இத்தனை நாள்வரை நம்மையெல்லாம் சிரிக்க
வைத்துக்கொண்டிருந்த நகைச்சுவை திலகம் நாகேஷ் இன்று நம்மை கண்கலங்க வைத்துவிட்டார்..! நாகேஷ் நினைவில் மூழ்கிய நான், அவரின் சில படங்களை
அசைபோட்டேன்.நீர்க்குமிழி,
எதிர்நீச்சல் போன்ற படங்களில் சோகத்தை உள்ளடக்கிக்கொண்டு வெளியே கலகலப்பாக இருக்கும் கதாபாத்திரம் நாகேஷுக்கு..! கிட்டத்தட்ட இதே போன்ற பாத்திரத்தில் நடித்த 'மார்டன் டைம்ஸ்' படத்தின் சார்லி சாப்ளினுக்கு இணையாக நடித்திருப்பார். இரண்டும் கே.பாலச்சந்தரின் படங்கள். கே.பி இயக்கத்தில் அவர் மின்னிய மற்ற படங்களின் ஒன்று
'அனுபவி ராஜா அனுபவி'.. இதில் இரட்டை வேடம். இரண்டுமே மிகைபடுத்தாத இயற்கையான நடிப்பு.. (மறக்க முடியுமா 'முத்துக்குளிக்க வாரீகளா' பாடலை..!) இன்னொரு படம் '
பாமா விஜயம்'. பாலையா, மேஜர், முத்துராமனோடு கலக்கிய காமெடி..
நாகேஷின் மைல்கல் படம் கே.பி வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய
'சர்வர் சுந்தரம்'.. கதாநாயகனாகவும் காமெடியனாகவும் பின்னியெடுத்திருப்பார்..
நாகேஷின் 'கிளாசிக் காமெடி'
திருவிளையாடல்தான்.. இன்றும் தமிழகத்தின் பட்டிதொடியிலும் கேட்கப்படும் ஒலிச்சித்திரம். வேறொரு புலவரின் பாடலை அரசவையில் பாடி பரிசு பெரும்
அவசரத்தையும், மாட்டிக்கொண்டவுடன் உண்டான
பதட்டத்தையும், தன் இயலாமையை நினைத்து தனியாக புலம்புவதையும் மிக அற்புதமாக சித்தரித்திருப்பார்..!
இயக்குனர் ஸ்ரீதரும் நாகேஷை அமர்களமாக கையாண்டிருக்கிறார்..
காதலிக்க நேரமில்லை படத்தில் ஒரு சினமா இயக்குனராகவும் (ஓஹோ ப்ரொடக்க்ஷன்ஸ்)
ஊட்டி வரை உறவு படத்தில் டாக்டராகவும் நடித்திருப்பார்.
தில்லானா மோகனாம்பாள் படத்தில் நகைச்சுவை
வில்லன் வேஷம் (இந்த வைத்தியை தெரியாதவங்க யாரவது இருக்க முடியுமோ..) 'காமெடி டிராக்' என்று தனியாக இல்லாமல் கதையோடு இழைந்திருக்கும் பாத்திரம். எல்லோரையும் ஏகவசனத்தில்
அழைத்துக்கொண்டு சர்வசாதரணமாக நடித்திருப்பார் நாகேஷ்.
சிவாஜி படங்களில் நாகேஷ் நகைச்சுவை பிரமாதமாக
இருக்கும். சிவாஜிக்கு இணையாக இருக்கும் (
உ.ம்
கலாட்டா கல்யாணம்). மாற்ற நடிகர்களோடு அவர் கலக்கிய முக்கியமான
படங்கள் - ஜெய்சங்கரோடு
பட்டினத்தில் பூதம், ஜெயலலிதாவோடு
மேஜர் சந்திரகாந்த், ரவிச்சந்திரனோடு
நான் (கொமட்ல குத்துவேன்). அதேசமயம் எம்.ஜி.ஆர் படங்களின் அவர் அவ்வளவாக சோபித்ததில்லை. மேலும் நாகேஷ் இயக்குனரின் நடிகர்..
கே.பி,
ஸ்ரீதர் ஏ.பி.என் போன்றவர்கள்தான் நாகேஷின் நடிப்பு உச்சத்தை வெளிக்கொணர்த்திருக்கிறார்கள். நாகேஷை வீணடித்த படங்களும் உண்டு (
தளபதி, தசாவதாரம்)
நாகேஷின் மாறுபட்ட நடிப்பை '
நம்மவர்' படத்தில் பார்க்கலாம். தன் பெண் தற்கொலை செய்தியை கேட்டு ஓடிவந்தவர் ஒரு சொட்டு கண்ணீர்கூட விடாமல் வெறும் வசனம் மட்டும் பேசி மற்றவர்களை கலங்கடித்துவிடுவார்..
இன்று தமிழ் திரைப்படங்களின் காமெடி மலிந்துவிட்டது.
'non-ethical' விஷயங்கள் மட்டுமே காமெடியாக கருதப்டுகிறது.. பெண்களை 'ஈவ் டீசிங்' செய்வது, தண்ணி அடித்து கும்மாளம் போடுவது , பத்துபேர் சேர்ந்து ஒருவரை அடிப்பது, காலால் எட்டி உதைப்பது, இரட்டை அர்த்த வசனங்கள்.. இவைகள்தான் இந்தக்காலத்து நகைச்சுவை காட்சிகள்.. ஒரு சிலபடங்களில் விபச்சாரமும் நகைச்சுவையாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. காமெடி என்ற பெயரில் இதுபோன்ற வக்கிர விஷயங்கள் நம் குழந்தைகளின் மூளையில் விஷமாக ஏறிக்கொண்டிருப்பதை நாம் தவிர்க்க முடியாது. நாகேஷின் எந்த ஒரு படத்திலும் இந்தமாதிரி அசிங்கங்கள் இருந்ததில்லை. சார்லி சாப்ளின் படங்களைப்போன்று இன்றைக்கும் குடும்பத்தோடு ரசிக்ககூடியதுதான் நாகேஷின் நகைச்சுவை.