்திக்கொண்டு கைஅசைத்துக்கொண்டே விரைவாக கடந்து சென்றனர். நாங்கள் என்னவோ மெதுவாகத்தான் துடுப்பு போட்டுக்கொண்டிருந்தோம். நதியும் ஆர்பட்டமிலாமல் எங்களுடன் சமாதானமாக இருந்தது.   'அமைதியான நதியினிலே ஓடம்' என்று நான் பாட நினைத்ததுதான் தாமதம். அதுவரை அமைதியாக இருந்த நதி ஒரு வளைவு வந்ததும் தன் சீற்றத்தை மெல்ல ஆரம்பித்ததும் படகும் துள்ளிக்குதிக்க ஆரம்பித்தது. கொஞ்ச நேரம்தான்... ஆர்பரித்துவரும் நதியலையில் மோதி படகு செங்குத்தாக மேலே ஏறி இறங்கியது.. அவ்வளவுதான்.. எங்களை கடந்து சென்ற ஒரு பேரலை எங்களை தொப்பலாக நனைத்து விட்டது.  பின் 'அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்' என்று பாடினேன்.

அந்த வளைவைக் கடந்ததும் கங்கை கொஞ்சம் அமைதியானது.. 'வேண்டுமென்றால் நீங்கள் இறங்கலாம்' என்று சமிக்கை கொடுத்தார் படகுக்காரர். அருகிலிருந்த ஒருவர் 'தொப்' என்று நதியில் குதித்து படகிலிருந்த கயிறை பிடித்துக்கொண்டார்..  பின்  படகின்  பின்னால் நீந்திக்கொண்டே வந்தார்.. நானும் இறங்கலாமா என்று யோசிப்பதற்குள் 'நதியின் வேகம் கூடிவிட்டது.. படகில் ஏறுங்கள்' என்ற அறிவிப்பு வந்தது. கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு இடத்தில் சில பாறைகள் தெரிந்தன. கடல் அலைகள் சுவரில் மோதினால் ஏற்படுமே அதுபோல உயர அலைகள். படகு நிலைகொள்ளாமல் ஆடியது.. படகுக்காரர்கள் லாவகமாக படகை திசை திருப்பினார்கள். நாங்கள் கையில் துடுப்பை வைத்துகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். மீண்டும் ஒரு வளைவு.. அதே ரோலர் கோஸ்டர் பயணம்... இப்படி பல ரோலர் கோஸ்டர் பயணத்தில் எங்களுடன் மோதிய அலைகள்  எங்களை  சொட்ட சொட்ட நனைய வைத்துவிட்டது.  செல்போன், கேமிராவை தனியாக எடுத்து வைத்ததன்  அர்த்தம் புரிந்தது.

இப்போது நாங்கள் லக்ஷ்மன் ஜூலாவை கடந்து விட்டோம்.. நீரின் வேகம்  குறைந்தவுடன்  'இறங்கலாம்' என்றார் படகுக்காரர். இந்தமுறை நான் தயாராகிவிட்டேன். கயிறை பிடித்துகொண்டு நடு கங்கையில் குதித்தேன். உடல் முழுவதும் ஜில் என்ற பரவசம்.. காலுக்கு அடியில் பல அடி ஆழம் இருக்கும் என்று தெரிந்தது (50௦அடியாம்). லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் ஜாலியாக மிதந்து கொண்டிருந்தேன். ஐந்து நிமிடம்தான்.. அச்சம், குளிர் எல்லாம் பறந்து விட்டது. இப்போது கயிறையும் விட்டு விட்டு ஆனதமாக நடு கங்கையில் நீந்திக்கொண்டிருந்தேன். படகை விட்டு கொஞ்ச தூரம் தள்ளி மிதக்கும் அளவுக்கு தைரியம் வந்தது. எப்படியும் மார்புக்கு மேலே தண்ணீர் போகாது என்கிற தைரியம்... அலுக்க சலிக்க கங்கையில் நீந்திவிட்டு பின் படகில் ஏறிக்கொண்டேன். கிட்டத்தட்ட ஒரு மணிநேர பயணத்துக்குப் பிறகு கடைசியாக எங்களை நாங்கள் தங்கியிருந்த விடுதியின் பின்புறம் இறக்கி விட்டதுதான் பரவசத்தின் உச்சகட்டம்.

ஏதோ கங்காஸ்நானம் என்று சொல்லிக்கொண்டு தம்மாதூண்டு சொம்பில் கங்கைநீரைக் கொண்டுவந்து தலையில் தெளித்துக்கொள்வார்களே... அதெல்லாம் வீண்... இனி ஏழேழு ஜன்மங்களுக்கும் சேர்த்து கங்காஸ்நானம் செய்தாகிவிட்டது. அவ்வளவு முறை கங்கையில் முங்கி எழுந்தாகிவிட்டது.

ரிஷிகேஷ் செல்பவர்கள் பலூன் படகு சவாரியை அனுபவிக்காமல் வாராதீர்கள். சில  யோசனைகள் - நதியில் இறக்கிவிடுவீர்களா என்று முன்பே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.. சாதாரண கனமில்லாத உடைகளையே  அணிந்துகொள்ளுங்கள்..  ஜீன்ஸ் வேண்டாம்.. ஷூ வேண்டாம்.. செருப்பு அணிந்து கொள்ளுங்கள்..

இனி மொகலாய ஆட்சியின் சின்னம்.. ஆக்ரா நகரம்..!

- பயணம் தொடரும்...

Thursday, November 18, 2010

ரம்யமான ரிஷிகேஷம் - ஒரு வடஇந்தியப் பயணம்

அமிர்தசரசிலிருந்து ஹரித்வார் வந்து இறங்கினோம். அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து ரிஷிகேஷ் சென்றோம். அங்கு எல்லாமே நம்மவூர் ஷேர் ஆட்டோ  அளவுக்கு  இருக்கிறது.. ஒரு மணிநேரம் அந்த 'லோட லோட' ஆட்டோவில் பயணித்து ரிஷிகேஷ் வந்து சேர்ந்தோம். நடுநடுவே கங்கையின் பல கிளை நதிகளைப் பார்க்க முடிந்தது.

ரிஷிகேஷில் வந்து இறங்கியது ஜானகிதேவி சோமானி பவன். அது ஹோட்டல் அல்ல..குறைந்த அளவில் அறைகளை கொண்டு நடத்தப்படும் ஒரு அறக்கட்டளை. அறை கிடக்க கொஞ்சம் நேரமானது. அதற்குள் எங்காவது குளித்துவிட்டு சிற்றுண்டி சாப்பிடலாமா என்று ரிசப்ஷனில் கேட்டேன். 'செய்யலாம்..பின்புறம் செல்லுங்கள்' என்றார்கள். சரி பின்னால் ஏதோ ஒரு பொது குளியலறை இருக்கும் என்று சென்றால்... என்ன ஆச்சரியம்.. என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை...

அகண்ட கங்கை  நதி  பிரவாகமெடுத்து ஓடிக்கொண்டிருகிறது.. பின்னால் ஓங்கி உயர்ந்து நிற்கும் இமயமலைச் சாரல்... 'ஒ'வென்ற ஓசையுடன் நகர்துகொண்டிருக்கும் தண்ணீரின் சலசலப்பைத்தவிர வேறெந்த சப்தமும் இல்லை. நான் என்னை மறந்த நிலையில் நின்றுகொண்டிருந்தேன். கங்கை நதியில்தான் என்ன ஒரு கம்பீரம், என்ன ஒரு ரம்யம், இந்தியாவுக்கு இயற்கை அளித்த கொடை இந்த கங்கையும் இமயமும்...  சிறிது நேரம் கழித்துதான் நான் பார்ப்பது நிஜம் என்ற உணர்வே வந்தது. ரொம்பநாள் பசியோடு இருந்தவன் அவசரஅவசரமாக உண்பதைப்போல, எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு அந்த இயற்கை கொஞ்சும் எழிலை என் இரு கண்களில் பதித்துக்கொண்டேன். கங்கையின் பயணம் மிகப்பெரியது..இயத்தில் உள்ள பனிப்பாறைகள் உருகி கங்கோத்ரியில் துவங்கி பாகிரதி நதியாக தேவப்பிரயாகை வந்து அடைகிறது. இதோடு இன்னொரு பக்கம் அலக்நந்தா நதி இணைத்துக்கொள்ள அங்கிருந்து கங்கை நதி தன் பயணத்தை துவக்குகிறது. ரிஷிகேஷத்தில் இமயமலையை விட்டு இறங்கி ஹரித்வாரம், கான்பூர், காசி, பாட்னா, கொல்கத்தா வழியாக சென்று, 2500 கி.மீ பயணித்து, வங்காள விரிகுடாவில் கலக்கிறது.. இமயத்திலிருந்து நேரடியாக வருதால் ரிஷிகேசத்தில்  மாசுபடாத கங்கை சாம்பல்நிறத்தில் ஓடிக்கொண்டிருகிறது. 


சோமானி பவன் பின்புறம்

கங்கையின் அருகே நின்று ரசிப்பதற்கு ஒரு படித்துறை.. இறங்குவதற்கு சில படிகள். கங்கையின் வளைவு நெளிவுகளூடே இந்தப்படிதுறை  கிட்டத்தட்ட  ரிஷிகேஷம் முழுவதும்  நீண்டுகொண்டே செல்கிறது. அங்கங்கு தூவப்படும் சம்மங்கிப் பூக்கள் நதியோடு  பயணித்துக்கொண்டிருகிறது. வெளியில் வெயில்.. ஆனால் கங்கையில் காலை வைத்தால் ரத்தம் உறைந்துபோகுமோ என்று நினைக்கும்  அளவுக்கு குளிர்ச்சி...!  நம் உடல் உஷ்ணம் அந்த குளிர்த நீருடன் ஒத்துபோவதற்க்கு கொஞ்ச நேரம் பிடிக்கிறது. பிறகென்ன.. ரிஷிகேஷத்தில் இருந்த இரண்டு நாட்களும் கங்கையில் ஆனந்த குளியல்தான்..அந்த சுகானுபவத்தை அனுபவிக்கத்தான்  முடியும்.. வார்த்தையில் விவரிக்க முடியாது. அனால் அங்கு கங்கையின் வேகம் அதிகம். இரண்டு படிகளுக்கு மேல் கிழே இறங்கினால் கால்  நழுவுகிறது. (ஏதோ படித்துறையில் நின்று கொண்டு குளித்ததையே பெரியதாக நினைத்துக்கொண்டிருந்தேன்.. அனால் அடுத்தநாள் நடு கங்கையில் இறங்கப்போகிறேன் என்று அப்போது தெரியாது.. அதை அடுத்த பதிவில் பாப்போம்)

 
லக்ஷ்மன் ஜுலா
 ரிஷிகேஷத்தில் கங்கையை கடக்க லக்ஷ்மன் ஜூலா, ராமன்  ஜூலா என்று இரண்டு தொங்கு பாலங்கள் இருக்கின்றன. நடந்து செல்வதற்கு மட்டுமே அமைக்கப்பட்ட மிகவும் குறுகலான இந்த பாலத்தில் இருசக்கர வாகனங்களும் செல்கின்றன..கூடவே ஆடு மாடுகளும்..கையில் உணவுப்பொருட்கள் ஏதாவது வைத்திருந்தால் லபக் என்று அபகரிக்கும் வானரங்கள்... இவற்றுக்கு நடுவே லேசாக ஆடிக்கொண்டிருக்கும் பாலம்... கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.. ஆனால் 1937ல் கட்டப்பட்ட பாலம் இன்னும் வலிமையாகத்தான் இருக்கிறது..

