சென்னையில் குளிரும் இசையும் ஒரே சமயத்தில் துவங்கி விடும். டிசம்பர் முதல் தேதியில் வெளியாகும் சபா விளம்பரங்களிருந்து இசைவிழா களைகட்ட தொடங்கிவிடும். ஒவ்வொரு முறையும் பல கச்சேரிகளை குறித்து வைத்துக்கொண்டு அதில் பாதிதான் நிறைவேற்றுவேன். இந்தமுறை நூறு சதவிகிதம் நிறைவேற்றவேண்டும் என்று திட்டம்... பார்க்கலாம்..
கடந்த வெள்ளிகிழமை மார்கழி மகாஉற்சவம் சார்பில் டி.எம்.கிருஷ்ணா கச்சேரி.. எல்லா பாடல்களும் இயற்கையை பற்றியது... மழை, மேகம், மயில், காதல் என்று பல பல ரசங்களை சமஸ்க்ரிதம், மலையாளம், வங்காளம் என்று எல்லா மொழிகளையும் பாடி பிரமாதப்படுத்திவிட்டார். அதுவும் வங்காள மொழியில் ரவீந்திரநாத் தாகூரின் மழை பற்றிய பாடல் அற்புதம்.
தில்லி காஜு பர்பி, மலையாள பாயசம், பெங்காலி ரசகுல்லா என்று திகட்ட திகட்ட இனிப்பு கொடுத்தவர் எங்கே தமிழ்நாட்டுக்கு அல்வா கொடுத்துவிடுவரோ என்று பார்த்தால், கடைசியில் அல்வாதான் கொடுத்தார் ஆனால் (எஸ்.எம்.கிருஷ்ணா மாதிரி இல்லாமல்) டி.எம்.கிருஷ்ணா கொடுத்தது ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா.. அதுவும் எட்டயபுரத்து அல்வா.. அவர் பாடியது பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே... அதுவும் வித்தியாசமான ஒரு ராகமாலிகாவில் பாடி எல்லோரையும் திருப்திப்படுத்தினார்..
கடைசியில் 'வாழிய செந்தமிழ்' பாடி கச்சேரியை நிறைவு செய்தது கூடுதல் சிறப்பு.
அடுத்த நாள் கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சார்பில் உன்னிகிருஷ்ணன் கச்சேரி... ஏனோ அவ்வளவாக சோபிக்கவில்லை.. பாடல்கள் தேர்வும் சுமார்தான்..'சிதம்பரத்துக்கு வாருமையா' பாடல் கொஞ்சம் தேவலாம்.. அவரின் விருப்பப்பாடலாகிய காவடி சிந்துகூட ஏனோ எடுபடவில்லை..தனிஆவர்த்தனம் முடிந்து மூன்றே துக்கடாக்கள் பாடி அவசரவசரமாக இரண்டு மணி நேரத்தில் கச்சேரியை முடித்து விட்டார்...
என்ன ஆச்சு உன்னி?
சென்னையில் கூட்டம் அலைமோதும் இடங்களில் மெரினா பீச், சுற்றுலா பொருட்காட்சி, இவைகளோடு அருணா சாய்ராம் கச்சேரியும் சேர்த்துக்கொள்ளலாம். செட்டிநாடு வித்யாஷ்ரம் அரங்கில் 6.30 மணிக்கு கச்சேரி என்றால் ஐந்து மணிக்கே கூட்டம் பிதுங்கி வழிகிறது. அரங்கிற்கு வெளியே உள்ள டி.வி திரையில் கச்சேரியை மக்கள் படிக்கட்டு, தரையெல்லாம் உட்கார்ந்து பார்கிறார்கள். (சென்ற முறை அருணா சாய்ராம் கச்சேரிக்கு டிக்கெட் வாங்க முதல்நாள் மியூசிக் அகாடமி சென்றேன்.. அங்கு அவர்கள் சொன்னது: "நாளைக்கு காலையில் சரியா ஆறு மணிக்கு கௌண்டர் திறப்போம்.. கியூவில் வந்து நின்னுடுங்க சார். உங்களுக்கு லக் இருந்தா டிக்கெட் கிடைக்கலாம்").
சரி லக் இருந்தால் அருணாசாய்ராமின் அடுத்த கச்சேரிக்கு போகலாம் என்று அங்கிருந்து மெதுவாக நழுவி பக்கத்தில் இருக்கும் குன்னக்குடியின் ராகா மையத்துக்கு வந்தேன். ராஜேஷ் வைத்யாவின் வீணை இசை. மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங், கீ போர்டு இத்யாதிகளுடன் மனுஷன் அசுரத்தனமாக வீணை வாசித்துக்கொண்டிருந்தார். கன்னாடக சங்கீதமும் மேற்கத்திய சங்கீதமும் கலந்த ஒரு துள்ளல் இசை அது. ஒரு வீணையில் இதனை தொனிகளும் வேகமும் சாத்தியாமா என்று ஆச்சரியப்படவைக்கும் அதே சமயம் ஆட்டம் போடவைக்கும் இசை.. ஒரு இனிய புதிய அனுபவம்.
இனி அடுத்த வாரம்...
Monday, December 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்