முன்பெலாம் தூர்தர்ஷன் ஒளியும் ஒளியும் நிகழ்ச்சியில் எம்ஜிஆர் பாட்டுபோட்டால் உடனே ஒரு சிவாஜி பாட்டு போடுவார்கள். கமல் பாட்டு போட்டால் அடுத்தது ரஜினி பாட்டு போடுவார்கள்.. இது அவர்களே வகுத்துக்கொண்ட நியதி.
இப்போது அதே நியதியை தமிழக அரசும் கடைபிடிக்கிறது. 2007, 2008 ம் ஆண்டு சிறந்த நடிகர் விருது கமல்-ரஜினி இருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக திரை விருதுகளில்தான் சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த வில்லன் (?) சிறந்த சண்டை பயிற்சியாளர் என்ற விருதுகள் எல்லாம் உண்டு. அதாவது ஒரு திரைப்படத்தில் கண்டிப்பாக ஒரு காமெடியன், ஒரு வில்லன், சண்டைகள் இருக்க வேண்டும் என்பது இவர்கள் கருத்து. அதேபோல் நகைச்சுவையில் சிறந்த நடிகர், நடிகை என்கிற இரண்டு விருதுகள் உண்டு. வில்லனுக்கு ஒரே விருது. வில்லி விருதெல்லாம் கிடையாது. (தமிழ் மசாலா சினிமா பார்முலாபடி பெண்கள் வில்லன் வேஷத்தில் நடிக்கக் கூடாது - அப்படியே இருந்தாலும் கடைசியில் திருந்தி விடவேண்டும்). ஆனால் நல்லவேளையாக சிறந்த அம்மா சென்டிமென்ட் படம், தாலி சென்டிமென்ட் படம், சிறந்த பன்ச் டயலாக் போன்ற விருதுகள் கொடுக்கவில்லை.
சிறந்த வில்லன் விருதை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது புரியாத புதிர். எந்த வில்லன் அதிகம் கொலை செய்கிறார், எவ்வளவு பேரை கற்பழிக்கிறார்கள் என்று ஏதாவது ஒரு கணக்கு வைத்திருப்பார்களோ?
இதில் இன்னொரு கூத்து என்ன தெரியுமா? முதலாவது சிறந்த படம், இரண்டாவது சிறந்த படம், மூன்றாவது சிறந்த படம் என்று மூன்று பரிசுகள் கொடுப்பார்கள். இதைத்தவிர சிறப்பு சிறந்த படம் என்று ஒன்று உண்டு. இதே போல நடிகர்-நடிகைகளுக்கும் சிறப்பு பரிசு உண்டு. அதாவது கிட்டத்தட்ட முன்னணியில் இருக்கும் அத்தனை நடிகர்களுக்கும் எதாவது ஒரு விருது நிச்சயம் (அத்தனை ரசிகர் மன்றங்களையும் திருப்தி படுத்தவேண்டுமே...!)
இனி அறிவிக்கப்பட்டுள்ள விருதுகளை பார்ப்போம்..
1. சிறந்த படம் 'சிவாஜி'. சிறந்த இரண்டாவது படம் 'மொழி'. எந்த விதத்தில் சிவாஜி மொழியைவிட சிறந்தது என்று புரியவில்லை. மொழியே புரியாமல் 'ஒருகூடை சன்லைட் ... நான் செக்கச்செவப்பேய்..' என்று பாடியதற்க்கா அல்லது மிகுந்த மொழிப்பற்றுடன் அங்கவை-சங்கவை என்று பெயர் வைத்து 'தமிழின் நிறம் கறுப்பு' என்று அறிவித்தறக்கா? ஸ்ரேயாவின் நளினங்களுக்கா அல்லது 'பழகிப்பார்த்த' கலாச்சாரத்துக்கா?