ரிஷிகேஷதிலும் சரி ஹரித்வரதிலும் சரி அந்தி சாயும் நேரத்தில் கங்கைக்கு மங்கள ஆரத்தி காண்பிக்கும் நிகழ்ச்சி மிகப்பிரபலம். மாலை கீழே ஹரித்வாருக்கு இறங்கி வந்தோம். ஹரித்வார கங்கை ரிஷிகேஷ் அளவுக்கு சுத்தம் இல்லை.ஆனாலும் ரிஷிகேஷ் போலவே படித்துறைகள்.. அங்கங்கு பல இடங்களில் ஆரத்தி நிகழ்ச்சி நடந்துகொண்டிருகிறது.. மக்கள் சிறு சிறு கூட்டமாக நின்று கொண்டு ஆரத்தியில் கலந்துகொள்கிறார்கள்.. பின் அனைவரும் கங்கையில் இறங்கி  ஒரு சிறிய பூக்கூடையில் விளக்கு ஏற்றி நதியில் விடுகிறார்கள்.. கங்கைக்கரை முழுவதும் இந்த பூவிளக்குகள் ஊர்ந்து செல்வதே கொள்ளை அழகு. அதுவும் இருள் சூழ்ந்த கங்கை நதியில் மின்மினிப் பூசிகள் போல அங்கங்கே கண்சிமிட்டிக்கொண்டு நகர்கிறது  பூவிளக்குகள்.  இங்கு கரை முழுவதும் சாமியார்கள் ஆதிக்கம் அதிகம். ஒரு சாமியார் சங்கு ஊதிக்கொண்டிருகிறார்.. ஒரு சாமியார் கங்கைக்கரையில் தியானத்தில் இருக்கிறார்.. ஒருவர் உடல்முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு அகோரி வேடத்தில் கோவணத்துடன் காட்சியளிக்கிறார். இவர்கள் முற்றும் துறந்த சன்யாசிகளா அல்லது பண்டாரங்களா.. இல்லை போலிச் சாமியார்களா.. என்று குழப்பம் ஏற்படுத்தும் கலவை அது.

ரிஷிகேஷிலும் இதுபோல நிறைய இடத்தில் ஆரத்தி நிகழ்சிகள் உண்டு. பரமார்த் என்ற கோவில் அருகே உள்ள படிக்கட்டில் ஆரத்தியுடன் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இங்கு பல வெளிநாட்டவர் கலந்துகொள்கின்றனர். இங்குள்ள ஆசிரமத்தைச் சேர்ந்த பல குருகுல மாணவர்கள் காவி உடை அணிந்து தினமும் மாலையில் கங்கை முன்னால் உள்ள படிக்கட்டுகளில் அமர்து இசை முழங்குகிறார்கள். இசைக்கு தாளமிட்டபடியே படித்துறையை உரசிச்செல்கிறது கங்கை. அதற்கு எதிரே  கங்கைக்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் சிவன் சிலை செவ்வானத்தில் பிரகாசிக்கிறது. சூரியன் மறைந்து இருள் கவியும் நேரத்தில் சலசலத்து ஓடும் கங்கையில் நின்று கொண்டு கேட்ட அந்த இசையில் மனம் கரைந்தது.  ஏகாந்தம் என்பார்களே.. அது இதுதானோ..

அங்கு வாழும் மக்களுக்கு கங்கைதான் தெய்வம். காலங்காலமாய்  தங்களை  வாழ்வித்துக்கொண்டிருக்கும் இந்த ஜீவநதியை தினமும் வணங்கி, மலர் தூவி, ஆரத்தி எடுத்து நன்றி தெரிவிக்கிறார்கள். இது ஏதோ சம்பிரதாயத்துக்காக   செய்யப்படும் நிகழ்ச்சி அல்ல..'ஜெய் ஜெய் கங்கா மாதா' என்று உள்ளன்புடன் கங்கையை தொட்டு கும்பிடும்போது  அவர்கள் வாழ்க்கையில் கங்கையும் ஒரு அங்கம் என்று புரிகிறது. 

இனி கங்கையின் நடுவே ஒரு சாகசம்.. பலூன் படகு பயணம்...!

- பயணம் தொடரும்... 


மங்கள ஆரத்தி

காலை நேர கங்கை
இசை நிகழ்ச்சி

Thursday, November 11, 2010

இந்திய பாகிஸ்தான் எல்லை - ஒரு வடஇந்தியப் பயணம்

ஒன்றுபட்ட இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் வாஹா என்ற கிராமம், 1947 பிரிவினைக்குபிறகு கிழக்கு பகுதி இந்தியாவுக்கும் மேற்கு பகுதி பாகிஸ்தானுக்கும் பிரிக்கப்பட்டது. இன்று இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் ஒரே சாலைவழி மார்க்கம் இந்த வாஹா எல்லை. இங்கிருந்து 25 கி.மீ தொலைவில் இந்தப்பக்கம் அமிர்தசரஸ் நகரம்.. அந்தப்பக்கம் லாகூர் நகரம்.

தினமும் அந்தி சாயும் வேளையில் இங்கு ராணுவ மரியாதையுடன் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. அருகே சென்று பார்க்கவேண்டும் என்றால் கொஞ்சம் சீக்கிரமே சென்றால்தான் இடம் கிடைக்கும் என்று பலர் சொன்னார்கள். மாலை 5.30க்கு துவங்கும் நிகழ்ச்சிக்கு 4.45க்கு போய் நின்றேன். அனால் அதற்குள் சாலையின் இருபக்கமும் இருக்கும் பார்வையாளர்களின் மாடம் நிரம்பி வழிந்தது... மாடத்துக்கு வெளியே நின்றுகொண்டுதான் வேடிக்கை பார்க்க முடிந்தது. அதேபோல் அந்தப்பக்கம் பாகிஸ்தான் பார்வையாளர்களின் மாடத்திலும் நல்ல கூட்டம். சராசரியாக ஒரு நாளில் இந்தியப்பகுதியில் மட்டும் 8000 பேர் வருகிறார்களாம்.

இரு மாடங்களுக்கும்  இடையே  சில  அடி  தூரம்தான்..  இருபக்கமும் இரும்பு வாயிற்கதவு... இங்கு காக்கி நிற உடையிலும் அங்கு கரும்பச்சை உடையிலும் எல்லையோர காவல் படையினர்... அந்த இடமே அவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இந்திய நுழைவில் 'இந்தியா' என்று ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதப்பட்டு மேலே மூவர்ணக்கொடி பறந்துகொண்டிருகிறது.. அந்தப்பக்கம் பாகிஸ்தான் கொடி..கூடவே ஜின்னாவின் படம். (இந்தியாவில் காந்தி படம் இல்லை..காந்தி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பொதுவானவர் என்று விட்டு விட்டார்களோ?).

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்  இருபக்கமும்  வாயிற்கதவின் முன் ஒரு பெறும்   கூட்டம்  நடனமாடிக்கொண்டிருகிறது,  தங்கள்  தேசியக்   கொடியுடன்..! பல தேசபக்திப்பாடல்கள் ஒளிபரப்பப்படுகின்றன ('ஜெய் ஹோ'வும் உண்டு). நம் பக்கம் 'ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்', 'பாரத் மாதாகி ஜே', 'வந்தே மாதரம்' போன்ற கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.. ராணுவத்தை சேர்ந்த ஒரு அதிகாரி வேறு கையை உயர்த்தி 'இன்னும் இன்னும்' என்று கூட்டத்தை உசுப்பேத்திவிடுகிறார்.. இதேபோல பாகிஸ்தான் பக்கமும்...! இதெல்லாம் முடிந்தபிறகு நிகழ்ச்சி தொடங்கியது. இரண்டு இரண்டு பேராக ராணுவ வீரர்கள் அதிவேகமாக நடந்து கதவு அருகே நின்று கொள்கிறார்கள். பிறகு சிலர் கிட்டத்தட்ட தலைக்குமேல் காலை உயர்த்தி சத்தத்துடன் தரையில் அடித்து நடந்து செல்கிறார்கள்.  இதற்கு இணையாக பாகிஸ்தான் பக்கமும் அணிவகுப்பு நடைபெற்றுக்கொண்டிருகிறது. பாகிஸ்தான் வீரர்கள் வெடுக்கென தலையை திருப்பி கையை உயர்த்தி உடலை சிலிர்த்துக் கொள்கிறார்கள். அது என்ன ராணுவ சைகை என்று புரியவில்லை. பிறகு சடாரென்று கதவு திறக்கப்படுகிறது. இந்திய பாகிஸ்தான் வீரர்கள் ஏதோ போருக்கு தயாராவதுபோல நின்றுகொண்டு கைகுலுக்கிக்கொள்கிறார்கள். பிறகு சரியாக சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் இரு கொடிகளும் இறக்கப்டுகின்றன. பிறகு கதவு மீண்டும் வேகமாக மூடப்படுகிறது. அவ்வளவுதான்.. நிகழ்ச்சி முடிந்தது.

அங்கு இருக்கும் போது சில அடிதூரத்தில் இன்னொரு நாட்டைப்பார்ப்பது ஒரு திரில்லான அனுபவம்தான். கொஞ்சம் தேசப்பற்று வருவது என்னமோ உண்மைதான். ஆனால் ஒரு நாட்டின் எல்லையில் நிற்கும்போது எதற்காக இவ்வளவு கோஷங்கள், ஆர்பாட்டங்கள் ஏன் என்று புரியவில்லை. ஏதோ தேசபக்தியை வேண்டுமென்றே திணிப்பதாக எனக்குப்பட்டது. இதுபோன்ற ஒரு இடத்தை மக்காவ்-சீன எல்லையில் பார்த்திருக்கிறேன். (அப்போது மக்காவ் தனி நாடு - போர்சுகல் காலனியாக இருந்தது). அங்கு மக்கள் அமைதியாக இரு நாடுகளுக்கும் சென்று வந்து கொண்டிருப்பார்கள்.. ஆர்ப்பாட்டம் எதுவும் இருக்காது. ஐரோப்பாவிலும் இதுபோல இருநாடுகளுக்கும் சாலைப் போக்குவது இருக்கிறது எந்தவித கோஷங்களும் இல்லாமல்...! அனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லை என்றதும் அதற்கு ஒரு தனி வீரியம் வந்துவிடுகிறது.

நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும் போதே ஒரு பறவைக்கூட்டம் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பறந்து கொண்டிருந்தது... "ஏ மனிதப்பிறவிகளே...! ஆறறிவு படைத்த  உங்களுக்குத்தான் இத்தனை நாடுகள், இத்தனை பிரிவினைகள், இனங்கள், மதங்கள் எல்லாம்.. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல விசா, பாஸ்போர்ட் எல்லாம்.. நாங்கள் சுதந்திரப்பறவைகள்.. எங்களை எந்த எல்லையும் தடுக்கமுடியாது" என்று நம்மைப் பார்த்து ஏளனம் செய்து பறந்தன..!

இனி பஞ்சாபிலிருந்து நேராக இமயத்தின் அடிவாரத்தில் ஒரு ரம்யமான பிரதேசம்.. ரிஷிகேஷம்..

- பயணம் தொடரும்

Saturday, November 6, 2010

ஜாலியன்வாலா பாக் - ஒரு வடஇந்தியப் பயணம்

காந்தி திரைப்படத்தை எந்தனை முறை பார்த்திருப்பேன் என்று தெரியாது. ஆனால் ஒவ்வொரு முறையும் ஜாலியன் வாலாபாக் காட்சியைப் பார்க்கும் போதும் என் கண்களில்  கண்ணீர் எட்டிப்பார்ப்பதைத் தவிர்க்கமுடியாது. 91 ஆண்டுகளுக்குமுன் கொடூர நிகழ்வு நடந்த அந்த இடத்தை நேரில் காணப்போகிறோம் என்றதும், ஒரு சோகம் கலந்த படபடப்புடன் ஜாலியன்வாலா பூங்காவுக்குள் நுழைந்தேன்.

பொற்கோவிலில் இருந்து ஐந்து நிமிடநடை தூரத்தில் இருக்கிறது ஜாலியன்வாலா பாக். சென்னை ஜார்ஜ் டவுன் மாதிரியான ஒரு இடத்தில் ஒரு  குறுக்கிய  சாலையின் ஓரத்தில் இருக்கும் அந்த இடத்துக்கு வரும் மக்கள் கூட்டம் இன்னமும் அதிகம். உள்ளே நுழையும்போதே ஒரு மாபெரும் சரித்திரத்தில் காலடி வைக்கப்போகிறோம் என்ற உணர்வு மேலோங்கியது. நுழைவாயிலில் உள்ள அறிவிப்புபலகையில் அந்த சோகவரலாறு எழுதப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் 13, 1919.. அன்று 'பைசாக்கி' எனப்படும் சீக்கியர்களின் புத்தாண்டு தினம், இந்திய சரித்திரத்தில் ஒரு கனத்த நாளாக மாறிப்போனது. அது ரௌலட் சட்டம் அமலில் இருந்த காலகட்டம். அதை கண்டித்து நாடு முழுவதும் குறிப்பாக பஞ்சாபிலும் லாகூரிலும் ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக அமிர்தசரஸில் ஜாலியன்வாலா பாக் என்கிற திடலில் ஒரு கண்டனக்கூட்டம் ஏற்பாடு செய்யப்படிருந்தது. மாலை 4.30 மணிக்கு ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக கிட்டத்தட்ட 15000 மக்கள் கூடியிருந்தனர் தங்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை அறியாமல்..!

இதை அறிந்த பிரிட்டிஷ் ராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டையர் 100 சிப்பாய்களுடன்  ஜாலியன்வாலா பாக் திடலுக்குள் உள்ளே நுழைந்தான். எந்தவித முன்அறிவிப்போ எச்சரிக்கையோ இல்லாமல் கூட்டத்தை நோக்கி சுட உத்தரவிட்டான். அந்த திடலில் ஒரேஒரு குறுகலான நுழைவாயில் மட்டுமே உள்ளது. அங்கிருந்துதான் சிப்பாய்கள் மக்களை நோக்கி சுட்டனர். யாரும் வேறு எப்படியும் வெளியே செல்ல முடியாது. தொடர்ந்து 20 நிமிடங்கள் இடைவெளியே இல்லாமல் துப்பாக்கிச் சூடு... 1650 ரவுண்டு குண்டுகள் தீர்ந்தபின்னரே நிறுத்தப்பட்டன. முடிவில் கிட்டத்தட்ட 1500 மக்கள் பலியானார்கள். தப்பிப்பதற்காக அருகே உள்ள கிணற்றில் குதித்து 120 பேர் உயிரிழந்தனர்.

இன்று ஜாலியன்வாலா பாக் இந்திய அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு ஹிரோஷிமா போல கொடூரத்தின் நினைவுச் சின்னமாய் காட்சியளிகிறது. இங்கு அந்த இடத்தில் ஒரு நினைவுத்தூண் இருக்கிறது... ஒரு அணையா விளக்கு இருக்கிறது... அந்த கிணறு அப்படியே பாதுகாக்கப்படுகிறது. சுடப்பட்ட இடத்திலிருந்து  100 அடி  தள்ளி  இருக்கும் சுவர்களில் இன்னமும் குண்டு துளைத்த தடயங்கள் இருக்கிறது.  சுவரையே துளைத்திருக்கும் குண்டுகள் மனித உடலை எப்படி சல்லடையாக்கியிருக்கும் என்று நினைக்கும்போதே உள்ளம் பதபதைக்கிறது. ஜாலியன்வாலா பாக்கில் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் நெஞ்சம் கனத்துக்கொண்டே போனது...!

இந்த படுகொலைக்காக நடைபெற்ற விசாரணை கமிஷனில் நீதிபதிகள், ஜெனரல் டையரிடம் இப்படிக் கேட்டார்கள்:  "அந்த நுழைவாயில் மிக குறுகலாக இருந்ததால் நீங்கள் கொண்டுவந்திருந்த பீரங்கிகளை உள்ளே எடுத்துசெல்ல முடியவில்லை.. முடிந்திருந்தால் பீரங்கியாலும் மக்களை சுட்டிருப்பீர்கள்..இல்லையா?" - இதற்கு  டையரின் பதில் - "ஆமாம்.. நிச்சயமாக..!".. மேலும் காயமடைந்தவர்களுக்கு என்ன முதலுதவி செய்தீர்கள் என்ற கேள்விக்கு, "அது என் வேலை இல்லை.. மருத்துவமனை அருகில்தான் இருக்கிறது..வேண்டுமென்றால் அவர்கள் அங்கு சென்றிருக்கலாம்" என்று பதிலளித்தான் டையர்.

அந்த காலகட்டத்திலும் சரி.. இப்போதும் சரி.. உலகெங்கும் பல கொடுங்கோல் ஆட்சி நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு இந்தியாவில் இருக்கும் சாட்சி ஜாலியன்வாலா பாக். அனால் என்னதான் சாட்சிகள் இருந்தும் என்ன பலன்?  ஜெனரல் டையர்கள் ஹிட்லர்கலாகவும் ராஜபக்சேக்களாகவும் இந்த உலகில் தோன்றிக்கொண்டுதானே  இருக்கிறார்கள்?

இனி அமிர்தசரஸில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு இடம்... இந்தியாவும்  பாகிஸ்தானும் முத்தமிடும் வாஹா எல்லை... 

 - பயணம் தொடரும்...

நினைவுத்தூண்
குறுகிய நுழைவாயில்
   

குண்டு துளைத்த சுவர்

மரணக் கிணறு



Sunday, October 31, 2010

பொற்கோவில் - ஒரு வடஇந்தியப் பயணம்

தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு நேரே அமிர்தசரஸ் கிளம்பினோம்.. ரயில் பேரே கோல்டன் டெம்பிள் எக்ஸ்பிரஸ்.

யாரையாவது கண்ணைக்கட்டி நேரே அமிர்தசரஸில் இறக்கிவிட்டால், பஞ்சாப் மாநிலத்தில் இருக்கிறேன் என்று ஒரு நிமிடத்தில் சொல்லிவிடுவார்கள். ஆணாகட்டும் பெண்ணாகட்டும்..  நூற்றுக்கு  தொண்ணூறு  பேர்  பஞ்சாபி  உடையிலேயே திரிகிறார்கள். சில ஆண்கள் மார்பில் குறுக்கே ஒரு பட்டையில் கத்தியெல்லாம் வைத்துக்கொண்டு 'தீவிர' பஞ்சாபி உடையில் இருகிறார்கள். ஒரு பெண்ணாவது ஜீன்ஸ்-டிஷர்ட் அல்லது சேலை அணிந்துகொள்ளடுமே..ஹும்ஹும்.. எல்லோருமே பஞ்சாபி சுடிதார்தான்..

அமிர்தசரசில் எல்லா ஹோட்டலுமே பொற்கோவிலின் நடை தூரத்திலேயே இருக்கிறது. தேவைப்பட்டால் ரிக்க்ஷாவில் செல்லலாம்.


நான்கு பக்கமும் தண்ணீர் சூழ  தகதகவென  மின்னிக்கொண்டிருக்கிறது பொற்கோவில். அதை அடைவதற்கு ஒரு பக்கத்திலிருந்து மட்டும் ஒரு பாலம். எந்தப்பக்கத்தில் பார்த்தாலும் அற்புதமாக இருக்கிறது பொற்கோவில். மெல்லியதாக பக்திப்பாடல்கள் பஞ்சாபியில் ஒலித்துக்கொண்டிருக்க, அந்த சூழலே தெய்வீகமாக இருக்கிறது. தலைமுடியை மூடாமல் குருத்வாராவுக்குள் செல்லமுடியாது.. கைக்குட்டையாவது கட்டிக்கொண்டு செல்லவேண்டும். அதேபோல் கால் கழுவாமலும் உள்ளே செல்ல முடியாது. உள்ளே தூய்மை என்றால் அப்படி ஒரு தூய்மை. அந்த வளாகம் முழுவதும் மார்பிள் கற்களால் இழைக்கப்படிருக்கிறது.  பலர் புனித நீராடினாலும் அப்படி தூய்மையாக பாதுகக்கபடுகிறது அந்த குளம்.


