இந்த வருடமும்
எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் நடத்தும் 'பொன்னியின் செல்வன்' மெகா நாடகத்துக்கு சென்றிருந்தேன்.
கல்கியின் இந்த பெரும் புதினத்தை நான்கு மணிநேரத்திற்குள் அடக்கி காட்சித் திரையில்
கொண்டு வந்த எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் மற்றும் மேஜிக் லாண்டேன் குழுவினருக்கும் ஒரு பெரும்
பூங்கொத்துடன் வாழ்த்துக்கள்.
வீராணம் எரிக்கரைஒரம்
ஆடிபெருக்கு விழாக் கொண்டாட்டங்களுடன் துவங்கும் காட்சிகள், நம்மை அப்படியே ஆயிரம்
ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. பெண்கள் ஆடிப் பாடிகொண்டே ஏரியில் விளக்குகளை
மிதக்க விடுவது, அங்கு நடக்கும் பூ மற்றும் காய்கறி வணிகம், விழாவை வேடிக்கை பார்க்க
வருவோர், அங்கும் இங்கும் நடந்து சென்று கொண்டிருக்கும் கோட்டை காவலர்கள் என்று அப்படியே
நம் பண்டைய கலாச்சாரத்தை அப்படியே நம் கண் முன் நிறுத்துகிறது. பின் நாடகம் விறுவிறுவென
வீறுநடை போட்டு நகர்கிறது. வந்திய தேவன் வருகை, கடம்பூர் மளிகை நள்ளிரவு கூட்டம், வந்திய தேவன் கோட்டைக்குள் நுழைதல், நந்தினி குந்தவை
சந்திப்பு, இலங்கை பயணம், பொன்னியின் செல்வன் அறிமுகம், என்று தடதடவென பயணித்து சேந்தன் அமுதன் மகுடம் சூட்டும் வரையிலான காட்சிகளை,
பல அத்தியாயங்கள் கொண்ட கல்கியின் புதினத்தை, நான்கே மணி நேரத்தில் அதன் சாரமும் வீரமும்
பிரமாண்டமும் சற்றும் குறையாமல் நமக்கு விருந்தளிதிருக்கிரார்கள்.

நாடகம் முழுவதும் ஒரேவிதமான காட்சி அமைப்புதான்... கோட்டை போன்ற ஒரு
அமைப்பு.. மேடையின் இரு பக்கத்திலும் மாடம் போன்று ஒரு முகர்ப்பு... அவ்வளவுதான். அனால்
அதையே கடம்பூர் கோட்டையாகவும், சோழ சக்ரவர்த்தியின் மாளிகையாகவும், ஆபத்துதவிகள் பதுங்கும்
காடாகவும், வீராணம் ஏரியாகவும் மற்றும் கல்கி வர்ணித்த அதனை இடங்களையும் இந்த ஒரே காட்சி
அமைப்பில் உருவகப்படுதியுள்ளர்கள். இவற்றுடன்,
காலை, அந்தி, நள்ளிரவு போன்ற பொழுதுகளை சித்தரிக்கும் ஒளி அமைப்புகளும், வரலாற்று காட்சிகளுக்கே உரித்தான அபாரமான இசையும்
ஒரு பெரும் பிரம்மாண்டத்தை நமக்கு நாடக வடிவில் தந்திருக்கிறார்கள். பூங்குழலி உதவியுடன்
வந்தியதேவனின் நள்ளிரவு இலங்கை படகுப் பயணம், பார்த்திபேந்திரனின் வாள் சண்டை, குரவைக்கூத்து,
பொன்னியின் செல்வனின் யானை சவாரி போன்றவை நம் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.
பொன்னியின் செல்வன்
நாடகம் நடந்த பத்து நாட்களும் மியூசிக் அகாடமி அரங்கம் நிரம்பி வழிந்தது. சென்ற வருடத்தைப்
போலவே. பொன்னியின் செல்வன் நாவலை பிரமித்துப் படித்திருந்த மக்கள், தாங்கள் கற்பனை
செய்து வைத்திருந்த கதாபத்திரங்களை கண்டவுடன் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தார்கள்.
பொன்னியின் செல்வன், வந்திய தேவன், ஆதித்ய கரிகாலன், நந்தினி, குந்தவை அறிமுகங்களின்
போது ஏதோ ரஜினி படம் போல விசிலடித்து கைத்தட்டி மகிழ்ந்தார்கள். கல்கி எழுத்தின் வீச்சு
எவ்வளவு தூரம் இருக்கிறது என்பது புரிகிறது.
பொன்னியின் செல்வன்
என்பது சில பாகங்களாக எடுக்கவேண்டிய திரைப்படம்.
அல்லது சில வருடங்கள் ஓடக்கூடிய மெகா சீரியல். அதை சில மணிநேர நாடக வடிவில் கொண்டு
வந்து சாதனை புரிந்திருக்கிறார்கள்.
நாடகம் முடிந்து
வெளியில் வந்தவுடன், சோழ சாம்ராஜ்யத்துக்குள் உலவி வந்த உணர்வு ஏற்பட்டது.