2. அகில இந்திய அளவிலேயே சிறந்த படமாக காஞ்சிவரம் தேர்வு செயப்பட்டிருகிறபோது தமிழக அரசு அதை கண்டுகொள்ளவில்லை (என் வழி தனிவழி என்று ரஜினி படத்துக்கு விருது கொடுத்திருகிறார்கள்). தேசிய அளவில் தமிழில் சிறந்த படமாக தேர்தெடுக்கப்பட்ட 'பெரியார்' படத்துக்கு வெறும் சிறப்பு பரிசு கிடைத்திருக்கிறது. பெரியாரின் பகுத்தறிவைவிட ரஜினி ஸ்டைல்தான் முக்கியம் என்கிறது தமிழக அரசு.
3. இந்தியாவில் சிறந்த நடிகர் பிரகாஷ்ராஜ்.. ஆனால் அதை நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம்.. ரஜினியைவிட ஒரு சூப்பர் ஸ்டார் இருக்க முடியுமா என்ன? போனால் போகிறது பிரகாஷ்ராஜுக்கு குணச்சிர நடிகர் விருது கொடுத்து விடலாம்.
4. விருதுகள் இன்னும் அலுக்கவில்லை கலைஞருக்கு... சிறந்த வசனகர்த்தாவாக கலைஞரே தேர்வு செய்திருக்கிறார் (ஸாரி.. செய்யபட்டிருக்கிறார்). நல்லவேளையாக அவர் எந்தப்படத்திலும் நடிக்காததால் வாய்ப்பு கமல்-ரஜினிக்கு போனது. ஆமாம்.. விழாவில் இந்த விருதை கலைஞருக்கு யார் கொடுப்பார்கள்? அவர் காலில் அவரே விழுவாரோ?
5. சந்தடிசாக்கில் சந்தோஷ் சுப்பிரமணியம் படமும் ஒரு விருதை வாங்கியிருக்கிறது... ஒரு ரீ-மேக் படத்துக்கு எப்படி விருது அளிக்க முடியும் என்பது வியப்பு..!
6. நல்லவேளையாக சிவாஜி 2007 லும் தசாவதாரம் 2008 லும் வெளியானதால் கமல்-ரஜினி ஜோடிக்கு விருது கொடுப்பதில் சிக்கல் எதுவும் இல்லை. இவை மட்டும் ஒரே ஆண்டில் வெளிவந்திருந்தால் தமிழ்நாடு ஒரு மாபெரும் பிரச்சனையை சந்தித்திருக்கும்.. இலங்கை பிரச்சனை பின் தள்ளப்பட்டிருக்கும். இப்போதும் கமல்-ரஜினி ஜோடி விருதுகளை வாங்கியதால், விஜய்-அஜீத் ஜோடிக்கு இந்தமுறை சான்ஸ் இல்லை. குருவி, வில்லு, ஏகன் போன்ற மகாகாவியங்கள் பரிசீலிக்கப்படவில்லை.
7. தமிழக அரசுக்கு ஒரு யோசனை... விருது கொடுக்க முடியாத நடிகைகளுக்கு முதல் சிறந்த கவர்ச்சி நடிகை விருது, இரண்டாம் சிறந்த கவர்ச்சி நடிகை விருது என்று அள்ளி வீசலாம். அப்படியும் சிலர் விடுபட்டுவிடர்களா? கவலையே இல்லை.. இருக்கவே இருக்கிறது கலைமாமணி விருது..!
இந்த விருதை யார் தேர்வு செய்தார்கள்.. அந்த கமிட்டி மெம்பர்கள் யார் என்று எந்த விவரமும் தெரிவிக்கவில்லை. அது யாராக இருந்தாலும் அவர்களுக்கு கொடுக்க வேண்டியது.. 'சிறந்த ஜிங்-ஜாங்' விருது.
9 comments:
தசாவதாரம் பற்றியெல்லாம் சொல்றதுக்கு ஒண்ணுமில்லேன்னு நீங்க சொல்றதும் சரிதான்
பின்னிடீங்க..!
