Thursday, July 31, 2008

நேர்மை... நாணயம்...நேரம் தவறாமை...


(ஆகஸ்ட் 2007 வடக்கு வாசல் இதழில் வெளிவந்தது)

சூரியன் உதிக்கும் நாட்டுக்கு செல்லப்போகிறோம்...!
உழைப்பாளர்களின் தேசம் காணப்போகிறோம்....!
சுறுசுறுப்புக்கு உதாரணமான மக்களைச் சந்திக்கப்போகிறோம்...!

ஜப்பான் பயணம் என்றதும் என்னுள் ஆர்ப்பரித்த எண்ணஅலைகள் இவை...

விமான நிலையத்திலிருந்து இத்தனை மணிக்கு கிளம்பும் பேரூந்து பிடிக்கவேண்டும்... பேரூந்தைவிட்டு இறக்கியவுடன் அருகிலிருக்கும் ஒரு டாக்சி பிடித்து இந்த வரைபடத்தைக் காண்பிக்கவேண்டும்.. இத்தனை யென் கொடுக்கவேண்டும்... ஹோட்டல் அறையின் குறியிடு இது என்று எதோ கணிணி மென்பொருள்போல மின்அஞ்சல் அனுப்பியிருந்தார்கள். இதில் எதுவும் பிசகாமல் அப்படியே நடந்தது ஜப்பானின் ஆச்சரியங்களில் ஒன்று. ஒவ்வொரு ஜப்பானியருக்கும் உள்ளே ஒரு கம்ப்யூட்டர் இயங்கிக்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் வந்தது. தொழில்நுட்பம் உச்சத்தில் இருந்தாலும் ஜப்பான் இன்னும் தன் பாரம்பரிய பழக்கவழக்கங்களை கைவிடவில்லை. இடுப்பை வளைத்து வணக்கம் சொல்லும் அழகைப்பார்க்கும்போது நாம் எத்தனைமுறை கைகூப்பி வணக்கம் சொல்லியிருக்கிறோம் என்று எண்ணத்தோன்றுகிறது. ஐரோப்பிய நாகரீகமான கைகொடுக்கும் பழக்கம் நம்மை எப்போதோ வசப்படுத்திவிட்டது.
வணங்குவது மட்டுமல்ல... எதையுமே இரண்டு கையால் கொடுப்பது.. யாரையும் 'சான்' என்று அடைமொழியுடன் அழைப்பது.. என்று ஜப்பானுக்கே உரிய பழக்கங்கள் பல...! உடையைத்தவிர ஜப்பானியர்களை மேற்கத்திய நாகரிகம் ஆக்கிரமிக்கவில்லை.

ஜப்பான் மக்களின் அடையாளங்களில் ஒன்று அவர்கள் பழகும் முறை. எப்படித்தான் அவர்களுக்குள் அவ்வளவு பவ்யம் இருக்கிறதோ தெரியவில்லை.. சகமனிதர்களிடம் வன்மம் இல்லாத ஒரு தன்மை.. எப்போதுமே மென்மையாக பேசும் ஒரு குணம்.. உலகப்பொருளாதாரத்தை தன் கைக்குள் அடக்கிவைத்திருகிறோம் என்ற கர்வம் இல்லாத ஒரு நடத்தை.. இவையெல்லாம்தான் ஜப்பானியர்களை ம்ற்ற இனங்களைவிட ஒருபடி மேலே உயர்த்திக்காட்டுகிறது.

அதிர்ந்து பேசும் ஜப்பானியர்களைப் பார்ப்பதே வெகு அபூர்வம். அவர்கள் அலைபேசிகூட அலறுவதில்லை... மௌன மொழியே பேசுகிறது.

இந்திய உணவுகள் பெரும்பாலும் ஜப்பானில் கிடைப்பதில்லை. அதிலும் தாவிரப்பட்சிணிகளுக்கு திண்டாட்டம்தான். சொற்ப எண்ணிக்கைகளில் இருக்கும் சில உணவகங்களில்கூட ஜப்பான் சாயல் படிந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பப் புரட்சியால் ஜப்பானுக்கு பல இந்தியர்கள் வரத்தொடங்கியிருக்கிறார்கள். வருங்காலத்தில் பல இந்திய உணவகங்கள் ஜப்பானில் தோன்றலாம்.

