Saturday, January 16, 2010

சாதாரண காமிராவிலிருந்து சூரிய கிரகணம்


நேற்றைய சூரிய கிரகணத்தை சாதாரண சோனி டிஜிட்டல் காமிராவின் முன் சிறப்பு கண்ணாடியை வைத்து எடுக்கப்பட்ட படம். கிரகணத்தின்போதும் நேரடியாக சூரியனை கிளிக் செய்தால் கடைசி புகைபடம்போல்தான் இருக்கும்.

 

Sunday, January 3, 2010

கர்நாடக சங்கீதத்தின் '2009 டாப் 5' பாடகர்கள்

சென்னையில் மார்கழி இசைவிழா இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது. ஒருமாத காலம் இசை மழையில் நனைத்தபின் தலைதுவட்டி நிதானமாக   கர்நாடக சங்கீதத்தின் '2009 டாப் 5' பாடகர்கள் யார் என்று யோசித்தேன்.  ரசிகர்கள் கூட்டம், ஆரவாரம், ரசனை, பரபரப்பு, விளம்பரங்கள்  இவற்றை வைத்து பார்த்ததில் என்னுடைய கணிப்பு இது.  

1. அருணா சாய்ராம்: கர்நாடக சங்கீதத்தில் சிலிர்ப்புகளுக்கு பஞ்சம் இல்லை என்று நிரூபித்த பாடகி. மூன்று மணிநேரம் ரசிகர்களை வசியம் செய்து மெய்மறக்கச் செய்யும் இசை வழங்குபவர் அருணா..  இவர்  கச்சேரிக்கு வரும் கூட்டமும் நேயர்களின் ஆரவாரம் மட்டுமே இவரை முதல் இடத்தில வைத்திருக்கிறது.


2. ஜேசுதாஸ்: நாற்பது வருடமாக ஒலிக்கும் அதே குரல்... அதே ரசிகர் கூட்டம்...  இன்னமும்  கொஞ்சம்கூட தொய்வில்லாத கச்சேரி. கடைசியில் அவர் பாடும் துக்கடாக்களுக்காகவே காத்திருக்கும் ரசிகர்கள்.  பல சாமான்ய  ரசிகர்களுக்கு ஜேசு மூலம்தான் கர்நாடக இசைக்கே அறிமுகம்  கிடைத்தது. சங்கீதப் பெருங்கடலின் ஆழம் தொட்ட மகாகலைஞன்.


3. சுதா ரகுநாதன்: சலனமற்று ஓடும் நீரோடை போன்றது சுதாவின் இசை.  ஒரு நல்ல, இனிய, சம்பிரதாயமான அதே சமயம் ஜனரஞ்சகத்துக்கும்  குறைவில்லாத இசைக்கு உத்திரவாதம் சுதாவின் கச்சேரிகள். ஒவ்வொரு கச்சேரியிலும் ஒரு மெல்லிய பரவச உணர்வை  நம்மை ஆட்கொள்வதை தவிர்க்க முடியாது.


4. டி.எம்.கிருஷ்ணா: சம்பிரதாயமான விஷயங்களை கொஞ்சம் மாற்றி ஒரு புது தொனியில் பாடுவதால் கர்நாடக  சங்கீதத்தில் இவர் கிராப்  கிடுகிடுவென  மேலே  எறிக்கொண்டிருகிறது. பல மொழிபாடகனாகவும் பிரபலமாகிக்கொண்டிருகிறார் கிருஷ்ணா.  இசை பிரியர்களின் நாடி பிடித்து பாடுவதில் இவர் முன்னணியில் இருக்கிறார்.


5. சஞ்சய் சுப்ரமணியம்: 'சாஸ்த்ரீயம்' மாறாமல் அதே சமயம்  மெய்சிலிர்க்கும்  கர்நாடக இசை ரசிக்க விரும்புபவர்களின் முதல் சாய்ஸ் சஞ்சய். நீண்ட நெடிய ஆலாபனைகள், சுவரஸ்தானங்கள் என்று அந்த காலத்து பாணியில் பயணித்தாலும் ரசிகர்களை இசைக்கடலில் மூழ்கடிக்கமுடியும் என்று நிரூபித்துக் கொண்டிருக்கும் பாடகர்.