Sunday, June 29, 2008

ஊட்டி ரோஜாத் தோட்டம்






தெருவோரம்...

1

அந்த நடைபாதை பிச்சைக்காரனின்

மூச்சு நின்றவுடன்

அரசாங்க மருத்துவமனையின் பிணவறையில்

இடம் கிடைத்தது...!

2

கால்கள் கட்டப்பட்டு

தலைகீழாக தொங்கவிடப்பட்டு

மிதிவண்டியின் கைப்பிடியில்

பயணிக்கும்

கோழிகள் அறியாது

தன் இறுதிப்பயணத்தை...!

3

இந்த வாய்க்கரிசிமட்டும்

நேற்று கிடைத்திருந்தால்

பட்டினிச்சாவை

ஓரிருநாள்

தள்ளிப்போட்டிருக்கலாம்...!

காவிரிப் பிரச்சனை

ஆணையத்தால்
அரசியலால்
நீதிமன்றத்தால்
தீர்க்கமுடியாததை
வருடாவருடம்
தீர்த்துவைக்கிறது
மழை...!

சிகரெட்

அவன்
சிகரெட் மீது
பற்று வைத்தான்...!
சிகரெட் அவன்மீது
புற்று வைத்தது...!

Saturday, June 28, 2008

எகிப்திய மண்ணில் சில நாட்கள்

(2007ம் ஆண்டு அமுதசுரபி தீபாவளி மலரில் வெளிவந்தது)

இன்னும் சற்று நேரத்தில் எகிப்து தலைநகர் கைரோ விமான நிலையத்தை அடைவோம்' என்ற அறிவிப்பு வந்தபோது விமானம் எகிப்திய பாலைவனத்தை கடந்துகொண்டிருந்தது.

விமானத்திலிருந்து பாலைவனத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்... எவ்வளவு சுவாரசியமான தேசம் எகிப்து...! இதோ இந்த பாலைவன மண்ணில்தானே உலகின் பழம்பெரும் எகிப்திய நாகரீகம் தோன்றியது... இந்த மண்ணில்தானே இன்றும் நிலைத்து நிற்கும் பிரமிடுகள் கட்டப்பட்டன... அதே சமயம் 'நைல் நதியின் நன்கொடையும்' இந்த மண்தானே..! இன்று ஆப்ரிக்க கண்டத்தில் இருந்தாலும் வளைகுடாவின் ஒரு அங்கமாகவே கருதப்படும் நாடு இதுதானே..! வளைகுடாவின் அங்கமாக இருந்தாலும் மதகட்டுப்பாடுகள் இல்லாத பகுதி இதுதானே..! சூயஸ் கால்வாய் மூலம் மத்திய தரைகடலும் செங்கடலும் இணையும் இடம் இதுதானே..!

ஃபாரோஸ் மன்னர்களுக்காக கட்டப்பட்ட பிரமிடுகள், நாலாயிரம் வருடமாக பாதுகாத்துவரப்படும் எகிப்திய அரசர்களின் உடல்கள், அழகிய நைல் நதி என்று எப்போதோ எகிப்தைப் பற்றி படித்த பல செய்திகளை அசைபோட்டுகொண்டிருந்தேன். இவற்றோடு 'பட்டது ராணி பார்க்கும் பார்வை', 'நதியா நதியா நைல் நதியா..' என்ற பாடல்களும் என் நினைவுக்கு வந்தன. விமானம் கைரோவில் இறங்கி 'இவற்றையெல்லாம் நேரில் காணப்போகின்றாய்' என்று குதூகலப்படுத்தியது.

நைல் நதியைக் காண ஆசைப்பட்டுக்கொண்டிருந்த நான், கைரோவில் தங்கியிருந்தது நைல் நதிக்கரையோரம் அமைந்திருந்தன ஃபிளமெங்கோ ஹோட்டலில்.. ஜன்னலிலிருந்து பார்த்தால் அழகிய நைல் நதி ஆரவாரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. நான் கைரோவில் தங்கியிருந்த ஐந்து நாட்களும் காலையில் கண் விழிப்பது நைல் நதியில்தான். கொஞ்ச நேரம் அந்த சௌந்தர்ய நதியை உள்வாங்கிக்கொண்டால் போதும்.. தனியாக தியானம் எதுவும் தேவையில்லை. காலை நேரங்களில் மஞ்சள் வெயில் கரைந்துகொண்டிருக்கும் நதியில் விதவிதமான படகுகள் கோடுபோடும் காட்சி, நம் விழிகளை இடம் பெயர்க்க மறுக்கும்.