உணவு தவிர ஜப்பானில் இந்தியர்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை மொழி. 'இங்கு ஆங்கிலத்துக்கு இடம் இல்லை' என்று எழுதிவைக்காத குறையாக அங்கு 'எங்கும் ஜப்பானியம் எதிலும் ஜப்பானியம்' என்பதுதான் கொள்கை. உணவுப்பொருட்களிலும் சரி.. தொலைக்காட்சி வாஷிங்மெஷின் போன்ற சாதனங்களிலும் சரி.. பெயர் மற்றும் விளக்கங்கள் எல்லாம் ஜப்பானியத்திலேயே இருக்கின்றது. குளிர்சாதன ரிமோட் கன்ட்ரோலை அலுவலகத்துக்கு எடுத்துச்சென்று அங்குள்ள ஜப்பானியர்களிடமிருந்து அதில் என்ன எழுதியிருக்கிறது என்று புரிந்துகொண்டு அதை சரிவர இயக்குவதற்கு ஒரு வாரம் பிடித்தது. சில சமயம் பாலுக்கு பதிலாக மோர் வாங்கிக்கொண்டு வந்த வேடிக்கைகளும் நடந்தது.

ஜப்பானில் உதவி கேட்பது நமது பிறப்புரிமை..! உதவி செய்வது அவர்கள் பிறப்புரிமை..! ஏதோ போன ஜென்மத்தில் கடன் பட்டவர்கள் போல நாம் கேட்கும் முன் தாமாகவே உதவிசெய்யும் தன்மை எல்லா ஜப்பானியர்களிடமும் உள்ளது. இதில் ரயில் நிலைய டிக்கெட் அதிகாரிகளைப்பற்றி குறிப்பிட்டாகவேண்டும். நாம் ஏதாவது கேட்டுவிட்டால் போதும்.. இருக்கையிலிருந்து எழுந்து வந்து நமக்காக டிக்கெட் எடுத்துக்கொடுத்து சரியான ரயிலை அடையாளமும் காட்டிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். சிலர் டோக்கியோ ரயில் வரைபடத்தை எடுத்து விளக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

தினம் அறுபது லட்சம் மக்களை சுமந்து செல்லும் மெட்ரோ ரயில்கள்தான் டோக்கியோவின் எலும்புக்கூடு. கிட்டத்தட்ட 200ரயில் நிலையங்கள் உள்ள டோக்கியோவில் எந்த ஒரு இடத்திற்கும் ரயில் மூலமாகவே அடையாளம் சொல்லப்படுகிறது. டோக்கியோ மற்றும் அதன் புறநகரில் எந்த பகுதியாயிருந்தாலும் ஏதாவது ஒரு ரயில் நிலையத்திலிருந்து அதிகபட்சம் 10 நிமிட நடையில் அடைந்து விடலாம். (9நிமிட நடை, 11நிமிட நடை என்றெல்லாம் குறிப்பிடிருப்பார்கள். குத்துமதிப்பாக 10நிமிட நடை என்று கூறுவதில்லை). 8.47மணிக்கு ஒரு ரயில் குறிப்பிட்ட ரயில் நிலையத்திற்கு வரும் என்று அறிவித்தால் அந்த நேரத்துக்கு அந்த ரயில் வந்தேதீரும். அதுமட்டுமல்ல.. ஒரு ரயில் நிலையத்திலிருந்து இன்னொரு ரயில் நிலையத்திற்கு சாதாரண ரயிலில் போனால் இவ்வளவு நிமிடங்கள் ஆகும்.. விரைவு ரயிலில் போனால் இவ்வளவு நிமிடங்கள் ஆகும் என்ற விவரங்கள் எல்லா ரயில் நிலையத்திலும் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கால அட்டவணையை இணையத்திலும் பார்த்து தெரிந்துகொள்ளலாம். கொஞ்சம் கூட பிசகாமல் இந்த நேரங்கள் கடைபிடிக்கப்படும்.

ஒரேயொரு விதத்தில் மட்டும் டோக்கியோ ரயில்களையும் இந்திய நகர ரயில்களையும் ஒப்பிடலாம். அது ஜனநெரிசல்.. காலை நேரங்களில் ஒரு ரயிலில் 4000பேர் சர்வசாதரணமாக பயணிக்கிறார்கள். ஆனால் ரயிலுக்கு வரிசையில் நிற்பது, இறங்குபவர்களுக்கு அழகாக பிரிந்து வழிவிடுவது என்பதையெல்லாம் நம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. டோக்கியோவில் உள்ள சின்சுகு என்ற ரயில்நிலையம்தான் உலகத்திலேயே அதிக மக்கள் நடமாட்டம் உள்ள ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தை தினமும் 20லட்சம் மக்கள் கடந்து செல்கிறார்கள்.

