1976ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாள்..!
அன்றுதான் எங்கள் வீட்டிற்கு தொலைகாட்சிப் பெட்டி வந்தது. சென்னையில் தொலைக்காட்சி நிலையம் ஆரம்பித்து (15 ஆகஸ்ட் 1975) நான்கு மாதங்களில் எங்கள் வீட்டு கூடத்துக்கு வந்து விட்டது தொலைக்காட்சி பெட்டி.
நான் வசித்த மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனியில் எங்கள் வீட்டில்தான் முதன்முதலில் டி.வி வந்திறங்கியது. அதற்க்கு முன் அசோக் நகரில் யாரோ டிவி வைத்திருக்கிறாள் என்று கேள்விப்பட்டு அந்த வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு சுவர் இடுக்கிலிருந்து லேசாகத் தெரியும் டிவி பிம்பத்தை பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. டி.வி வந்த விஷயம் எப்படியோ மெல்ல மெல்ல காலனி முழுவதும் கசிந்து, சாரை சாரையாக மக்கள் கூட்டம் எங்கள் வீட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டது.
அது டெலிவிஸ்டா டி.வி.. அந்தகாலத்து மாடல்.. டிவி போட்டவுடன் ஒரு ஐந்து நிமிடம் கழித்துதான் ஒலி எழும்ப ஆரம்பிக்கும்.. ஒளி வருவதற்கு இன்னும் ஒரு ஐந்து நிமிடம் பிடிக்கும்..
அன்று ஞாயிற்றுக்கிழமை. மாலை 'குழந்தையும் தெய்வமும்' படம்.. கிட்டத்தட்ட 50 பேர் எங்கள் வீட்டில் உட்கார்ந்து படம் பார்த்தார்கள். பல பேரை அதற்க்கு முன்னால் நாங்களே பார்த்ததில்லை.
நான் எப்போதோ பார்த்த சிலர் எனக்கு திடீர் நண்பர்கள் ஆனார்கள்... அதுவரை 'எனிமி'யாக சிலர் என் நட்பை புதுப்பித்துக்கொண்டார்கள்.
உரிமையோடு உள்ளே நுழைந்த சிலர்.. மெல்ல பேச்சுக்கொடுத்துக்கொண்டே நைசாக உள்ளே நுழைந்த சிலர்.. "டிவி பொட்டில படமெல்லாம் காமிபாங்களா.." என்று அப்பாவியாய் கேட்டுக்கொண்டு சிலர்.. இவை போதாதென்று ஏதோ திரையரங்கத்துக்கு செல்வது போல் நொறுக்குத்தீனிகளுடன் நுழைந்த சிலர்.. என்று எங்கள் வீடே அன்று திருவிழா கோலம் பூண்டிருந்தது. படம் முடிந்து அவர்கள் சென்றவுடன் வீட்டை சுத்தம் செய்வதற்கே ஒரு மணி நேரம் பிடித்தது.
இந்தக்கூத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நீடித்தது. இதற்கு சரிபாதி கூட்டம் செவ்வாய்கிழைமை நாடகத்திற்கும் வெள்ளிக்கிழைமை ஒளியும் ஒளியும் நிகழ்ச்சிக்கும் வந்தது. சிலர் 'காண்போம் கற்ப்போம் ' , 'வயலும் வாழ்வும்', 'மனை மாட்சி'யைக் கூட விட்டு வைக்கவில்லை.
கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து பின் எங்கள் குடும்பம் மட்டும் டிவி பார்க்கிற நிலை ஏற்படுவதற்கு சில மாதங்கள் பிடித்தது.
Saturday, September 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
unmaiyana anubahvam. nan edu madari ennuru veetil poe partheyan
Post a Comment
உங்கள் கருத்துக்கள்