எதியோப்பிய மலைகளிலிருந்து புறப்படும் நைல், கைரோவை அடையும்போது கொஞ்சம் அகலம் குறைந்தாலும் அதன் அழகு குறையவில்லை. கைரோவை கடந்தவுடன் நைல் பல நதிகளாக பிரிந்து மத்தியதரைக்கடலில் கலக்கிறது. nail

நைல் நதியை மட்டும் ரசித்துக்கொண்டிருந்தால் போதுமா.. பிரமிடுகளைக்கான என் மனது துடித்தது.. கைரோவில் என் கடைசி நாளன்று என் பிரமிட் கனவு பலித்தது. எகிப்தில் பல பிரமிடுகள் இருந்தாலும் கீசா பகுதியில் உள்ள கிரேட் பிரமிடுகள்தான் உலக அதிசயமாக கருதப்படுகின்றது. கைரோ நகரத்திலிருந்து அரை மணி நேரப்பயணத்தில் அமைந்துள்ளது கிரீட் பிரமிடு. கீசா பகுதியில் நாம் காலடி வைத்ததுமே நமக்கு ஏற்படுவது 4000 வருடங்களுக்கு பின்னால் சென்ற உணர்வு. அந்த பகுதியில் உள்ள முன்று கம்பீர பிரமிடுகள் நம்மை வரவேற்கின்றன.

அதற்க்கு முன் பிரமிடுகளைப்பற்றி ஒரு சிறு விளக்கம்..

பிரமிடு என்பது பண்டைய எகிப்திய அரசர்களின் உடல்களை அடக்கம் செய்யும் இடம். எகிப்து அரசர்கள் இறந்தபிறகு சவப்பெட்டியில் அவர்கள் உடலோடு தங்கம் மற்றும் பல செல்வங்களையும் வைத்து பிரமிடுக்குள் அடக்கம் செய்துவிடுவார்கள். இப்படிப்பட்ட அரசர்கள் இறவா நிலையை அடைவார்கள் என்பது அந்தக்கால எகிப்திய நம்பிக்கை. இப்படி அடக்கம் செய்யப்பட உடல்கள் மம்மி என்று அழைக்கப்படுகிறது.. மம்மி என்பது mumification process செய்யப்பட்ட, அதாவது பதப்படுத்தப்பட்ட உடல்கள் என்று அர்த்தம். பிறகு எகிப்தில் கிருத்துவர்கள் வருகையால் இந்தப்பழக்கம் கைவிடப்பட்டது.

பிரமிடுகளில் புதையல் இருக்கும் விஷயத்தை கேள்விப்பட்ட பல கொள்ளையர்கள், அதை முற்றுகையிட்டு பல மம்மிக்களை தூக்கிஎறிந்துவிட்டு செல்வங்களை கவர்ந்து சென்றார்கள். இந்தக் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற ஃபாரோஸ் என்ற அரச குடும்பத்தை சேர்ந்த மம்மிக்கள்தான் இன்று உலகில் சில அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன.

நாலாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய எகிப்திய நாகரிகத்திற்கு இன்றைய சாட்சி பிரமிடுகள். கட்டிடக்கலை வளர்ச்சியடையாத அந்த காலத்தில் வியக்கத்தக்க தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்ட பிரமிடுகள் உலகின் முதல் அதிசயம். பதிமூன்று ஏக்கர் நிலப்பரப்பில் நான்கு முக்கோண வடிவத்தில் 480 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள கிரேட் பிரமிடு போன்ற ஒரு கட்டிட அமைப்பை தற்போது கட்டுவதுகூட கடினம். கனசதுர வடிவில் அமைக்கப்பட்ட லட்சக்கணக்கான பாறைகளை அடுக்கிவைத்து கிரேட் பிரமிடை கட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு பாறையும் கிட்டத்தட்ட பல டன்கள் எடை கொண்டவை.. ஒரு லட்சம் பேர் பணிபுரிந்து 20 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அந்தப் பாறைகள் எப்படி அந்த வடிவில் அமைக்கப்பட்டது, அதை எப்படி அடுக்கி வைத்தார்கள் என்பதெல்லாம் இன்னமும் புரியாத புதிர்..!

பிரமிடுக்குள் பல இடங்களில் குகை போன்ற அமைப்பு இருக்கிறது. இதற்குள்தான் உடல்களை அடக்கம் செய்வார்களாம். குகைக்குள் குனிந்து தவழ்ந்துதான் செல்லவேண்டும். அப்படி ஒரு குகைக்குள் நுழைந்தபோது கல்லால் செய்யப்பட ஒரு சவப்பெட்டி கண்ணில் பட்டது. அதற்குள் சாம்பல் நிற மண்ணில் எலும்பு போன்ற சிலவும் இருந்தன. கைடுகளைக்கேட்டால் அங்கு ஒரு உடல் இருந்தது என்கிறார்கள். நம்புவதற்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தேவை.