ஜப்பானியர்கள் நேரத்தை கடைப்பிடிப்பது மட்டுமல்லாமல் நேரத்தை எப்படி சுருக்கக் கற்றுக் கொண்டார்கள் என்பதற்கு 'ஷின்காஷன்' என்ற புல்லட் ரயில்கள் சாட்சி. மணிக்கு 200கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரயில்கள், ஜப்பானின் முக்கிய நகரங்களை சிலமணிநேரத்தில் கடந்துவிடுகிறது. 99% புல்லட் ரயில்கள் ஒருநிமிடதிற்கும் குறைவான அளவு தாமதத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறது. முப்பது நிமிடமெல்லாம் தாமதமாக வந்தால் தொலைகாட்சி செய்திகளில் அறிவிக்கப்படுமாம். இவ்வளவு வேகத்தில் பறக்கும் புல்லட் ரயில்கள் கடந்த நாற்பது வருடங்களாக எந்த ஒரு பெரிய விபத்தையும் சந்தித்ததில்லை.

பிரசித்தி பெற்ற ஜப்பானியர்களின் நேர்மையை அனுபவிப்பதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஒருமுறை என் மாத ரயில் அட்டையை தவற விட்டுவிட்டேன். பிறகு ஒருவாரத்துக்கான அட்டையை வாங்கி உபயோகித்து வந்தேன். இரண்டு நாட்கள் கழித்து என் அலுவலத்திலிருந்து என் ரயில் அட்டை குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இருப்பதாக தகவல் வந்தது. ரயில் அட்டையை கண்டெடுத்த யாரோ ஒரு புண்ணியவான் அதை தவறாக உபயோகப்படுத்தாமல் ரயில்வே அதிகாரியிடம் கொடுத்திருக்கிறார். ரயில்வே அதிகாரியும் என் அட்டையில் பதிந்திருக்கும் என் மொபைல் எண்ணைக் கண்டுபிடித்து மொபைல் எண்ணைஅழைக்காமல் என் அலுவலகத்தை தொடர்புகொண்டு செய்தி தெரிவித்திருக்கிறார்கள். அந்த ரயில் நிலையத்திற்கு சென்றவுடன் என் பாஸ்போர்டை சரிபார்த்து ரயில் அட்டையை திருப்பிக்கொடுதார்கள்.

என் ஆச்சரியம் இதோடு நின்றுவிடவில்லை. நான் வாங்கிய வார அட்டையின் மீதமுள்ள நாட்களுக்கு பணத்தை திரும்பக் கொடுத்துவிட்டார்கள்.

நான் எதுவும் பேசமுடியாமல் அசந்துபோய் நின்றுகொண்டிருந்தேன்...!

கொஞ்சம் யோசித்துப் பார்த்தபோது இது நமக்கு மட்டுமே வியப்பான விஷயம் என்று புரிந்தது. அவர்களைப் பொறுத்தவரை அது சாதரண செயல். தங்கள் கடமையை செய்வதாகத்தான் அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் நேர்மை, நாணயம், உண்மை, தரம் இவையெல்லாம் அவர்கள் செயல்முறையிலேயே கலந்திருக்கின்றது. அவர்கள் அப்படித்தான் வளர்க்கப்படுகிறார்கள். நான் சிரமப்பட்ட ஒரே விஷயம் நான் எதற்காக வந்திருக்கின்றேன் என்று விளகுவதற்குதான். காணாமல் போன ரயில் அட்டையை தேடி வந்திருக்கிறேன் என்று அந்த அதிகாரிக்கு விளக்குவதற்கு ஒரு ஓரங்க நாடகமே நடத்தவேண்டியிருந்தது.

நாணயத்திலும் நாணயம் கடைபிடிப்பவர்கள் ஜப்பானியர்கள். அவர்களுடைய 'ஒரு யென்' நாணயத்திற்கு (currency) மதிப்பே இல்லை. 100 யென்னுக்கு குறைந்து எந்த ஒரு பொருளும் கிடைக்காது. ஆனாலும் பொருட்களின் விலை 128யென், 299 யென் என்றெல்லாம் இருக்கும். இருந்தாலும் மீதி சில்லறை துல்லியமாகக் கொடுக்கப்படும்..அது ஒரு யென்னாக இருந்தாலும்...!