நாங்கள் அங்கு சென்றது ஒரு  ஞாயிற்றுக் கிழமை... நல்ல கூட்டம்.. ஆனால் நெரிசல் இல்லை..கூச்சல் குழப்பம் இல்லை.. பொதுவாக எல்லோருமே அமைதியை கடைபிடிக்கிறார்கள்.. இங்கு எல்லோரும் சமம்..ஏழை பணக்காரன் வித்தியாசம் கிடையாது.. சிறப்பு கட்டணம், தரிசனம் எதுவும் கிடையாது.  யாராயிருந்தாலும்  ஒரே வரிசையில்தான் நிற்கவேண்டும். குருத்வாராவுக்குள் எந்த விதமான பணம் வசூலிக்கும் கவுண்டரையும் நான் பார்க்கவில்லை. 

குருத்வாராவுக்கு அருகிலேயே இலவச உணவு மையம். கிட்டத்தட்ட வந்தவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டுத்தான் செல்கிறார்கள்.

எண்பதுகளில்  யுத்த பூமியாக இருந்த பஞ்சாப்.. தீவிரவாதிகளில் புகலிடமாக இருந்த பொற்கோவில், இன்று அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. 1984 ல் ஆபரேஷன் புளு ஸ்டார் என்ற பெயரில் இந்திய  ராணுவம்  உள்ளே  நுழைந்த பொற்கோவிலுக்கு இன்று எந்தவித பாதுகாப்பு பரிசோதனையும் இல்லாமல் மக்கள் உள்ளே நுழைய முடிகிறது. மாற்றங்கள்தான் ஒரு இனத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது என்பதற்கு பஞ்சாப் ஒரு சாட்சி. இந்த பாஞ்சால பூமியில் ஏற்பட்டுள்ள  மாற்றம் மகத்தானது. ஆனால் நாம்  அதற்க்கு கொடுத்த விலை? இந்திரா காந்தியின் உயிர் மற்றும்  பல ஆயிரக்கணக்கான  சீக்கியர்களின் உயிர்... பொற்கோவிலைப்பற்றி நினைக்கும்போது ஏனோ இதை நினைக்காமல் இருக்க முடியவில்லை.. அதுவும் இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் நாள் - இந்திரா காந்தியின் நினைவு நாள்.

இனி இந்தியா சுதந்திர வரலாற்றிலேயே ஒரு கருப்பு நாள். 90 வருடங்கள் கடந்தும் நெஞ்சை பதறவைக்கும் ஒரு நிகழ்வு - ஜாலியன் வாலாபாக்...

- பயணம் தொடரும்

Monday, October 25, 2010

காந்தி நேரு வாழ்ந்த இடங்கள் - ஒரு வடஇந்தியப் பயணம்

காந்தி ஸ்மிருதி..... காந்தி கடைசியாக வாழ்ந்த பிர்லா மாளிகை..

உள்ளே நுழைந்தவுடன் காந்தி வாழ்கையில் நடந்த சில சம்பவங்களை பொம்மை வடிவில் சித்தரிக்கும் ஒரு சிறு கண்காட்சி.. தென்ஆப்ரிக்க ரயில் பயணம், தண்டி போராட்டம், அந்நிய துணிகள் எரிப்பு, கஸ்தூரிபாய் மரணம், காந்தி சுடப்பட்டது, பின் இறுதி சடங்கு என்று பல நிகழ்வுகள் தத்ரூபமாக அமைக்கப்படிருந்தன...அங்கு வந்த அனைவரின் மனதையும் கவர்ந்தது.


பொம்மை வடிவில் காந்தி கண்காட்சி
 
காந்தியின் கடைசி பயணம்
ஜனவரி 30 , 1948 .. மாலை ஐந்து மணி.. காந்தி கடைசியாக  பிரத்தனைகாக வெளியே வந்த அறை கதவு இன்றும் அப்படியே இருக்கிறது (காந்தி படத்தில் முதல்  காட்சியே  இதுதான்) அந்த அறையிலிருந்து அவர் சுட்டு கொல்லப்பட்ட இடம் வரை அவர் காலடி தடங்கள் பதிக்கப்பட்டு உள்ளது.. அவர் சுடப்பட்டு வீழ்த்த இடத்தில ஒரு சிறு மண்டபம் அமைக்கபட்டிருகிறது... பத்து பேர் அடங்கிய ஒரு வெளிநாட்டு குழுவுக்கு இந்தியா பெண்மணி ஒருவர் காந்தியின் கடைசி நிமிடங்களைப் பற்றி விவரித்துக்கொண்டிருந்தார்... கூட்டத்துக்கு நடுவே  கோட்சே  எப்படி  வந்தார்,  சுட்டவுடன் காந்தியின் என்ன சொன்னார், பின் என்ன நடந்தது  என்பதையெல்லாம்  சொல்லி கொண்டிருக்கும்போது,  ஒருவர் மிகவும் அக்கறையாக 'கோட்சேக்கு என்ன ஆயிற்று' என்று விசாரித்தார்.  'கூட்டம் அவரை எதுவும் செய்யவில்லை.. அஹிம்சையின் உச்சம் அது.. பின்னர் நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கியது' என்ற பதிலை கேட்டவுடன் அவர் முகத்தில் திருப்தி...!

இதே இடத்தில காந்தியின் மல்டி-மீடியா மியூசியம் என்று ஒன்று இருக்கிறது.. அது அவ்வளவு சுவாரசியமாக இல்லை. காந்தியை மல்டி-மீடியா விஷுவல் விளைவுகளோடு பொருத்திப்பார்க்கும் முயற்சி அது. காந்தியின் எளிமைக்கு சற்று முரண்பட்டதாக இருந்தது.

முதலில் காந்தி ஸ்மிருதி செல்லவேண்டும் என்றவுடன் டாக்ஸி டிரைவர்  இந்திரா காந்தி மெமோரியல் சென்று விட்டார்.. பிறகு 'மகாத்மா காந்தி ஸ்மிருதி' என்றவுடன் பின் சரியான இடத்துக்கு அழைத்துச் சென்றார். தில்லியில் வெறும் காந்தி என்று சொன்னால் குழப்பம் வந்து விடுமோ?  

தீன் மூர்த்தி பவன் ..பிரதமராக நேரு பவனி வந்த இடம்..  தில்லி கனார்ட் பிளேசில் காந்தி காந்தி ஸ்மிருதிக்கும் தீன் மூர்த்தி பவனுக்கும் அதிக தூரம் இல்லை.

இதில் நேருவை பற்றி 'AtoZ' இருக்கிறது - நேருவின் வாழ்க்கை கண்முன் நிறுத்தும் புகைப்படங்கள், அவர் படித்த புத்தகங்கள், அவருடைய பேச்சு ஒலி நாட்கள், அவர் எழுதிய கடிதங்கள், அவர் உபயோகித பொருட்கள்.. கடைசியாக நேரு உயிர் பிரிந்த அறை...

சின்ன வயது புகைப்படங்களில் ஒரு இளவரசனின் கம்பீரத்தோடு நேரு மிளிர்கிறார் நேரு..ஒரு 'royal family 'யில் வளர்த்தவர் என்று கண்கூடாக தெரிகிறது. அவர் தன தந்தை மோதிலால் நேருவுக்கு எழுதிய கடிதங்களில் ஆங்கிலப் புலமை வெளிப்படுகிறது. தன தாய்க்கு மட்டும் ஹிந்தியில் கடிதம் எழுதிருக்கிறார். இளம் வயதில் இந்தியப் பாரம்பரியத்தோடு மேற்கத்திய பாணியில் அவர் வாழ்கை முறை அமைந்திருகிறது.

இந்தியா சுதந்திரம் கிடைத்தபோது மற்றும் காந்தி கொலையுண்டபோது அவர் ஆற்றிய உரை ஒலி நாடாக்கள் கேட்பதற்கு சிலிர்ப்பூடுகின்றன..

தில்லி செல்லப்போகிறேன் என்றதும் 'அங்கு காமன் வெல்த் கேம்ஸ் நடக்கிறது.. எக்கச்சக்க போக்குவரத்து நெரிசல் இருக்கும்.. பாதி இடங்களுக்கு செல்லவே முடியாது...' என்று ஆளாளுக்கு பயமுறுத்தினார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை.. போக்குவரத்து மிக சீராக இருந்தது.. முக்கிய சாலைகளில் CWG க்கு தனி பாதைகள் உண்டு. சைக்ளிங், மராத்தான் போட்டிகள் நடக்கும் தேதியில் மட்டும் சில பிராதன சாலைகள் மூடப்பட்டன. எல்லா மெட்ரோ நிலையத்திலும் உதவி மையம், அங்கங்கே அறிவுப்புகள் என்று பிரச்னை இல்லாமல் இருந்தது. நாங்கள் சென்ற பல இடங்களில் CWG விளையாட்டு வீரர்களும் வந்திருந்தார்கள். (நிறைய பேர் தென்பட்டது அக்ஷர்தாமில்). தில்லியில் நான் மெட்ரோ, ஆட்டோ, டாக்ஸி, சைக்கிள் ரிக்க்ஷா என்று எல்லாவிதமான போக்குவரத்திலும் சென்றேன். 

எல்லா இடங்களிலும் பொதுவான ஒரு விஷயம் - கோவிலாகட்டும், மசூதியாகட்டும், கோட்டைகளாகட்டும், காந்தியாகட்டும், நேருவாகட்டும் - பாதுகாப்பு எக்கச்சக்கம்.. பல பரிசோதைகளை கடந்துதான் உள்ளே செல்லவே முடிகிறது..

இனி சீக்கியர்களின் புனிதத்தலமான அமிர்தசரஸ் பொற்கோவில்...

- பயணம் தொடரும்...

 

Friday, October 22, 2010

தில்லி உலா - ஒரு வடஇந்தியப் பயணம்

காந்தி சமாதி
தில்லியில் அடுத்தநாள் காலையில் காந்தி சமாதியுடன் துவங்கினோம்.. ஒருசில வெளிநாட்டவர் தவிர யாரும் இல்லை.. அவர்களும் சமாதி அருகே வரவில்லை.. பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை காந்தி சமாதி வந்திருக்கிறேன்.. விடுமுறை நாட்களில் காலைவேளையில் பலர் சமாதியை சுற்றி உள்ள புல்வெளியில் அமர்ந்திருப்பார்கள். இந்தமுறை நானும் காந்தியும் மட்டும் தனியே.. காந்தியை போலவே ஆர்ப்பாட்டம் இல்லாமல் எளிமையான இருக்கிறது அந்த இடம்... ஹே ராம் என்ற எழுத்துகளுடன்..

செங்கோட்டை
பிறகு செங்கோட்டை (Red fort)... 17ம்  நூற்றாண்டில் ஷாஜகான் கட்டிய கோட்டை.. பின்னர் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்  இருந்து  விடுதலைக்கு பிறகு இந்தியா இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்தது. 2003 ல் தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.. இன்று யுனஸ்கோவால்  அங்கீகரிக்கப்பட்ட 'உலகப் பாரம்பரிய' இடங்களுள் ஒன்று.  