அன்புள்ள ரவி,
>>>>>>வில்லி விருதெல்லாம் கிடையாது. (தமிழ் மசாலா சினிமா பார்முலாபடி பெண்கள் வில்லன் வேஷத்தில் நடிக்கக் கூடாது - அப்படியே இருந்தாலும் கடைசியில் திருந்தி விடவேண்டும்). <<<<
அதற்கு ஈடு கட்டத்தான் மெகா சீரியல்கள் உள்ளனவே! ஒரு ஆண் வில்லன் கனவிலும் செய்யத் துணியாத செயல்களை , ஆஸ்பத்திரியில் நோயாளியின் ஆக்சிஜன் ட்யூபை நளினமாகப் பிடுங்குவது போன்ற கொலை பாதகங்களை, சரளமாகப் பெண் வில்லிகள் செய்கிறார்களே!
மெகா சீரியல் ஒன்றாவது முடிந்தால் அல்லவா தெரியும், கடைசியில் இவர்கள் திருந்தினார்களா இல்லையா என்று?!
நன்றி!
சினிமா விரும்பி
நன்றி சினிமா விரும்பி... ஒரு வேளை சின்னத்திரை விருதுகளுக்கு சிறந்த வில்லியைத் தேர்ந்தெடுபார்களோ?
அன்புள்ள ரவி,
>>>>>>///இந்த விருதை யார் தேர்வு செய்தார்கள்.. அந்த கமிட்டி மெம்பர்கள் யார் என்று எந்த விவரமும் தெரிவிக்கவில்லை. அது யாராக இருந்தாலும் அவர்களுக்கு கொடுக்க வேண்டியது.. 'சிறந்த ஜிங்-ஜாங்' விருது////.<<<<<
பழக்க தோஷத்தில் அந்த 'சிறந்த ஜிங்-ஜாங்' விருதும் அதற்குத் 'தகுதி' இல்லாதவர்களுக்கே போய்விடப் போகிறதே என்ற கவலை வந்து விட்டது எனக்கு!!!
நன்றி !
சினிமா விரும்பி
தமிழக திரை விருதுகளில்தான் சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த வில்லன் (?) சிறந்த சண்டை பயிற்சியாளர் என்ற விருதுகள் எல்லாம் உண்டு. அதாவது ஒரு திரைப்படத்தில் கண்டிப்பாக ஒரு காமெடியன், ஒரு வில்லன், சண்டைகள் இருக்க வேண்டும் என்பது இவர்கள் கருத்து. அதேபோல் நகைச்சுவையில் சிறந்த நடிகர், நடிகை என்கிற இரண்டு விருதுகள் உண்டு. வில்லனுக்கு ஒரே விருது. வில்லி விருதெல்லாம் கிடையாது. (தமிழ் மசாலா சினிமா பார்முலாபடி பெண்கள் வில்லன் வேஷத்தில் நடிக்கக் கூடாது - அப்படியே இருந்தாலும் கடைசியில் திருந்தி விடவேண்டும்). ஆனால் நல்லவேளையாக சிறந்த அம்மா சென்டிமென்ட் படம், தாலி சென்டிமென்ட் படம், சிறந்த பன்ச் டயலாக் போன்ற விருதுகள் கொடுக்கவில்லை.//
பின்னீட்டீங்க... ஏன் அதிகமா எழுதமாட்டுறீங்க... முற்போக்கு சிந்தனையோட எழுதறவங்க ரொம்ப குறைவா இருக்காங்க.. அற்புதமான சிந்தனை...
பாலோவர்ஸ் போட்டுவுடுங்க... இன்னும் நிறைய எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களை தொடரவிரும்புகிறேன்.
மிக்க நன்றி நாஞ்சில் பிரதாப்.... தொடர்ந்து விமர்சியுங்கள்..
இரவி, தங்கள் பதிப்பு மிக அருமை. அதிலும் சிவாஜியையும் மொழியையும் compare செய்தது அருமையிலும் அருமை.
Post a Comment
உங்கள் கருத்துக்கள்