ஜப்பானில் புத்த மதம் மற்றும் ஷிண்டோ என்ற மதமும் பின்பற்றப்படுகின்றன
என்று சொன்னாலும், மதம் அவர்கள் அன்றாட வாழ்வில் குறுக்கிடுவதே இல்லை. இனப்பற்று மதப்பற்றைவிட மேலோங்கியிருக்கிறது. மதம் அவர்கள் அகராதியில் கடைசிப் பக்கங்களில் மட்டுமே இருக்கிறது. எம்மதமும் சம்மதம் என்ற மதச்சார்பின்மையைவிட மதமே தேவையில்லை என்ற மதப்பற்றின்மை இவர்களை ஆட்கொள்கின்றது. திருமணம், இறப்பு போன்ற விஷயங்களுக்கு மட்டுமே மத சம்பிரதாயங்கள் தேவைப் படுகிறது. குறிப்பாக சுப காரியங்கள் ஷிண்டோ மதமுறைப்படியும், இறப்பு, மூதாதையரை வணங்குவது போன்றவைகள் புத்த மத முறைப்படியும் நடக்கிறது. இதைத்தவிர கிருஸ்துமஸ் பண்டிகையும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ஒருசில புத்த கோவில்களைத்தவிர டோக்கியோவில் மத அடையாளங்கள் பெரிதாக எதுவும் இல்லை. ஆனால் டோக்கியோவிற்கு மிக அருகிலேயே இருக்கும் காமகுரா என்ற இடத்தில் பல புத்த கோவில்கள் உள்ளன. ஒரு காலத்தில் ஜப்பான் தலைநகரமாக இருந்த காமகுரா இன்று அதன் புண்ணியஸ்தலங்களில் ஒன்று. பதிமூன்றம் நூற்றண்டில் கட்டப்பட பிரமாண்ட வெண்கல புத்தர் சிலை இங்கு இருக்கிறது. இங்கிருந்த கோவில் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மிகப்பெரிய ஒரு சுனாமியால் சிதைந்து போனதாம். கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில் உள்ள புத்தர் மட்டும் இன்னும் வெயில், பனி, பூகம்பத்தால் தன்னை காத்துக்கொண்டிருக்கிறார். கெங்கோஜி, எங்ககுஜி போன்ற பிரபல ஜென் கோவில்களும் காமகுரவில்தான் உள்ளன. ஜென் கோவில்கள் டோக்கியோவின் பரபரப்புக்கு கொஞ்சம் கூட சம்மந்தம் இல்லாமல் ரம்யமான சூழலில் அடர்ந்த மரங்களுகிடையே அமைதிவழிந்தோடக்கூடிய இடமாக உள்ளது.

ஜப்பானில் மண்வளம் இல்லை... கனிம வலம் இல்லை... பூகம்பம், சுனாமி, எரிமலை போன்ற இயற்கை சீற்றங்கள் அவ்வப்போது பதம் பார்க்கும் பூமி.. எனினும் முக்கியமாக வாகனம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மட்டுமே இன்று ஜப்பானை உலகப் பொருளாதார வல்லரசாக வைத்திருக்கிறது. இரண்டாம் உலகப்போர் முடிவில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்ட ஒரு நாடு, எல்லாவற்றையும் இழந்து நிராயுதபாணியாக நின்ற ஒரு நாடு, ஐம்பத்து ஆண்டுகளில் பிரமிக்கத்தக்க வகையில் வளர்ந்து இன்று உலகையே ஆட்டிப்படைப்பது எப்படி?

அதன் தொழில்நுட்பமா.. அல்லது உழைப்பா.. அல்லது நேர்மையா...

இவையெல்லாம் விட இந்த மாற்றத்துக்கு மூலகாரணம், இது அரசும் மக்களும் செய்து காட்டிய கூட்டுமுயற்சி. அரசாங்கம் நினைப்பதையே மக்கள் நினைகிறார்கள்.. மக்கள் நினைப்பதையே அரசாங்கம் நினைக்கிறது.. எந்த ஒரு தொழில்நுட்பமும் கடைசி ஜப்பானியனைப் போய்ச் சேருகிறது. இந்தியாவில் உள்ளது போல் மக்களிடமிருந்து அரசு அன்னியப்பட்டுப்போனது இங்கு நிகழவில்லை.

ஜப்பானியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது..!



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்