இதற்குள் இந்தியா விடுதலை இயக்கத்தின் கண்காட்சி வைத்திருகிறார்கள். சிப்பாய் கலகத்திலிருந்து 1947 வரை நடந்த பல நிகழ்வுகள்  புகைப்படங்களாகவும் காட்சிகளாகவும் வைக்கப்படிருந்தன. அதில் சுபாஷ் சந்திரபோசின் அறிய புகைப்படங்கள் நிறைய இருந்தன... அவர் எப்படி காங்கிரசில் இணைந்தார், பின் இந்தியா தேசிய ராணுவம்  அமைத்தது, வீட்டுக்காவலில் இருந்தவர் எப்படி தப்பித்தார், அவரின் மர்ம மரணம் போன்ற விவரங்களுடன்... அவர் தப்பியது பற்றிய விவரங்களும் அங்கே உண்டு - சுபாஷ் அறையில் எப்போதும் விளக்கு எரிந்து கொண்டிருக்குமாம்.. பல நாட்கள் சவரம் செயாமல் தாடி வளர்த்துகொண்டு உருவத்தை மாற்றி பிரிட்டிஷ் போலீசின் கண்களில் மண்ணை தூவிவிட்டு தப்பித்திருக்கிறார். வெளியே தன்னை ஒரு முஸ்லிம் இன்சூரன்ஸ் ஏஜென்ட் என்று அறிமுகம் செய்துகொண்டு இந்தியா எல்லையை கடந்திருக்கிறார். பிறகு கைபர் கணவாய் வழியாக வளைகுடா சென்று அங்கிருந்து மாஸ்கோ சென்று பின் பெர்லினை அடைந்திருக்கிறார்.. ஹிட்லைரை சந்திபதாற்காக..வெளியே வரும்போது 'சுபாஷ் எப்பேர்பட்ட போராளி..' என்று  நினைக்கத் தோன்றுகிறது..

இந்தியா கேட்
குடியரசு தினத்தன்று நாம் டி.வி யில் பார்க்கும் இந்தியா கேட்-ராஷ்டபதி பவன் சாலை நேரில் ரொம்பவே அழகு. அதை சுற்றி உள்ள புல்வெளி, தடாகங்கள் கூடுதல் அழகு. முப்படைகளின் கொடிகள் பறக்க இந்தியா கேட்டில் அமைந்துள்ள 'அமர் ஜவான்' ஜோதிக்கு ஒரு ராயல் சல்யுட்  அடித்துவிட்டு அந்த இடந்தை விட்டு நகர்ந்தோம்.

ஹுமாயுன் சமாதி
தில்லிக்கு சுற்றுலா செல்பவர்கள் நிறையபேர் ஏனோ ஹுமாயுன் சமாதியை பார்க்க தவறிவிடுவார்கள். (பிரகதி மைதான் மெட்ரோவில் இறங்கி 10 நிமிடத்தில் ஆட்டோவில் செல்லாலாம்). இது 'வாவ்' என்று வியக்கத்தக்க இடம்.. முகலாய  கட்டிடகலையின்  சிறப்பை  தெரிந்துகொள்ள  இந்த இடத்திற்கு செல்லலாம்.  பிரமாதமான வடிவமைப்பு.. முதலில் தோன்றிய ஒரு கட்டம்தான் ஹுமாயுன் சமாதி என்று அருகே சென்று பார்த்தால் அது வெறும் முகர்ப்புதான்.. அங்கிருந்து அடுத்த கட்டிடத்துக்கு கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். இதை கட்ட அந்த காலத்திலேயே 15 லட்ச ருபாய் ஆனதாம் (1571 ). இதுவும் யுனஸ்கோவின் உலக பாரம்பரிய இடம்.

குதுப்பினார்
12 ம்நூற்றாண்டின் அதிசயம்.. முகமது கோரியை போரில் வென்றதற்காக குத்புதீன் ஐபக் கட்டியது..  (சின்ன வயதில்  பாடப்புத்தகத்தில் படித்ததையெல்லாம் கஷ்டப்பட்டு  நினைவுக்கு  கொண்டுவர வேண்டியிருக்கிறது). மிக குறுகிய விட்டதிலிருந்து ஆரம்பித்து 237 அடி உயரத்திற்கு கட்டிடம் எழுப்பியிருக்கிறார்கள்.


 


இனி காந்தி நேரு வாழ்ந்த இடங்கள்...

....... பயணம் தொடரும்....

 

Tuesday, October 19, 2010

வடஇந்தியப் பயணம் - அக்க்ஷர்தாம், தில்லி

பல வருடங்களாக முயற்சித்து கடைசியில் இந்த வருடம் அக்டோபர் மாதம் வடஇந்திய சுற்றுலா செல்வதென்று தீர்மானித்தேன்.. தில்லி, அமிர்தசரஸ், ரிஷிகேஷ், ஆக்ரா சென்றுவரலாம் என்று திட்டம்.. ஜூலை மாதத்திலிருந்து திட்டம் தீட்டி இனிதே முடிந்தது என் பயணம். ஒவ்வொரு இடமும் ஒவ்வொருவிதமான அனுபவம். இந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு இடுகை போதாது.. விவரமாக விஸ்தாரமாக பல வாரங்களுக்கு உங்களுடன் பகிர்துகொள்ள பல செய்திகள் உள்ளன.

முதலில் தில்லி...

ஆரம்பமே கொஞ்சம் பதற்றம்தான்.. 7.20  மணி விமானத்துக்கு 6.20௦க்கு சென்னை விமானநிலையத்தில் நுழைந்தபோது ஸ்பைஸ் ஜெட் அதிகாரிகள் 'counter closed ' என்றார்கள். அப்புறம் கொஞ்சம் மிஞ்சி பிறகு கெஞ்சி போர்டிங் பாஸ் வாங்கினோம். பிறகுதான் தெரிந்தது அந்த விமானம் 7 மணிக்காம்.. மூன்று மாதத்துக்கு முன்னால் பதிவு செய்த டிக்கெட்டில் 7.20 என்று இருந்தது.

புதிதாக திறக்கப்பட்ட தில்லி விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு இருக்கிறது. உலகில் சிறந்த விமானநிலையங்களில் ஒன்று என்று தாரளமாக சொல்லலாம்.

தில்லியில் மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆசை. கரோல் பாக் ரயில் நிலையத்திலிருந்து அக்ஷர்தாம் கோவிலுக்கு (16 ருபாய்) மெட்ரோவில் சென்றபோது ரயில் லண்டன்-சிங்கப்பூர் மெட்ரோக்களை நினைவுறுத்தினாலும் கூட்டம் மும்பை  ரயில்களை நினைவுறுத்தியது.

அக்க்ஷர்தாம்

இந்தியாவின் பிரமாண்ட ஐந்து நட்சத்திர கோவில். இதை கோவில் என்பதைவிட இந்தியாவில் ஆன்மீக கலாச்சார பண்பாட்டு மையம் என்றே அழைக்கிறார்கள். ஏனென்றால் இங்கு கோவிலுக்கு உண்டான ஆகம விதிகள் எதுவும் கிடையாது. 18ம் நூற்றாண்டில் குஜராத்தில் வாழ்ந்த சுவாமிநாராயண பகவான் பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோவிலுக்கு அவர்தான் முக்கிய மூலவர்.

100 ஏக்கர் பரபளவில் அமைந்திருக்கும் இந்த கோவில் முழுவதும் பழுப்பு கற்களாலும் இத்தாலிய பளிங்கு கற்களாலும் மட்டுமே கட்டபடிருகிறது. உருக்கு, கான்க்ரீட் எங்கும் உபயோகப்படுத்தவில்லை. இவ்வளவு கலைநயத்துடனும் சிற்பங்களுடனும் ஒரு கோவிலை இதற்குமுன் கண்டதில்லை.. ஒவ்வொரு தூணிலும் உள்ள நுணுக்கமான சிற்பங்களிலிருந்து நம் கண்கொள்ளாத அளவிற்கு பிரம்மாண்ட சிற்பங்கள் கொண்ட கலைநயம்... இழைத்து இழைத்து பார்த்து பார்த்து செய்யப்பட சிற்ப வேலைகள்.. மொத்தம் 234 அலங்கரிக்கப்பட்ட தூண்கள், 9 மாடங்கள், தத்ரூபமான பல கோணங்களில் உள்ள யானை சிலைகள் - இவையெல்லாம் எண்ணிக்கையில் வரும் சில விஷயங்கள்.. எண்ணமுடியாதவை எத்தனையோ..

இவையெல்லாம் ரசித்துவிட்டு பகவான் சுவாமிநாராயணன் சிலை இருக்கும் மண்டபத்துக்குள் நுழைந்தால்.. அப்பப்பா.. மயக்கமே வந்துவிடும் போலிருந்தது.. என்ன ஒரு ஜொலிஜொலிப்பு.. என்ன ஒரு பளபளப்பு... பெயர் சொல்லமுடியாத பல விலையுயர்ந்த கற்களாலும் ஆபரணங்களாலும் உலோகங்கழலும் மினுமினுகிறது அந்த மண்டபம். நடுவில் தங்க முலாம் பூசப்பட்ட ௧௧ அடி பகவான் சுவாமிநாராயணன் சிலை.. சுற்றி அவரின் சீடர்கள் சிலை.. அந்த இடம் பிரமிக்க வைக்கிறது.. வாய் பிளக்க வைக்கிறது.. ஆனால் தெய்வீகம்? அது மட்டும் ஏனோ வரவில்லை..!

கோவிலுக்கு உள்ளே கேமிரா, செல்போன் அனுமதி இல்லை... அதேபோல் கொஞ்சம்கூட தூசு குப்பைகள் இல்லை..ஒரு நட்சத்திர ஹோட்டல் போல் பராமரிக்கிறார்கள்.

அந்தி நேரத்தில் காட்டப்படும் இசை நீரூற்று பற்றி கண்டிப்பாக குறிப்பிடவேண்டும்.. இசைக்கு ஏற்றால் போல் நடனமாடும் வண்ண நீரூற்றுகள்... நீரூற்றின் வேகத்துக்கு முழங்கும் இசை.. ஆஹா..என்ன ஒரு கனகச்சிதம்..அற்புதமான கோர்வை..அதிலும் கடைசியாக சிவனின் ருத்ரதாண்டவத்துக்கு அதிரும் இசையும் நீரின் வேகமும் அதன் வண்ணங்களும் நம்மை மிரள வைக்கின்றன.

