எதிர்பாராத திருப்பம்: இரு குடும்பங்கள் மோதல், தீ வைப்பு, உயிரிழப்பு, வியாபார மோதல் என்று மெகா சீரியல் கணக்காக ஓடிக்கொண்டிருந்த கலைஞரின் குடும்பக் கதை, திடீரென ஒரு குரூப் போட்டோவோடு சுபமாக முடிந்தது.
மிகப்பெரிய இழப்பு: தமிழனை வெவ்வேறு தளங்களில் படிக்கத் தூண்டிய எழுத்தாளர் சுஜாதாவின் மரணம்.
பெரிய ஏமாற்றம்: ஆளுங்கட்சி பல இடங்களில் சறுக்கிக்கொண்டிருக்க, முக்கியமான பிரச்சனைகளில் அவர்களை உலுக்காமல் 13ம் வார்டில் தண்ணீர் வரவில்லை, 123ம் வார்டில் ரோடு போடவில்லை என்று போராட்டம் நடத்திக்கொண்டிருந்த ஜெயலலிதா.
தொடரும் சோகம்: முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இலங்கையில் தமிழர்கள் படுகொலை தொடர இன்னும் அதை அரசியலாக்கும் தமிழக அரசியல் கட்சிகள், இன்னும் அதை விடுதலை புலிகளின் கண்ணோட்டத்திலேயே பார்க்கும் மேதாவி பத்திரிகையாளர்கள் மற்றும் தமிழர்களுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் மௌனம் சாதிக்கும் மத்திய அரசு.
புது வரவு: காவேரி பிரச்னை, இலங்கை பிரச்னை, காஷ்மீர் பிரச்னை இவைகளோடு சேர்ந்துகொண்ட ஒகேனக்கல் பிரச்னை.
வடநாட்டு திடீர் நண்பர்கள்: சேதுவில் தலையிட்ட சாதுக்கள், இதுவரை தமிழ்நாடு இந்தியாவின் எந்த திசையில் இருக்கிறது என்பதைக்கூட கண்டுகொள்ளாத ஆனால் தமிழ்நாடு கடலோரத்துக்கு மட்டும் உரிமை கொண்டடும் ராஜ்நாத் சிங் மற்றும் அசோக் சின்கால்.
பண்டிகை மாற்றம்: தமிழ்ப் புத்தாண்டை தை முதல் தேதிக்கு மாற்றி அதை சட்ட சபையில் சட்டமாக நிறைவேற்றி சாதனை படைத்தார் முதல்வர். இந்த வருடம் தீபாவளியை மே மாதத்துக்கும் கிருஸ்துமஸ் பண்டிகையை ஆகஸ்ட் மாதத்துக்கும் மாற்றி அமைப்பார் என்று நம்பலாம். சட்ட வல்லுனர்கள் கவனிக்க... தீபாவளி தேதி மாற்றத்தை இந்திய பாராளுமன்றமும் கிருஸ்துமஸ் தேதி மாற்றத்தை அமெரிக்க பாராளுமன்றமும் அங்கீகரிப்பது முக்கியம்... போப்பாண்டவரைப் பற்றி கவலையில்லை..
தமிழ்நாட்டின் சாதனையாளர்கள்: சந்திராயன் அண்ணாமலை, சதுரங்க ஆனந்த், கேரம் இளவழகி, ஹிதேன்திரனுடைய பெற்றோர்.
தமிழ்நாட்டின் வேதனையாளர்கள்: சட்ட கல்லூரி மாணவர்கள்.
தமிழ்நாட்டின் ரோதனையளர்கள்: சுப்ரமணிய சுவாமி, டி.ராஜேந்தரோடு இந்த வருடம் சேர்ந்துகொண்ட ரஜினிகாந்த்.
தமிழ்நாட்டின் அபாயம்: நிஷா புயல் மற்றும் விஜயகாந்தின் வளர்ச்சி.