மூன்று பிரமிடுகளையும் சுற்றிப்பார்க்க மூன்று மணிநேரம் பிடிக்கும். நடக்க முடியாதவர்கள் ஒட்டக அல்லது குதிரை சவாரி செய்யலாம். நம்மூர் சுற்றுலா மையங்களில் உள்ளதுபோல ஒட்டக, குதிரைகாரகள் பரிசுப்பொருட்களை விற்கும் சிறுவர்கள் நம்மைத் துரத்திகொண்டே வருகிறார்கள். நம்மைப்பார்த்த உடனேயே 'இந்தியா.. இந்தியா..' என்று கேட்டுவிட்டு 'மகாராஜா' என்று அழைக்கிறார்கள். மகாராஜாவைத்தவிர அவர்களுக்கு தெரிந்த இன்னொரு இந்தியப்பெயர் 'அமிதாப் பச்சன்'.

கைரோவில் நாம் பார்க்கவேண்டிய மற்றொரு இடம் அரசு அருங்காட்சியகம். அகழ்ந்து எடுக்கப்பட்ட பண்டைய எகிப்திய சிலைகள், நாணயங்கள், கலைப்பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப் படிருக்கின்றன. கிட்டத்தட்ட தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் போன்றது.. ஆனால் மிகப் பெரியது.

அருங்காட்சியகத்திற்கு நுழைவுக்கட்டணம் 50 பவுண்டு (ஒரு எகிப்திய பவுண்ட் கிட்டத்தட்ட 7.5 ருபாய்). மம்மிக்கள் இருக்கும் அறைக்குச் செல்வதற்கு மட்டும் 100 பவுண்டு..! 'தி ராயல் மம்மீஸ் ஹால்' என்று பெயரிடப்பட்ட அந்த அறையின் உள்ளே அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 மம்மிகள் கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டிருந்தன. எல்லோரும் 3500 வருடங்களுக்கு முன்னால இறந்து போனவர்கள். சுருங்கிப்போன உடலில் அங்க அடையாளங்கள் தெரிந்தாலும் எலும்பும் தோலும் சேர்ந்து கருகிப்போன ஒரு மரக்கட்டையைப்போல மாறியிருக்கிறது. ஆனாலும் சில மம்மிகளில் பல்லும், தலைமுடியும், நகங்களும் அப்படியே இருக்கிறது. ஒரு மம்மிக்கு அத்தனை பற்களும் கொஞ்சம் பல் எயிறும் தெரிந்தது. சிரிந்துக்கொண்டே இறந்திருப்பார் போலும்..!

இத்தனை 'வயதான' பிணங்களுக்கு நடுவே நிற்பது என்பது ஒரு பயம் கலந்த பரவசம்தான்..! 100 பவுண்டு கொடுத்ததற்காக கொஞ்சநேரம் கூடவே அந்த பரவசத்தை அனுபவித்தேன்.

மனித உடல்கள் மட்டுமல்லாது அந்த அரசர்கள் செல்லமாக வளர்த்துவந்த பிராணிகளையும் கூடவே அடக்கம் செய்து விடுவார்களாம். முவாயிரம் வருட (!)நாய், குரங்கு எல்லாம் அந்த அருங்காட்சியகத்தில் இருந்தன.

பிரமிடுகளையும் அருங்காட்சியகத்தையும் பார்த்துவிட்டு கொஞ்சநேரம் பண்டைய எகிப்திய நாகரீகத்தில் திளைத்து வெளியேவரும்போது எனக்குத் தோன்றியது... அன்றைய மனித நாகரீகம் காலத்தால் அழியாத பிரமிடுகளைக் கட்டியது. இன்றைய மனித நாகரீகம் உலகையே அழிக்கவல்ல ஆயுதங்களைக் கண்டுபிடித்திருக்கிறது..!

ஏற்காடு பூக்கள்






காதல் அனுபவம்




மாற்றம்

('கீற்று.காம்'ல் வெளிவந்தது)

ஏசுவின் அன்பு
மதமானது...!

புத்தரின் ஜென்
மார்கமானது...!

மார்க்சின் பொதுவுடமை
அரசியலானது...!

சங்கரரின் அத்வைதம்
தத்துவமானது...!

காந்தியின் அஹிம்சை
வெறும் சரித்திரமானது...!

கட்டுப்பாடு

('கீற்று.காம்'ல் வெளிவந்தது)

வாழ்க்கையில் எதுவுமே
என் கட்டுப்பாட்டில் இல்லை...!

எனக்கு
வாழ்கைப்பட்டவளைத் தவிர...

வளுக்கு
அதுவும் இல்லை...!