உள்ளே நல்ல உணவகம் உண்டு.. படகு சவாரி உண்டு..இதை ஒரு கோவில், பக்தி என்றெல்லாம் குழப்பிக்கொள்ளாமல் ஒரு அருங்காட்சியகம் போல ஜாலியாக போய் பார்த்துவிட்டு வரலாம். இருந்தாலும் என்னை குழப்பிய ஒரு கேள்வி - இதை கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் பணம் எங்கிருந்து வருகிறது?

இனி தில்லியின் மற்ற இடங்கள்...

- பயணம் தொடர்கிறது.....

Sunday, September 7, 2008

ஒரு திறந்தவெளி அருங்காட்சியகம்

(2008 அமுதசுரபி தீபாவளி மலரில் வெளிவந்தது)

ஒரு நகரத்திற்கு அழகு சேர்ப்பவை அதன் புராதனமான கட்டிடங்கள். உலகின் எந்த ஒரு நகரமாக இருந்தாலும் அதன் பாரம்பரியமிக்க கட்டிடங்கள் அல்லது கோபுரங்கள்தான் அந்த நகரின் அடையாளமாகக் காட்டப்படும். உதாரணத்திற்கு சென்னைக்கு சென்ட்ரல் ரயில்நிலையம்... கொல்கத்தாவிற்கு விக்டோரியா அரண்மனை..

ஆனால் ஒரு நகரம் முழுவதுமே இதுபோல அழகான கட்டிடங்களும் தொன்மையான கோட்டைகளும் இருந்தால்.. நினைக்கவே பிரமிப்பாக இருக்கும் அந்த நகரம் ஐரோப்பாவின் மிக அழகான நகரமாகக் கருதப்படும் பிராக்.. செக் குடியரசின் தலைநகரம்.

பிராக் விமான நிலையத்திலிருந்து நகருக்குள் நுழையும் போதே 'இது என்ன.. காலச்சக்கரம் இருநூறு முன்னூறு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்டதோ' என்ற ஐயம் ஏற்படுவதை தடுக்க முடியாது. இங்கு நம்மை வரவேற்பது வானுயர்ந்த கட்டிடங்களோ கண்ணாடி மாளிகைகளோ இல்லை. எல்லாமே பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் பழமையான கட்டிடங்கள். எல்லா கட்டிடங்களையும் ஏதாவது ஒரு அழகிய வேலைப்பாடு அல்லது சிற்பம் அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. அந்த கட்டிடங்களில் சிறிதும் பெரிதுமாக கூர்பான கோபுரங்கள், நுனி முதல் அடி வரை பல சிற்ப வேலைபாடுகள், பல கோபுரங்களில் உச்சியில் கடிகாரங்கள் என்று திரும்பிய இடங்களெல்லாம் வியாபித்திருக்கும் அற்புதங்களைக் கொண்ட இந்த பிராக் நகருக்கு 'நுறு கோபுரங்களின் நகரம்'. 'தங்க கோபுர நகரம்' என்ற பட்டப்பெயர்கள் பொருத்தமானதுதான்..!

பிராக் பத்து லட்சம் மக்களே வசிக்கும் சிறிய நகரம். அதன் மையப்பகுதியில் விசாலமான சாலைகள் எதுவும் கிடையாது. முழவதும் நிறைய சந்துபொந்துகள்தான்.. ஆனால் அவ்வளவும் கல்தரைகளால் அமைக்கப்பட்ட அழகான சந்துபொந்துகள்.. அந்தக் குறுகிய இடங்களிலும் டிராம் வண்டிகள் வளைந்து வளைந்து செல்வது இன்னும் கூடுதல் அழகு.

பிராக் மையப்பகுதியை நடந்துசென்றே காணும் அளவிற்கு அது ஒரு திறந்தவெளி அருங்கட்சியகம். எந்தப்பக்கம் திரும்பினாலும் எந்த சாலைக்குள் நுழைந்தாலும் ஏதாவது ஒரு கட்டிடம் நம்மை கவர்திழுக்கும். நிஜமாகவே 'பிராக்' பார்த்துக்கொண்டுதான் பிராக் நகர சாலைகளை கடக்கமுடியும். அதுவும் புகைப்படபிரியர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம்.. இந்த திறந்தவெளி அருங்கட்சியகத்தில் எந்த இடத்தில் கேமிராவை வைத்தாலும் 'வாவ்' என்று சொல்லக்கூடிய ஒரு புகைபடத்திற்கு உத்திரவாதம் உண்டு.

இங்கு எதையுமே சாதரண கட்டிடம் என்று ஒதுக்கிவிடமுடியாது. இங்குள்ள ஒவ்வொரு கட்டிடங்களிலும், கோட்டைகளிலும், கோபுரங்களிலும் எதாவது ஒரு தனித்தன்மை ஒளிந்திருக்கும். ஒவ்வொன்றும் மற்றொன்றைவிட எதாவது ஒரு விதத்தில் சிறந்ததாக இருக்கும். சாதாரண ஜன்னல்களில் கூட வியப்புமிகு வேலைப்பாடுகளுடன் இருக்கும் மேல்தடுப்பிலிருந்து அதன் கட்டிட அமைப்புவரை பல வித்தியாசங்கள்..! கட்டிடங்கள் மட்டுமல்லாமல் தெருவுக்குதெரு அமைக்கப்பட்டிருக்கும் அற்புதமான சிலைகளையும் பார்க்கும்போது அந்தக் காலகட்டங்களில் பிராக் நகரம் சிற்பிகளின் சொர்கமாக இருந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

பிராக் நகரில் நம்மை ஈர்க்கும் விஷயங்கள் பலப்பல.. அவைகளில் முக்கியமானது அழகிய வில்தாவா நதியின் குறுக்கே அமைக்கப்படுள்ள சார்லஸ் பாலம், விண்ணை முட்டும் பிராக் கோட்டை மற்றும் வானவியல் கடிகாரம்.

நான்காம் சார்லஸ் பதினாலாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சார்லஸ் பாலத்தில் இரு பக்கங்களிலும் அழகான முப்பது சிலைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. எல்லாம் பல பாதிரியார்கள் மற்றும் கிருத்துவத்தை விளக்கும் சிலைகள்! வில்தாவா நதியில் ஏற்பட்ட பல வெள்ளங்களை தாங்கி 600 வருடங்களாக இன்னும் நிலைத்துநிற்கின்றது இந்த கற்பாலம். அந்தி நேரத்தில் வில்தாவா நதியில் கதிரவன் கரைந்து கொண்டிருக்க சார்லஸ் பலமும் அதன் பின்னணியில் தெரியும் பிராக் கோட்டையும் பார்ப்பதற்கு கொள்ளை அழகு..! இந்தக்காட்சியை புகைப்படம் எடுப்பதற்காகவே மாலை நேரங்களில் அங்கு சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள்.

பிராக் கோட்டை ஒன்பதாம் நுற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டு பின் பல மன்னர்களால் தொடர்ந்து விரிவாக்கப்பட்டது. கோட்டை, அரண்மனை, தேவாலயம், தோட்டங்கள் என்று பல இடங்களை உள்ளடங்கியிருக்கும் இந்தக் கோட்டையில் இருபதாம் நுற்றாண்டில் கூட சில பகுதிகள் கட்டி முடிக்கப்பட்டன. பல மன்னர்கள் ஆண்டுவந்த இந்தக் கோட்டை, என்று செக் ஜனாதிபதியின் அதிகாரபூர்வமான மையம். கின்னஸ் சாதனைப்படி உலகிலுள்ள பழம்பெரும் கோட்டைகளில் பெரியது பிராக் கோட்டைதான்..!

பிராக் நகரின் தவிர்க்க முடியாத இன்னொரு இடம் பழைய டவுன் ஹால் கோபுரத்தில் அமைந்துள்ள வானவியல் கடிகாரம். சூரியன், சந்திரன் மற்றும் பூமியின் பல நிலைப்பாட்டைக் குறிக்கும் இந்தக்கடிகரம் 1410 ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் பின்னணியில் பல கதைகள் உண்டு..! இந்தக் கடிகாரத்தை வெற்றிகரமாக நிறுவிய ஹனுஸ் என்ற மேதைக்கு பல வெளிநாடுகளிலிருந்து அழைப்பு வந்தது. இதனால் கோபமடைந்த பிராக் நகர கவுன்சிலர்கள், இவர் இதேபோல் இன்னொரு கடிகாரத்தை நிறுவக்கூடாது என்பதற்காக ஹனுஸ் கண்களை குருடாக்கிவிட்டார்களாம். ஹனுஸ் இறப்பதற்கு முன்பு இந்தக் கடிகாரத்தின் பல பாகங்களை உடைத்துவிட்டு இதை சரிசெய்பவர்கள் பைத்தியமாக அலைவார்கள் என்று சாபமும் கொடுத்துவிட்டாராம். (இதை சிலர் பின்னணிக் கதை என்கிறார்கள்... சிலர் பின்னப்பட்ட கதை என்கிறார்கள்..) பல முறை பழுது பார்க்கப்பட்டாலும், நுர்ர்ர்ரண்டுக்கணக்காக ஓடிக்கொண்டிருந்த கடிகாரத்திற்கு இரண்டாம் உலகப்போரின் இறுதி நாட்களில் மீண்டும் சோதனை ஏற்ப்பட்டது. போரில் தூற்று பிராக் நகரை விட்டு வெளியேறும் தறுவாயில் இருந்த நாஜிப்படையினரால் இந்த கடிகாரத்தின் கோபுரம் கொளுத்தப்பட்டது. கடிகாரத்தின் பல பாகங்கள் சிதைந்துபோன நிலையில் பின்னர் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

இத்தகைய புராதனமான சின்னங்களைத்தவிர, ஜொலிக்கும் முகர்ப்பைக்கொண்ட யூத கோவில், பழம்பெரும் செயின்ட் ஜார்ஜ் தேவாலயம், செக் பாரம்பரியத்தை விளக்கும் தேசிய அருங்காட்சியகம் என்று பிராக் நகரின் பார்க்கவேண்டிய பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

