அரபிக் கடல் அலைமோதிச் செல்லும் மும்பை கேட் வே ஆப்
இந்தியாவில் நின்றுகொண்டு புறாக்களுக்கு தானியங்களை இறைத்தபடி எதிரே உள்ள தாஜ் ஹோட்டலின் அழகை ரசித்தவர்களின் நானும் ஒருவன்.
மும்பையின் அடையாளமாக இருந்த தாஜ் ஹோட்டல் இந்த வாரம் உலகத்தின் எல்லா நாளிதழ்களிலும் தலைப்புசெய்தியாக இடம் பெற்றது.
இந்தப்பக்கம் பல நூறு புறாக்கள் சமாதான மொழி
பேசிக்கொண்டிருக்க தாஜ் ஹோட்டல் தீவிரவாதிகளின் கூடாரமானது. இந்தியாவின் இந்த வருட தொடர் வெடிகுண்டுகளுக்கெல்லாம்
உச்சம், தீவிரவாதிகள் கடைபிடித்திருக்கும் இந்த புதிய முறை.
வழக்கம்போல ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் அறிக்கை விட்டுகொண்டிருந்தாலும் இந்தமுறை மக்களும் ஊடகங்களும் விடுத்திருக்கும் புதிய குரல் : "அரசில்வாதிகளே.. உங்கள் சண்டையை நிறுத்துங்கள்.. தீவிரவாதத்தை எதிர்க்க இப்போது ஒற்றுமை தேவை.."
ஆம்.. இப்போதைய தேவை சட்ட மாற்றங்களோ, வெறும் அறிக்கைகளோ, சம்பிரதாய கூட்டங்களோ அல்ல.. ஒற்றுமையான ஒரு அணுகுமுறை..
குண்டு எந்த மாநிலத்தில் வெடித்தது என்பதை பொறுத்து மாநில அரசையோ மத்திய அரசையோ புகார்கூறாத அணுகுமுறை.. இந்திய இராணுவம் - கடலோர காவல் படை - மத்திய மற்றும் மாநில புலனாய்வுத்துறை - அதிரடிப்படை - மாநில காவல் துறை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படும் அணுகுமுறை..
இந்த அணுகுமுறைதான் செப்டம்பர் 11 க்கு பிறகு தீவிரவாதம் தலைதூக்காமல் அமெரிக்காவை காப்பாற்றியது.
பிரிந்து கிடந்த இந்தியாவை சுலபமாகக் கைப்பற்றியது பிரிட்டன். காந்திக்கு முன் நடந்த எந்த போராட்டமும் வெற்றி பெறவில்லை. மத-இன-மொழி உணர்வுகளைக் கடந்து சிதறிக்கிடந்த இந்தியாவை ஒன்று சேர்த்துப் போராடி வெற்றி கண்டார் காந்தி.
இன்றும் இந்தியா சிதறிக் கிடப்பதுதான் தீவிரவாதிகளின் சாதகமான விஷயம். இப்போதைய தேவை ஒரு சுதந்திரப்போராட்டத்துக்கான ஒற்றுமை, உறுதி. ஆனால் அதை வழிநடத்திச்செல்லக்கூடிய தலைவன் யார்?