பிராக் நகரில் எப்படி இவ்வளவு பொக்கிஷங்கள் பல நூற்றாண்டுகளாய் பாதுகாக்கப்படுகின்றன? இது எப்படி சாத்தியமாயிற்று? மற்ற நாடுகளைப்போல் செக் குடியரசு கடந்துவந்த வரலாற்றுப் பாதை கொஞ்சம் கரடுமுரடனதுதான். ஆனால் தொன்று தொட்டு இந்த நாட்டை ஆண்ட பல மன்னர்கள் இந்த பாரம்பரியத்தை காப்பாற்றியதோடு மட்டுமல்லாமல் மெருகேற்றவும் செய்திருகிறார்கள். கடந்த நூற்றாண்டில்தான் இந்த நாட்டிற்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டன. முதல் உலகப்போருக்குபிறகு செக் நாடும் சுலோவோகிய நாடும் இணைந்து உருவானதுதான் 'செக்கோஸ்லோவோகியா'. (இதை ஆங்கிலத்தில் பிழையின்றி எழுதுபவர்களுக்கு பரிசு கொடுக்கலாம்)... இரண்டாம் உலகப்போரின்போது 1939ம் ஆண்டு நாஜிப்படையினர் பிராக் நகரை முற்றுகையிட்டு பிராக் கொட்ட்டையைக் கைப்பற்றினார்கள். பின்பு ஆறு வருடம் ஹிட்லரின் வெறியாட்டம் தொடர்ந்தது. இங்கு வாழ்ந்துகொண்டிருந்த யூதர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர். அமெரிக்கா வேறு தன் பங்கிற்கு 'குறி தவறுதலாக' குண்டு போட்டது. (83 மைல் தள்ளியிருக்கும் ஒரு ஜெர்மானிய நகரை குறி வைத்து பின் சொதப்பிவிட்டதாம்). இத்தனை துயரங்களிலும் சந்தோஷப்படக்கூடிய ஒரே விஷயம் அதிக 'குண்டு மழை' பொழியப்படாத இடங்களில் பிராக் நகரமும் ஒன்று என்பதுதான்...! மற்ற ஐரோப்பிய நகரங்களைப் போல அதிகம் பாதிப்பு இல்லாமல் தப்பித்துக்கொண்டது பிராக் நகரம். இதன் பல கட்டிடங்கள் இன்னும் 'உயிரோடு' இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

இரண்டாம் உலகப்போர் முடிந்து நாஜிக்கள் வெளியெறியதும் உள்ளே நுழைந்தது சோவியத் படை..! அதன் பிறகு நடந்த உள்நாட்டு கலவரங்களைத் தடுத்து செக்கோஸ்லோவோகியாவை சோவியத் தன் தலைமையில் கம்யூனிஸ நாடாக அறிவித்தது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, 1993ம் ஆண்டு செக்கோஸ்லோவோகியா கலைக்கப்பட்டு மீண்டும் செக், சுலோவோக்கியா என்ற இரு குடியரசு நாடுகளாகப் பிரிக்கப்பட்டன.

இவ்வளவு வரலாற்று நிகழ்வுகளிலிருந்து மீண்டு இன்றைக்கும் நிலைத்து நிற்கும் இந்த புராதானச் சின்னங்களை, யுனெஸ்கோ உலக கலாசார மையமாக அறிவித்துள்ளது. 'சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிராகின் மையப்பகுதி' என்று யுனெஸ்கோவால் பெயரிடப்பட்டுள்ள இந்த இடத்தில் கிட்டத்தட்ட 1300 பாரம்பரிய கட்டிடங்கள் அமைந்துள்ளன.

செக் அரசாங்கமும் இந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்ற பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிராகின் மையப்பகுதியில் எந்த ஒரு கட்டிடங்களிலும் கிறுக்கல்கள் இல்லை.. சுவரொட்டிகள் இல்லை.. ஏன் சிறு சிதைவுகள்கூட இல்லை.. தெரு விளக்குகளைக்கூட பழைமையான வடிவில் அமைத்திருக்கிறார்கள். பிராக் நகரத்தில் பழைய கட்டிடங்களை இடிப்பதற்கு, புது கட்டிடங்களை கட்டுவதற்கு பல தடைகள் விதித்த அரசு, கட்டங்களில் வெளித்தோற்றம் மாறாமல் உள்ளே மட்டும் புதுப்பிப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் சில பிராக் பெருசுகள் 'அந்தக்காலத்தைப்போல் இல்லை' என்று அங்கலாய்கிறார்கள். 'முன்பு விமானத்திலிருந்து பார்க்கும் போது நகரம் முழுவதும் அழகான சிவப்பு ஓட்டுக்கூரைகளாக மட்டும்தான் தெரியும்.. இப்போது பல புதிய அமைப்புகள் நகரின் அழகை கெடுத்து விட்டன' என்பது அவர்களின் வருத்தம்..!

எது எப்படியிருந்தாலும், ஐரோப்பிய பயணம் செல்பவர்களின் பட்டியலில் நிச்சயம் இருக்கவேண்டிய இடம் பிராக்.

Thursday, July 31, 2008

நேர்மை... நாணயம்...நேரம் தவறாமை...


(ஆகஸ்ட் 2007 வடக்கு வாசல் இதழில் வெளிவந்தது)

சூரியன் உதிக்கும் நாட்டுக்கு செல்லப்போகிறோம்...!
உழைப்பாளர்களின் தேசம் காணப்போகிறோம்....!
சுறுசுறுப்புக்கு உதாரணமான மக்களைச் சந்திக்கப்போகிறோம்...!

ஜப்பான் பயணம் என்றதும் என்னுள் ஆர்ப்பரித்த எண்ணஅலைகள் இவை...

விமான நிலையத்திலிருந்து இத்தனை மணிக்கு கிளம்பும் பேரூந்து பிடிக்கவேண்டும்... பேரூந்தைவிட்டு இறக்கியவுடன் அருகிலிருக்கும் ஒரு டாக்சி பிடித்து இந்த வரைபடத்தைக் காண்பிக்கவேண்டும்.. இத்தனை யென் கொடுக்கவேண்டும்... ஹோட்டல் அறையின் குறியிடு இது என்று எதோ கணிணி மென்பொருள்போல மின்அஞ்சல் அனுப்பியிருந்தார்கள். இதில் எதுவும் பிசகாமல் அப்படியே நடந்தது ஜப்பானின் ஆச்சரியங்களில் ஒன்று. ஒவ்வொரு ஜப்பானியருக்கும் உள்ளே ஒரு கம்ப்யூட்டர் இயங்கிக்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் வந்தது. தொழில்நுட்பம் உச்சத்தில் இருந்தாலும் ஜப்பான் இன்னும் தன் பாரம்பரிய பழக்கவழக்கங்களை கைவிடவில்லை. இடுப்பை வளைத்து வணக்கம் சொல்லும் அழகைப்பார்க்கும்போது நாம் எத்தனைமுறை கைகூப்பி வணக்கம் சொல்லியிருக்கிறோம் என்று எண்ணத்தோன்றுகிறது. ஐரோப்பிய நாகரீகமான கைகொடுக்கும் பழக்கம் நம்மை எப்போதோ வசப்படுத்திவிட்டது.
வணங்குவது மட்டுமல்ல... எதையுமே இரண்டு கையால் கொடுப்பது.. யாரையும் 'சான்' என்று அடைமொழியுடன் அழைப்பது.. என்று ஜப்பானுக்கே உரிய பழக்கங்கள் பல...! உடையைத்தவிர ஜப்பானியர்களை மேற்கத்திய நாகரிகம் ஆக்கிரமிக்கவில்லை.

ஜப்பான் மக்களின் அடையாளங்களில் ஒன்று அவர்கள் பழகும் முறை. எப்படித்தான் அவர்களுக்குள் அவ்வளவு பவ்யம் இருக்கிறதோ தெரியவில்லை.. சகமனிதர்களிடம் வன்மம் இல்லாத ஒரு தன்மை.. எப்போதுமே மென்மையாக பேசும் ஒரு குணம்.. உலகப்பொருளாதாரத்தை தன் கைக்குள் அடக்கிவைத்திருகிறோம் என்ற கர்வம் இல்லாத ஒரு நடத்தை.. இவையெல்லாம்தான் ஜப்பானியர்களை ம்ற்ற இனங்களைவிட ஒருபடி மேலே உயர்த்திக்காட்டுகிறது.

அதிர்ந்து பேசும் ஜப்பானியர்களைப் பார்ப்பதே வெகு அபூர்வம். அவர்கள் அலைபேசிகூட அலறுவதில்லை... மௌன மொழியே பேசுகிறது.

இந்திய உணவுகள் பெரும்பாலும் ஜப்பானில் கிடைப்பதில்லை. அதிலும் தாவிரப்பட்சிணிகளுக்கு திண்டாட்டம்தான். சொற்ப எண்ணிக்கைகளில் இருக்கும் சில உணவகங்களில்கூட ஜப்பான் சாயல் படிந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பப் புரட்சியால் ஜப்பானுக்கு பல இந்தியர்கள் வரத்தொடங்கியிருக்கிறார்கள். வருங்காலத்தில் பல இந்திய உணவகங்கள் ஜப்பானில் தோன்றலாம்.

உணவு தவிர ஜப்பானில் இந்தியர்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை மொழி. 'இங்கு ஆங்கிலத்துக்கு இடம் இல்லை' என்று எழுதிவைக்காத குறையாக அங்கு 'எங்கும் ஜப்பானியம் எதிலும் ஜப்பானியம்' என்பதுதான் கொள்கை. உணவுப்பொருட்களிலும் சரி.. தொலைக்காட்சி வாஷிங்மெஷின் போன்ற சாதனங்களிலும் சரி.. பெயர் மற்றும் விளக்கங்கள் எல்லாம் ஜப்பானியத்திலேயே இருக்கின்றது. குளிர்சாதன ரிமோட் கன்ட்ரோலை அலுவலகத்துக்கு எடுத்துச்சென்று அங்குள்ள ஜப்பானியர்களிடமிருந்து அதில் என்ன எழுதியிருக்கிறது என்று புரிந்துகொண்டு அதை சரிவர இயக்குவதற்கு ஒரு வாரம் பிடித்தது. சில சமயம் பாலுக்கு பதிலாக மோர் வாங்கிக்கொண்டு வந்த வேடிக்கைகளும் நடந்தது.

ஜப்பானில் உதவி கேட்பது நமது பிறப்புரிமை..! உதவி செய்வது அவர்கள் பிறப்புரிமை..! ஏதோ போன ஜென்மத்தில் கடன் பட்டவர்கள் போல நாம் கேட்கும் முன் தாமாகவே உதவிசெய்யும் தன்மை எல்லா ஜப்பானியர்களிடமும் உள்ளது. இதில் ரயில் நிலைய டிக்கெட் அதிகாரிகளைப்பற்றி குறிப்பிட்டாகவேண்டும். நாம் ஏதாவது கேட்டுவிட்டால் போதும்.. இருக்கையிலிருந்து எழுந்து வந்து நமக்காக டிக்கெட் எடுத்துக்கொடுத்து சரியான ரயிலை அடையாளமும் காட்டிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். சிலர் டோக்கியோ ரயில் வரைபடத்தை எடுத்து விளக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

தினம் அறுபது லட்சம் மக்களை சுமந்து செல்லும் மெட்ரோ ரயில்கள்தான் டோக்கியோவின் எலும்புக்கூடு. கிட்டத்தட்ட 200ரயில் நிலையங்கள் உள்ள டோக்கியோவில் எந்த ஒரு இடத்திற்கும் ரயில் மூலமாகவே அடையாளம் சொல்லப்படுகிறது. டோக்கியோ மற்றும் அதன் புறநகரில் எந்த பகுதியாயிருந்தாலும் ஏதாவது ஒரு ரயில் நிலையத்திலிருந்து அதிகபட்சம் 10 நிமிட நடையில் அடைந்து விடலாம். (9நிமிட நடை, 11நிமிட நடை என்றெல்லாம் குறிப்பிடிருப்பார்கள். குத்துமதிப்பாக 10நிமிட நடை என்று கூறுவதில்லை). 8.47மணிக்கு ஒரு ரயில் குறிப்பிட்ட ரயில் நிலையத்திற்கு வரும் என்று அறிவித்தால் அந்த நேரத்துக்கு அந்த ரயில் வந்தேதீரும். அதுமட்டுமல்ல.. ஒரு ரயில் நிலையத்திலிருந்து இன்னொரு ரயில் நிலையத்திற்கு சாதாரண ரயிலில் போனால் இவ்வளவு நிமிடங்கள் ஆகும்.. விரைவு ரயிலில் போனால் இவ்வளவு நிமிடங்கள் ஆகும் என்ற விவரங்கள் எல்லா ரயில் நிலையத்திலும் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கால அட்டவணையை இணையத்திலும் பார்த்து தெரிந்துகொள்ளலாம். கொஞ்சம் கூட பிசகாமல் இந்த நேரங்கள் கடைபிடிக்கப்படும்.

ஒரேயொரு விதத்தில் மட்டும் டோக்கியோ ரயில்களையும் இந்திய நகர ரயில்களையும் ஒப்பிடலாம். அது ஜனநெரிசல்.. காலை நேரங்களில் ஒரு ரயிலில் 4000பேர் சர்வசாதரணமாக பயணிக்கிறார்கள். ஆனால் ரயிலுக்கு வரிசையில் நிற்பது, இறங்குபவர்களுக்கு அழகாக பிரிந்து வழிவிடுவது என்பதையெல்லாம் நம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. டோக்கியோவில் உள்ள சின்சுகு என்ற ரயில்நிலையம்தான் உலகத்திலேயே அதிக மக்கள் நடமாட்டம் உள்ள ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தை தினமும் 20லட்சம் மக்கள் கடந்து செல்கிறார்கள்.

ஜப்பானியர்கள் நேரத்தை கடைப்பிடிப்பது மட்டுமல்லாமல் நேரத்தை எப்படி சுருக்கக் கற்றுக் கொண்டார்கள் என்பதற்கு 'ஷின்காஷன்' என்ற புல்லட் ரயில்கள் சாட்சி. மணிக்கு 200கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரயில்கள், ஜப்பானின் முக்கிய நகரங்களை சிலமணிநேரத்தில் கடந்துவிடுகிறது. 99% புல்லட் ரயில்கள் ஒருநிமிடதிற்கும் குறைவான அளவு தாமதத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறது. முப்பது நிமிடமெல்லாம் தாமதமாக வந்தால் தொலைகாட்சி செய்திகளில் அறிவிக்கப்படுமாம். இவ்வளவு வேகத்தில் பறக்கும் புல்லட் ரயில்கள் கடந்த நாற்பது வருடங்களாக எந்த ஒரு பெரிய விபத்தையும் சந்தித்ததில்லை.

பிரசித்தி பெற்ற ஜப்பானியர்களின் நேர்மையை அனுபவிப்பதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஒருமுறை என் மாத ரயில் அட்டையை தவற விட்டுவிட்டேன். பிறகு ஒருவாரத்துக்கான அட்டையை வாங்கி உபயோகித்து வந்தேன். இரண்டு நாட்கள் கழித்து என் அலுவலத்திலிருந்து என் ரயில் அட்டை குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இருப்பதாக தகவல் வந்தது. ரயில் அட்டையை கண்டெடுத்த யாரோ ஒரு புண்ணியவான் அதை தவறாக உபயோகப்படுத்தாமல் ரயில்வே அதிகாரியிடம் கொடுத்திருக்கிறார். ரயில்வே அதிகாரியும் என் அட்டையில் பதிந்திருக்கும் என் மொபைல் எண்ணைக் கண்டுபிடித்து மொபைல் எண்ணைஅழைக்காமல் என் அலுவலகத்தை தொடர்புகொண்டு செய்தி தெரிவித்திருக்கிறார்கள். அந்த ரயில் நிலையத்திற்கு சென்றவுடன் என் பாஸ்போர்டை சரிபார்த்து ரயில் அட்டையை திருப்பிக்கொடுதார்கள்.

என் ஆச்சரியம் இதோடு நின்றுவிடவில்லை. நான் வாங்கிய வார அட்டையின் மீதமுள்ள நாட்களுக்கு பணத்தை திரும்பக் கொடுத்துவிட்டார்கள்.

நான் எதுவும் பேசமுடியாமல் அசந்துபோய் நின்றுகொண்டிருந்தேன்...!

கொஞ்சம் யோசித்துப் பார்த்தபோது இது நமக்கு மட்டுமே வியப்பான விஷயம் என்று புரிந்தது. அவர்களைப் பொறுத்தவரை அது சாதரண செயல். தங்கள் கடமையை செய்வதாகத்தான் அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் நேர்மை, நாணயம், உண்மை, தரம் இவையெல்லாம் அவர்கள் செயல்முறையிலேயே கலந்திருக்கின்றது. அவர்கள் அப்படித்தான் வளர்க்கப்படுகிறார்கள். நான் சிரமப்பட்ட ஒரே விஷயம் நான் எதற்காக வந்திருக்கின்றேன் என்று விளகுவதற்குதான். காணாமல் போன ரயில் அட்டையை தேடி வந்திருக்கிறேன் என்று அந்த அதிகாரிக்கு விளக்குவதற்கு ஒரு ஓரங்க நாடகமே நடத்தவேண்டியிருந்தது.

நாணயத்திலும் நாணயம் கடைபிடிப்பவர்கள் ஜப்பானியர்கள். அவர்களுடைய 'ஒரு யென்' நாணயத்திற்கு (currency) மதிப்பே இல்லை. 100 யென்னுக்கு குறைந்து எந்த ஒரு பொருளும் கிடைக்காது. ஆனாலும் பொருட்களின் விலை 128யென், 299 யென் என்றெல்லாம் இருக்கும். இருந்தாலும் மீதி சில்லறை துல்லியமாகக் கொடுக்கப்படும்..அது ஒரு யென்னாக இருந்தாலும்...!

ஜப்பானில் புத்த மதம் மற்றும் ஷிண்டோ என்ற மதமும் பின்பற்றப்படுகின்றன
என்று சொன்னாலும், மதம் அவர்கள் அன்றாட வாழ்வில் குறுக்கிடுவதே இல்லை. இனப்பற்று மதப்பற்றைவிட மேலோங்கியிருக்கிறது. மதம் அவர்கள் அகராதியில் கடைசிப் பக்கங்களில் மட்டுமே இருக்கிறது. எம்மதமும் சம்மதம் என்ற மதச்சார்பின்மையைவிட மதமே தேவையில்லை என்ற மதப்பற்றின்மை இவர்களை ஆட்கொள்கின்றது. திருமணம், இறப்பு போன்ற விஷயங்களுக்கு மட்டுமே மத சம்பிரதாயங்கள் தேவைப் படுகிறது. குறிப்பாக சுப காரியங்கள் ஷிண்டோ மதமுறைப்படியும், இறப்பு, மூதாதையரை வணங்குவது போன்றவைகள் புத்த மத முறைப்படியும் நடக்கிறது. இதைத்தவிர கிருஸ்துமஸ் பண்டிகையும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ஒருசில புத்த கோவில்களைத்தவிர டோக்கியோவில் மத அடையாளங்கள் பெரிதாக எதுவும் இல்லை. ஆனால் டோக்கியோவிற்கு மிக அருகிலேயே இருக்கும் காமகுரா என்ற இடத்தில் பல புத்த கோவில்கள் உள்ளன. ஒரு காலத்தில் ஜப்பான் தலைநகரமாக இருந்த காமகுரா இன்று அதன் புண்ணியஸ்தலங்களில் ஒன்று. பதிமூன்றம் நூற்றண்டில் கட்டப்பட பிரமாண்ட வெண்கல புத்தர் சிலை இங்கு இருக்கிறது. இங்கிருந்த கோவில் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மிகப்பெரிய ஒரு சுனாமியால் சிதைந்து போனதாம். கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில் உள்ள புத்தர் மட்டும் இன்னும் வெயில், பனி, பூகம்பத்தால் தன்னை காத்துக்கொண்டிருக்கிறார். கெங்கோஜி, எங்ககுஜி போன்ற பிரபல ஜென் கோவில்களும் காமகுரவில்தான் உள்ளன. ஜென் கோவில்கள் டோக்கியோவின் பரபரப்புக்கு கொஞ்சம் கூட சம்மந்தம் இல்லாமல் ரம்யமான சூழலில் அடர்ந்த மரங்களுகிடையே அமைதிவழிந்தோடக்கூடிய இடமாக உள்ளது.

ஜப்பானில் மண்வளம் இல்லை... கனிம வலம் இல்லை... பூகம்பம், சுனாமி, எரிமலை போன்ற இயற்கை சீற்றங்கள் அவ்வப்போது பதம் பார்க்கும் பூமி.. எனினும் முக்கியமாக வாகனம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மட்டுமே இன்று ஜப்பானை உலகப் பொருளாதார வல்லரசாக வைத்திருக்கிறது. இரண்டாம் உலகப்போர் முடிவில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்ட ஒரு நாடு, எல்லாவற்றையும் இழந்து நிராயுதபாணியாக நின்ற ஒரு நாடு, ஐம்பத்து ஆண்டுகளில் பிரமிக்கத்தக்க வகையில் வளர்ந்து இன்று உலகையே ஆட்டிப்படைப்பது எப்படி?

அதன் தொழில்நுட்பமா.. அல்லது உழைப்பா.. அல்லது நேர்மையா...

இவையெல்லாம் விட இந்த மாற்றத்துக்கு மூலகாரணம், இது அரசும் மக்களும் செய்து காட்டிய கூட்டுமுயற்சி. அரசாங்கம் நினைப்பதையே மக்கள் நினைகிறார்கள்.. மக்கள் நினைப்பதையே அரசாங்கம் நினைக்கிறது.. எந்த ஒரு தொழில்நுட்பமும் கடைசி ஜப்பானியனைப் போய்ச் சேருகிறது. இந்தியாவில் உள்ளது போல் மக்களிடமிருந்து அரசு அன்னியப்பட்டுப்போனது இங்கு நிகழவில்லை.

ஜப்பானியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது..!